பெரியபுராணம்தனித்தமிழ் நூல்

கலைமகள்
தீபாவளி மலர் 2024
பக்கம் – 44,45,46

ஔவை அருள்,
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை

சென்னை மாநகரத்திற்கு எத்தனையோ – சிறப்புகள் உண்டு.

சென்னை மாநகரத்திற்குத் தென்புறத்தில் திருவொற்றியூரும், வடபுறத்தில் திருவான்மியூரும், கிழக்குப் பகுதியில் மயிலாப்பூரும்,
மேற்குப் பகுதியில் இராமானுசர் தோன்றிய திருப்பெரும்புதூரும், இவையெல்லாம்,
சென்னை மாநகரத்தின் காவலுக்கு அமைந்த அறம் பெருக்கும் அரண்களாகத் திகழ்கின்றன, அந்த வகையில் சேக்கிழார் பிறந்த குன்றத்தூர் சிறப்புடையது.

தான் கொண்ட கொள்கைக்காக எவ்வளவு இடையூறுகள் வந்தாலும், தன்னலமில்லாது வாழ்ந்தவர்களைத் தொண்டர்கள் என்று அழைத்தனர்.

அப்படிப்பட்ட தொண்டர்களை எல்லாச் சமயங்களிலும் நாம் காணலாம்.

தன்னை மறந்து தன் தலைவனையே மனத்தில் கொண்டு வாழ்கிற பெருமக்களுக்குச் சிவனடியார் மற்றும் நாயன்மார் என்ற பெயர்கள் உண்டு.

எவ்வளவு எந்த இடர் வந்தாலும், தன்னுடைய கொள்கைக்காக எந்த இடர்களையும் தாங்கிக் கொண்டவர்களை அருட்செல்வர் என்றும் போற்றுவார்கள்.

பெரிய புராணத்தில் வருகின்ற, அறுபத்துமூன்று நாயன்மார்களின் வரலாற்றை ஊர்தோறும் சென்று ஆராய்ந்து உன்னதமான காப்பியத்தை சென்று புராணமாகத் திருத்தொண்டர் புராணம் என்று வழங்கிய பெருமை சேக்கிழாரைச் சாரும்.

பெரிய புராணம் என்றால், பெரியவர்களின் புராணமாகும்.

பெரியவர்கள் தான் தொண்டர்கள்.

தன்னை முழுவதுமான அருட்பணிக்கு ஆட்படுத்தி கொண்டவர்களே பெரியவர்கள் என்ற வகையில் இந்நூலைப் பெரிய புராணம் என்று கூறினர்.

பெரிய புராண முதல் பாடலிலேயே தான் சொல்ல வந்த நாயன்மார்கள் எண்ணிக்கையைச் சுட்டிக் காட்டி விடுகிறார் சேக்கிழார் பெருமான்.

ஆம் இந்தப் பாடலில் 63 எழுத்துகள் உள்ளன.

அவர் பாட எடுத்துக் கொண்ட நாயன்மாரும் 63 பேர் தானே!

உலகெலாம் என்பதில் உகாரமும்
அலகில் என்பதில் அகாரமும் வணங்குவாம் என்பதில் மகாரமும் வருவது
ஒரு தனிச் சிறப்பல்லவா!

பிரணவ மந்திரத்தையே நூல் விண்டுரைக்கிறது எனலாமே.

சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று திருத்தொண்டர் புராணம் தொடங்கப்பட்டுச் சரியாக ஒரு வருடம் கழித்து அதே சித்திரை மாதம் திருவாதிரை நாளில் நிறைவேற்றப்பட்டது.

நூல் நிறைவு பெற்ற நாளன்று நூலையும் நூலாசிரியரையும் யானை மேல் ஏற்றி பின்னால் நின்று சாமரம் வீசியவாறே நகர் வலம் வந்தான் மன்னன்.

ஊர் மக்களும், சான்றோரும், அறிஞரும் பெரிதும் மகிழ்ந்தனர்.

சேக்கிழார் தொண்டை மண்டலத்தில் பிறந்தார் என்ற காரணத்தால் தொண்டை மண்டல சதகம் அவரைப் புகழ்ந்து 16ஆம் பாடலில் அவரைப் போற்றிப் புகழ்கிறது இப்படி:-

விண்ணிற் பிறக்கும் புகழ்க்குன்ற நாடன் விளங்குதமிழ்ப் பண்ணிற் பிறக்கும் பெரிய புராணம் பகர்ந்த பிரா னெண்ணிற் பிறக்கும் பதாதூளியென்றலை யெய்த வந்த மண்ணிற் பிறக்கவும் வைக்குங் கொலோ தொண்டை மண்டலமே

இப்படி சோழ மண்டல சதகம் மற்றும் தொண்டை மண்டல சதகம் ஆகிய இரு சதகங்களும் போற்றிப் புகழும் பெருமை கொண்டவர் சேக்கிழார்.

சேக்கிழார் வரலாறு, இப்போதுள்ள பெரிய புராணப் பதிப்புகளின் முதலில் அல்லது ஈற்றில் சேர்க்கப்பட்டுள்ள ‘திருத்தொண்டர் புராண வரலாறு’ அல்லது ‘சேக்கிழார் புராணம்’ என்பதில் காணப்படுகிறது.

இதுவே சேக்கிழார் வரலாற்றைக்
கூற வந்த முதல் நூலாகும்.

சிதம்பரம் கோயிலைப் பாடுகின்ற சேக்கிழார், தஞ்சைப் பெருவுடையார் கோயிலைப் பாடவில்லை.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தே சாதி
மத வேறுபாடுகள் மிகக் கொடுமையாக இருந்தன.

திருஞானசம்பந்தர் வேதியராக இருந்தாலும், தன்னை விடக் குறைவான குலத்தில் பிறந்த பாணரைத் தமது அருகிலே தங்க வைத்துக் கொண்டது அந்நாளில் மிகப்பெரும் புரட்சியாகும்.

மன்னனே வந்து எதிர்த்தாலும் என் மன உறுதியில் இருந்து நான் தளரமாட்டேன் என்று கூறியவர் திருநாவுக்கரசர்.

வேந்தர் முதல் வேடுவர் வரை எந்தச் சாதியில் பிறந்தாலும் அவர்களுக்குச் சாதி வேறுபாடுகள் இல்லை.

அவர்கள் சிவனடியார்களாக வணங்கத்தக்கவர்கள் என்று புரட்சி செய்தவர் சேக்கிழார்.

திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளின் முக்கண்கள் போன்றுள்ள புராணங்கள் மூன்று

ஒன்று கந்தபுராணம், மற்றொன்று பெரியபுராணம்; பிறிதொன்று திருவிளையாடற் புராணம் எனலாம்.

இம் மூன்றில் சிவனது வலக்கண் மேன்மை பெற்றுத் திகழும் புராணத்தை இறையருளால் பாடிக் கொடுத்தவர் தொண்டர் சீர் பரவுவாராக சேக்கிழார் திகழ்ந்தார்.

கந்தபுராணமும்,
திருவிளையாடற் புராணமும் வடமொழிப் புராணங்களின் நேர்மொழி பெயர்ப்பு நூல்கள், தழுவல்கள்.

ஆனால் பெரியபுராணம் திருக்குறள் போன்றும், சிலப்பதிகாரம் போன்றும் மொழிபெயர்ப்பு நூல் அல்ல; தழுவல் அல்ல,
அஃது ஒரு தனித்தமிழ் நூல்,

அதற்கு, முதல்நூல் சுந்தரது திருத்தொண்டத் தொகையாகும்;
வழிநூல் நம்பியாண்டார் நம்பிகளின் திருத்தொண்டர் திருவந்தாதியும், சேக்கிழாரின் பெரியபுராணமும் ஆகும்.

கண்ணப்பரது வரலாற்றைக் கூறிய முன்னூல் ஆசிரியர்கள் கூறாது விட்ட
உடுப்பூர் வருணனை, வேடச்சேரி வருணனை, உடுப்பூர்க்கும் – காளத்திக்கும் இடைப்பட்ட நில அமைப்பு, மலைத்தொடர் வருணனை முதலிய விவரங்கள் இன்றளவும் ஒத்திருத்தல் வியப்பினை ஊட்டுவதாகும்.

அவ்விடங்களை நேரிற்சென்று கண்டு, சைவத் திருவாளர் இராவ்பகதூர் சி.எம். இராமச்சந்திர செட்டியார் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையும் கடப்பை, சித்தூர் மாவட்டங்களின் (District Manuals & Gazetteers) விளக்கிடும் விவரங்களும் சேக்கிழார் கூற்றோடு ஒத்திருத்தல் படித்து இன்புறத்தக்கது.

நந்தனார் ஆதனூரைச் சேர்ந்தவர்.

அவரது ஆதனூர் இன்னது என்று சேக்கிழார் குறிக்க வேண்டும்.

ஆயின் தமிழ் நாட்டில் ஆதனூர்கள் பல
சேக்கிழார் காலத்திலேயே இருந்தன என்பது கல்வெட்டுகளாற் புலனாகின்றது.

திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி,
தென் ஆர்க்காடு, தஞ்சாவூர் முதலிய மாவட்டங்களில் ஆதனூர்கள் இருக்கின்றன.

நந்தனார் திருப்பணி செய்த திருப்புன்கூருக்குப் பக்கத்திலேயே ஆதனூர் ஒன்று உண்டு.

தமது நூலைப் படிப்பவர் இடமறியாது மயங்குவர் என்ற நோக்கத்துடன் சேக்கிழார்,”

கொள்ளிடத்தின் அலைகள் மோதும் இடத்தில் உள்ளது ஆதனூர்.

அது கொள்ளிடத்தின் வடகரையில் இருக்கின்றது.

அது மேல்-கானாடு என்ற பெரும் பிரிவைச் சேர்ந்த பகுதியாகும்.”
என்று மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார்.

அவர் நேரே சென்று கண்டிராவிடில், இவ்வளவு தெளிவாக இடங் குறித்தல்
இயலுமா?

பதினொரு திருமுறைகளிலும், பிற நூல்களிலும் கூறப்பெறாத பல செய்திகள் பெரிய புராணத்துட் காண்கின்றன.

அவற்றுட் சிறப்பாக

(1) திருநீலகண்டர் இளமை துறந்த வரலாறு,
(2) நந்தனார் செய்த திருப்பணிகள்,
(3) சாக்கியர் காஞ்சியில் சிவனைப் பூசித்து முத்தி பெற்றமை;
(4) சுந்தரர் – சங்கிலியார் திருமணம்
என்பன குறிக்கத் தக்கவை.

இத்தகைய செய்திகள் பலவற்றை நோக்கச் சேக்கிழார் தமது தல யாத்திரையின்போது இவற்றைத் தக்கார் வாயிலாகக் கேட்டறிந்தனராதல் வேண்டும் என்று நினைக்க இடமுண்டாகிறது.

இக்காலத்தில் கல்வெட்டு, பட்டயம் இவற்றைக்
கொண்டே அறியத்தக்க பல்லவர் – சாளுக்கியர் போர்கள்,
பாண்டியர் – சாளுக்கியர் போர் ஆகியவற்றின் விவரங்களைச் சேக்கிழார் எங்ஙனம் சேகரித்தார்?

அவர் பாண்டியர் -சாளுக்கியர் போர் விவரங்களை ஆறு பாக்களில் அழகாக விளக்கியுள்ளார்.

முதல் விக்கிரமாதித்தனைப் பாண்டியனும் எதிர்த்தான் என்பதனைச் சாளுக்கியர் பட்டயமே ஒப்புக் கொள்ளுகிறது.

இங்ஙனம் பட்டயச் செய்திக்கும், இலக்கியச் செய்திக்கும் மிகவும் பொருத்தமாக நெல்வேலிப் போரை விளக்கமாகப் படம் பிடித்துத் தந்த சேக்கிழாரது வரலாற்று உணர்ச்சியை நாம் என்னென்று பாராட்டுவது!

நம்பியாண்டார் நம்பி போரின் முக்கியத்துவத்தை உணர்ந்தவராகத் தெரியவில்லை.

சேக்கிழார் அதன் சிறப்பை நன்கு உணர்ந்து, நெடுமாறர் புராணத்துள் அப்போர் ஒன்றையே பற்றிப் பாடியிருத்தல், அவரது அரசியல் அறிவு நுட்பத்தையும், முதல் நூல் ஆசிரியர் கருத்தை அறியும் ஆற்றலையும் அங்கைக் கனிபோல் அழகுறக் காட்டுவதாகும்.

பெரிய புராணத்துட் கூறப்படும் கார்காலம், பனிக்காலம், இளவேனில் முதலியவற்றைப் பற்றிச் சேக்கிழார் கூறும் இடங்களில் எல்லாம் அவரது வான நூற் புலமையையும் அவ்வப் பருவகால மாற்றங்களை அளந்து கூறும் அறிவு நுட்பத்தையும் நன்குணரலாம்.’

குரியன் துணைப்புணர் ஓரையைச் சேர்ந்தான், அதனால் வெங்கதிர் பரப்பினான், பரப்பவே இளவேனில் முதுவேனிலாயிற்று’

என்று சேக்கிழார் கூறல் நுட்பம் வாய்ந்ததாகும்.

‘துணைப்புணர்ஓரை’ என்பது மிதுனமாகும்.

மிதுனம் இரட்டை ஆதலின், துணைப்புணர் ஓரை என்றார்.

இதுவன்றோ வானநூற் புலமை நுட்பம்!

879 ஆண்டுகளுக்கு முன்பு பெரியபுராணம் தில்லையில் இரண்டாம் குலோத்துங்க மன்னன் முன்பு வெளியிடப்பட்டது.

819 ஆண்டுகளுக்கு முன்பு ஹரிஹர ராகலா என்ற பெயரில் ஹரிஹரன் என்பவர் பெரியபுராணத்தின் கன்னட மொழிபெயர்ப்பினை மைசூரிலுள்ள சிவன் கோயிலில் வெளியிட்டார்.

அம்மொழிபெயர்ப்பு நூலில் கூடுதலாக முப்பது கன்னட மொழி பேசும் சிவனடியார்களின் குறிப்புகளையும் இணைத்தார்.

486 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சீனிவாசக்கவி பெரியபுராணத்தை வடமொழியில் கிரந்த எழுத்துகளில் சிவபக்த விலாசம் அல்லது உபமான்யு பக்த விலாசம் என்ற பெயரில் வெளியிட்டார்.

அந்த நூலின் ஒரு படி சென்னையிலுள்ள உ.வே.சா நூலகத்தில் உள்ளது என்று குறிப்பிடுகிறார் தமிழ்நாடு அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற தமிழறிஞர் மறவன் புலவு சச்சிதானந்தம்.

100 ஆண்டுகளுக்கு முன்பு பசவர் தெலுங்கில் பெரியபுராணத்தை பசவபுராணம் என்ற பெயரில் கூடுதலாக முப்பது தெலுங்கு மொழி பேசும் சிவனடியார்களின் குறிப்புகளையும் இணைத்து வெளியிட்டார்.

சேக்கிழார் அடிப்பொடி முனைவர் தி.ந.இராமச்சந்திரன் செய்த பெரியபுராண ஆங்கில மொழிபெயர்ப்பு தஞ்சாவூரிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக வெளியிடப்பட்டது.

தமிழ்மொழி அமிழ்தினுமினிய ஒரு செம்மொழி,
அம்மொழி தொல்காப்பியர் தேர்ந்தெழுதிய தொல்மொழி;

நக்கீரர், கபிலபரணர் முதலிய சங்கத்துச் சான்றோர் பயின்ற பண்டைய மொழி;

எந் நாட்டவரும் புகழும் பொன்னேடாம் திருக்குறளை யாத்துத் தந்த திருவள்ளுவர் பாங்குடன் பகர்ந்த பசுங்கு தலைமொழி;

சிலம்புச் செல்வம் ஈந்த இளங்கோவடிகளும், அணிதிகழ் மணிமேகலையைப் புனைந்து தந்த சாத்தனாரும் நயந்தெழுதிய முத்தமிழ்மொழி;

சிந்து என்ற நாச் சிந்துமே என்று வீறுகொண்டு புலவர் நவிற்றும் சிந்தாமணியை உலகிற்கு நல்கிய திருத்தக்கதேவர், விரும்பிப் பாடிய தேமொழியுமது;

கச்சியப்பரும், சேக்கிழாரும், கம்பரும்,வில்லியாரும், பரஞ்சோதியாரும் புராணங்களாகப் பாடி முடித்த பகரொண்ணா பெருமையினையுடைய மொழி;

சமயக் குரவரும், குமரகுருபரரும், சிவப்பிரகாசரும்,
சிவஞான முனிவரும், இராமலிங்க அடிகளாரும், மீனாட்சி சுந்தரனாரும் உவந்தோதிய ஞானத் தமிழுமது;

மெய்கண்ட சிவமும், அருணந்தி சிவமும், உமாபதி சிவமும் பாடியருளிய சித்தாந்தத் தமிழுமது;

நன்னூலாரும், கண்டியடிகளாரும், யாப்பருங்கலக்காரிகையாரும் மருந்தெனப் பாடிய
இலக்கணங்களையுடைய மொழியுமது.

சேக்கிழாரைப் போற்றுவது, செந்தமிழைப் போற்றுவதாகும்.

செந்தமிழைப் போற்றுவது
நம் தமிழகத்தைப் போற்றுவதாகும்.

தமிழகத்தைப் போற்றுவது தொண்டர்களைப் போற்றுவதாகும்.

தொண்டர்களைப் போற்றுவது, தன்னலமில்லாத அறப்பணிக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொள்கிற உயர்ந்த மனத்தைப் போற்றுவதாகும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *