POST: 2024-03-08T08:23:25+05:30

செய்தி வெளியீடு எண்: 478

நாள்: 07.03.2024

தமிழ் மூதாட்டி ஔவையார் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி

ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருக்கும் புலவர் பெருமாட்டியருள் ஔவையாரின் அருமைத் திருப்பெயர் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும் திருப்பெயரும் தவப்பெயருமாகும்.

‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்பது போல ஒளவை முதல அறிவெல்லாம் என்று அறிவுக்கே பரியாய நாமமாக ஒளவையார் ஆண், பெண், இளைஞர், முதியர் என எல்லோராலும் வழிபாட்டுணர்ச்சியோடு வணங்கப்படுகிறார்.

அதியமானுக்காகக் காஞ்சியிலிருந்து ஆட்சிப்புரிந்த தொண்டைமானிடம் தூது சென்று நிகழவிருந்த போரை நிறுத்திய பெருமை மிக்கவர் ஔவையார்.

உலக வரலாற்றில் இரண்டு வேந்தர்களுக்கிடையில் தூது சென்ற பெருமடந்தையராகப் பெருமை கொண்டவர் ஒளவையார் ஆவார்.

சேரமான் மாரிவண்கோவும், சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும்,
பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும்
ஒருங்கிருப்பக் கண்டு உவந்து’ என்றும் தமிழ் மூவேந்தர்கள் இவ்வாறே இருப்பீர்களாக’ என அறிவுறுத்திய புலமைச் செல்வியார் ஆவார்.

நெடுமான் அஞ்சி போர்க்களத்தில் வேல் பாய்ந்து இறந்தபோது. ஔவையார் வருந்திப் பாடிய கையறுநிலைப்பாட்டு மிகவும் உருக்கம் வாய்ந்தது.

சங்கப் புலமைப் பெரும் செவ்வியராகிய இப்பெருமாட்டியார் பாடியனவாக உள்ள ஐம்பத்தொன்பது பாடல்களுள் அகப்பொருள் பற்றியன இருபத்தாறாகும்.

எஞ்சிய முப்பத்து மூன்று பாடல்களுள் புறப்பொருளுக்குரியனவாய்ப் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.

மாந்தர் குலத்திற்குப் பெருமை சேர்த்த ஔவை பெருமாட்டியாரைப் போற்றும் வகையில்

உலக மகளிர் நாளான 08.03.2024 வெள்ளிக்கிழமையன்று
காலை 9.45 மணிக்கு
தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ் வளர்ச்சித் துறையால், சென்னை காமராசர் சாலையில் (மெரினா கடற்கரை) அமைந்துள்ள ஔவையாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்தலும், தமிழ்ப் பெருமாட்டியின் திருவுருவப்படத்திற்கு மலர் வணக்க நிகழ்வும் நடைபெற உள்ளன.

மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள். மேயர், துணை மேயர் அவர்கள். அரசு உயர் அலுவலர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள். பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

1 அறம் செய விரும்பு.

2 ஆறுவது சினம்.

3 இயல்வது கரவேல்.

4 ஈவது விலக்கேல்.

5 உடையது விளம்பேல்.

6 ஊக்கமது கைவிடேல்.

7 எண் எழுத்து இகழேல்.

8 ஏற்பது இகழ்ச்சி.

9 ஐயம் இட்டு உண்.

10 ஒப்புரவு ஒழுகு.

11 ஓதுவது ஒழியேல்.

12 ஔவியம் பேசேல்.

13 அஃகஞ் சுருக்கேல்.

சாதி இரண்டொழிய வேறில்லை

-ஔவையார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *