826a8ec4-ff86-49ce-ae95-bc00e76f0e3b

மணி விளக்கு அணைந்தது!

அப்பாவின் ஆருயிர் தங்கை
திருமதி மணிமேகலை சுப்பிரமணியன் (23.5.1938-8.4.2025)
இன்று காலை 9.45 மணி அளவில் சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.

தலைமை குணத்தின் பிறப்பிடமாகவும்
அன்பின் வடிவமாகவும்
பண்பின் உறைவிடமாகவும் திகழ்ந்தார்.

தன்னுடைய நான்கு மக்கட் செல்வங்களையும்
வங்கியாளர் ராஜன்
மருத்துவர் செந்தில்
முனைவர் கதிரவன்
வங்கியாளர் திருமதி வேணி பாஸ்கரன்
உயர் கல்வியில் உயர்வற உயர உயர்த்திய ஆற்றலரசியாக மிளிர்ந்தார்.

தன்னுடைய நீண்ட நெடுவாழ்வில் நான்கு மக்கட் செல்வங்களின் செழுமையான பள்ளிப்படிப்பு, கல்லூரி வாழ்வு, பல்கலைப் பெருமிதம்,அலுவலகப் பணி மற்றும் பணி ஓய்வு வரை இருந்து கண்டு மகிழ்ந்தார்.

கீழ்வீதியின் பெரும் குடும்பத்தில் திருமணம் செய்து தன் தங்கை திலகவதி அவர்களின் திருமணத்தையும் மைத்துனருக்கே திரு நரசிம்மன் அவர்களுக்கு , திருமணம செய்து தந்த பெருமிதத்தை எந்நாளும் எந்தையார் போற்றினார்.

உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்களின் இரண்டாம் மகள்

மணிமேகலை காப்பியம் உரை எழுதத் தொடங்கும் பொழுது பிறந்த திருமகள் என்பதனால் மணிமேகலை என்று பெயர் சூட்டப்பட்டவராவார்.

மழலையாக நான் இருந்தபோது பெற்றோர்கள் இலங்கைக்குச் சென்ற பொழுது மணிமேகலை அத்தை மடியில் வளர்ந்தேன் என்று ஆயிரம் முறை சொல்லி மகிழ்ந்தவர்.

நாங்கள் மூவரும்
கண்ணன் அருள் பரதன்
மணிமேகலை அத்தை இருந்த லாயிட்ஸ் குடியிருப்பில் வார இறுதி நாட்களில் மகிழ்ந்து விளையாடிய நாள்கள் என்றும் நினைவில் மங்காது.

வாய் நிறைய வாஞ்சையான சொற்களாலும்

நுங்கும் நுரையுமான சிரிப்பலையும்

அருள் அருள் என்ற அன்பான அழைப்பும் நிறைந்த மணிமேகலை அத்தையின் பிரிவு தாங்க முடியாத இழப்பாகும்.

செவிலியர்கள் துணையுடன்
அண்ணன் ராஜன் இல்லத்திலும் அண்ணன் கதிரவன் இல்லத்திலும் அத்தை இருந்த காட்சி என்றும் நிழலாடிக் கொண்டிருக்கும்.

நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்றார் பாவேந்தர் பாரதிதாசன் எங்கள் அருமை மணிமேகலை அத்தை ஒரு பல்கலைக்கழகமாக திகழ்ந்தார்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கண்ணன் அருள் பரதன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *