POST: 2024-11-02T11:17:35+05:30

அமுதசுரபி 77 ஆம் ஆண்டு
அக்டோபர் 2024
மலர் 77 இதழ் 6
தீபாவளிச் சிறப்பிதழ்
பக்கம் 64,65,66

தேவையற்ற குடைகள்…!

முனைவர் ஔவை அருள்
இயக்குநர் -தமிழ் வளர்ச்சித் துறை

தனியார் அல்லது பொதுத்துறை நிறுவன அமைப்பில் நிருவகிப்புக்கென
அமைப்புரீதியான கட்டமைப்பு, நடைமுறைகள், நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இவற்றின் சேர்க்கையே அதிகாரத்துவம் ஆகும்.

மரபுரீதியாக அதிகாரத்துவம் என்பது கொள்கைகளை உருவாக்கும் இடத்தில் இல்லை.
அவற்றைச் செயலாக்குவதே அதிகாரத்துவமாக இருக்கின்றது.

ஒரு பொதுவான அதிகாரத்துவத்தின் அணுகுமுறையைப் பின்வரும் கதையின் மூலம் உணரலாம்.

ஒரு கோயிலில் காவலர்ப் பணிக்காக ஒருவர் நியமனம் செய்யப்பட்டார்.

கோயிலின் வாயிலில், “கோயிலுக்குள் நுழையும் முன் காலணிகளைக் கழற்ற வேண்டும்” என்று எழுதப்பட்ட அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது.

புதிதாகப் பணியில் சேர்ந்தவர் மிகவும் நேர்மையுடன் கோயில் நிருவாக விதிமுறைகளைச் சரியாகச் செயல்படுத்தினார்.

விதிமீறலில் ஈடுபட எவரையும் அனுமதிக்காத வகையில் அவரின் பணி இருந்தது.

அவ்வகையில், அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்த அறிவிப்பினைச் செயற்படுத்துவதற்காக, கோயிலின் வாயிலில் அமர்ந்து கொண்டு, பக்தர்கள் காலணிகளைக் கழற்றிய பின்னரே கோயிலுக்குள் செல்ல அனுமதித்தார்.
இதனை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒருநாள் பக்தர் ஒருவர் வெறுங்காலுடன் கோயிலுக்கு வந்தார்.
உள்ளே நுழைய முற்பட்டபோது, காவலாளி அவரைத் தடுத்து நிறுத்தினார்.

“காலணிகளைக் கழற்றாமல் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது” என்றார்.

வந்தவர்,
“நான் தான் காலணியே அணியவில்லையே… பின்பு ஏன் நான் கோயிலுக்குள் செல்லக்கூடாது?” என்று கேள்வி எழுப்பினார்.

“அதெல்லாம் இல்லை… காலணிகளைக் கழற்றாமல் உள்ளே அனுமதிக்க முடியாது” எனக் காவலாளி பிடிவாதமாக இருந்தார்.
அறிவிப்பு என்ன?
அதனை நடைமுறைப்படுத்துவதற்கான காரணம், தேவை என்ன? என்பதையெல்லாம் அந்தக் காவலாளி அறிந்து கொள்ளவில்லை.
அறிந்து கொள்ள முற்படவும் இல்லை.

இப்படிக் கண்மூடித்தனமாக விதிமுறைகளைப் பின்பற்றுவதிலும் அதிகாரத்துவம் தான் விஞ்சியுள்ளது.

மிகவும் எளிமையான, தேவையான கோரிக்கைகளை முன்வைத்து, உரிய முறையில் மனு அளித்தும் பல்வேறு காரணங்களைக் கூறி அதனை நிராகரிப்பதும் அதிகாரத்துவத்தின் இன்னொரு முகம் தான்.

இனிவரும் காலங்களில் இதைப் போன்ற
மனுக்கள் வரக்கூடாது என்ற எண்ணத்தின் வெளிப்பாடாக மறுக்கப்பட்டிருந்தால் அது மேம்படுத்தப்பட்ட நவீன அதிகாரத்துவம் எனப்படும்.

இதற்குச் சான்றாக, வங்கியில் கிளை மேலாளராகப் பணியாற்றிப் பணி நிறைவு பெற்ற ஒரு நண்பரின் அனுபவத்தை இங்கு காணலாம்.
மேலாளர் என்ற உயர் பதவியில் இருந்தாலும் சிறு செயலைச்
செய்வதற்குக்கூட, அதிகாரம் உள்ளவர்களின் அனுமதியைப் பெற, எப்படியெல்லாம் நாம் போராட்டங்களைச் சந்திக்க வேண்டும் என்பதை இதன்மூலம் அறியமுடியும்.

“கிளை மேலாளராகப் பணியாற்றிய நண்பர், தன் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் வங்கிக் கிளையில் அலுவலகப் பணிக்காக வெளியில் செல்லும் பணியாளர்கள், மழைக் காலத்தில் பயன்படுத்துவதற்காக இரண்டு குடைகள் வாங்க ரூபாய் 100/- ஒப்பளிப்பு செய்யுமாறு கேட்டு மேலதிகாரிக்கு மே இரண்டாம் நாள் அன்று கடிதம் அனுப்புகின்றார்.

மே 15 அன்று வங்கிக் கிளைக்குத் தலைமை அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் வருகின்றது.

“விற்பனையற்ற பொருள்களை வாங்குவது தொடர்பான 5014.அ நிலையான படிவத்தில் உங்கள் விண்ணப்பத்தைத் தயைகூர்ந்து எங்கள் ஒப்பளிப்பிற்காக அளிக்கவும்” என்று அதிலிருந்தது.

மீண்டும் மே 17 அன்று உரிய படிவம் நிறைவு செய்யப்பட்டு நிதியினை ஒப்பளிப்பு செய்யுமாறு வங்கிக் கிளையின் விண்ணப்பம் அனுப்பப்படுகிறது.

ஜூன் 1 அன்று “இரண்டு குடைகளுக்கான தேவை குறித்து விளக்கமளிக்கவும்.

ஒரே ஒரு குடை மட்டும் போதுமானதாக இருக்குமென நாங்கள் கருதுகிறோம் .

பணியாளர்கள் வெளியில் செல்லும் நேரத்தைப் பொறுத்து அவர்கள் தங்களுக்குள் அக்குடையை ஒருவருக்கொருவர் மாற்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்பதாகத் தலைமை அலுவலகத்தில் இருந்து கடிதம் வருகின்றது.

ஜூன் 3 அன்று அதற்குப் பதில் கடிதம் அனுப்பப்படுகிறது.

அக்கடிதத்தில்,
“ஒருவர் அஞ்சலகப் பணியையும் மற்றொருவர் பிற பணிகளையும் கவனித்து வருவதால் இருவரும் ஒரே நேரத்தில் அலுவலகத்தை விட்டுச் செல்கின்றனர்.

எனவே, தாங்கள் கூறியவாறு ஒரே குடையை இருவரும்
பயன்படுத்த இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்”
என்று பதில் அனுப்பப்பட்டது.

தலைமை அலுவலகத்தில் இருந்து ஜூன் 18 அன்று, “பணியாளர்கள் தங்கள் சொந்தக் குடையைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்து நீங்கள் ஆராய்ந்து பார்த்தீர்களா?”
என மீண்டும் ஒரு கடிதம் வந்தது.

அதற்கும் ஜூன் 20 மறுமொழியாக, “பணியாளர்கள் அலுவலகப் பணிக் காரணமாக வெளியில் செல்வதால். அவர்களுக்குக் குடையை வழங்க வேண்டியது வங்கியின் கடமையாகும் எனச் சங்கம் கூறுகிறது.

மேலும், கடந்த 20 ஆண்டுகளாக இந்த நடைமுறை, வழக்கத்தில் உள்ளது” என அனுப்பப்படுகிறது. அப்போதும் நிதி கிடைக்கவில்லை. திரும்பவும் ஜூலை 5 அன்று விளக்கம் கேட்டு மற்றொரு கடிதம் வந்தது.

“குடை வாங்குவதற்காகக் கடந்த ஆண்டுத்தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது தங்கள் குறிப்பிலிருந்து தெரிய வருகிறது.

அவ்வாறு இருக்கும்போது, உடனடியாக மீண்டும் ஒரு குடை வாங்குவதற்கான தேவை குறித்து தயவுகூர்ந்து விளக்கமளிக்கவும்.

எவ்வளவு காலத்திற்கு ஒரு குடையைப் பயன்படுத்தலாம் என்பதையும் தெரிவிக்கவும்’ என்றிருந்தது.

வங்கிக் கிளை மேலாளர் சலிக்காமல் மறுநாளே,
“இந்த நகரத்தில் ஆண்டுதோறும் 120 அங்குல அளவிற்கு மழைப் பொழிவதால் கடந்த ஆண்டு வாங்கப்பட்ட குடை கிழிந்துவிட்டது.

இத்தகைய சூழலில், ஒரு ருடையை ஒரே ஒரு ஆண்டு மட்டுமே பயன்படுத்த இயலும்” என்று பதில் எழுதினார்.

ஜூலை 20 வங்கிக் கிளைக்குப் பதில் கடிதம் வந்தது.

அதில், “26.04.1959ஆம் நாளிட்ட சுற்றறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள நடைமுறையின்படி பழைய குடைகள் ஏலம் விடப்பட்டனவா?
என்பதைத் தயவுகூர்ந்து தெரிவிக்கவும்” என்று எழுதப்பட்டிருந்தது.

உடனே ஜூலை 22, “தாங்கள் குறிப்பிட்ட சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளவாறு, குடைகளை ஏலம் விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், அக்குடைகள், தற்போது மிகப்பெரிய துளையுடனும் துருப்பிடித்த உடைந்த கம்பிகளையும் உடைய கந்தல் துணியாகக் காணப்படுவதால், அதனை ஏலத்தில் எடுக்க எவரும் முன்வரவில்லை”
என்று தலைமை அலுவலகத்திற்கு மாய்ந்து மாய்ந்து பதில் தயாரித்து அனுப்பினார்.

ஆகஸ்டு 26, அன்று
“புதிய குடைகளுக்காக, ஒப்பந்தப்புள்ளிகள் ஏதேனும் பெறப்பட்டனவா? என்பதைத் தெரிவிக்கவும்” எனத் தலைமை அலுவலகம் கடிதம் அனுப்பியது.

கிளை மேலாளரும் விடவில்லை.

ஆகஸ்டு 28 அன்று,
“குடையின் விலை மிகக் குறைவாக இருப்பதாலும், குடைகளின் விலைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லாத காரணத்தாலும் ஒப்பந்தப் புள்ளிகளைக் கோருவதற்கானத் தேவை எழவில்லை”
என்று கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 28இல் தலைமை அலுவலகத்தில் இருந்து பதில் வந்தது.
அதில்,

“பருவகால மழைப்பொழிவுக் காலம் நிறைவடைந்துவிட்டதால், குடைகளை வாங்குவதற்கான தேவை தற்போது ஏதுமில்லை.

குடைகள் இல்லாமலேயே தங்கள் கிளை கடந்த கால பருவமழையை வென்றுவிட்ட காரணத்தால், குடைக்கான தங்களின் கோரிக்கை அவசியமற்றதாகும்,
மேலும், குடைகள் இல்லாமலேயே தங்கள் கிளை பருவ மழையைக் கடந்துவிட்ட காரணத்தால் இது வீண் செலவாகவும் கருதப்படுகிறது. இது குறித்து தயவுகூர்ந்து விளக்கமளிக்கவும் ”
என்று அக்கடிதத்தில் கேட்கப்பட்டிருந்தது.

வங்கிக் கிளை மேலாளர், “குடைகள் மிகவும் அவசியமானதாகும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

சொந்த அதிகாரத்தின் கீழ் ரூ.50/-க்கு ஒரு குடையை வாங்கியும், சொந்தக் குடையை வங்கிப் பயன்பாட்டிற்காக வழங்கியும் பருவமழையை நாங்கள் கடந்து வந்தோம்”
என்று பதில் அனுப்பினார்.

அக்டோபர் 3ஆம் நாள் தொலை அச்சின் வாயிலாக தலைமை
அலுவலகத்திலிருந்து,

“உங்களின் கோரிக்கையை நாங்கள் பரிசீலனை
செய்து கொண்டிருக்கும் வேளையில் உங்களின் சொந்த அதிகாரத்தின் பெயரில் நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கை அலுவலக நடைமுறைக்கு எதிரானதாகும், மேலும், தங்களின் சொந்த உடைமையை அலுவலகப் பயன்பாட்டிற்காக அளித்ததும் வருத்தத்திற்குரியதாகும்.

30.11.1942ஆம் நாளிட்ட 69/4941ஆம் எண் சுற்றறிக்கையுடன் உள்ள அத்தியாயம் 4, பகுதி 72, பத்தி 9அ -இல் அளிக்கப்பட்டுள்ள நடைமுறை நூலைப் படிக்கவும்.

நீங்கள் செய்த குற்றங்களுக்காக உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது.

மூன்று நாள்களுக்குள்
விளக்கமளிக்கவும்” என்று செய்தி வந்திருந்தது.

வங்கிக் கிளை மேலாளர் எவ்வித பதிலும் இதற்கு அளிக்கவில்லை

. மீண்டும் தொலை அச்சில் அக்டோபர் 7 அன்று,

“அக்டோபர் 3 அன்று அனுப்பப்பட்ட தொலை அச்சு செய்தியைக் காணவும்.
அதில் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விளக்கமளிக்கவும்” என்று கேட்கப்பட்டது.

தலைமை அலுவலகத்திற்கு அக்டோபர் 8 ஆம் நாள் வங்கிக் கிளையிலிருந்து கடிதம் ஒன்று சென்றது.

அந்தக் கடிதத்தில், “மேலாளருக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூன்று மாதம் மருத்துவ விடுப்பு வேண்டி அவர் அளித்த விண்ணப்பம் இணைக்கப்பட்டுள்ளது.

கையொப்பமிடக்கூடிய நிலையில் அவர் இல்லாத காரணத்தால் விடுப்பு விண்ணப்பத்தில் அவரின் பெருவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது.

தயவுகூர்ந்து உடனடியாகப் பதில் அளிக்கவும்”
என்று கணக்காளரின் ஒப்பத்துடன் அனுப்பப்பட்டது.

இதுதான் அதிகாரத்துவத்தின் நிலை.

எளிமையான, அவசியமான ஒரு கோரிக்கைக்காக, எவ்வளவு கடிதப் பரிமாற்றம்.

தாள், அச்சு மற்றும் அஞ்சல் செலவிற்கு ஆன தொகையினைக் கொண்டே குடைகளை வாங்கியிருக்கலாம்.

தாங்கள் மேற்கொள்ளும் பணி என்ன?
என்ற புரிதலை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமும் அதிகாரத்துவ நிருவாகத்திற்கு இருப்பதில்லை.

தனக்கு முன்பிருந்தவர்கள் செய்த தவறுகளை
“ஈ அடித்தான் காப்பி போல”, தவறு என்று தெரிந்தாலும் திருத்திக் கொள்ளாமல் அப்படியே பின்பற்றுவதை அலுவலக நடைமுறைகளில் பார்க்கலாம்.

இதனைச் செயற்படுத்தக்கூடாது என்று முடிவு செய்துவிட்டு,
அதற்குப் பின்பு நடக்கும் நடவடிக்கைகள் அனைத்துமே பயனற்றவையே.

காலம் கடந்து கிடைக்கும் நீதி கூட அநீதிதான் என்பது போல, அதிகாரத்துவம் என்பது அது சென்றடையும் பயனாளர்களுக்கானது என்பதை மனதினில் நிறுத்திச் செயற்படுத்தப்பட வேண்டும்.

ஒரு அதிகாரி தனக்கு வரும் மனுக்களை, கடிதங்களை, விண்ணப்பங்களைப் படித்து, தெளிந்து, அதன் முன் நிகழ்வுகளை அறிந்து, விதிமுறைகளுக்குட்பட்டு மிகச் சரியாகச் செயற்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

அப்போதுதான், குடைகள் தேவை உள்ளவைகளாக மாறும்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *