நெகிழ்வான சந்திப்பு
எங்கள் நெருங்கிய உறவினர் ஆனந்தன் மாமா அவர்களின் மூத்த மகள் தங்கமணியின் திருமணம் 13.11.1978 ஆம் ஆண்டில் இரத்தனகிரி திருக்கோயிலில் நடைபெற்றது.
அப்பொழுது பெற்றோர்களுடன் சென்று வந்த (மணமகள் மற்றும் நாங்கள் அம்மா ஒட்டி வந்த சீருந்து) மங்கல நிகழ்விற்கு பிறகு 45 ஆண்டுகள் கழித்து
இராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா வட்டத்தில் அமையப்பெற்றுள்ள இரத்தினகிரி அருள்மிகு பாலமுருகன் திருக்கோயிலில் தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகளை 2.3.24 சனிக்கிழமையன்று நேரில் சந்தித்து தமிழ் வளர்ச்சித் துறை நடத்தி வரும் திருக்குறள் முற்றோதல் திட்டம் குறித்து விரிவாக உரையாடினோம்.
1983ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஆறாம் வகுப்பு வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களை ஒரு பிரிவாகவும் பத்தாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணாக்கர்களை ஒரு பிரிவாகவும் கொண்டு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சப் போட்டிகள் ஆகிய மூன்று போட்டிகள் நடத்தி வெற்றிபெறும் மாணவச் செம்மல்களுக்கு விழா எடுத்து ரூபாய் மூன்று இலட்சம் மதிப்பிலான பரிசுகள் சுவாமிகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.
உலகத் திருக்குறள் மாநாடுகள் மாநில அளவில் இரண்டு முறையும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அளவில் 37 முறையும் சுவாமிகள் தலைமையில் நடத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது பெற்ற சுவாமிகள் நீண்ட நேரம் திருக்குறள் மாநாடுகளை குறித்து சிறு தாள்களில் பக்கம் பக்கமாக எழுதிக் காட்டியதை படித்து நெகிழ்ந்தேன்…
உரையாடலின் நிறைவில் பெற்றோர்கள் இருவர் பெயரையும் எழுதிக் கேட்டபொழுது அழுகையால் விம்மினேன்.

Add a Comment