POST: 2023-10-31T12:56:43+05:30

தினமணி 31.10.23
பக்கம் 8

குன்றென நிமிர்ந்து நின்றவர்

இந்திய விடுதலைப்போரின் முப்பெருந்தலைவர்கள் என்று போற்றப் பட்டவர்கள்
மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, சர்தார் வல்லபபாய் படேல் ஆகியோர்.

இவர்களில் காந்தியடிகளும் படேலும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அப்போது குஜராத் தனி மாநிலமாகாமல், அன்றைய பம்பாய் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தது.

1875 அக்டோபர் 31 அன்று ஜாவேரிபாய் – லதுபாய் இணையருக்கு நான்காவது பிள்ளையாக வல்லபபாய் படேல் பிறந்தார்.

அகமதாபாதில் வழக்குரைஞர் தொழில் மூலம் பெரும்புகழும் பணமும் வந்தது.

குற்றவியல் வழக்குரைஞர்களில் படேல் முன்னணியில் இருந்தார்.

தன்னுடைய அறிவுக் கூர்மையாலும், ஒப்பற்ற வாதத்திறமையினாலும் சில ஆண்டுகளுக்குள் பெருமதிப்பு பெற்றார்.

படேல், அகமதாபாத் நகர்மன்றத் தலைவராகப் பொறுப்பேற்ற 1924-ஆம் ஆண்டிலிருந்து அவர் தன் பதவியைத் துறந்த 1929 வரை, அந்நகரில் சாலைகள் அமைத்தும், குடிநீர் வசதியை ஏற்படுத்தியும், வடிகால்களை அமைத்தும், பூங்காக்களை ஏற்படுத்தியும், மருத்துவ வசதிகளைச் செய்தும் மக்களுக்குத் தொண்டாற்றினார்.

அகமதாபாத்தை ஒரு முன்மாதிரி நகராட்சியாக்கி சாதனை படைத்தார்.

பர்தோலி வரிகொடா இயக்கப் போராட்டத்தின்போது வல்லபபாய் ஆற்றிய தொண்டு மகத்தானது.

அதனை இந்தியா முழுவதுமே பாராட்டி மகிழ்ந்தது.

வல்லபபாய் மட்டும் இல்லையேல் போராட்டம் வெற்றி பெற்றிருக்காது என்பதுதான் அனைவருடைய கருத்துமாகும்.

படேலின் துணிகரமான செயல்களை பண்டித நேரு, லாலா லஜபதிராய், மதன் மோகன் மாளவியா ஆகியோர் பாராட்டினர்.

காந்தியடிகள் படேலுக்கு ‘சர்தார்’ என்ற சிறப்புப் பட்டத்தை அளித்து மகிழ்ந்தார் .

வல்லபபாய் படேலின் ஒவ்வொரு சொல்லும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வந்ததால் அவை அனைத்தும் கேட்போரைப் பிணைக்கும் தன்மையதாய் அமைந்திருந்தன.

படேல் எந்தப் பொறுப்பு வகித்தாலும் அதில் திறன்படச் செயல்படுவார்.

எதையுடன் நேர்மையுடன் செய்யவேண்டும், நீதி நெறியிலிருந்து அணுவளவும் பிறழக்கூடாது என்ற எண்ணத்துடன் செயல்படுவது அவர் பண்பு.

இந்திய விடுதலை வெகுவிரைவில் வரப்போவதை மனதிற்கொண்ட காந்தியடிகள் பண்டித நேருவை அகில இந்திய காங்கிரஸ் குழுத்தலைவராகவும், அதன் பின்னர் விடுதலை இந்தியாவின் பிரதமராகவும் ஆக்கிடவேண்டும் என்று விரும்பினார்.

இந்த எண்ணத்தைப் புரிந்து கொண்ட படேல், தாம் பண்டித நேருவை விடவும் பதினான்கு ஆண்டுகள் மூத்தவராக இருந்தாலும், காந்தியடிகளின் எண்ணம் போலச் செயல்படுவதற்கு இசைந்தார்.

படேல் தான் காங்கிரஸ் தலைவராக வரவேண்டுமென்று காங்கிரஸிலுள்ள மூத்த தலைவர்கள் பலர் விரும்பினாலும், பெருந்தன்மை மிக்க படேல் அண்ணல் காந்தியடிகளின் உள்ளம் கவர்ந்த உறுதுணையாளராகத்தான் வாழ்நாள் முழுவதும் மிளிர்ந்தார்.

தமக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்றோ, காந்தியடிகளுக்கு அடுத்து செல்வாக்கு பெற்ற தாமே எதிலும் முன்னிலை வகிக்க வேண்டுமென்றோ எண்ணவே இல்லை.

படேல் எதையும் மனந்திறந்து பேசும் இயல்பு கொண்டவர்.

உள்ளொன்று புறமொன்று பேசும் தன்மை கொண்டவர் அல்லர்.

மனதிற்பட்ட நல்ல கருத்துகளை – நாட்டிற்கு நன்மை விளைவிப்பவற்றை யாருக்கும் அஞ்சாமல் சட்டென்று பேசிவிடும் குணமுடையவர்.

இங்கிலாந்து பிரதமர் சர்ச்சிலையே எதிர்த்துப் பேசும் வல்லவர் என்ற தனிப்புகழ் கொண்டவர் ஆவார்.

சர்தார் வல்லபபாய் படேல் செய்துகாட்டிய மாபெரும் செயல், சிதைந்துகிடந்த இந்தியாவை ஒன்றுபடுத்தியதுதான்.

சமஸ்தானங்களை இந்திய அரசுடன் ஒருசேர இணைத்த பாங்கு, சர்தார் வல்லபபாய் படேலுக்கு பெரும்புகழைப் பெற்றுத் தந்தது.

இந்தியத் தலைவர்கள் அவரை ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று போற்றினர்.

ஏழை மக்கள் அனைவரும் எல்லா வழிகளிலும் மன அமைதி பெற்று வாழவேண்டும் என்பதே படேலின் நோக்கமாக இருந்தது.

மக்கள் அமைதியுடன் வாழ வேண்டுமானால் அரசு ஊழியர்கள் அனைவருக்கும், தாங்கள் மக்களுக்காகத் தொண்டு செய்ய நியமிக்கப்பட்டவர்கள் என்று உணர்வு ஏற்படவேண்டும் என்று கூறினார்.

நிர்வாகத்தில் எந்த நிலையிலும் ஊழல் இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.

குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் மத்திய அரசைப் போன்று மாநில அரசுகளுக்கும் பங்கு உண்டு என்பதை அவர் நிலை நிறுத்தினார்.

எனவே, குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநிலங்களின் சட்டப் பேரவை உறுப்பினர்களும் பங்களிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

மகாகவி பாரதியாரின் ‘
புதிய ஆத்திசூடி’யில் ஆணி அடித்தாற் போன்ற அறிவுரைக் கட்டளைகளைப் பார்க்கலாம்.

‘உடலினை உறுதி செய்’, ‘
நேர்படப் பேசு’, ‘சீறுவோர்ச் சீறு’, ‘குன்றென நிமிர்ந்து நில்’, ‘செய்வது துணிந்து செய்’, ‘தேசத்தைக் காத்தல்செய்’ இவை அனைத்தும் ஒரு தலைவனுக் குரிய தாரக மந்திரங்கள்.

இந்த நன்மொழிகளுக்கெல்லாம் நடைமுறை இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர்தான் சர்தார் படேல்.

குஜராத்தில் ‘வல்லபபாய் நகர்’ என்று அவர் பெயரில் ஒரு புதிய நகரம் அமைக்கப்பட்டுள்ளது.

பார் போற்றும் வண்ணம் 597 அடி உயர படேலின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை கிண்டியில் உள்ள ஒரு சாலைக்கு அவர் நினைவாக ‘சர்தார் படேல் சாலை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

‘புதிய இந்தியாவைப் படைத்த பெருந்தகை’ என்று பண்டித நேரு, படேலைப் புகழ்ந்தார். ‘

அண்ணல் காந்தியின் விடுதலைப்போரில் குறிதவறாத வில்லவனாக வல்லபபாய் விளங்கினார்’ என்று அறப்போராளி வினோபா பாவே குறிப்பிட்டார்.

இந்திய குடிமைப்பணி, இந்திய காவல் பணி இவற்றை நிறுவிக்காட்டியவர்.

பிரித்தானிய அரசு பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட அரசு பிரதிநிதி காவலர் படையினை மத்திய பின்னிருப்பு காவல்படையாக மடைமாற்றம் செய்தவர்.

அதனை உலகில் உள்ள துணை இராணுவப் படைகளிலேயே மிகப்பெரிய படையாக உருவாக்கியவர் – இத்தனை பெருமைக்கும் உரியவர்

‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அனைவராலும் போற்றப்படும் சர்தார் வல்லபபாய் படேல்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *