புதன்கிழமை (07.02.2024) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில்
மாண்புமிகு தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சி. வி. கணேசன் அவர்கள் முன்னிலையில்,
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வணிக நிறுவனப் பெயர் பலகைகள் தமிழில் இடம்பெற வலியுறுவதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு குமார் ஜயந்த், இ.ஆ.ப.,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் முனைவர் இல.சுப்பிரமணியன், இ.ஆ.ப.,
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள்,
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் திரு. விக்ரமராஜா
மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ் வளர்ச்சித் துறை
செய்தி வெளியீடு
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள்,
மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சி.வி. கணேசன் அவர்கள் முன்னிலையில்
தமிழ்நாட்டிலுள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் இடம்பெற வலியுறுத்துதல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் (07.02.2024) புதன்கிழமை அன்று நடைபெற்றது
வணிக நிறுவனங்களில் பெயர்ப்பலகைகளில் தமிழில் நிறுவுவது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் 07.02.2024 முற்பகல் 11.00 மணிக்கு ஆறாம் தளத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறைக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சி.வி. கணேசன் அவர்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் முனைவர் இல. சுப்பிரமணியன், இ.ஆ.ப. அவர்கள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. குமார் ஜெயந்த் இ.ஆ.ப, அவர்கள், தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ஒளவை ந. அருள் அவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் வணிகர் சங்கத் தலைவர் திரு.விக்கிரமராஜா மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழ் நாட்டிலுள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள். கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகள் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு.
முதலில் தமிழில் முதன்மையாக இடம்பெற வேண்டும் என்பதுடன் அதனைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும், தத்தம் தாய்மொழிகளிலும் 5: 3:2 என்ற வீதத்தில் அமையப் பெற வேண்டும் (அரசாணை நிலை எண்.1541/தொ.ம.வே. /நாள் 29.07.1982) என்று வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர்ப்பலகை கட்டாயம் வைக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து வணிகர் சங்கங்கள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வலியுறுத்தப்பட வேண்டும் என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. குமார் ஜெயந்த் இ.ஆ.ப., அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை இருக்க வேண்டும் ஆனால் இன்னும் சில கடைகள் மற்றும் நிறுவனங்களில் பெயர்கள் தமிழில் இல்லாமல் இருப்பது வேதனைத் தரக்கூடியதாக இருக்கிறது எனவும் கிராமப்புறங்களில் இருந்து வரும் எளிய பாமர மக்கள், நகரங்களுக்கு வருகிற பொழுது இங்குள்ள கடைகளில் பெயர்ப்பலகை ஆங்கிலத்தில் உள்ளதால் மிகவும் சிரமப்படுகிறார்கள் எனவும், ஒரு மொழி என்பது ஒரு நாட்டினுடைய அடையாளம் ஆகும்.
ஆகவே நம் மொழியை எழுத நாமே வலியுறுத்துவது மிகவும் வருந்தத்தக்க செய்தியாக இருக்கிறது.
மேலும் இதனை செயல்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்காமல் அதிக அபராதம் விதிக்காமல் அமைதியான முறையில் வணிகர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
இதனை முறையாக செயல்படுத்த வணிக நிறுவனங்களின் சங்கங்கள், அமைப்புகள் மூலமாக முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதனை நிறைவேற்ற வேண்டும்.
அடுத்த கூட்டம் நடைபெறும் பொழுது அனைத்து நகரங்களிலும் 75% முதல் 80% வரை தமிழில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தொழிலாளர் நலத் துறை அலுவலர்கள் இதனை சுணக்கமின்றி செயல்படுத்த வேண்டுமென்று மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சி.வி. கணேசன் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
ஏப்ரல் திங்களுக்குள் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைத்திட வணிக நிறுவன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் இதன்மூலம் பெயர்ப்பலகைகளைத் தமிழில் மாற்றி பாமர மக்களும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் அனைத்து நகரங்களிலும் இதனைச் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென்று மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் வணிகர் சங்கத் தலைவர் திரு. விக்கிரமராஜா அவர்களிடம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிகர் சங்கங்கள் வாயிலாக அனைத்து கடைகள் / வணிக நிறுவனங்களுக்கும் பெயர்ப் பலகைகளில் முதன்மையாக தமிழிலும் பிறகு ஆங்கிலத்திலும் இடம்பெற சுற்றறிக்கை அனுப்பப்பட்டு செயல்படுத்கிக் கொண்டிருக்கிறோம்.
மேலும் இதனை முழுமையாகச் செயற்படுத்த பெயர்ப் பலகை தயாரிக்கும் அச்சகங்கள்/நிறுவனங்களிடமும் இந்த அரசாணையின் நகலினை அளித்து அதன் முக்கியத்துவத்தை வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் ஆகியோரிடம் தெரிவித்து அரசு விதிப்படி பெயர்ப்பலகை வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக வணிகர் சங்கத் தலைவர் திரு. விக்கிரமராஜா அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பல்வேறு நகரங்களில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர்ப் பலகை வைக்க உதவுவதாக உறுதி அளிக்கப்பட்டது.
தமிழ் வளர்ச்சி இயக்குநர்

Add a Comment