செய்தித்தாள் கட்டுரைகள்
பழகிப் பார்த்ததில் இவர்கள்…
செய்தித்தாள் கட்டுரைகள்|
==================================================
ஓம் சக்தி – பிப்ரவரி 2020 இதழில்
பத்மஸ்ரீ ஔவை நடராசன் அவர்களைப் பற்றி
மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் எழுதிய கட்டுரை
==================================================
பழகிப் பார்த்ததில் இவர்கள்…
பத்மஸ்ரீ ஔவை நடராசன்
காலம் எல்லோரையும் ஒரு பாறையாகத்தான் படைக்கிறது. சிலர்தான் உளிகளைத் தேடி எடுத்துத் தங்களைத் தாங்களே செதுக்கிக் கொள்கிறார்கள். அப்படித் தன்னை ஒரு விஸ்வரூபச் சிலையாக வடித்தெடுத்து நிற்கும் வித்தகர்தான் அவ்வை நடராசன் அவர்கள்.
அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை என்னும் பேரறிஞரின் புதல்வர் என்பது அவருக்கு அமைந்த அடித்தளம்.
முனைப்பு, முயற்சி, உழைப்பு, உற்சாகம், நுண்ண றிவு, எளிவந்த தன்மை என்னும் ஏராளமான அம்சங்களால் தன் வாழ்வை ஒரு கலைக் கோவிலாக அவர் கட்டமைத்தார்.
ஆசிரியப் பணியில் தொடங்கி மொழிபெயர்ப்புத் துறை இயக்குனர், அரசுச் செயலாளர், பல்கலைக்கழகத் துணைவேந்தர், செம்மொழி உயராய்வு மையத்தின் துணைத் தலைவர் என்று எத்தனையோ அரிய பொறுப்புகளுக்கு அணி செய்த அ றி ஞர் பெருமகன் அவ்வை நடராஜன்.
பண்டைய இலக்கியங்களில் ஆழங்கால்பட்ட அவர், புதுமை இலக்கியங்களின் நந்தவனத்தில் பூக்கள் பறிப்பவர். புத்தம் புதிதாய் இன்று தமிழ் இலக்கிய மேடைகளில் அரும்பி நிற்கும் இளைஞர் களையும் அடையாளம் கண்டு அங்கீகரிக்கும் விசாலமான மனம் இவருடைய விலாசமாக விளங்குகிறது.
பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஒருவரின் கவிதைகளைப் படித்துவிட்டு வாழ்த்துச் சொல்ல நேரில் போய், அவர் அங்கே இல்லாததால் ‘உங்கள் வித்தக விரல்கள் வெல்க!’ என வாழ்த்தெழுதி வழங்கிவிட்டு வந்தார். அப்படி வாழ்த்துப் பெற்ற கவிஞர்தான் கவிப்பேரரசு வைரமுத்து.
‘சொல்வேந்தர்’ சுகி சிவம், ரவி கல்யாணராமன் உள்ளிட்ட இந் நாளைய இலக்கிய வேந்தர்கள் இளவரசர்களாக இருந்தபோது, பல மேடைகளில் அவர்களுக்குப் பட்டம் கட்டி அழகு பார்த்தவர் மறைமுகமாகச் சொல்வார்.
நல்ல திறமை இருந்தால் வயது பேதம் பாராமல் மதிப்பதும், தவறுகள் இருப்பின் சிரித்த முகத்துடன் நேர்பட உரைப்பதும் அவருடைய இயல்புகள்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் தடையின்றிச் சொற்பெருக்கு ஆற்றும் தனித் தன்மையால் புலவர்கள் மத்தியில் தலைவராகத் திகழும் அவர், தொண் டருக்குத் தொண்டராய் எல்லோரோடும் எளிதில் பழகும் பண்புநலன் வாய்ந்தவர். எனவே எல்லாத் தரப் பிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு.
இளைஞர்களைக் காண நேர்ந்தால், “என்ன ராஜா எப்படி இருக்கீங்க?” எனத் தோளில் தட்டித் தோழமைப் பாராட்டுவார். ஒரு கூட்டத்தில் நான் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டிருந்தேன். அந்த விழாத் தலைவரையும் தோளில் கைவைத்து “என்ன ராஜா எப்படி இருக்கீங்க?” என உரிமையுடன் வினவினார் அவ்வை.
அப்படி – வினவப்பட்டவர் உண்மையிலேயே ராஜா. செட்டி நாட் டரசர் எம்.ஏ.எம் ராமசாமி செட்டியார் அவர்கள் தான் அந்த விழாவின் தலைவர்.
அவ்வை அவர்களின் துணைவியாரும், மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மேனாள் டீன் (Dean)-ஆக இருந்தவருமான டாக்டர் தாரா நடராஜன் அவர்கள் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சைக்காகக் கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவர்களுக்கு எங்கள் வீட்டிலிருந்து அன்றாடம் உணவு கொண்டு செல்வேன்.
துணைவியாருக்குத் துணையாக உடனிருந்து பார்த்துக் கொள்வார் அவ்வை. “நான் அம்மாவுடன் சேர்ந்தாற்போல, பத்து நாட்கள் இருப்பது இப்போதுதான்” என என்னிடம் சொன்னார். அம்மையார் ஓய்வு எடுக்கத் தொடங்கியதும் தன் அரச உலாவை ஆரம்பிப்பார்.
பேரூர் தமிழ்க் கல்லூரியில் சைவ சித்தாந்த அமர்வின் கருத்தரங்கத் தலைமை, உலகத் தமிழர் பேரவை ஜனார்த்தனன் உடன் அவர் தங்கியிருக்கும் அறையில் சென்று அளவளாவுதல் என்று எப்போதும் தன்னைச் சுறு சுறுப்பாகவே வைத்திருப்பார்.
ஜனார்த்தனம் அவர்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்து அவர் சொன் னார், “ஜனார்த்தனம்தான் என்னை அண்ணாவிடம் அழைத்துப் போய் அறிமுகம் செய்தவர்” என்று.
அத்துடன் விட்டாரா என்றால் இல்லை. ஜனார்த்தனம் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து, “இவர் நல்ல இளைஞர். சிறந்த கவிஞர். ஆனால் திராவிட இலக்கியங்கள் பால் இவருக்கு நல்ல அபிப்ராயம் இல்லை” என்று போட்டு உடைத்துவிட்டார். ஜனார்த்தனம் அவர்களின் நக்கீரப் பார்வையிலிருந்து நான் விலகி நிற்க வேண்டியதாகிவிட்டது.
அதேபோல, தஞ்சையில் புலவர் லியோ ராமலிங்கம் அவர்களின் நூல் வெளியீட்டு விழா ஒன்றிற்கு அவரும் நானும் உரை யாற்றப் போயிருந்தோம். “ராஜா, அறையிலேயே அடைந்து கிடக்காதீர்கள். என்னோடு வாருங்கள்” என்று உள்ளபடியே நான் காண விரும்பி இருந்த ஓர் அறிஞர் இல்லத்திற்கு என்னை முதல் முறையாக அழைத்துச் சென்றார். –
அந்த அறிஞர்தான்சேக் கிழார் அடிப்பொடி டி.என். ராமச்சந்திரன் அவர்கள். என்னைக் காண்பித்து, “அண்ணா , இவன் ஓர் இளம் மாணாக்கன்” என்று ஆலாபனையுடன் அறிமுகம் செய்து, பின்னர் இன்னாருடைய பெயரன் என்றும் சொன்னதும் டி.என்.ஆர். பெரிதும் அகமகிழ்ந்தார்.
அப்போது அவர்களின் உரையாடலில் நடந்த ஒரு சுவையான சம்பவம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இருவரும் ஒரு மொழி பெயர்ப்பாளரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவர் பற்றி அவ்வை அவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் இருந்தது. ஆனால் டி.என்.ஆர். அவர்களுக்கு அத்தகைய அபிப்பிராயம் இல்லை. என்றாலும் அவர் அதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.
அவ்வை பேசிக் கொண்டே போனார். ” அந்த மொழிபெயர்ப்பாளரிடம் ஒரு மொழிபெயர்ப்புப் பணியைக் கொடுத்தேன். மிக விரைவில் முடித்துக் கொடுத்துவிட்டார்” என்று பாராட்டினார்.
உடனே டி.என்.ஆர். சொன்ன வார்த்தை இது. “அதெல்லாம் கொடுத்துவிடுவார். பிடி சாபம் என்று உடனே கொடுத்து விடுவார்.” அதிலிருந்து அந்த மொழிபெயர்ப்பாளர் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவ்வை புரிந்துகொண்டு வாய்விட்டுச் சிரித்தார்.
உடலளவிலும் மனதளவிலும் எதற்கும் அலட்டிக் கொள்ளாதது அவருடைய இயல்பு என்பதை அறியாதவர்கள் இல்லை. அவருக்கு நெடுங்காலமாகவே சர்க்கரை நோய் உண்டு. அதுபற்றிக் கேட்டால், அவர் சொல்வது என்ன தெரியுமா? “40 வயதுக்குள் உனக்கு சர்க்கரை வியாதி வராவிட்டால், நீ வாழ்க்கையைச் சரியாக வாழவில்லை என்று அர்த்தம்” என்பார்.
கேட்பவர்களுக்குத் தூக்கிவாரிப் போடும். பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, “ஐயா, சர்க்கரை வியாதியைக் கட்டுக்குள் வைக்க நடைப் பழக்கம் நல்லது என்கிறார்களே. நீங்கள் நடப்பது உண்டா ?” என்று கேட்டேன். “மக்களுக்கு நோய் வந்தால் நோயைச் சரி செய்து கொடுக்கும் அளவு மருத்துவத்தையும் அறிவியலையும் வளர்க்க வேண்டும். நான் அமர்ந்து இருக்கும் போது என் கால்களுக்குக் கீழே ஒரு கருவியைக் கொடுத்து அமர்ந்த நிலையிலேயே கலோரிகளை எரிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமே தவிர, நீ நட… ஓடு… விளை யாடு… என்றெல்லாம் என்னைச் சொல்லக் கூடாது” என்றாரே பார்க்கலாம். அலட்டிக் கொள்ளாமல் இருந்தாலும் நிரம்பி நிற்கும் நடுக்கடல் போல் சலனமில்லாமல் இருக்கும் சிந்தனையாளர் அவர். எந்த இலக்கியம் குறித்தும், எந்த இலக்கிய வாதி குறித்தும் கையிலொரு சிறு குறிப்பும் இல்லாமல் உடனுக்குடன் மணிக் கணக்காய் உரையாற்றும் நுண்மாண் நுழைபுலம் கொண்டவர் அவர்.
அவருடைய புதல்வர்களில் திரு. அருள், தமிழ்நாடு அரசு மொழி பெயர்ப்புத் துறையில் இயக்குனராக இருக்கிறார். தந்தையின் எத்தனையோ இயல்புகளை உள்வாங்கிக் கொண்டு இருப்பவர். இன்று அவ்வையின் நெடிய அனுபவங்களை எல்லாம் கேட்டு, அவற்றை வரிசையாக முகநூலில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்.
குறிப்பாக எம்.ஜி.ஆர் அவர்களின் கீழ் தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாள ராகப் பணிபுரிந்த அவரின் அனுபவங்கள் விலைமதிப்பில்லாதவை.
தேர்ந்த அறிவாற்றல், தலைசிறந்த நினைவாற்றல், தகைசான்ற நிர்வாக ஆற்றல் ஆகியவற்றின் ஊற்றுக்கண் ணாக இருந்தாலும் தன்னியல்பில் தீராத விளையாட்டுப் பிள்ளையாகவே திகழும் அவ்வை நடராஜன் தமிழுலகில் ஓர் ஆலமரம்!
Add a Comment