என்னை பற்றி
டாக்டர் தாரா நடராசன், M, B.B.S., D.C.H , M.D.
என்னை பற்றி|
புகழ்பெற்ற கவிஞர் இக்பாலுக்குக் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப் பெற்றதும், அவரைத் தேடி வந்தோருள் சில நோயாளிகளும் இருந்தனர். நீங்கள் டாக்டராகி விட்டீர்களாமே; என் குழந்தையின் நீண்டநாள்நோயை’ நீங்கள் தான் தீர்த்துவைக்கவேண்டும்” என்று கவிஞரை அக்காலப் பாமர மக்கள் வேண்டியபோது, அவர்கள் அறியாமைக்காக இக்பால் பரிதாபப்பட மட்டுமே முடிந்தது. ‘தான் உடற்பிணி தீர்க்கும் மருத்துவரல்ல’ என்பதை அவர்கள் நம்பவைப்பதற்குள் கவிஞரின் பாடும் போதும் போதுமென்றாகிவிட்டது!
டாக்டர் ஔவை நடராசன் அவர்களை இன்று யாரேனும் அவ்வாறு தவறாக அணுகினால் அவர் கவலையே படமாட்டார்! தம் அருமைத் துணைவியாரும், குழந்தைநல மருத்துவருமான டாக்டர் திருமதி தாரா நடராசன் அவர்களை அன்போடு அழைத்து. பிணியால் அவதிப்படும் ஆர்வலர்களுக்கு உரிய சிகிச்சையை அளித்துதவுமாறு உடனே பரிந்துரை செய்வார்.
தமிழறிஞர்களின் பிள்ளைகள் இந்நாளில் மருத்துவத்துறையில் டாக்டர்களாகியுள்ளார்களே தவிர, தமிழறிஞர் ஒருவரின் துணைவியார் டாக்டர் என்ற பெருமையைப் பெறும் பெண்மணி டாக்டர் தாரா நடராசன் அவர்களாவர்.
கருணீகர் குலத்தின் முதல் பெண் டாக்டர் என்ற பெருமையும் பெறும் டாக்டர் தாரா நடராசன் அவர்கள், இன்னும் பல தனித் தன்மை ளைத் தன்ன கத்தே கொண்டவர்.
ஒரு டாக்டருக்குரிய பகட்டு, ஆடம்பரம் முதலியவற்றை அவரிடம் பார்க்க முடியாது. பொறுமையும், எளிமையும், தாயன்பும் நிறைந்த ஒரு சகோதரியையே, டாக்டர் தாரா நடராசன் அவர்கள் உருவில் காணலாம்.
காலை எட்டு மணிக்கெல்லாம் மருத்துவமனைக்குச் சென்று குறைந்தது ஆறு மணி நேரம் அன்றாடம் எண்ணற்ற குழந்தைகளின் பிணிகளுக்கு சிகிச்சை செய்கிறார். பிற்பகலில் நூலகம் அல்லது மருத்துவக் கல்லூரிக்குச் சென்று மருத்துவ மாணவர்களுக்குக் கற்பித்து, வீடு திரும்பியதும் மாலை முழுதும் ஒரு குடும்பத் தலைவியின் பொறுப்புகளை வீட்டிலிருந்து நிறைவேற்றுகிறார்.
மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சிப்பேராசிரியர் (Reader) என்ற நிலையில், மறுநாள் பாடம் நடத்த, வீட்டிலிருந்தபடியும் பல மணிநேரம் இவர் படிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு வேகமாக ஓடும் நேரத்திற்கு ஈடு கொடுத்து, பொது வாழ்க்கையில் அமைதியாக ஈடுபடும் இவரது 52 ஆண்டுக்கால வாழ்க்கையை ஒரு சாதனை என்று தாராளமாகக் கூறலாம்.
வடார்க்காடு மாவட்டம் போளூர் அருகிலுள்ள புதர் ஆதமங்கலத்தைச் சேர்ந்த திரு.மாசிலாமணி பிள்ளை இவரது தந்தையார்; திருமதி பொன்னம் மாள் இவரது தாயார். இவரு டன் பிறந்த ஒரே தமக்கையார் திருமதி பரமேசுவரி அவர்கள். இரு சகோதரிகளும், அக்காளும் தங்கையும் போல் அவையழகாய்ப் போவதைப் பார்’ என்ற கவிமணியின் பாடலுக்கேற்ப, சென்னை இராயப்பேட்டையில் அந்நாளில், ஆங்கிலம் பயிற்சி மொழியாகக் கொண்ட ஆங்கிலோ இந்தியக், கான்வென்டிற்குச் சென்று படித்தனர்.
தச்சுத் தொழில் ஒப்பந்தக்காரராக விளங்கிய திரு. மாசிலாமணி பிள்ளை அவர்கள் தம்மிரு பெண்களையும், ‘கண்களிரண்டும் சேர்ந்து ஒன்றினையே காணும் காட்சியதுபோல’, தம் சொந்தக்காலில் நிற்கும் புதுமைப் பெண்களாக வளர்த்தார்.
திருமதி பரமேசுவரி அவர்கள் பள்ளிக்கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்ததும், அஞ்சல் துறை வேலையில் சேர்ந்தார். சரியான முகவரியில்லாக் கடிதங்களை, உரியவர்களுக்குத் திருப்பியனுப்பும் ‘இறத்த கடித’ அலுவலகத்தில் பல காலம் பணியாற்றினார். திரு. சுந்தரமூர்த்தி என்ற பொறியாளரை மணந்திருந்த இவருக்கு இரண்டு பெண்களும், இரண்டு பிள்ளைகளும் பிறந்தனர். இளமை முதலே தொண்டையில் சதை வளர்தல் முதலிய தொந்தரவுகளால் தொடர்ந்து அடுத்தடுத்து அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டிருந்த திருமதி பரமே சுவரி ,அவர்கள் 1980-ஆம் ஆண்டு, தாமும் ஒரு திரும்பாத கடிதமாக, மண்ணுலகிலிருந்து மறைந்தார்.
1942 ஆம் ஆண்டு தொடங்கிய இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், சென்னை மாநகர் காலியானபோது, தாரா அம்மையார், தம் தந்தை, தமக்கையாருடன் வேலுாருக்குச் சென்று ஏழாண்டுகள் தங்க நேர்ந்தது. அதற்குள் இண்டர்மீடியட் பயின்றிருந்த தாரா அவர்கள் மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைக்கவே மீண்டும் சென்னைக்கு வந்தார்.
1955 ஆம் ஆண்டு M B B.S. பட்டம் பெற்று டாக்டரான தாரா அவர்கள், சென்னை கஸ்தூரிபா காந்தி (கோவா) மகளிர் மருத்துவமனையில் 1958 ஆண்டுமுதல் பணியாற்றத் தொடங்கினார்.
குழந்தை நல மருத்துவத் துறையில், 1961 ஆம் ஆண்டு சிறப்புத் தகுதி பெற்ற (Diploma in Child Health) டாக்டர் அவர்கள், உரைவேந்தர் ஒளவை துரைசாமி பிள்ளை அவர்களின் மூத்த புதல்வர் ஒளவை நடராசன் அவர்களோ அதே ஆண்டில் மணந்தார்.
சென்னை அரசு தலைமை மருத்துவமனை, (General Hospital), மதுரை இராஜாஜி மருத்துவமனை, (முன்னாள் எர்ஸ்கின் ஹாஸ்பிடல்), எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை, இராயப்பேட்டை மருத்துவமனை ஆகியவற்றில் தொடர்ந்து பணியாற்றி, குழந்தைநல மருத்துவத் துறையின், சிவில் சர்ஜனாக இன்று டாக்டர் தாரா நடராசன் சிறந்து விளங்குகிறார். அத்தோடு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில், குழந்தை நலம் கற்பிக்கும் ஆராய்ச்சிப் பேராசிரியராகவும் விளங்கும் இவர் தம் மருத்துவ முதுகலைப் பட்டத்தை ( M.D.) 1977 ஆம் ஆண்டு பெற்றார்.
1979 ஆம் ஆண்டின் பிற்பகுதி, ஆறு திங்கள் லிபியா’ நாட்டில் கடல் கடந்து சென்று பணியாற்றிய டாக்டர் தாரா நடராசன், தம் தமக்கையாரின் உடல் நலம் குன்றிய செய்தி அறிந்து உடனே தாயகம் திரும்பினார். மரணப் படுக்கையில், ஒருமாதம் கணுறக்கமின்றி உடனிருந்து சிகிச்சை செய்தும் பலனளிக்காமல், தங்கையாரின் பரிவையும் பாசத்தையும் பற்றையும் கண் டு நெகிழ்ந்த நிலையில், திருமதி. பரமேசுவரி மறந்தார். அவர் மறைவிற்குப் பிறகு அவரது பிள்ளைகளையும், தம் பிள்ளைகளாகவே கருதி அவர்கள் வாழ்கைக்கு வழிகாட்டி வருகிறார்.
டாக்டர் ஔவை நடராசன், டாக்டர் தாரா இல்லற வாழ்வின் நல்லறச் செல்வர்களாக மூன்று’ -ஆண்மக்கள் சிறந்துள்ளனர். மூத்த மகன் கண்ணன் இலயோலாக் கல்லுாரியில் எம்.எஸ் , (விலங்கியல் பயின்று வருகிறார். அடுத்தவர் அருள் மாநிலக் கல்லூரியில் தமிழ் இலக்கிய இளங்கலை பயில்கிறார். இளைய மகன் பரதன் மேல் நிலைக் கல்வி முடிந்து, உயர்த் தொழில் நுட்ப அறிவியல் கல்வி தொடங்க ஆயத்தமாய் உள்ளார். – அண்ணா நகரில், ‘தாரா இல்லம்’ 1974 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப் பெற்றது. அது முதல் அங்கு வாழ்ந்துவரும் டாக்டர் அவர்கள், மருத்துவ மகளிர் சங்கம் வெளியிடும் அரையாண்டு ஆங்கில இதழான ‘Southern Scientist’ ஆசிரியப் பொறுப்பையும் அண்மையில் ஏற்றுள்ளார்.
புகழ்பெற்ற தமிழ்க் குடும்பத்தின் மருமகளான டாக்டர்’ தாரா நடராசன் தமிழ்ப்பற்றுடன் விளங்குவதில் வியப்பில்லை. கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்’ என்று சொல்லும்போது, ஒளவை வீட்டுக் குடும்ப விளக்கான டாக்டர் தாரா நடராசன் அரங்கேறிப் பேசுவது இயற்கைதானே!. 1963 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற சைவமங்கையர் மாநாட்டு தலைமைப் பொறுப்பை இவர் அணிசெய்தார். அருள்மிகு கபாலிசுவரர் கோயில், நவராத்திரி, விழாவில், கலந்து கொண்டு பேசியுள்ளார்.
வந்தாரா நடராசன் வரவில்லையா இன்னும் ?’ என்று இலக்கிய ஆர்வலர்கள் காத்திருக்கும் மேடைகளுக்கு – தாராவுடன் வந்தார்” என்று கவிஞர்கள் குறிப்பிடும் வகையில் இயன்ற போதெல்லாம் துணைவருடன் சென்று இலக்கிய விருத்தக் கேட்புன்புறுவதை, வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இவ்வாறு கல்வி கேள்விகளால் நிரம்பிய தாய்க்குலத்தின் பிரதிநிதியான டாக்டர் தாரா நடராசன் அவர்கள் சென்ற திங்களிலிருந்து மாடம்பாக்கம் வாசுதேவப்பிள்ளை அரக்கட்டளையில் தமிழ்நாடு கருணிகர் சங்கத்தின் நல்லெண்ணத் தூதுவராக நியமனம் பெற்றுள்ளதன் வாயிலாக மற்றொரு புதிய வரலாறு படைத்துள்ளார்.
வாசு தேவப்பிள்ளை அறக்கட்டளையில் இடம் பெற்ற முதற்பெண்மணி என்ற பெருமைதான் அது. அத்தோடு அக்குழுவின் செயலாள ராகவும் அம்மையார் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பெற்றுள்ளது நம் செவிகளில் இன்பத்தேன் பாய்ச்சும் செய்தியாகும்.
தமிழ் நாடு கருணீகர் சங்கம் தோன்றிய நாள் முதல் இன்று வரை, சங்க வளர்ச்சியில் ஆர்வமும் அக்கறையும் காட்டிவரும் புரவலராகத் திருமதி தாரா நடராசன் விளங்கி வருகிறார். அவர் வீட்டிலேயே நம் சங்கத்தின் பல கூட்டங்கள் நடை பெற்றுள்ளன. அமரர் கௌரி சங்கரிடம் நம் சங்கத்திற்காக தமிழ் தட்டச்சுப்பொறி ஒன்றை அன்பளிப்பாக வழங்கித் தம் நல்லாதரவைத் தெரிவித்துள்ளார். வள்ளலார் கல்வி அறக் கட்டளை வாயிலாக, ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை, புத்தகம் முதலியன வழங்க, ஆண்டுதோறும் நூறு ரூபாயை நன்கொடையாக வழங்கி வருகிறார்.
கருணீகர் குலநலனில் அக்கறை காட்டி, அவர்களுக்கு மருத்துவத் துறையிலும் பெருந் தொண்டாற்றி வரும் டாக்டர் தாரா நடராசன், வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை கல்வி அறக்கட்டளையின் உறுப்பினராகவும் இலங்கிச் சிறந்த பணியாற்றி வருகின்றார்.
பாசத்திற்கும் பண்பிற்கும் பெயர் பெற்ற டாக்டர் தாரா நடராசன் அவர்கள் காலத்தில் கருணிகர் குலத்தின் கல்வி வளர்ச்சிக்கு ஒரு பாலமாக விளங்கி, இளைஞர்கள் முன்னெட்டிச் சொல்ல, பயனுள்ள வகையில் தொடர்ந்து தொண்டாற்றிச் சிறந்திட நமது நல் வாழ்த்து களைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது உருவப் படத்தை நல்வாழ்வு’ இதழின் அட்டைப்படத்தில் வெளியிட்டுப் பாராட்டி மகிழ்கிறோம்.