செய்திக்குறிப்பு
திரு.வி. கலியாணசுந்தரனார் அவர்களின் 140ஆவது பிறந்த நாள்
திருவுருவச்சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி
26.08.2023 – சனிக்கிழமை
திருவாரூர் விருத்தாசல முதலியார் மகனார் கலியாண சுந்தரனார் என்ற பெயர்தான் திரு.வி.க. என நிலைத்தது.
திரு.வி.க. பெரும் புலமை கொண்டிருந்ததோடு பாடம் நடத்திய பள்ளியாசிரியர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், இதழாசிரியர், சமய அரசியல் உண்மையைப் பரப்பியவர், செந்தமிழ்ப் பேச்சாளர், பொருள் செறிந்த எழுத்தாளர், இளைஞருக்கு வழிகாட்டி, தொழிலாளரின் உற்ற நண்பர், உயர்ந்த நிலையில் இருந்தவர் தொடங்கி ஏழை, எளியவர் வரை எல்லோரோடும் இசைந்து இனிது பழகியவர், எல்லோரும் மதிக்கும் வண்ணம் வாழ்ந்தவர், படிப்பாலும், பண்பாலும், உழைப்பாலும் ஒழுக்கத்தாலும் நாட்டுப் பற்று, மொழிப்பற்றாலும் அரசியல் பொதுத் தொண்டினாலும் புதுமை உணர்வாலும் சிறப்புற்று வாழ்ந்த இவரை இராயப்பேட்டை முனிவர் என்றே அழைத்தனர்.
திரு.வி.க அவர்கள் தற்போதுள்ள சென்னை மாவட்டம், மதுரவாயல் வட்டம், துண்டலம் கிராமத்தில் 26.08.1883 அன்று பிறந்தார்.
வெசுலி பள்ளியில் ஆசிரியராக இருந்த யாழ்ப்பாணம் நா.கதிரைவேற்பிள்ளை மற்றும் மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ்க்கல்வி கற்றவர்.
தேசபக்தன், திராவிடன், நவசக்தி போன்ற நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியதன் மூலம் சிறந்த இதழாசிரியராகவும் தமிழ்நாட்டில் தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டதன் மூலம் சிறந்த தொழிற்சங்கவாதியாகவும்
“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று
50 ஆண்டுகளில் அரசியல், சமுதாயம், சமயம் சார்ந்த 55 க்கு மேற்பட்ட நூல்களையும் எழுதி சிறந்த எழுத்தாளராகவும் தமிழுக்கு தொண்டாற்றியுள்ளார்.
திரு.வி.க. அன்புள்ளத்தில் காந்தியடிகளின் சீடர்;
பொருளாதாரத்தில் கார்ல் மார்க்ஸ்-இன் பக்தர்;
இந்த சிறப்பு இயல்புகளால் தான் அவர் சென்ற காலம் – நிகழ்காலம் – வருங்காலம் ஆகிய மூன்றுக்கும் சார்பாளராக இருந்தார்.
முரண்பாடு கொண்ட கொள்கையிலும் உடன்பாட்டுத் தன்மையைப் போற்றுகிற பொதுமைப் பண்பாளராகத் திகழ்ந்தார்.
திரு.வி.க. சமுதாயத்தின் வளர்ச்சித் தத்துவத்தை தெளிவாகப் புரிந்து கொண்டதன் காரணமாக பழமைக்கும் புதுமைக்கும் இடையே அவர் பாலமாக விளங்கினார்.
தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை பல்கலைக்களஞ்சியமாக எழுதியதோடு அரசியல் தலைவர்கள், கலைவாணர்கள், இலக்கியப் புலவர்கள், பல்வேறு சமயங்களின் தலைவர்கள், சமுதாயத் தொண்டர்கள், மகளிர் என்று 125 சான்றோர் பெருமக்களைப் பற்றி தன்னுடைய வரலாற்று நூலில் எழுதியுள்ளார்.
ஏறத்தாழ
திரு.வி.க. வின் வாழ்க்கைக் குறிப்புகளைக் காட்டிலும் தமிழ்நாட்டினுடைய வரலாறு என்றே அதைக் குறிப்பிடலாம்.
திரு.வி.க வின் மணிமொழி என்றும் மறக்கமுடியாததாகும்.
நாம் உண்டது தமிழ்;
உயிர்த்தது தமிழ்.
உற்றது தமிழ்-எல்லாம் தமிழ்
தூய தமிழை உயர்த்தி பிடித்த திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்கள் சிறந்த மேடைப் பேச்சாளர்.
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்,
பெண்ணின் பெருமை, வாழ்க்கைத் துணை,
உள்ளொளி,
உரை நூல்கள்,
பெரிய புராணம் குறிப்புரையும் – வசனமும்,
முருகன் அல்லது அழகு, இலங்கைச் செலவு (பயணநூல்) போன்ற பல நூல்களையும், பாடல்களையும் எழுதியுள்ளார்.
இவரது படைப்பிலக்கியங்களில் இவரால் கையாளப்பட்ட தமிழ்நடையின் காரணமாக இவர் ‘தமிழ்த்தென்றல்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார்.
அடையாறில் உள்ள பாலத்திற்கு திரு.வி.க. பாலம் (1973) என்று பெயர் மாற்றிய பெருமை முத்தமிழறிஞர் கலைஞர் அவரையே சாரும்.
அவ்வண்ணமே சென்னையில் திரு.வி.க. நகர் என்று அமைந்துள்ளதும், செனாய் நகரில் திரு.வி.க. மேனிலைப் பள்ளி, திரு.வி.க. பூங்காவும் அமையப்பெற்றுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் திரு.வி.க. பெயரில் தமிழறிஞர்களுக்கு விருதினை (1979) வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சிறப்புகளைப் பெற்ற ‘தமிழ்த்தென்றல்’
திரு.வி. கலியாணசுந்தரனார் அவர்களின் புகழைப் போற்றும் வகையில் பெருநகர சென்னை பெருநகர மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மதுரவாயல் வட்டத்தில் அவர் பிறந்த ஊரான துண்டலம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அவருடைய பிறந்த நாளான 26.08.2023 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ் வளர்ச்சித் துறையால் மாலை அணிவித்து, அவர்தம் திருவுருவப் படத்திற்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், வணக்கத்திற்குரிய சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர், தமிழறிஞர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டுள்ளது.

Add a Comment