தினசெய்தி – 21 1 2024
பக்கம் எண் : 4
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 197
புதிய கலை!
முனைவர் ஔவை அருள்
ஷேக்ஸ்பியர் குறித்த ஆய்வினை தில்லிப் பல்கலைக்கழகத்தில் வழங்குவதற்கு வாய்ப்பு கிடைக்கப்பெற்றது.
சென்னையிலிருந்து பம்பாய்க்கும், தில்லிக்கும் பல்வேறு மாநிலங்களில் உள்ள சிறந்த நூலகங்களைச் சென்று பார்த்து தகவல்களைத் திரட்டுவதற்கும் வாராது வந்த மாமணி போல கிளியா விளம்பர நிறுவனத்தின் தலைவர்கள் வாய்ப்பு நல்கியதை எண்ணி நெகிழ்கிறேன்.
எத்துறையில் பணியாற்றினாலும் அத்துறையின் நெளிவு சுளிவுகளை நன்கு அறியவேண்டும் என்று எந்தையார் அடிக்கடி தான் பார்க்கும் பல நண்பர்களிடம் சொல்லும் மேற்கோளின் அடிப்படையில் விளம்பர நிறுவனத்தில் யான் பெற்ற அனுபவங்களைக் குறிப்பேட்டில் தொடர்ந்து எழுதி வந்தேன்.
வளர்தொழில் ஆசிரியர் பல இளைஞர்களுக்குக் கலங்கரை விளக்கமாகவும், என்னை எழுதத் தூண்டிய நல்லாசிரியருமான
திரு. ஜெயகிருஷ்ணன் நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு ஒருமுறை வந்தபோது உரிமையுடன் துறை அனுபவங்களைக் குறித்து தொடராக எழுதுங்கள் அருள், வளர்தொழில் இதழில் தொடர்ந்து வெளியிடுகிறேன் என்ற அவரின் அன்பாணையை ஏற்று எழுதாத என்னை எழுத வைத்த பெம்மானாக திரு ஜெயகிருஷ்ணன் மிளிர்ந்தார்.
அப்படி தொகுத்தத் துண்டுகளை உரை மாலையாக அனைவரின் பார்வைக்கும் வெளியிடுவதில் மீள மகிழ்கிறேன்.
விளம்பர வீதி -2
விளம்பரம் என்ற சொல்கூட, 30-40 ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கிறது.
விளம்புதல் என்றால் நான்கு பேருக்குப் பரவலாக எடுத்துச் சொல்லுதல் என்பது பொருள்.
சுற்றுலா, கூட்டுறவு என்ற சொற்களைப் போல விளம்பரம் என்ற சொல் தமிழுக்கு நல்வரவாயிற்று.
ஆங்கிலத்தின் பொருளை விட அழுத்தமான கனத்தை கொண்ட அரிய சொல்லாக இது அமைந்திருக்கிறது.
ஒரு மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் டூரிசத்திற்கு (Tourism) நிகராக சுற்றுலா என்ற ஒரு சொல்லை வேறு எந்த மொழியிலும் தமிழைப் போல் காணவில்லை என்றாராம்,
நான்கு, ஐந்து பேருக்கு உணவு பரிமாறுவதைக் கூட “விளம்பு” என்று கூறும் வழக்கமுண்டு.
இன்னும் “ரசத்தை விளம்பு” என்று சமையல் கூடத்தில் சொல்லும் வழக்கமுண்டு.
மேல் நாட்டில் உள்ள பழக்கத்தால் பல்வேறு அறிவுத்துறைகள் அன்றாடம் வளர்ந்து கொண்டிருக்கின்றன.
இவற்றையெல்லாம் தமிழுக்குக் கொண்டு வர வேண்டியது ஓர் அரிய முயற்சிதான்.
“புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை”
என்றும்,
“சென்றிடுவீர் எட்டுத்திக்கும்
கலைச் செல்வங்கள் யாவுங்
கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!”
என்று பாரதியார் நமக்கு வலியுறுத்தியதையும் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது.
“பூக்கடைக்கு விளம்பரமா?”
“கொல்லன் தெருவில் ஊசி விற்பதா?”
“கவிழ்த்துப் பிடித்தாலும் தீப்பந்தம் நிமிர்ந்து எறியாதா?”
“காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டா”
“சேற்றில் தானே செந்தாமரை மலர்கிறது”,
“சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டாமா?”
“குணம்நாடி. குற்றம்நாடி மிகைநாட வேண்டாமா?”
“புதியன கண்டபோது விடுவரோ புதுமை பார்ப்பார்?”
“உணராயிடை தற்புகழ்தல் தகுமன்றே”
என்றெல்லாம் எங்கெங்கோ இடம் பெற்றிருக்கும் பொன்மொழிகள் விளம்பரக் கலையை ஏதேனும் ஒரு வகையில் சுட்டிக்காட்டுகின்ற தொடர்களாக இருக்கத்தான் செய்கின்றன.
எழுத்தறிவு இல்லாத மக்களிடையே அந்நாளில் “பறையறைதல்” என்ற ஒரு வழக்கமிருந்தது.
ஊர்ச்செய்திகளை எல்லாம், யானையின் பிடரியின் மேல் அமர்ந்து முரசறைகின்ற பணியைச் செய்தவர்க்கு “வள்ளுவன்” என்ற பெயர் கூட இருந்ததாம்.
ஆகையினால், திருவள்ளுவர் கூட விளம்பர நிறுவனத்தை சேர்ந்தவர் என்று சொந்தம் கொண்டாடினால் நீங்கள் ஒரு புன்னகையைச் சிந்தி வரவேற்கலாம்!
கல்வியறிவு பெருகப் பெருக்கத்தான் கலையறிவு கூட நுணுக்கம் அடையும்,
மெல்ல மெல்ல கல்வி நலம் ஓங்கி வருவதால் தான் சுவரொட்டிகள், விளம்பரங்கள், துண்டு அறிக்கைகள், தகவல் அறிக்கைகள், செய்தித் தொடர்கள் இவை எல்லாம் வரத் தொடங்கின.
தமிழிலும் சிலர் விளம்பரக் கலையைப் பற்றி ஆய்வேடுகள் எழுதி முனைவர் பட்டம் (பி.எச்.டி.) பெற்றுள்ளனர்.
உலகம் எல்லையால் சுருங்கி வருகிறது என்பது ஒரு வகையில் உண்மை என்றாலும் பல்வேறு மொழிகளாலும், பண்பாட்டு நிலைகளாலும் விரிவடைந்திருக்கிறது.
பிரிட்டிஷ் அரசு குடும்பத்தைச் சேர்ந்த டயானா முறிந்து கொண்டிருக்கும் தன் மண வாழ்வினைப் பற்றி, பிபிசியின் நேர்காணலில் கூறிய தகவலை ஒரு கோடி மக்கள் கண்டு கேட்டிருக்கிறார்கள் என்ற குறிப்பினைக் காணும் போது செய்திகளும், தகவல்களும் கோடிக்கணக்கான கண்களுக்கும், நெஞ்சங்களுக்கும் எப்படி தாவுகின்றன என்று எண்ணிப் பார்க்கலாம்.
பழைய காலத்தில் அங்காடிகளுக்கு எதிரில் வருபவர்களின் பார்வையை ஈர்ப்பதற்காக வண்ணக் கொடிகளை வைத்திருந்தார்களாம்.
பொற்கொடியைப் போல நடனமாடினாலே அந்த பூங்கொடியை வாங்கிக் கொள்ள வேண்டுமானால் இந்த பொன்மாலைதான் விளம்பரம் என்று நகர, நம்பியார் நடமாடுகின்ற நெடுஞ்சாலையில் கூனி ஒருத்தி நின்றிருந்தாள் என்பது கூட பழைய கால விளம்பரத்தின் சுவடுதானே!
ஒருவரை ஒருவர் என்றும்
ஒருவரோடு ஒருவர் என்றும்
ஊரோடும், உலகோடும் மக்கள் இணைந்து வாழ்வதற்குரிய வாய்ப்புகள் இப்போது மிகமிக அதிகமாகிறது.
நேற்று அமெரிக்காவில் இருந்து வந்த நண்பர் கூறினார்.
அவர் திடீரென்று மதியம் மூன்று மணிக்கு நண்பர் வீட்டிற்குப் போயிருந்தாராம்.
எதிர்பாராமல் வந்துவிட்டீர்களே என்று சொல்லி,
பீங்கான் தட்டில் இரண்டு பிஸ்கட்டுகளும், ஒரு தேநீரும் கொண்டு வந்து வைத்தாராம்.
அப்போது அவர் சிரித்துக்கொண்டே சொன்னாராம்.
“இந்த பீங்கான் சீனாவில் செய்தது,
வைத்திருக்கும் பிஸ்கட் டென்மார்க்கைச் சார்ந்தது.
இந்த தேநீர்க்குவளை லண்டனில் வாங்கிய பெல்ஜியம் கண்ணாடி!
தேயிலைத்தூளோ இலங்கையினுடையது,
கலந்த சர்க்கரை ஜாவாவை சேர்ந்தது.
கலப்பதற்குரிய கரண்டி ஜெர்மனியைச் சார்ந்தது.
ஒரு தேநீர் குடிப்பதற்குள் எத்தனை நாடுகள் கலந்துவிட்டன பாருங்கள்” என்றார் அந்த அமெரிக்க நண்பர்,
அந்த அளவுக்கு உள்ளூர்ச் சந்தை மாதிரி உலகச் சந்தை, பன்னாட்டுச் சந்தை, ஆசியாக் கூட்டு, ஐரோப்பிய இணையம் என்றெல்லாம் அங்காடி அகிலம் ஒரு பக்கம் விரிந்து வளர்கிறது.
கோடிக்கணக்கில் விற்பனையாகும் ரீடர்ஸ் டைஜஸ்ட் (Readers Digest) விளம்பரத்தால் வெற்றிப்பாதை இட்டிருப்பதை யாரும் மறக்க மாட்டார்கள்,
கோல்கேட் (Colgate) பற்பசையையும், கோகா கோலா சுவையையும், யாரும் மறப்பதற்கில்லை.
சில பொருள்கள் உலக விளம்பரங்களைப் பெற்றிருக்கின்றன.
இப்படி விளம்பர விவரங்கள் உவகை உலா வந்து கொண்டிருக்கின்றன,
இந்த அளவுக்கு இன்னும் கூட விளம்பரத்தால் விளைகின்ற பயன்களைப் பற்றி இன்னும் முழுமையான அளவுக்கு நம் நாட்டில் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏறத்தாழ 236 ஆண்டுகளுக்கு முன்னரே டாக்டர் சாமுவல் ஜான்சன் விளம்பரத்தைப் பற்றி தெரிந்ததோடு, பொதுமக்கள் போதுமான அளவிற்கு புரிந்து கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.
“Advertisements are now so very numerous that they are negligently perused.”
(Dr. Johnson – 1759)
பொதுவாக இன்று கூட நாளிதழ்களைப் படிப்பவர்கள் விளம்பர வாசகங்களை விரும்பிப் படிப்பதில்லை.
எனவே தான் சில நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களில் எளிதில் காணக் கிடைக்காத அரிய குறிப்புகளைத் திரட்டித் தந்து, பிறகு அதன் தொடர்ச்சியாக வெளியிடுகிறார்கள்.
காகிதத் தொழிற்சாலைக்கான விளம்பரங்களை வெளியிடுகின்ற நிறுவனங்கள் “எழுதும் கலை” எங்கெல்லாம் உலகத்தில், எப்படியெல்லாம் தோன்றியது என்பதை தகவல் சாதனம் போல் வெளியிட்டு இருந்ததை பொதுமக்கள் சிலர் பார்த்திருக்கக் கூடும்.
செப்புக் கம்பிகளை உருவாக்கும் ஸ்டெர்லைட் (Sterlite) தொழிற்சாலையின் விளம்பரத்தை, பம்பாய் கிளியா (Bombay Clea) நிறுவனம் வெளியிட்டபோது, உலகத்தின் பல்வேறு நாகரீகங்கள் எப்படியெல்லாம் செப்பு நாணயத்தை வெளியிட்டு இருந்தார்கள் என்பதை விளம்பரமாகத் தந்தார்கள்.
செப்புக் கம்பியின் நெடுங்கால சரித்திரத் தகவல்களை விளம்பரங்கள் மூலமாக சாசன வரிகளாக ஸ்டெர்லைட் வெளியிட்டது.
ஒப்பரிய உலோகமான செப்பு. நாகரீக உலகத்தின் நரம்பாக இயங்கி வருகிறது என்று பொருள்பட விளம்பரப்படுத்தினார்கள்.
அச்சு வடிவங்களை அகழ்ந்தபோது கண்டெடுத்த பழைய ஆவணங்களைக் கடத்தும் கருவியாக செப்பு பயன்படுகிற நேர்த்தியைக் காட்டும் உண்மைகளையும் படிப்படியாக காலத்தால் உணரத் தொடங்கினோம்.
இப்படிப்பட்ட தகவல்களை எல்லாம் விளம்பர வரிகளாக விளம்பர நிறுவனம் வெளியிடுவதன் மூலம் விளம்பர நிறுவனங்கள் வெறும் வெட்டி ஒட்டும் விளம்பரதாரர்கள் அல்ல வரலாற்றை மீளவும் வரைந்து காட்டும் ஆய்வாளர்களாக அமைந்ததையும் அறிய முடிகிறது.
“ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்ற பொன்மொழியை வெளியிட்டு அதற்குக் கீழே “ஒளவையார்” படம் பார்ப்பது அனைவருக்கும் சாலவும் நன்று என்று திரு.ஜெமினி எஸ்.எஸ்.வாசன் அவர்கள் (நிறுவனர், “ஆனந்த விகடன்”) ஒளவையார் திரைப்படத்திற்கு வெளியிட்டிருந்த விளம்பரம் நம் நினைவுக்கு வரலாம்.
விளம்பரத்துக்கு செய்யப்படும் செலவு, நாளைய வெற்றிக்கு போடப்படுகின்ற முதலீடு!
அளவு கடந்த லாபத்திற்கு முன் வைக்கும் அச்சாரம் என்றும் புரிந்து கொள்வதற்கு நுணுக்கம் வேண்டியிருக்கிறது
இந்த விளம்பர உலகத்தில்.
“ஒரு நிறுவனம் தன்னுடைய செயற்பாடுகளையும், வெற்றிகளையும் ஊரார்க்கு உணர்த்தியே ஆக வேண்டும்.
மறைவாக நமக்குள்ளேயே பங்கிட்டுக் கொள்வதில் பயனில்லை.
“திறமான வணிகமெனில் பல நாட்டார்
அதை வணக்கம் செய்தல் வேண்டும்”
என்ற பாரதியின் வரிகளைக் கூட வணிகத்திற்காக வளைத்துக் கொள்ளலாம் போலிருக்கிறது!
விளம்பரம் என்பது செலவல்ல;
வரவுக்கு தரும் வரவேற்பிதழ்!
– முனைவர் ஔவை அருள்
தொடர்புக்கு dr.n.arul@gmail.com

Add a Comment