இளமையிலேயே முத்தமிழறிஞர் கலைஞர் மீது தீராப் பற்றுக் கொண்டவர் முனைவர்
மு இராசேந்திரன்(4.7.1959-25.12.2024)
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறையில் பேராசிரியர் மா செல்வராசன் அவர்களின்
நெறியாளுகையில் முத்தமிழறிஞர் கலைஞர் குறித்து முனைவர் பட்ட ஆய்வில் வென்று தமிழ் வளர்ச்சித் துறையில் சேலம் மாவட்டத்தில் தனிநிலை செல்வாக்குடன் துணை இயக்குநராக அலுவல் பணிகளை செவ்வனே செய்த இனமானச் சூரியனாக ஒளிர்ந்தார்.
மதுரையில் உள்ள உலகத்தமிழ்ச் சங்கத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பே சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு உலகத்தமிழ் மாநாடுகளை உலகத் தமிழ்ச் சங்கமே நடத்தும் என்று ஊடகத்தில் ஓங்கி குரல் எழுப்பி பலரின் விழிகளை விரியச் செய்தவர்.
தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று தருமபுரியில் தனியார் பள்ளிக்கூடம் நிறுவி மாணவச் செல்வங்கள் மத்தியில் தமிழ் உணர்வினையும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மீது பற்றினையும் ஊட்டியதோடு பல வெற்றித்தேர்வுகளில் தான் நடத்தும் பள்ளியின் மாணவர்கள் முன்னிலை வகிக்க பொறுப்புடன் செயற்பட்டார்.
எந்தையர் மீது தனிப் பரிவும் கொண்டவர்.
சில திங்களுக்கு முன்பு தருமபுரிக்கு நேரில் சென்று மகிழ்ந்து உரையாடினேன்…
எனக்குத் தெரிந்து என்னோடு மட்டும்தான் அப்பொழுது சைவ உணவை உண்டு மகிழ்ந்தார்.
அண்மையில் தன்னுடைய பேராசிரியர் மா செல்வராசன் அவர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் செம்மொழி தமிழ் விருது பெற்ற நிகழ்வைக் கேட்டு தொலைபேசி வாயிலாக பாராட்டி மகிழ்ந்தார்.
நத்தார் திருநாளன்று அவர் பிரிந்தார் என்ற செய்தி வந்த பொழுது ஆழ்ந்த துயரில் ஆழ்ந்தேன்.
அண்ணலை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் பள்ளி நிருவாகத்தினருக்கும் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்
Add a Comment