இனிய உதயம் ஏப்ரல் 2025
பக்கம் எண். 40
திகட்டாத சுவையமுது;
ஔவையின் தமிழமுது!
ஒரு பேராளுமையின் குளிர்ந்த சொற்களால் தம் எழுத்து அங்கீகரிக்கப்படவேண்டும் அல்லது ஆசிர்வதிக்கப்பட வேண்டும் என்பது உலகின் எந்த மூலையில் வாழும் எந்த மொழி எழுத்தாளருக்குள்ளும் உள்ள ஆழ்மன வேட்கை.
A Foreword is typically written by someone other than the author, often an expert in the field or a notable figure. It is meant to endorse the book, providing validation of the author’s work” என்பர்.
தமிழ் இலக்கியப் பரப்பில் படைப்பாளராக வலம் வந்த முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் மு.கருணாநிதி முதலாக இன்று எழுதிக்கொண்டி ருக்கும் படைப்பாளர்கள் வரை அனைவரும் தம் ஒரேயொரு படைப்பாவது இந்தப் பேராளுமை யால் ஆராதிக்கப்பட வேண்டும் என்று விரும்பிய தன்னேரில்லாத தமிழறிஞர் பத்மஸ்ரீ முனைவர் ஒளவை து. நடராசன்.
மதுரை தியாகராசர் கல்லூரி மற்றும் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரிப் பேராசிரியர்,
புது தில்லி அனைத்திந்திய வானொலி நிலையத் தின் செய்தி வாசிப்பாளர், தமிழ்ப் பல்கலைக் கழகம், பாரத் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் மேனாள் துணைவேந்தர், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மேனாள் துணைத்தலைவர், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இணை இயக்குநர், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண் பாட்டுத் துறையின் செயலாளர் என்று பதவிகள் பலவற்றைத் தம் சான்றான்மையால் பெருமைப்படுத்தியவர் பத்மஸ்ரீ ஒளவை து. நடராசன் தமிழ்நாடு அரசின் உயரிய விருதான கலைமாமணி இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
வாழ்விக்க வந்த வள்ளலார், பேரறிஞர் அண்ணா,
கம்பர் காட்சி, கம்பர் விருந்து, திருப்பாவை விளக்கம். திருவெம்பாவை விளக்கம், சங்க இலக்கிய பெண்பாற் புலவர்கள் உள்ளிட்ட சில நூல்களை ஒளவை அவர்கள் எழுதியிருந்தாலும் மேடைப்பேச்சால் தமிழன்னையை மகிழ்வித்ததைப்போல ஔவையின் எழுத்தாலான அணிகலன்கள் தமிழ்த்தாயின் மணிக் கழுத்தை அதிகமாக அலங்கரிக்கவில்லை என்பது பலரின் ஏக்கம் ஔவை தம் உரைகளைத் தொகுத்திருந்தாலே ஓராயிரம் அருந்தமிழ் நூல்கள் கிடைத்திருக்கும்.
ஆனால் அப்பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளாமல் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் நற்பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர் ஒளவை.
எத்தனையோ பணிகளுக்கிடையில் கேட்டதும் கொடுக்கும் வரத்தின் நாயகன் முனைவர் ஔவை நடராசன் அணிந்துரைகளை வாரி வழங்கி தமிழ் எழுத்தாளர்களை உச்சிமுகர்ந்துள்ளார்.
அந்த அணிந்துரைகளில் சிலவற்றைத் திரட்டி சுண்டக் காய்ச்சி தமிழ் மணம் கமழ, ஔவையின் தமிழமுது ஆக விருந்து படைத்துள்ளார் ஒளவை அவர்களது அருந்தவப்புதல்வர், தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் முனைவர் ஔவை ந. அருள்.
இந்நூலில் 125 தலைப்புகளில் அணிந்துரைகளும் வாழ்த்துரை களும் (பாயிரங்கள்) இடம்பெற்றுள்ளன. பாயிரம் பற்றிய அழுத்த மான ஆய்வுரையுடன் பதச்சோறாக ஒளவையின் பாயிரங்கள் ஒன்றிரண்டை ஒப்பிட்டு எழுதியுள்ள முனைவர் அருளின் நூலின் நுழைவாயில் வாசகரை ஔவையின் அமுதினை உண்ண அழைக்கிறது.
நூலில் அமைந்துள்ள ஔவையின் அணிந்துரைகளில் சில நூல்களுக்கு முகவுரையாக அமைந்துள்ளன.
சில பதிகமாக அமைந்துள்ளன.
சில அணிந்துரையாக அமைந்துள்ளன.
சில நூன்முகமாக அமைந்துள்ளன. சில புறவுரையாக, சில தந்துரையாக, சில புனைந்துரையாக அமைந்துள்ளன.
அணிந்துரையில் இவ்வளவு வகைகள் உள்ளனவா? ஆம்,
முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம் (நன்)
என்று பட்டியலிடுகிறது நன்னூல் ஆங்கிலத்தில் Foreword, Introduction, Preface, Prologue, Proem, Preamble என்று அணிந்துரை பல பெயர்களில் வழங்கப்படுகின்றன.
நூலுக்கு முகமாய் அல்லது முகப்பாய் இருப்பதால் முகவுரை:
நூலில் பல்வகை பொருள்களையும் பதித்திருப்பதால் பதிகம்;
நூலுக்கு அணி (அழகு) செய்வதால் அணிந்துரை; நூலின் தொடக்க மாய் இருப்பதால் நூன்முகம்:
நூலுக்குப் புறத்தே இருந்து செய்திகளைச் சொல்வதால் புறவுரை;
நூலில் சொல்லப்படாத பொருட்களைத் தந்துரைப்பதால் தந்துரை;
நூலின் பெருமையைப் புனைந்து கூறுவதால் புனைந்துரை என்று இந்நூற்பாவின் பொருளை விளக்குவார் அணிந்துரை திலகம் சிலம்பொலி செல்லப்பனார்.
இந்தக் கோட்பாட்டினபடி பார்த்தால் ஒளவை அவர்களின் அணிந்துரைகள் இந்த எல்லா வகைமைப்பாட்டிலும்
அமைந்துள்ளன.
இன்றைய இலக்கிய விமர்சன மொழியில் எடுத்து சொல்வதெனில் படைப்பாளி (Author), பிரதி (Text), வாசகன் (Reader) என்னும் மூன்று இன்றியமையாத் தலங்களில் இயங்குவதே ஒரு நூலின் முன்னுரை என்று சொல்லலாம் இம்மூன்றன் மீதான கொல்லாடல்களை திறம்பாடு அறிவின் செயல்பாடுகளாய் வெளிப்படுத்த வல்லமை மிக்க ஒருவராலேயே சரியான முன்னுரையை எழுத முடியும் என்பார் கவிஞர் தமிழன்பன்.
தன்னேரில்லாத தமிழ் மகன் அவ்வை அவர்களது திறம்பாடு அறிவை இந்நூலுள் அமைந்துள்ள ஒவ்வொரு அணிந்துரையிலும் கண்கூடகக் காணமுடியும்.
படிக்கத் தூண்டும் எடுப்பு (தொடக்கம்)
ஒரு நூலாசிரியரை அறிமுகப்படுத்தும்போது அந்த நூலாசிரியரின் தந்தை தமிழ் அறிஞர் என்றால் அவரைக் குறிப்பிட்டும் நூலாசிரியர் தமிழாசிரியரின் மாணவர் என்றால் அவரைக் குறிப்பிட்டும் அல்லது அவரது முந்தைய பணிகளைக் குறிப்பிட்டும் அறிமுகப்படுத்துவது ஒளவை அவர்களது பாங்கு நூல் நுவல் பொருளை விதந்து அதிலிருந்து நூலாசிரியரின் பணி யைத் தொடர்ந்து எழுதும் பாங்கினையும் கொண்டவர்.
பொன்னேரி இரா. மோகனசுந்தரம் அவர்களின் நூலுக்கு உரை எழுதும்போது, வள்ளலார் வழித் தோன்றல் என சன்மார்க்க உலகம் உச்சிமேல் வைத்துப் புகழும் சென்னை திரு. ம. இராசமாணிக்கம் பிள்ளை அருட்பெரும் ஜோதி அச்சகத்தை அமைத்து திருவருட்பா பதிப்பை வெளியிட்ட பெருந்தகை ஆவார். உயரிய பதிப்பு, ஓங்கிய பதிப்பு, கையடக்கப் பதிப்பு என திருவருட்பா செல்வத்தைப் பல்வேறு பதிப்பு முகங்களில் கண்டு நெகிழ்ந்தவர். அந்தப் புகழ் மரத்தின் தலைமகனாகிய திரு அருள் பிரகாசம் அவர்களின் சகலர்தான் நம் தமிழ்மாமனி திரு இரா. மோகனசுந்தரம் ஆவார் என்று மிகுந்த அக்கறையோடு அறிமுகப்படுத்துவது ஒளவை நடராசன் அவர்களது அணிந்துரை நெறி. (ப.367)
மாணவர்களை அடையாளப்படுத்தும்போது அவரது குரு பரம்பரையோடு அடையாளப்படுத்துவது பண்டைய மரபு. ஆசானைக் கூறி இவரது மாணவர் இவர் என்று அறிமுகப் படுத்தும் இந்த மரபையும் தம் அணிந்துரைகளில் பயன்படுத்துவது ஔவையின் அணிந்துரைகளில் காணலாகும் உயர் பண்பு.
சான்றாக,
வாகிச கலாநிதி தமிழ்க் கடல் கி.வா.ஜ அவர்கள் தம்முன் நடமாடிய தமிழ்ப் பெரும் களஞ்சிய மான டாக்டர் உவே சாமிநாத ஐயர் அவர் களின் சிறந்த மாணாக்கர்களில் முதல்வர்.
ஐயர் அவர்களின் சிந்தைக்கு இனிய சீலரும் சீடருமாய்த் திகழ்ந்தார்.
இலக்கிய வயலை அகலமாக அன்றியும்
ஆழ உழுதவர்.
எண்ணற்ற இலக்கியங்களைத் தமிழ் உலகம் எடுத்துப் பருக இன்னமுதாய் வழங்கியவர் என்று கி வா ஜவை அறிமுகப்படுத்துகின்றார்.
ஔவை நடையழகு
ஔவை நடை உயர் தமிழ் நடை;
வலி மிகாத மென்னடை; தென்றலாய்த் தழுவும் தண் நடை, கோடையில் இளைப்பாற்றிக் கொள்ளும் வகைக் கிடைக்கும் குளிர் நடை இதமாகப் பருகும் குற்றால ஓடையின் தீம் நடை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
எங்கும் யாரையும் புண்படுத்தாது பண்படுத்தும் நன்னடையே ஒளவை நடை
நடராசன் எல்லோருக்கும் நல்லவரே நரைமுடியோர்க்கு வாய்த்த வரமே” என்று வாய் மணக்க வாழ்த்தும் உயர் தமிழ் நடை
(முதுமை நல மருத்துவர் வி.எஸ். நடராசன் அவர்களை!
உயர்வற உயர்ந்த வானியல் சிந்தனையை வளர்க்கும் வால்வளை மேனி வாலியேனாகத் திகழும் பேராசிரியர் பலராமன் தமிழ் உலகுக்கு வாய்த்த நிதியமாவார் என்று போற்றும் வலி மிகாத மென்ன
காதல் கவிதைகளில் வலியைக் கண்டவிடத்து அந்தக் கவிஞருக்கு எழுதும் அணிந்துரையில், இளமைப் பருவம் கல்வித் தேடலுக்கும் கண்ணின் தேடலுக்கும் இயல்பாகவே இறையாகும். சில நிலைகளில் முன்னதை இடறிவிட்டு காதல்தான் கண்களைக் கட்டி விடும். இளங்கதிர் சுந்தரமூர்த்தியோ முன்னதில் முதன்மையில் நிற்பதற்கும் இரண்டாவதில் இரண்டாட்டத்தோடு கலங்குவதற்கும் இத்தொகுப்பு கட்டியம் கூறுகிறது என்று புண் மீது மருந்திடும் பீலியின் வருடலாக எழுதும் சுகமான நடையைக் காணலாம்.
கலைஞரின் நாடகங்களைப் பற்றி ஒரு கட்டுரை அந்தக் கட்டுரையில் கலைஞரின் நடை குறித்து ஒளவை கொடுத்துள்ள தலைப்புகள் வாசகரை அசர வைக்கும் தன்மையன.
கலைஞரின் நாடகங்கள் மொத்தம் 20.
அந்த இருபதில் கலைஞரின் நடை அழகை, உருக்கமும் இரக்கமும் நடை, உருவக நடை, வினா நடை, உயர்ந்த தமிழ் நடை, எதுகை மோனை நடை, வேக நடை, இறுதித் தொடர் அழகு நடை ஒப்பிட்டு நடை, எதிரும் புதிரும் நடை, நகைச்சுவை நடை நெடிய உரையாடல்கள் நடை, விவாத நடை என்று 12 தலைப்புகளில் வகைப்படுத்துகிறார்.
ஒவ்வொரு நடைக்கும் எடுத்துக்காட்டையும் விளக்கத்தையும் கொடுக்கிறார்.
சான்றாக,
ஏ பணமே, பகல் இரவு என்று பாராது பாடுபட்டுப் பசி பசி என்று ஏங்கி, நடுநிசியிலே நின்ற எலும் இதோ கொஞ்சம் புசி புசி என்று கூறிடாத இரும்பு நெஞ்சரின் இரும்புப் பெட்டியில் தூங்கும் பணமே, குச்சி வீட்டில் ஏழை உணவின்றி ஓய்ந்து கிடக்கவும் மச்சு வீட்டில் பணக்காரர்கள் மதுரகீதம் பாடவும் பாழும் நிலையை உண்டாக்கிய பணமே, உலகத்தின் உயிரே, இன்னும் எத்தனை நாளைக்கு இந்த சோம்பேறிகளின் வீட்டில் வாழப் போகிறாய்? வரப்போகிறது பாட்டாளிகளின் படையெடுப்பு, வந்து சேர், பார்த்துக் கொள்கிறேன் என்று சாந்தா அல்லது பழனியப்பன் என்னும் கலைஞரின் முதல் நாடகத்திலேயே இடம்பெற்ற பேச்சை உருக்கமும் இரக்கமும் நடை என்று சிலாகித்துப் பாராட்டுவார்.
உதயசூரியன் நாடகத்தில்,
கண்ணம்மாவின் அழகுக்கு நீர் பொருத்தமான வர் தானா? குளிர் நிலவு எங்கே? கொடூர உருவம் எங்கே? நீர் குப்பை, அவள் குண்டுமணி, நீர் பித்தளை, அவள் வைரம், நீர் காங்கிரஸ், அவள் காந்தி ஒன்றுக்கொன்று ஒவ்வாது. தயவுசெய்து அந்தத் தங்க மேனியாளை மறந்துவிடும்
என்று இடம்பெறும் உரையாடலைக் காட்டி இது ஒப்பீட்டு நடை என்று குறிப்பார்.
இப்படி பன்னிரு நடைகளுக்கும் சான்றுகளைக் காட்டி வியக்கவைக்கும் ஒளவையின் அணிந்துரைகளிலும் இவ்வகை நடைகளைக் காணமுடிகிறது.
ஒரு நூலுக்கு அணிந்துரை எழுதும்போது அந்த நூலாசிரியரின் மொழி நடையைத் தாமும் கையாளும் வழக்கத்தையும் ஒளவை அவர்கள் கொண்டிருந்தார்கள்.
அறிஞர் அண்ணாவைப் பற்றி எழுதும்போது, எம்முளும் உளன் ஒரு பொருநன்” என்று சொல்லும்படி தமிழ் இனத்துக்கு வாளாகவும் தமிழர்க்கு தோளாகவும் நின்றவர் பேரறிஞர் அண்ணா. அறிவின் விளக்கம், ஆற்றலின் தோற்றம், ஊக்கத்தின் உரையுள், எழுச்சியின் இருப்பிடம். பண்பாட்டின் பலகணி என்றெல்லாம் எழுதிச் செல்லலாம்” என்று அண்ணாவை அண்ணாவின் அடுக்கு மொழியிலேயே விவரிக்கும் பாங்கினைக் கண்டு ரசிக்கலாம்.
வரலாறு சுட்டல் முறை
தாம் அணிந்துரை எழுதும் நூலின் தேவைக்கேற்ப ஆங்காங்கு வரலாறுகளைச் சுட்டிக்காட்டுவதும் ஒளவை அவர்களது அணிந்துரையின் இடம்பெறும் வளமான போக்கு
லண்டன் மருத்துவ மாமணி டாக்டர் இந்திர குமார் அவர்களின் நூலுக்கு வழங்கிய அணிந்துறையில், “பழந்தமிழ் நாட்டில் பேசப்பட்ட 56 நாடுகளில் கம்போசமும் ஒன்று. கவுண்டினியன் என்பவன் இந்தியாவிலிருந்து கம்போசியாவுக்குச் சென்று நாகர் குவப் பெண்ணை மணந்துகொண்டான் அவனுடைய
மரபே பியூனன் மரபு.
நாக நாட்டுத் தொடர்பு தமிழ் நாட்டு வரலாற்றில் பேசப்பட்டதே.
நாகப்பட்டினம், நாகையூர் என்பன போலும் ஊர்கள் நாக நாட்டு மரபைக் காட்டும் சான்றுகளே” என்று சுட்டிக் காட்டுவார்.
மூட நம்பிக்கைகளைச் சாடல்
கோடிக்கணக்கான விண்மீன்களுள் இருபத்தேழு என எண்ணுவதும் பத்து, பனிரெண்டு மீன்களின் பெயர்களை மட்டுமே நாம் கண்டறிவதும் ஆராயத்தக்கது.
பொதுவாக வாணியற் பொருள்களும் கோள்களும் பலவாகப் பெருகி வருவதால் கற்பனையே மிகுந்து கதைப்பொருளாக இக்கலை பரவியது எனலாம் என்று கூறிவிட்டு,
வால்மீன்கள் தோன்றினால் வையகத்தில் பேரவலம் பிறக்கும் என்னும் கருத்து பல நாடுகளில் கூறப்பட்டது.
எனக்குத் தெரிந்து வால்மீன்களைப் பற்றிய குறிப்புகளைச் செய்தி ஏடுகளில் கண்டேனே தவிர எந்தப் பேரவலமும் எங்கும் விளையவில்லை (ப 158) என்று நாள் கோள் நம்பிக்கைகளை நயமாகச் சாடுவார்.
முரணும் அரணும் செய்தல் இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை ( 41)
என்ற குறட்பாவில் வள்ளுவர் கூறும், இயல்பு டைய மூவர் யார்? என்ற வினா எழுப்பி தமிழ் தென்றல் திரு.வி.க. வ. சுப. மாணிக்கம், தேவநேயப் பாவாணர், புலவர் குழந்தை, நாமக்கல் கவிஞர், வ உ சிதம்பரனார், கா.சு. பிள்ளை, மு. வரதராசனார், பாரதிதாசன். திருக்குறளார் வீ.முனுசாமி, சிந்தனையாளர் குச.ஆனந்தன் என்று பலர் கூறியுள்ள கருத்துகளை எடுத்துக் காட்டி, அவற்றைப் பல எடுத்துக் காட்டுகளோடு மறுத்து நீண்ட விளக்கத்தைத் தந்து, நிறைவாக அந்த மூவர் பெற்றோர், வாழ்க்கைத் துணை (கணவனுக்கு மனைவி, மனைவிக்குக் கணவன்), மக்கள் என்று மூவரையும் நிறுவார்.
இது இந்நூலின் முத்தாய்ப்பான கட்டுரை, கற்கவும் நிற்கவும் வேண்டியது.
குறிப்பாகப் பெற்றோர் என்னும் சொல்லும் ஒளவை அவர்கள் கொடுத்துள்ள விளக்கம் குடும்பம் தோறும் கைவிளக்காகக் கொள்ளவேண்டிய விளக்கம்.
கருப்புச்சட்டை அணிந்த இளைஞராகக் காட்சி தந்த திரு சாமி தியாகராசன் கதருடை அணிந்ததோடு கடவுள்நெறி இணைந்தவராகப் பெருமிதமாக இப்போது வாழ்ந்து வருகின்றார்.
எனக்கெல்லாம் அப்படிப்பட்ட மாற்றங்கள் வரவில்லை.
சிலருக்கே அத்தகைய செல்வம் வாய்க்கும் போலும் காலம் புதிய மாற்றங்களைத் தருவதோடு பலர் கோலங்களையும் மாற்றிவிடும் (ப.378) என்று காவியாக மாறிய கருப்பு சட்டையைப் பாராட்டும் மாண்புதான் முரணையும் அரண் செய்யும் ஒளவை அவர்களின் அரிய மாண்பு.
கலைச்சொல்லாக்கம்
மகளிர்க்கு வழங்கிய மருத்துவக் களஞ்சியம் என்னும் மருத்துவ நூலுக்கு வழங்கிய அணிந்துரையில், ஆடவர் உடல் நாள்தோறும் பிறழாமல் தோன்றி கதிர் பரப்பி மறையும் பகலவன் போன்றது.
மகளிர் உடலோ மாதந்தோறும் தேய்ந்தும் வளர்ந்தும் ஒளிபரப்பும் நிலவைப் போன்றது என்று ஔவை கூறியுள்ள இந்த உவமை பெண்களை நிலவென்றும் நிலவைப் பெண்ணென்றும் உவமித்த பொருள் பொருத்தத்தைச் சிந்திக்க வைக்கிறது.
அக்காளை அக்காள், தமக்கை, மூத்த சகோதரி என்று சொல்லும் வழக்கமே விரவி உள்ளது.
நாட்டார் வழக்காற்றிலும் அக்கா தங்கச்சி என்று கூறுவர்.
அக்கச்சி தங்கச்சி என்று கூறுவதில்லை.
ஆனால் தங்கச்சி என்னும் சொல்லுக்கு எதிர்ச்சொல்லாக, அக்கச்சி என்னும் கலைச்சொல்லை உருவாக்கியவர் வள்ளலார்.
வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் மயில்குயில் ஆச்சுத டி அக்கச்சி மயில்குயில் ஆச்சுத டி
என்ற பதிகத்தை அக்கச்சி என்னும் தலைப்பில் அமைத்திருந்தார்.
நிச்சய தாம்பூலம் என்னும் சொல்லுக்கு இது வழக்கில் இல்லையென்றாலும் சேராவணம் என்னும் தூய தமிழ்ச் சொல்லாட்சியை அமைத்தவரும் வள்ளலார் வள்ளலாரின் வழித் தோன்றலான ஒளவையும், பூப்புப் பருவமும் நீபுப் பருவமும் (தீட்டு நிறுத்தம்) இயல்பாக அமைய வில்லை என்றால் மகளிர் மனநலத்தோடும் உடல் நலத்தோடும் நன்றாக வாழ முடியாது என்று கூறி பூப்புப் பருவத்திற்கு எதிர்ச்சொல்லாக நீப்புப் பருவம் (மாதவிடாய் நிற்கும் பருவம்) என்ற புதிய சொல்லாட்சியை உருவாக்கியுள்ளார்.
தலைப்புகள் சூட்டல்
—ஒரு படைப்பின் தலைப்பு அந்தப் படைப்பைத் திறக்கும் சாவியைப் போல இருக்கவேண்டும் என்பர்.
ஒரு தலைப்பு உள்ளடக்கத்தின் தொனியையும் கருத்தையும் வெளிப்படுத்துவதோடு வாசகர்களைத் தயார்படுத்தி, தன் வயப்படுத்தும். அணிந்துரைக்குத் தலைப்புகள் அமைப்பதிலும் ஒளவை அவர்கள் தனிக்கவனம் செலுத்துவதைக் காணலாம்.
அருமையில் எளிய அழகு, அமெரிக்காவில் அலர்ந்த அல்லி, சிந்தனை ஊற்றுகள் செந்தமிழ் நாற்றுகள் பொன்னி கரையில் ஒரு பொன்மலர், சந்தம் வளரும் சைவ நெறி, முதுமை நல மருத்துவத்தின் முடி மணி, ஆசிய ஒளி மீனின் அளப்பரும் புலமை, ரத்த ஓட்டமே உயிரோட்டம், தணிக்கையாளர் தரும் தமிழ் மாலை, சங்க தடாகம்!, வெல்லும் வேழம்!, புதுமலர்த் தொகுப்பு, கால்டுவெல் நினைத்தது கலைஞரால் நிலைத்தது.
அறத்தேன் பிளிற்றும் அருள் மலர் என்று பனித்துளி காட்டும் பனை போல சின்ன தலைப்பில் நூலின் சீர்மையைக் காட்டி விடுவார்.
முத்தாய்ப்பான முடிப்பு
ஒவ்வொரு அணிந்துரையின் நிறைவிலும் சங்க இலக்கியத்தொடர்கள், தேவாரம், திருவாசகம், திருமந்திரம் ஆகியவற்றிலிருந்து மணிமுடியாக இரண்டு அடிகள் என்று எழுதி வாழ்த்துகிறார்.
“சோதியே சோதியே விரைந்து வந்தருள் என்றேன்
வந்தருட்சோதி வழங்கினை வாழி நின் மாண்டே (திருவருட்பா-4657)
என்று பெரும்பாலும், நூல் நுவலும் கருப்பொருளுக்கு ஏற்ப அருட்பாவின் அழகிய அடிகள் அதன் வரிசை எண்ணோடு ஒளவையின் அணிந்துரையின் நிறைவாக அமைகின்றன.
தம் சொந்தக் கவிதைகளால் நூல் ஆசிரியரைத் தாய்மையோடு உச்சி முகர்ந்து பாராட்டுவது ஒளவையின் அணிந்துரையின் மற்றொரு சிறப்பு. சான்றாக. மோரணம் பெரும் புலவர் திருநாவுக்கரசு அவர்களின் அரங்கமழும் அலங்கல் என்ற நூலின் அணிந்துரையில்,
“மோரணம் அண்ணல் முதுபெரும் கல்வியால் சீரணவு செந்தமிழ்க்காய்த் தேர்ந் தினிய பேரணவு வண்ண மணிமாலை மகிழ்ந்து வழங்கினான் எண்ணி யுலகிற்கே இனிது”
என்று அழகிய தம் சொந்தப் பாவால் வாழ்த்துகிறார்.
நிறைவாக.
பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் உள்ள ஒரு பெரும் நூலில் இருந்து சில பாடல்களைப் பொறுக்கி எடுத்து வரிசைப்படுத்தி இதுவே கவிஞரின் பண்பு என்று காட்டுவது அனைவரும் செய்யக்கூடிய எளிய செயல்தான்.
ஆனால் இவ்வரிசையில் கவிஞனின் சிறப்பை வெளியிடுவது மேதையின் வேலை என்பார் அ.ச.ஞானசம்பந்தன். (இலக்கியக் கலை) அவ்வகையில் தமிழின் மாமேதையான ஒளவை. படைப்பாளர்கள் பல்லோரின் கலைப் படைப்புகளை வாசித்து அப்படைப்புகளில் உள்ள சிறந்த அம்சங்களைச் சீர்மிகு சொற்களால் எடுத்துச் சொல்லிப் பாராட்டும் பணியைப் பாசத்தோடு செய்துள்ளார்.
தம் அருந்தமிழ்ப் பணிகளுக்கு இடையே அரியன படைக்கும் படைப்பாளர்களை வளர்த்தெடுக்கும் அரும்பணியையும் அர்ப்பணிப்போடு செய்துள்ளார் என்றால் அது மிகையில்லை.
நட்சத்திர உணவகத்தின் நவநாகரிக நங்கையராய், புன்னகை பூத்த முகத்தோடு வாசகனை வரவேற்று நூலின் உள்ளே அழைத்துச் செல்கின்றன ஒளவை அவர்களின் நூன்முகங்கள்.
ஒன்பான் சுவைகளை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லி வாசகனுக்கு ஊட்டுகின்றன.
மொத்தத்தில் ஒளவையின் தமிழமுது தின்னத் தின்னத் திகட்டாத சுவையமுது.

Add a Comment