POST: 2024-09-07T08:04:59+05:30

மக்கள் குரல்
பக்கம் 4
6.9.24 வெள்ளிக்கிழமை

உரைவேந்தர் சித்தாந்த கலாநிதி
ஔவை துரைசாமியின் 122 ஆம் பிறந்தநாள் 5.9.24 முன்னிட்டு சிறப்புக் கட்டுரை

ஆக்கம்

முனைவர் ஔவை அருள்

உரை வேந்தர்
ஔவை துரைசாமியின் உரைத்திறன்

தமிழையே தன் உயிராக, உணர்வாக, உணவாக, உரமாகக் கொண்டு தமிழுக்காகவே வாழ்ந்தவர்
‘உரைவேந்தர்’ ஒளவை துரைசாமியின் உரைத்திறன்

ஆழம் அகலம் தெரியா ஆழியென ஆர்ப்பரிக்கும் அன்னைத் தமிழின் இலக்கிய, இலக்கணங்களுக்கு உரை கண்டு உயர்த்தியவர்கள் பலர்.

அவர்களில் உரைவேந்தர் என்ற பெருமை பெற்று பெரும்புகழ் பெற்றவர் ஒளவை துரைசாமி.

1902ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் திண்டிவனத்தை அடுத்த ஔவையார் குப்பத்தில் சுந்தரம் பிள்ளைக்கும் சந்திரமதி அம்மாளுக்கும் மகனாய் பிறந்தார் துரைசாமி.

சொந்த ஊரில் தொடக்கக்கல்வி பெற்று, உயர்நிலைக்கல்வி திண்டிவனத்தில் அமெரிக்க ஆர்க்காடு பள்ளியில்

(இதே பள்ளியில் தான் காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளும் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது)

படித்த பொழுது இன்டர்மீடியட் கல்வியினை வேலூரில் ஊரிசு கல்லூரியில் பெற்றார்.

குடும்பச் சூழ்நிலையால் படிப்பைத் தொடர இயலாமல் பணிக்குச் சென்றார்.

உடல்நலத் துப்புரவுக் கண்காணிப்பாளர்
(Sanitary Inspector) பணியில் சேர்ந்தார்.

தமிழ்ப்பற்று அப்பணியிலிருந்து நீங்கி கரந்தைத் தமிழ்ச் சங்கப் பள்ளிக்கு மடை மாற்றியது.

தமிழாசிரியர் பணியோடு தமிழ்ப் பணியையும் தொடர்ந்தார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்வான் தேர்வில் வெற்றி பெற்றார்.

திருப்பதி கீழ்த்திசை ஆராய்ச்சிக் கழகம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,

மதுரைத் தியாகராயர் கல்லூரி எனத் தம் பணியினைத் தொடர்ந்தார்.

அவர் வாழ்ந்த காலத்தில் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்.
க. வெள்ளைவாரணார்.
கா.சு. பிள்ளை,
நா.மு. வேங்கடசாமி நாட்டார். கரந்தை வேங்கடாசலம் பிள்ளை
உள்ளிட்ட பேரறிஞர்களுடன் பயணித்தனர்.

நூல்கள்

உரைகள், ஆராய்ச்சி, சமயம், வரலாறு, படைப்பு, இலக்கண ஆய்வு, மொழிபெயர்ப்பு, ஆங்கில நூல் என இவரின் நூல்களுக்கான களங்கள் எண்ணற்றவை.

திருவோத்தூர் தேவாரத் திருப்பதிகவுரை,

திருமாற்பேற்றுத் திருப்பதிகவுரை

ஞானாமிர்தம் உரை,

சிவஞானபோத மூலமும் சிற்றுரையும்,

சைவ இலக்கிய வரலாறு,

சிவஞானபோதச் செம்பொருள். ஞானவுரை,

திருவருட்பா -ஒன்பது தொகுதிகள்
ஆகியவை இவரது சமய உரைகளாகும்.

சங்க இலக்கிய உரைகளாவன, பரணர் (கரந்தை),

தெய்வப்புலவர் திருவள்ளுவர் (கழகம்),
ஔவைத் தமிழ்,
ஐங்குறுநூறு உரை, புறநானூறு உரை (2 பகுதிகள்). பதிற்றுப்பத்து உரை. நற்றிணை உரை
ஆகியன.

ஔவை துரைசாமி கண்ட காப்பிய உரைகள்,

சிலப்பதிகாரம் சுருக்கம், மணிமேகலை சுருக்கம், சீவகசிந்தாமணி சுருக்கம். சூளாமணி சுருக்கம், சிலப்பதிகார ஆராய்ச்சி, மணிமேகலை ஆராய்ச்சி. சீவகசிந்தாமணி ஆராய்ச்சி.
யசோதரகாவியம் -மூலமும் உரையும்
முதலியன.

ஊர்ப்பெயர் வரலாற்றாராய்ச்சி

ஆர்க்காடு,
வரலாற்றுக் காட்சிகள்,
சேர மன்னர் வரலாறு
ஆகிய வரலாற்று நூல்களையும்

புதுநெறித் தமிழ் இலக்கணம்
(2 பகுதிகள்) என்னும் இலக்கண நூலையும்

வரலாற்றுக் கட்டுரைகள்,
மருள் நீக்கியார் நாடகம், மத்தவிலாசம் (மொழியாக்கம்) ஆகிய படைப்புகளையும் படைத்தளித்துள்ளார்.

மேலும்,
தமிழ் நாவலர் சரிதை,
நந்தா விளக்கு.
ஔவைத் தமிழ்,
தமிழ்த் தாமரை.
பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார்

ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும்

தெய்வப்புலவர் திருவள்ளுவர், Introduction to the study of Thiruvalluvar
ஆகிய நூல்களையும் தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கியுள்ளார்.

பொருளீட்டுவதோ புகழ்பெறுவதோ ஒளவை அவர்களின் இலக்காக அமையவில்லை.

தமிழ்த் தொண்டு ஒன்றே அவர்தம் குறிக்கோளாக இருந்தது.

புத்துரைக் காண்டல்

-கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி

பரந்திலங்கருவி யொடு நரந்தம் கனவும்

ஆரியர் துவன்ற பேரிசை இமயம்
(பதி. 11,21-23)

என்பதற்குப் பழைய உரைகாரர், ஆரியத்து ஆணையினாலே பிற விலங்காலும் மக்களாலும் வருத்தம் இன்றி கவரிமான் என்கிறார்.

புத்துரை வழங்கும் உரைவேந்தர், முருக்கு மரங்கள் செறிந்த மலையிடத்தில் இரவில் உறங்கும் கவரிமான்கள், பகற்பொழுதில் தம் மேய்ந்த நரங்கம் புற்களையும் அவை வளர்வதற்குக் காரணமாகப் பரந்து விளங்கும் அருவிகளையும் கனவிற்கண்டு மகிழ்வதற்கு இடமாய் விளங்கும் ஆரியர் நிறைந்து வாழும் இமயம்.

கவரிமானும் நாகம் புல்லும் இமயமலைச் சாரலில் மிகுதியாக இருக்கும் உண்மையின் இவற்றை விதந்தோதினார்.

சொற்பொருள் நயங்காணல்

உரைவேந்தரின் சொற்பொருள் நயங்காணும் பண்பு எண்ணி மகிழத்தக்கது,

விதுப்பு என்பது வேட்கை மிகுதியால் உள்ளத்து எழும் விரவுத் துடிப்பு.

அது கண்பார்வையிலும் சொற்செயல்களிலும் மெய்ப்பட்டுத் தோன்றும்.

அவினாபாவம் என்பது விட்டு நீங்காத தன்மை.

மட்குடத்திலிருந்து நீங்காத மண்போல ஆகும்.

வாயாத்துரிசு என்பது வாய்மை அல்லாத பொய்ம்மைக் குற்றமாகும்.

அருஞ்சிறை என்பது உடம்பாகும்.

நீங்குதற்கு அரிய சிறை எத்துனைத் துன்பம் உரினும் உயிர் அதற்கு ஏதுவாய் தன்னையே காதலித்துத் தன்னகத்து வாழ்வதையே காதலிக்கச் செய்யும் அருமையுடைமை பற்றி உடம்பு அருஞ்சிறை எனப்பட்டது என்கிறார் உரைவேந்தர்.

சிக்கலை அவிழ்த்தல்

‘’ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான் முந்துறும்..’’

விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ, வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்.

ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?

‘’பழுத்த பழம் மரத்தில் நில்லாது என்பது உலகுரை.

நன்கு முதிர்ந்த கனி தன்பால் முதிரும் விதையாகிய பயனை எவ்வண்ணமேனும் அதன் முதலிலிருந்து நீக்கி அப்புறப்படுத்தி விடுமேயன்றி, தன்னிடமே கொண்டொழியாது என்பது கருத்தாம்.

மரம் ஒன்று பழம் ஊழ்த்தல் விதைப்பயந்து தன் இனம் பெருக்கும் குறிப்பிற்றாதல் போல, வினை ஊழ்த்தல் தன் பயனைத் தன்னைச் செய்தோர்க்கு நல்கி மேலும் வினைகளாகிய தன் இனத்தைப் பெருக்கும் இயல்புற்றாம்.

பழுத்த பழம் விதைப் பயனை வெளிப்படுத்தாது ஒழியாமை போல, ஊழ்வினையும் தன் பயனை ஊட்டாது கழியாது என்பது விளங்குகிறது.

ஊழ் கனிக்கு அது இயற்கையறமாதல் போல, ஊழ்வினைக்குப் பயன் நல்குதல் இயற்கையறமாகும்.

இயற்கையறம் எல்லா ஆற்றலிலும் வலிமிக்கதாதலால் ஊழ்வினையின் வலி மிகப்பெரியது என்பது பற்றி ஆசிரியர் ஊழிற் பெருவலி யாவுள” என்று அதன் வலி மிகுதியை விளக்குகின்றார்.

செம்மொழிப் புதையல்

ஒளவை அவர்களின் செம்மொழிப் புதையல் என்னும் நூல் 20 கட்டுரைகளைத் தன்னகத்தே கொண்ட இலங்குகின்றது.

அவற்றில் சிலவற்றை இங்கு உற்றுநோக்கினால் உரைவேந்தரின் மேன்மை விளங்கும்.

அறிவாவது சொல்வாரது இயல்பு நோக்காது சொல்லப்படும் பொருளின் பயன் நோக்கிக் கொள்ளுதல் ஆகும்.

‘’எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு”

இக்கட்டுரையில் வரும் பருந்து, புழுவின் உரையாடல் வழி அறிவு என்பதனை நிறுவிய பாங்கினை அறியலாம்.

பருந்து:
நான் சொல்வதை மேலோட்டமாக உணர்ந்துவிடுவாயோ-ஐயம்
ஆம். சார்ந்ததன் வண்ணமாதலே மனவியல்பு.

எந்நோக்கங் கொண்டு எப்பொருள் நோக்கப்படுகின்றதோ, அந்நோக்கிற கமைந்தே அப்பொருளுந் தோன்றும்.

ஒருவனைக் குற்றமுடையனே யெனக்கருதி நோக்குவார்க்கு அவன் குற்றமுடையனாகவும் அல்லனெனக்கருதி நோக்குவார்க்கு அல்லனாகவும் தோன்றல் கண்கூடன்றோ! நிற்க.

யான், அவ்வுறுதிநோக்கு உடையேன்; வெளிப்படையாகக் கூறின், நீ கூறுமனைத்தையும் கூறியாங்கே நம்புவல். இது உறுதி.

இப்படியாக உரையாடல் செல்லும்.

ஒரு கட்டத்தில் பருந்தின் எந்த அறிவுரையையும் புழு கேட்காது முடிவை இப்படி எழுதுகின்றார் உரைவேந்தர்.

இவ்வண்ணம், அழகுதிகழப் புத்துடல் பெற்றுப் பூந்தேனுண்டு பொலிவுகூர் சுற்றமொடு புரிந்து வாழ்ந்த சேடப் பூச்சி, பின்னர்ச் சின்னாட்களுட் தன்னின்னுயிர் நீங்குங்கால மெய்தலும், எண்ணரு மின்பங்கனிய இம் மறுவின்று விளங்கும் மாயிருஞாலத்து அறிவு வளர்க்குமாற்றானமைந்த பொருள்க மிகப்பலவுள அவற்றையாய்ந்து கோடலறிவின் கடன்.

அதற்கு இன்றியமையாத வுறுப்பாவது உறுதிநோக்கே (Faith)
அதனை அதனருளாலே யடையப்பெற்றேன்.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! இனி எவை வரினும் வருக.

யான் விண்ணகம் படர்குவல்” என்றெழுந்து சென்று விண்ணில் மறைந்தது.

பிறப்பொக்கும் சிறப்பொவ்வா

கம்யூனிஸ சிந்தனை எரிமலையாய்க் கொப்பளிக்கும் கட்டுரை இது.

தேனீக்கள் வாழ்வை வைத்துப் பேசும் கட்டுரை இராணி தேனீ, ஆண் தேனீ, தொழுலீக்கள்.

தொழிலீ மலர்கள் தோறும் சென்று தேனைப் பருகுதல்.. களி மயக்கத்தில் ஒரு வீட்டுப் பலகாரத்தில் விழுதல், சிறுவர் உரையாடல், அதைக் கேட்டு அந்தத் தொழிலீ தன் கூட்டைச் சார்ந்த தொழிலீக்களை நெறிப்படுத்த முயல்கின்றது. வழிநடத்த முயல்கின்றது.

‘’எனக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது: அதனை அசட்டை செய்யாது கேட்டு, அமை வுடைத்தாயின் ஏற்றுக்கொள்ளுங்கள்.

அது யாதெனின், நாம் அனைவரும் ஈயரசிகளாதலினும்,
அவ்வரசுரிமையையே முற்றிலும் களைந்து விட்டு, அரச ஈ முதல் வெற்றீ வரையுள்ள அனைத்தீக்களும் தொழிலீக்களாக மாறி, நமக்குள் ஒருவகை யுயர்வு தாழ்வுமின்றி ஒருமித்து வாழ்தல் வேண்டும்”என்றோர் சொற்பொழிவு செய்தது.

‘’அதுபோது, அத்தேனீ_ இவ்வியக்கத்துக்குக் காரணமாயிருந்த அத்தேனீ வேறொரீயினை நோக்கி என்னே உங்கள் அறிவின்மை இருந்தவாறு!

உங்களைக் காணும்தோறும் உளத்தில் வெகுளியெழுகின்றதே யன்றி விருப்புண்டாகின்றதில்லை.

எத்தகைய அறிவுள்ள சிற்றுயிரும் இவ்வண்ணம் வீணே காலம் கழிக்காது.

அந்தோர இதனை அறிவின்மை என்பதா? அறியாமை என்பதா? என்றவுடன்..

மற்றொரு அறிவிலி உனக்கு ஈயரசு பெற வேண்டும் எனும் எண்ணம் உளது போலும்! அறிந்தேன் என அக்கட்டுரை பகர்கின்றது.

முப்பது ஆண்டுகள் வாணிகம் செய்து வாழ்ந்தாரும் இல்லை.. வீழ்ந்தாரும் இல்லை.. என்று பழமொழியும் உண்டு.

உயர்ச்சி வந்தால் நல்ல நேரம், நல்ல யோகம் என்பர்.

வீழ்ச்சி வந்தால் திசை கெட்டுப்போச்சு, கிரகம் சரியில்லை என்பர்,

நம் மீதும் நம் உழைப்பின் மீதும் குற்றம் சொல்ல முன்வருவதே கிடையாது என்கிறார் ஒளவை.

வாணிபம் ஒரு சூதாட்டம் என்று எவன் எந்தக் காலத்தில் சொன்னானோ அறியக் கிடைக்கவில்லை.

அந்தப் படுபாவியால் சொல்லால் நமது நாடு வணிக வுலகத்தில் மதிப்பிழந்து போயிற்று”
(பக்.184, செம்மொழிப் புதையல்) என்கிறார் உரைவேந்தர்.

வாணிகத்திற்கான மந்திரமாக, தரமானதாகப் பொருட்களைத் தருதல்:

விலை சரியானதாக இருத்தல்:

நட்பும் நம்பிக்கையும் ஏற்படுத்துதல்:

நாம் நடத்தும் வணிகத்தால் மக்களுக்கு என்ன நன்மை என்று கருதுதல்

என்னும் நான்கினை எடுத்துரைக்கின்றார்.

இந்த மந்திரத்தினை மனதில் வைத்து வணிகத் தொழில் செய்தால் அவர் சிறப்பும் செல்வமும் பெறுவதில் ஐயமில்லை என்கிறார்.

தனக்கென வாழாது, தமிழையே தன் உயிராக, உணர்வாக, உணவாக, உரமாகக் கொண்டு தமிழுக்காகவே வாழ்ந்தவர் உரைவேந்தர்.

‘‘பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக்

கொள்முதல் செய்யும் கொடைமழை – வெள்ளத்தேன்

பாயாத ஊருண்டோ? உண்டா உரைவேந்தை

வாயார வாழ்த்தாத வாய்!”

எனப் பாவேந்தர் வழிநின்று உரைவேந்தர் பிறந்த நன்னாளில் 5.9.24 அவரின் புகழை ஏத்தி மகிழ்வோம்!

ஒளவை அருள்

(இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு)

செப்டம்பர் 5 1903

தமிழ் மேல் கொண்ட பற்றினால் தாம் பார்த்து வந்த அரசுப்பணி துறந்து தமிழறிஞராக மெருகேறியவர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை தியாகராசர் கல்லூரியின் மேனாள் பேராசிரியர்.

இவரின் சைவ இலக்கிய வரலாறு முதலான 33 நூல்கள் அச்சாகியும் 8 நூல்கள் அச்சாகாமலும் போயின.

பல்துறை முற்றிய புலவர், உரை வேந்தர்,

தமிழ்ப் பேரவைச் செம்மல்

பட்டங்கள் பெற்றவர்.

தமிழ்த்தொண்டு செய்த பெரியார்

ஒளவை துரைசாமி

பிறந்த நாள் இன்று

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *