மொழியாக்க வானின் விண்மீன் மறைந்ததே!
திரு. பொன் சின்னதம்பி முருகேசன்
(2.7.1949 – 02.10.2024)

அரிய ஆங்கில நூல்களை அருந்தமிழுக்கு ஆக்கி உரிய தமிழ்த் தொண்டால் உயர்ந்த பெருந்தகை முருகேசனை இழந்து விட்டோமே!
உறங்கா விழிகள்
ஒழியா உழைப்பு
மிகுதுயர் எந்தன்
உள்ளம் மேவிடச்
செய்தாய் நண்ப
ஆழ்கடல் அமிழ்ந்ததே!
தமிழ்நாடு அரசுப் பணியில் பணியாற்றி 2006 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு தான் கற்ற ஆங்கிலத்தையும் தான் பெற்ற அருந்தமிழையும் இணைத்து அறிவியல், மெய்யியல் பொருளியல் துறைகளிலுள்ள ஆங்கில நூல்களை தமிழாக்கங்களை தனிநிலையில் செய்தவரை திசையெட்டும் இதழாசிரியர் மொழிபெயர்ப்பு உலகின் கலங்கரை விளக்கமாக ஒளிரும் திரு குறிஞ்சி வேலன் அவர்களால் அடையாளம் கண்டவர் தான் திண்டுக்கல் திரு. சின்னதம்பி முருகேசன் ஆவார்.
2013-2014 ஆம் ஆண்டுகளில் தலைமைச் செயலக மொழிபெயர்ப்புப் பிரிவில் உதவிப் பிரிவு அலுவலர்கள் ஒருவரும் இல்லாமல் 16 பணியிடங்களும் வெற்றிடமாக நிலவிய சூழலில் அரசு நிலையில் ஓராண்டுக்கு தற்காலிகமாக ஓய்வு பெற்ற மொழிபெயர்ப்பாளர்களை தலைமைச் செயலகத்தில் பணியாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அவ்வகையில் பணியில் சேர்ந்த ஐவருள் ஒருவராக வந்தவர் தான்
திரு. பொன் சின்னதம்பி முருகேசன்.
பத்தாண்டுகளுக்கு முன் அவர் தலைமைச் செயலகத்தில் சார்பு செயலாளர் நிலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பணியில் சேர்ந்த முதல் நாளே கணினியில் தான் தட்டச்சு செய்யும் இயல்புடையவன் என்றவுடன் யான் மகிழ்ச்சியில் துள்ளினேன்.
அவருக்கு இட்ட பணிகள் அனைத்தையும் விரைந்து செய்து முடிக்கும் ஆற்றல் திலகமாக மிளிர்ந்ததோடு தமிழில் இருந்து ஆங்கிலத்திலேயும் மொழிபெயர்ப்பு செய்வதில் இணையற்றவராக திகழ்ந்தார்.
ஓராண்டில் நிலுவையாக இருந்த ஈராண்டுப் பணிகளையும் வெல்லும் விரலாலும் சொல்லாலும் நிறைவேற்றி மீள திண்டுக்கல் சென்றார்.
திரு. சின்னதம்பி முருகேசன் அவர்கள் தமிழ்நாடு அரசின் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதினைப் பெற்றவர்.
சில ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய இலக்கிய தாகத்தில் நான் கேட்கும் போதெல்லாம் மரபுக் கவிதைகளாக எழுதிக் குவித்தார்..
எந்தையாரும் அவரைப் பெரிதும் பாராட்டினார்.
அப்பாவை குறித்து பிள்ளைத்தமிழ் எழுதச் சொன்னேன் உடன் மறுத்தார்.
எனக்கு அந்த புலமை இல்லை என்று வருந்தினார்.
பிறகு நான் ஔவை பிள்ளைத்தமிழை ஆங்கிலத்திலேயே குடந்தைப் பேராசிரியர் சங்கரநாராயணன் எழுதியதை அனுப்பி தமிழாக்கம் செய்து தாருங்கள் என்று கேட்ட பொழுது படித்துவிட்டு வைரத்தால் புனைந்த ஆங்கில வரிகளை மொழியாக்கம் செய்வது எளிதல்ல என்று சொல்லி வருந்தினார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வாயிலாக கிரேக்க காப்பியமான ஓமரின் ஒடிசியின் 24 படலங்களையும் மரபுக் கவிதை வடிவில் முதன்முதலாக தமிழ் உலகில் படைத்துக்காட்டிய பெருமைக்குரியவர் ஆவார்.
அவர் எந்த வரியைத் தொட்டாலும் பொன்னாக்கும் சொற்செல்வர் எனலாம்.
சென்ற வாரம் வரை கிரேக்க ஏனிட் காப்பியத்தை தமிழாக்கம் செய்து மின்னஞ்சல் அனுப்பிய பிறகு தொலைபேசியில் என்னிடம் நீண்ட நேரம் பேசும் பொழுதே இனி கணினிக்கு அருகில் என்னால் செல்ல முடியாது..
பல்வகை நோயால் தாக்கப்பட்டுள்ளதால் இல்லம். மருத்துவமனை என்று தான் இருக்கப் போகிறேன்
நிறைவாக நீங்கள் சொன்ன பணியினை தான் செய்தேன் என்று துயரத்தோடு விம்மியவாறு சொன்ன பொழுது நான் நம்பவில்லை அவர் நேற்று மாலை மியாட் மருத்துவமனையில் மறைந்தார் என்று அவர் மகன் சிவகுமார் மகள் கண்மணி கதறிய பொழுது விண்மீன் மறைந்ததே என்று உருகினேன்.
நினைவுகளும் உணர்வுகளும் என்றென்றும் நிலைத்திருக்கும்.
Add a Comment