அமுதசுரபி –
ஜனவரி மாத இதழ் – 1 1 2024
எம். பாரதி
தமிழ் வளர்க்கும் அமைப்புகள்
கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ்ப் பட்டறையும், பாசறையும்
தமிழ் வளர்ச்சித்துறை தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
அவற்றில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கிற இளைய தலைமுறையினர் மத்தியில் தமிழ் மொழியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துதல், தமிழில் மேடைப்பேச்சு, எழுத்துத் திறமைகளை வளர்த்தல் ஆகிய நோக்கங்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களும் அடங்கும்.
குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் இலக்கியம் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தவும், தமிழ்ப் படைப்பிலக்கியங்களை வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தவும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள கல்லூரிகளுக்கே சென்று நிகழ்ச்சிகளைத் தமிழ் வளர்ச்சித்துறை நடத்தி வருகிறது.
இது பற்றிக் கேட்டபோது, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் டாக்டர் அவ்வை அருள் கூறியதாவது:
‘ஆண்டுதோறும் காந்திஜி, நேருஜி, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் பிறந்த நாட்களை ஒட்டி, மாவட்ட அளவில் பேச்சுப் போட்டியும், கட்டுரைப்போட்டியும் நடத்தப்படுகின்றன.
அதனையடுத்து மாவட்ட அளவில் வெற்றி பெறுகிறவர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
அது போலவே, தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி ஜூலை 18 அன்று கொண்டாடப்படும் ” தமிழ்நாடு நாள் ” கொண்டாட்டத்தை ஒட்டி, மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
மாநில அளவில் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் முதல் பரிசு எவ்வளவு தெரியுமா ? ஐம்பதாயிரம் ரூபாய்.
மாணவர்களுக்கு போட்டி நடத்தி இவ்வளவு பெரிய தொகையைப் பரிசளிப்பது ஒரு மாபெரும் சாதனை !
அது மட்டுமில்லாமல், இந்தப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் சுமார் 200 மாணவர்களுக்கு மதுரையில் ஏழு நாட்களுக்கு ‘ இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை ” நடத்தப்படுகிறது.
இந்தப் பட்டறையில் எழுத்துத் திறமை கொண்ட மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை எழுதும் பயிற்சியையும், பேச்சுத் திறன் கொண்ட மாணவர்களுக்கு பேச்சுப் பயிற்சியும், விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
மாணவர்களின் பயணச் செலவு, உணவு மற்றும் தங்குமிடச் செலவுகள் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் அரசாங்கமே ஏற்கிறது.
நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
மாணவர்களின் பயணச் செலவு, உணவு மற்றும் தங்குமிடச் செலவுகள் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் அரசாங்கமே ஏற்கிறது.
மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் காலையில் யோகா மற்றும் உடற்பயிற்சி, பகல் முழுவதும் தமிழ்ப் பயிற்சி, மாலையில் தமிழ்நாட்டுக் கலை நிகழ்ச்சிகள் எனப்பல
அம்சங்கள் இடம்பெறுகின்றன.
பல்வேறு தமிழறிஞர்கள் இதில் கலந்துகொண்டு, சிறப்பிக்கிறார்கள்.
இதுநாள் வரை கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் அவர்களது சொந்த ஆர்வத்திலும், செலவிலும் தமிழ் மன்றங்கள் செயல்பட்டு வந்தன, ஆனால், தமிழக முதல்வரது ஆணைப்படி, 100 அரசு கல்லூரிகளுக்கும் 6200 அரசு பள்ளிகளுக்கும் தலா ஐம்பது லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாக வழங்கி, அதிலிருந்து ஈட்டும் வருவாயைக் கொண்டு முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
கணித ஒலிம்பியாட், அறிவியல் ஒலிம்பியாட் என்று நடத்தப்படுவதைப் பார்க்கிறோம், அதுபோல 9 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கென தமிழ் மொழித் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்பட்டு, 1500 மாணவர்களுக்கு மாதம் 1500 ரூபாய் வீதம் 22 மாதங்கள் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதைத் தவிர, கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் இலக்கியத்தின்பால் ஆர்வம் ஏற்படுத்தும் நோக்கத்துடன், கல்லூரிகளுக்கே சென்று ” இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை ” என்ற நிகழ்ச்சியினை நடத்துகிறோம்.
தமிழின் எல்லாவிதமான பொருண்மைகளையும் மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
கவிஞர் நெல்லை ஜெயந்தா இந்த நிகழ்ச்சிகளுக்கு ஒருங்கிணைப்பாளராகச்
செயல்படுகிறார் .
தொடர்ந்து, கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்படும் “ இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை ” நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான கவிஞர் நெல்லை. ஜெயந்தா கூறுகிறார்:
” இந்த நிகழ்ச்சி மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை !
செம்மொழித் தமிழ் காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம் ! ” என்று வர்ணிக்கலாம்.
இந்த ஒரு நாள் நிகழ்ச்சியில், பல்வேறு அமர்வுகளிலுமாக செம்மொழித் தமிழின் சிறப்பு, மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும், நாடகத்திலும் திரையிலும் நடந்த தமிழ், கண்களைத் திறந்த கதை உலகம், தமிழ் வளர்த்த அறிஞர்களும், தலைவர்களும் என்ற தலைப்புகளில் பல்வேறு தமிழ் அறிஞர் பெருமக்கள் உரையாற்றுவார்கள்.
சென்னை, திருச்சி, நாமக்கல், கோவை,ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவாரூ,ர், தஞ்சாவூர் என மொத்தம் 14 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் ஒரு நாள் விழாவாக இது வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சுமார் 100 மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.
த. ராமலிங்கம், பாரதி பாஸ்கர், கவிஞர்கள் மரபின் மைந்தன் முத்தையா, நந்தலாலா, கவிதைப் பித்தன், திரைப்பட இயக்குநர்கள் லிங்குசாமி, பிருந்தா சாரதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.
பாசறை நிகழ்ச்சிகளின் துவக்கத்தில் என்னுடைய நோக்க உரையில் நான் சில முக்கியமான விஷயங்களைக் குறிப்பிடுவேன்.
இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலமாக மாணவர்களுக்கு நிரம்பப் பயனுண்டு.
உடலுக்கு நோய் வந்தால், மருத்துவர் குணப்படுத்துவார்.
உள்ளம் சரியில்லை என்றால், சரிசெய்யும் மருத்துவம் இலக்கியம் மட்டும்தான்.
இலக்கியத்தில் ஆர்வம் காட்டினால், அது உங்களுடைய நிறைய நேரத்தை எடுத்துக் கொள்ளும், அதன் மூலமாக நீங்கள் தேவையற்ற விஷயங்களில் நேரத்தை விரயம் செய்வதைத் தவிர்க்க முடியும்.
எந்தத் துறையில் இருந்தாலும் சரி, ஒருவருக்கு அந்தத் துறை அறிவுடன் கூட அவர் இலக்கியவாதியாகவும் இருந்தால் அவர்கள்தான் மக்கள் மத்தியில் அறியப்படுகிறார்கள்; போற்றப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டின் ஐ ஏ எஸ் அதிகாரி இறையன்பு, ஐ.பி.எஸ் அதிகாரி திலகவதி போன்றவர்கள் இதற்கு நல்லுதாரணங்கள்.
தொழிலதிபர்களில் பொள்ளாச்சி மகாலிங்கமும், வர்த்தகப் பிரமுகர்களில் நல்லி குப்புசாமியும் மக்கள் மத்தியில் மதிக்கப்படுவதற்கு அவர்களது இலக்கிய ஈடுபாடும் முக்கியக் காரணம்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் நமது முதல்வர், தமிழ் வளர்ச்சித் துறையின் முன்னாள், இந்நாள் அமைச்சர்களான தங்கம் தென்னரசு, சாமிநாதன் ஆகியோரது ஈடுபாடும், ஆர்வமும் அளப்பரியது.
அதுவே இந்த நிகழ்ச்சிகளின் வெற்றிக்கு அடித்தளம்.”

Add a Comment