அடியாரைப் பாடிய கடவுள் மாக்கவிஞர்

தினமணி – 6 8 2023
பக்கம் எண் : 8

அடியாரைப் பாடிய கடவுள் மாக்கவிஞர்

ஒளவை அருள்

சென்னை மாநகரத்திற்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு.

அந்த வகையில் சேக்கிழார் பிறந்த குன்றத்தூர் சென்னையை அடுத்து இருப்பதும் ஓர் சிறப்பு.

சேக்கிழாரைப் போற்றுவது, செந்தமிழைப் போற்றுவதாகும்;

செந்தமிழைப் போற்றுவது நம் தமிழகத்தைப் போற்றுவதாகும்;

தமிழகத்தைப் போற்றுவது தொண்டர்களைப் போற்றுவதாகும்;

தொண்டர்களைப் போற்றுவது தன்னலமில்லாத அறப்பணிக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொள்கிற உயர்ந்த மனத்தைப் போற்றுவதாகும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சாதி மத வேறுபாடுகள் இருந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், வேந்தர் முதல் வேடுவர் வரை எந்தச் சாதியில் பிறந்தாலும் அவர்களுக்குச் சாதி வேறுபாடுகள் இல்லை;

அவர்கள் சிவனடியார்களாக வணங்கத்தக்கவர்கள் என்று புரட்சிசெய்தவர் சேக்கிழார்.

தன்னை மறந்து தன் தலைவனையே மனத்தில் கொண்டு வாழ்கிற பெருமக்களுக்குச் சிவனடியார் என்றும் நாயன்மார் என்றும் பெயர்கள் உண்டு.

எவ்வளவு துயரம் வந்தாலும், தன்னுடைய கொள்கைக்காக எந்த இடரையும் தாங்கிக் கொள்பவர்களை அருட்செல்வர் என்று போற்றுவார்கள்.

தான் கொண்ட கொள்கைக்காக எவ்வளவு இடையூறுகள் வந்தாலும், தன்னலமில்லாது வாழ்ந்தவர்களைத் தொண்டர்கள் என்று அழைத்தனர்.

அப்படிப்பட்ட தொண்டர்களை எல்லாச் சமயங்களிலும் நாம் காணலாம்.

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை ஊர்தோறும் சென்று ஆராய்ந்து உன்னதமான காப்பியமாக்கிப் பெரியபுராணமாகத் திருத்தொண்டர் புராணம் என்ற பெயரில் வழங்கிய பெருமை சேக்கிழாரைச்சாரும்..

பெரியபுராணம் என்றால் பெரியவர்களின் புராணமாகும்.

தன்னை முழுவதுமான
அருட்பணிக்கு ஆட்படுத்திக் கொண்டவர்களே பெரியவர்கள் என்ற வகையில் இந்நூலைப் பெரியபுராணம் என்று கூறினர்.

மக்கள் அறிவு முதிர்ச்சி பெற ஆரம்ப நிலையில் எல்லாப் பொருள்களையும் கண்டு அஞ்சினர்.

சூரியனும் சந்திரனும் அஞ்சுவதற்குரிய பொருள்களாகவே விளங்கினார்கள்.

ஆனால் சூரியனும், சந்திரனும் உலகை மூடியுள்ள காரிருளை நீக்கி எங்ஙனம் ஒளியை நல்குகிறர்கள் வியந்தனர்.

பயமும் விருப்பமும் ஒருங்கே மக்கட்கு ஏற்பட்டன.

பின் அறிவு வளர வளர அவர்கள் பொருள்களின் தோற்றம், இடைநிலை அழிவு ஆகிய இவைகளைப் பற்றிய வினா விடைகளைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினர்.

அவ்வியற்கைத் தெய்வங்களைப் பற்றிக் கதைகள் எழுதப்பட்டன.

மக்கள் அவற்றை நம்பினர்.

புராணங்கள் இங்ஙனம் எழுந்தன. தமிழகத்திலும் புராணங்கள் எழுந்தன.

அவற்றுள் திரிபுர மெரித்த விரிசடைக்கடவுளின் முக்கண் போன்றுள்ள புராணங்கள் மூன்று என்பர்.

ஒன்று கந்தபுராணம்.
மற்றொன்று பெரியபுராணம்,
பிறிதொன்று திருவிளையாடற் புராணம்.

மூன்றில் சிவனது வலக்கண் மேன்மை பெற்றுத் திகழும் பெரியபுராணத்தை இறையருளால் பாடிக் கொடுத்தவர் தொண்டர் சீர் பாவுவராகிய சேக்கிழார் ஆவர்.

கந்தபுராணமும்
திருவிளையாடற்புராணமும் வடமொழிப் புராணங்களின் நேர்மொழி பெயர்ப்பு நூல்கள்.

ஆனால் பெரியபுராணம் திருக்குறள் போன்றும் சிலப்பதிகாரம் போன்றும் ஓர் தனித்தமிழ் நூல்.

முதல் நூல் சுந்தரரது திருத்தொண்டத்தொகையாகும்;

வழிநூல் நம்பியாண்டார் நம்பிகளின் திருத்தொண்டர்
திருவந்தாதியாகும்;

சேக்கிழாரின் பெரியபுராணம் இவ்விரண்டின் சார்பு நூலாகும்.

தொகை, வகை, விரி என்ற மூன்றனுள் விரி நூலாகிய பெரியபுராணத்திற்குத் தொகை நூலும் வகை நூலும் தனித்தமிழ் நூல்களே என்பதை உணர்தல் வேண்டும்.

சிறுகதைகளையும் சிற்றின் கூவடிகளையும் படித்துப் பொழுதுபோக்குவது போல, அந்த நாளில் சோழ மன்னன் அநபாயன் இருந்தான்.

அநபாயன் சிந்தாமணியைக் கேட்டு வந்தான்.

சேக்கிழார் அதனை
அவகதையெனக்கொண்டு சிவகதையைருக்கு அருளுவான் போல பெரிய புராணத்தைப் பாட முற்பட்டார்.

திருவருள் துணை நின்றது.

தில்லைக்கூத்தன உலகெலாம்’ என்று முதல் அடி வழங்கினான்.

சேக்கிழாரும் ஆயிரங்கால் மண்டபம் அமர்ந்து சிவச்சிந்தனையில் தோய்ந்து நின்று புராணம் பாடி நிறைவு செய்தார்.

நிறைவெய்தியதைக் கேட்ட ஞான்று அநபாயச் சோழன் பெறலாகாப் பெருநிதியம் பெற்றவன் போல் உள்ளங்களிப்பானாயினன் . புராணத்தைச் சேக்கிழாரே விரித்துரைக்க வேண்டுமென விழைந்தான்.

அவரும் கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் கேளாரும் வேட்பச் சொல்மழை பொழிந்தார்.

சேக்கிழார், அடியார் திறம் கூறும் அத்தெய்வத் திருநூலிற்குத் ‘ திருத்தொண்டர் புராணம் ‘
எனவும் ‘ மாகதை ‘ எனவும் பெயர் சூட்டினார்.

திருத்தொண்டர் புராணம் தனி அடியார் அறுபான மூவரைப் பற்றியும், தொகையடியார் ஒன்பதின்மரைப் பற்றியும் கூறும் ஒரு வரலாற்று நூல்மாத்திரம் அன்று.

அஃது இறையருள் பெற்று இறை முனைப்பின் வழிவந்த ஈடுமெடுப்புமில்லாத் தெய்வத் திருநூல்.

இந்நூலை ஆக்கித்தந்த சேவையர் காவலற்கு வான்மீக பகவானும் ஈடல்ல, வேதவியாதனும் உவமையல்ல.

சிவனடியார்களின் அருட்டிறத்தினை அளவிடச் சேக்கிழார்க்குத்தான் எளிதில் இயலுமே அன்றித் தேவர்களுக்கும் இயலாது.

கருங்கடல் நீரை ஒருவர் கைகத்துங் கொள்ளலாம்.

கடற்கரை மணலை எண்ணி அளவிடலாம்.

கடல் மேல்வரும் அலையை எண்ணி இலக்கமிடலாம்,

கருங்கடலுள் உலாவும் மீனையும் எண்ணி வகையிடலாம்

ஆகாய மீனையும் இலக்கமிட்டு தொகையீடலாம்

ஆனல் திருத்தொண்டர் தம் பெருமையை அளவிட்டுக் கூறுதல் சேக்கிழார்க்கே அல்லது வேறெவர்க்கு இயலாத தொன்று.

கலைமகள் பூவை மறந்தாள் சங்கப் புலவோர்சொற்பாவை மறந்தாள்.
பதுமத்தோன் நாவை மறந்தாள். பொதியமலைக் கோவை மறந்தாள்.
சேவையர் காவலர் திருநாவை மறவாது குடிகொண்டாள்

என்பது உமாபதி சிவரின் முடிந்த முடிவான கருத்து.

சேக்கிழார் ஒரு கடவுள் மாக்கவிஞர் .

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *