பொன் கோடிப் பரிசு பெற்ற புலமைப் பெருமாட்டியார்!

செய்தித்தாள் கட்டுரைகள்|

பொன் கோடிப் பரிசு பெற்ற புலமைப் பெருமாட்டியார்!

                      முனைவர் ந.அருள்

      இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை

மக்களுக்கு வழங்கப்பெறும் பெயர்களும், ஊர்ப் பெயர்களும் உலகெங்கும் காரணம் பற்றியே அமைந்துள்ளன. அவற்றை ஆராயத் தலைப்பட்டால், அக்கால மக்களின் கலைவளமும், உள நலனும் புலனாகும். மக்கட்குப் பெயரிடும் முறையில் தமிழரிடையே இரண்டு முறைகள் பொதுவாக உள்ளன. அவற்றின் மரபை இடுகுறி, காரணம் என்பர். பெயரிடும் வழக்காறு இம்முறைப்பட்டது எனத் தொல்காப்பியர் எடுத்துக்காட்ட-வில்லையாயினும் வழக்கிலிருந்த பெயர்களைக் கொண்டு நிலம், குடிமை, குழு, பண்பு ஆகிய இயல்புகளால் அவை பிறந்தமையை உணர்த்துகின்றார்.

சங்க காலத் தமிழர், தமக்குச் சூட்டிக்கொண்ட பெயர்கள் நாகரிகம் அற்றதாக நெருடலாக இருப்பதாக டாக்டர் வி.ஏ.ஸ்மித் கருதினார். ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அவ்வறிஞர் ஆற்றொழுக்காக அமைந்த தமிழ்ச் சொற்களை ஒலிக்க இயலாமல் இவ்வாறு கருதினார் போலும்! சிறியதொரு இயற்பெயரை முன்னும் பின்னும் பல சிறப்பு அடை மொழிகளால் சேர்க்கப்பட்டதால் பெயர்கள் நீண்டிருந்தமையைக் காணலாம். சில பெயர்களின் இயற்பெயர்களையே அறிய முடியவில்லை. அஃது அடைமொழியாகவே  அமைந்துவிடுவதுண்டு. வேலேந்திய வீரன் என்று வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி “என்னும் சோழ மன்னனின் பெயரின் பொருள் நமக்கு நன்கு விளங்கும். மன்னனுடைய புகழை எடுத்துப் பேசவே இவ்வடைமொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. பேர் என்னும் சொல்லுக்கே புகழ் என்னும் பொருளும் உண்டு. சான்றாகப் – பெரும் பெயர் வழுதி என்னும் பெயரைக் காணலாம்.

பண்டைக்காலத்தில் வழங்கிய பெயர்கள் இக்காலத்தில் நடைமுறையினின்றும் விலகி விட்டமையால் இன்றைய வாழ்வினர்க்குப் புதுமையாகக் காணப்படுகின்றன.

காக்கைப்பாடினியார் பெயரமைப்பு

பாணர் இனத்துள் பாடல் ஆடல் வல்ல மகளிரைப் பாடினி விறலி என்பர். நச்செள்ளையார் என்ற புலமைச் செல்வியார். கேட்போர் மனம் நெகிழுமாறு பாடுவதில் வல்லவராயிருந்தது பற்றி அவரைப் பாடினி என்றனர் போலும். அவர் இயல்பாகப் பாடினியானதோடு, ஆழ்ந்த கருத்தமைந்த அழகிய பாட்டுக்களை இயற்றும் நல்லிசைப் புலமையும் ஒரு சேரப் பெற்றிருந்ததால், பாடினியார் என்று அறிஞரால் சிறப்பிக்கும் பேறு பெற்றார். இவரது இயற்பெயர் செள்ளை என்பதாகும். இவர் இயற்புலமையை வியந்து, நல் என்ற அடைமொழி தந்து நற்செள்ளையார் என்று புலவர்கள் போற்றினர். நற்செள்ளை நாளடைவில் நச்செள்ளை எனப்பட்டது.

நற்செள்ளை, நற்கீரர், நற்பண்ணனார் என்பவை நச்செள்ளை, நக்கீரர், நப்பண்ணனார் என வருமொழி முதலில் வல்லினம் வரும்போது திரிவது கண்டோர், நற்சேந்தனார் முதலிய நிலைகளில் திரியாமை நோக்கி ‘ந‘ என்னும் எழுத்தே சிறப்புணர்த்தும் இடைச்சொல் எனக் கொண்டனர். ‘பாழ்காத்திருந்த தனிமகன்‘ போன்றே‘ என்ற பாடலுள் வந்த சொல்லாட்சியால், ‘தனிமகனார்‘ என்றும்,  பெருங்கையானை இரும்பிடர்த் தலையிருந்த என்ற ‘சொற்புனைவால்‘ இரும்பிடர்த் தலையார் என்றும் ஆசிரியர் பெயர் அமைந்ததுபோல, ‘விருந்து வரக் கரைந்த காக்கை‘ என்றுரைத்துக் கரைந்த காக்கையைக் சுட்டிப் பாடியதால் இப்பெயர் பெற்றார் என்பர். கரைந்த காக்கை பொருளாகப் பெயர் வந்திருந்தால், இக்காரிகையாரைக் கரைந்த காக்கையார் என்றோ, காக்கைபாடியார் நச்செள்ளையார் என்றோ குறித்திருக்க வேண்டும். ஆயின் காக்கை பாடினியார் என்றே எழுதியுள்ளனர். எனவே ‘காக்கை‘யைப் பாடியதால் இப்பெயர் இவர்க்கு வந்தது என்ற கருத்து பொருந்து மாறில்லை என்று உரைவேந்தர் வினவுகின்றார்.

காக்கைப்பாடினியார் என்பதே இயற்பெயராகவும், உரிமையும் அன்பும் கருதி இளமையில் அமைந்த இப்பெயர் பிறகும் தொடர்பு பெற ஒட்டிக்கொண்ட பெயராகவும் ஆகலாம் என்றும் அவர் கருதினார்‘.

ஊரோடு இணைந்த திருப்பெயர்களைப் பூணுவது நல்லிசைப் புலவரின் இயல்பாதலால் கோழியூர் போலக் காக்கையூர் என்ற ஊரைச் சார்ந்தவர் இவர் எனக் கொள்ளலாம். அதற்கு அரணாகப் புறநானூற்று உரையாசிரியர், ‘அவர் இருந்த ஊரைக் காக்கையூர் என்று பெயரிட்டுப் புலவருக்கு இறையிலி முற்றூட்டாக அரசன் வழங்கினான்‘, செள்ளையார் தனது காக்கையூரிலிருந்து வந்தார். அது பாலைக்காட்டுப் பகுதியில் உள்ளது எனக் குறிப்பர்“. பெருங்காக்கை பாடினியார். சிறுகாக்கை பாடினியார் என்ற இரு வேறு பெண்பாற் புலவர்கள் இலக்கணப் புலவராகத் திகழ்ந்தனர் என்பதும் நினைக்கத்தக்கது.

செள்ளை என்ற பெயர் அந்நாளில் சேரநாட்டில் வழங்கியுள்ளது. ‘வேண்மாள் அந்துவன் செள்ளை‘ என்ற செல்வ மகள் ஒருத்தி வாழ்ந்த குறிப்புண்டு ‘செள்ளை‘ எனுஞ்சொல் மருவித் தெலுங்கில் செல்லா, செல்லலு என்றாளப்படுகிறது அதற்குத் தங்கை என்பது பொருள். நற்செள்ளை என்ற பெயரே இன்றும் நல்லதங்கை, நல்லதங்காள் என்று பயின்று வருவதைக் காணலாம். செள்ளையார் என்ற சொல் தாயார் என்ற பெயருடையதாகலாம். அது தள்ளை என்பதன் மருஉவாகிய சள்ளை என்றாகிப் பின் செள்ளை என்று மாறியது எனச் சிலர் கூறுவதாக டாக்டர் உ.வே.சா. குறிக்கிறார்.“ தள்ளை செள்ளை என்ற சொற்களை வரலாற்று முறையில் நோக்கின் செள்ளை என்பது காலத்தால் முற்பட்டதென்பதால் தள்ளை செள்ளையாயிற்று என்பது பொருத்தமாகாது. இதுபற்றி ஆராய்ந்த டாக்டர் மொ.அ.துரையரங்கனார், செள்ளையார் என்பதுதான் இப்புலவரின் இயற்பெயர் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் ‘தொன்மை ஆரிய மொழியைப் போலவே தொன்மை திராவிட மொழியிலும் அண்ண மெய்யொலி கிடையாது என்றும், மெதுவான ஒலியையுடையனவாய்ப் பின் அண்ணத்திலிருந்து பிறப்பிக்கப்பட்ட மெய்களே அண்ண மெய்களாக வழங்கி வந்தன என்றும் கூறியுள்ளார். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு ‘கேள்‘ (உறவுமுறையார்) என்ற சொல்லிலிருந்துதான் ‘செள்ளை‘ என்ற சொல் பிறந்தது என அறியலாம்‘ ‘ஐ‘ என்பது பெண் பாலைக்குறிக்கும் விகுதி ‘செள்ளை‘ என்ற சொல் ‘விரும்பத்தக்கவன்‘ எனப் பொருள்படும். இப்பொழுது பேச்சு வழக்கில் செல்லமாக வழங்கப்படும் ‘செல்லி‘ என்ற சொல்லை இக்காலத்தார் பலர் ‘செல்வி‘ என்ற சொல்லின் மரூஉ என்பர். அதைவிடச் செள்ளை என்பதிலிருந்து அது தோன்றியது எனக் கொள்ளுதல் பொருத்தமாக இருக்கும். நச்செள்ளையார் என்னும் இப்புலவர், காக்கை பாடினியம்‘ என்றதொரு யாப்பிலக்கண நூலை இயற்றியுள்ளார் போலும். தொல்காப்பியத்தில் உரையாசிரியரான பேராசிரியர் காக்கைபாடினியார் என்பவரால் இயற்றப்பட்ட காக்கைபாடினியம் என்னும் நூலைப் பற்றியும், அவருக்குப் பிற்காலத்தில் வாழ்ந்திருந்த காக்கை பாடினியாரால் பாடப்பெற்ற சிறுகாக்கை பாடினியம் என்னும் நூலைப் பற்றியும் தமது உரையில் குறித்துள்ளார் நச்செள்ளையார் இவருள் இரண்டாம் காக்கை பாடினியராகத்தான் இருத்தல் வேண்டும் என்றும் கூறுகிறார்.

காக்கை கரைந்தால் விருந்தினர் வருவர் என்பதைத் தமிழரிடையே இன்றும் நிலவுவதொரு நம்பிக்கை. காக்கை கரைந்ததும் வெளியூர் சென்றிருந்த காதற் கணவன் திரும்பி வந்ததும், கண்ட தோழி வியந்து கூறுவதாக நச்செள்ளையார் பாடிய பாட்டு குறுந்தொகையுட் கோக்கப்பட்டுள்ளது. நள்ளியின் காலத்தில் வாழும் இடையர் தரும் நெய்யோடு பிசைந்த தொண்டை நாட்டு நெற்சோற்றை ஏழு கலங்களில் காக்கைக்கு ஊட்டக் கருதும் பெண்மையியல்பும், நள்ளி என்னும் வள்ளலின் பெயரைக்கூறும் நன்றி சான்ற நெஞ்சமும் இவர் பாடல்களில் பிறங்குகின்றன அகப்பாட்டுள் தம் நன்றியுணர்வைப் புலப்படுத்தியது போலப் புறப்பாட்டில் மூதில் மகளான தாயொருத்தியின் ‘மறனிழுக்கா மானத்தையும் மாண்பையும், காட்டுகின்றார். ஆறாம் பத்தின் பதிக இறுதியில் யாத்த செய்யுள் அடங்கிய கொள்கை காக்கைபாடினியார் நச்செள்ளையார் என வருவதன்கண் உள்ள ‘அடங்கிய கொள்கை‘ என்னும் அடைமொழி இவர் பெருமையை மேலும் புலனாக்கும். ‘ஒத்த பதிற்றுப்பத்து‘ என்று போற்றப்பட்டுச் சேர வேந்தரின் செய்தி நூலாகத் திகழும் பத்திற்றுப்பத்துள் இரண்டு முதல் ஒன்பது வரையுள்ள எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. இப்பத்துகளைப் பாடிய எண்மருள் காக்கைபாடினியார் நச்செள்ளையாரான அம்மையார் மட்டும் தனித்த பெண்பாலராக இணைந்திருக்கும் பெருமைசான்ற புலமைப் பெருமாட்டியாவார். அதிகனுக்கு அரசவைப் புலவராய் ஔவையார் அமைந்தது போல, ஆடுகோட்பாட்டுச்  சேரலாதன் அவைக்களத்தை நச்செள்ளையார் அணிசெய்தார். பகைவரின் ஒற்றர், ஆடல் மகளிரை அனுப்பி ஒருகால் வேந்தனை மயக்கக் கருதினர். அதனை உணர்ந்து கொண்ட நச்செள்ளையார், தம் பாட்டுகளால் அக்குறிப்பை உணர்த்தி அவனை உய்வித்தார். பாடிப்பெற்ற பரிசிலாகக் கலனணிக என்று ஒன்பது காப்பொன்னும் நூறாயிரங் காணமும் அவன் பக்கத்தில் வீற்றிருத்தற் சிறப்பும் இவர் பெற்றார் என்ற குறிப்பால், நச்செள்ளையார் மனையறத்தில் வாழ்ந்த மங்கல மடந்தை எனவும் அறியலாம்.“ ஒரு பெருமாட்டிக்கு வழங்கிய பரிசிலாகப் பெரும் பொருட்குவியல் நம்மை வியக்க வைக்கிறது.

இவர் பாடியனவாக அகப்பாட்டு ஒன்றும், பதிற்றுப்பத்துள் ஆறாம் பத்தும், புறத்தில் ஒரு பாடலும் திகழ்கின்றன.  ஒரு பானைச் சோற்றுக்கு ஓர் அவிழ் பதமாகப் புகழ்வாய்ந்த பலரால் என்றும் எங்கும் புகழப் பெறும் இனிய புறப்பாட்டுச் செய்யுளை ஈண்டு நாம் நினைத்து மகிழலாம்.

நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென்தோள்,

முளரி மருங்கின், முதியோள் சிறுவன்

படைஅழிந்து மாறினன்‘ என்று பலர் கூற

மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டஎன்

முலை அறுத் திடுவென், யான்‘ எனச் சினைஇ,

கொண்ட வாளொடு படுபிணம் பெயரா

செங்களம் துழவுவோள், சிதைந்து வேறு ஆகிய

படுமகள் கிடக்கை காணூஉ.

ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே.

நரம்புகள் புடைத்துத் தோன்றும் மெலிந்த தோள்களும், தாமரை இலைபோலும் வற்றிய வயிற்றோடு உள்ள சங்கத் தமிழ் முதியவள் ஒருத்தி, போர்க் களத்தில் தன் மகன் புறமுதுகிட்டான் எனக் கேட்டுச் சினந்தாள். “அங்ஙனம் அவன் செய்திருப்பானாயின், அவன் பாலுண்ட என் மார்பகத்தை அறுத்தெறிவேன்‘ என்றாள். அவ்வாறே வஞ்சினம் கொண்டவளாய்ப் போர்க்களம் புகுந்து, கையில் வாள் கொண்டு தேடினாள். ஆங்கொருபால் தேடிக்கண்ட அவள் மகன் உடல் சிதைந்து வீர மரணம் உற்றதறிந்து, ஈன்றெடுத்த நாளைக் காட்டிலும் பெரிதும் மகிழ்ந்தாள்.

இத்தகைய வீரப் பெருமிதத்துக்கு ஈடாக கிரேக்கப் பாடல்கள் உண்டு என்பர். சான்றாக, ‘The patriotism of Spartan mothers is finely exemplified in an epigram by Dioscorides, thus translated by Mr. Goldwin Smith in the late Dr. Wellesley’s Anthologia Polyglotta’.

Eight sons Demaeneta at Sparta’s call sent forth to fight,

One tomb received them all. No tear she shed, but shouted,

‘Victory! Sparta, I bore  them but to die for thee’.

பெண்ணிற் பெருந்தக்க யாவுள என்று பெண்மையையும் தாய்மையையும் போற்றிக் கொண்டாடும் நாள் உலக மகளிர் நாளாக இப்போது போற்றப்பட்டுவருகிறது. தொல் பழங்காலத்திலேயே ஆடவரும் மகளிரும் சரிநிகர் சமமாக வாழ்ந்த பெருமை நமக்குப் புகழ் சேர்ப்பதாகும். இந்நிலையில், மன்னர் பெண்மைக்கு வழங்கிய பெரு நிதியத்தை எண்ணுங்கால், விருந்துவர கரைந்த காக்கையை வியந்து பாராட்டிய காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் நினைவுக்கு வருவது பொருத்தந்தானே!

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *