
கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில்,
சுதந்திரப் போராட்டத் தியாகி
திரு. அரிகிருஷ்ணன்
திருமதி தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக திரு குமரி அனந்தன் 1933 மார்ச்சு 19ஆம் தேதியன்று பிறந்து
2025 ஏப்ரல் 9ஆம் தேதி அன்று சென்னையில் மறைந்தார்.
பெருந்தலைவர் காமராசரின் அருமந்த சீடர் என்று பெருமிதத்துடன் சொல்லி வாழ்ந்து மறைந்தவர்.
காங்கிரசுப் பேரியக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவராக இருந்தவர்.
மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு பணிவின் சிகரமாக தன் சிறகுகளை மடக்கிக் கொண்டவர்.
ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வேண்டுமென்று களக்காட்டிலிருந்து இராதாபுரம் வரை நடைபயணம் மேற்கொண்டதன் விளைவாக 15.08.1984 அன்று 1.5 ஏக்கர் நஞ்சை நிலம் மற்றும் 2.5 ஏக்கர் புஞ்சை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டம் பெற்றுத் தந்தவர்.
இலக்கியச் செல்வராகவும்,
மேடைப்பேச்சாளராகவும் எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாகத் திகழ்ந்தவர்.
நாகர்கோயில் தொகுதியில் 1977ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவைக்குச் சென்ற முதல்நாளிலிருந்து தமிழில் பேசுவதற்குப் பலமுறை போராடி, பத்து முறைக்கு மேல் தொடர்ந்து காவலர்களால் வெளியேற்றப்பட்டு, சோர்ந்துவிடாமல் அவரின் தொடர் முயற்சியால் 20.11.1978இல் தமிழில் பேசுவதற்கு அனுமதி கிடைத்து, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து தமிழிலேயே பேசியவர் என்ற சிறப்புக்கு சொந்தக்காரர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் உறுப்பினராக நான்கு முறை
(1980, 1984, 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில்) தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுதி மேம்பாட்டிற்குத் தொண்டாற்றியவர்.
தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு அலுவலகப் படிவங்கள் அனைத்திலும் தமிழுக்கு முதலிடம் தரப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஒன்றிய அரசின் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி தமிழ்நாட்டில் தாய்மொழித் தமிழுக்கு எங்கும் முதலிடம் தரப்படவேண்டும் என்று தனது வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்ததை தமிழர்கள் என்றென்றும் நினைவில் கொள்வர்.
எட்டயபுரம் கூட்டுறவு நூற்பாலைக்கு பாரதியாரின் பெயரினை சூட்டுமாறு உண்ணா நோன்பிருந்து கோரிக்கையில் வெற்றி பெற்றதையும்
சென்னை, திருவல்லிக்கேணியில் பைகிராப்ட்ஸ் ரோடு என்று பெயர் கொண்டிருந்த சாலைக்கு பாரதி சாலை எனப் பெயர் வர முனைந்து வென்றதையும்
வானொலி என்பதை ஆகாஷ்வாணி என்றாக்க முனைந்தபோது எதிர்த்து சென்னையில் பேரணியும்
சாத்தூர் வைப்பாற்று மணல் வெளியில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்; தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆகியோரை அழைத்து பெரிய மாநாடு நடத்தி வானொலி தொடர்ந்து நிலைக்க வழி வகுத்ததையும்
நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட போது POST- CARD; MONEY ORDER FORM என்பனவற்றைத் தமிழில் அஞ்சலட்டை, பணவிடைத்தாள் என்று தமிழில் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வைத்து நிறைவேற்றி CHEQUE என்பது காசோலை என அழைக்கவும். தந்தியை விரைவு வரைவு என அழைத்துச் செயல்பாட்டிற்கு கொண்டு வந்ததும் தமிழ்நாட்டு வரலாற்றில் பொறிக்கத்தக்க பொன் சுவடுகளாகும்.
நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ், குமரி அனந்தனின் தமிழ் அமுது, சிந்தனைப் பண்ணையில் பாரதியார்,
சிந்தனைப் பண்ணையில் பாரதிதாசன், பார் அதிரப் பாடிய பாரதி உட்பட 29 நூல்களை எழுதி தமிழர்களின் நெஞ்சங்களில் என்றும் நிறைந்திருப்பவர்.
சென்னையில் உள்ள பெரும்பான்மை கல்லூரிகளிலும், மேல்நிலைப் பள்ளிகளிலும் குறிப்பாக தியாகராயர் நகரில் மகாகவி பாரதியார் குறித்த தனி உரைகளும்
மாணவ, மாணவிகளுக்கும் பேச்சுக்கலையில் பயிற்சி அளித்து, மாணவர்களை மேடைகளில் பேச ஆக்கமும், ஊக்கமும் அளித்த சிறப்பிக்குரியவர்.
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
என்ற பாரதியின் வாக்கை செயல்படுத்திக் காட்டிய பெருந்தகை நம் கண்ணில் காணமுடியாத நெடுந்தொலைவிற்கு கடந்து சென்றுவிட்டாரே!
தமிழ்நாடு அரசின் மகாகவி பாரதியார் விருது, பெருந்தலைவர் காமராசர் விருதுகளோடு கடந்த ஆண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமிருந்து உயரிய விருதான தகைசால் தமிழர் விருதினைப் பெற்றபோது அருகினிலே கண்குளிரக் கண்டு மகிழ்ந்ததை மறக்க முடியுமா?
சொல்வளத்துடன் பனைவளத்தையும் தமிழகத்தில் ஓங்கிய நிலையில் வளர்த்து இயற்கையோடு கரைந்த இலக்கியச் செல்வர் எந்தையாரின் நெருங்கிய நண்பராகவும் என் மீது தனிப்பரிவு கொண்டு அகமகிழ்ந்து இருவரும் சிரித்துப் பேசிய அமுத மொழிகள் என் நெஞ்சில் நீங்காமல் இடம் பெற்று இருக்கிறது.
இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்களது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.