03fad593-a403-4280-9d21-69ea1cc5cef7

நினைத்தது நடந்தது

தமிழ்க் கணினிவுலகில் பலரை சந்தித்த பொழுதும் ஒருவரை மட்டும் நெருங்கி சந்தித்துப் பேச முடியாத ஒர் ஏக்கச்சூழல் 13 ஆண்டுகளாக நிலவி வந்ததை அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று 2.10.24 தீர்வு கிடைத்தது

ஆம், தமிழ்க் கணினிவுலகின் இணையற்ற வேந்தர்

எழுத்துரு வடிவங்களின் உள்ளங்கவர் உத்தமர்

முரசு அஞ்சலின் தந்தை

இனிய அண்ணல் முரசு நெடுமாறன் அவர்களை சென்னையில் உள்ள ஐ மீன் உணவகத்தில் நேரில் சந்தித்து பேசும் பெருமிதமான வாய்ப்பு கிடைக்கப்பெற்றதில்
எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தேன்.

அவர் உருவாக்கிய முரசு அஞ்சலில் பல்லாண்டுகளாக் கணினித் தட்டச்சு முறையினை பழகிய யான் இன்று வாயுரையால் சொல்லச் சொல்ல தட்டச்சினை விரைவாகச்செய்யும் ஆற்றலில் வளர்ந்துள்ளேன் என்று அவரிடம் சொல்லும் பொழுது எத்தனை பூரிப்பு …

விளம்பர வானில் வனப்பான எழுத்துருவுகளைப் பற்றி நீண்டு பேசிய பொழுது பல அரிய தகவல்களை என்னிடம் பகிர்ந்தார்.

தான் பழகிய பல சீன நண்பர்களைக்குறித்து பேசும்பொழுது அவர் சொன்ன ஓர் அருமையான தகவல்

சீனர்களுக்கு மொழிப்பற்று ஒன்று இருப்பதாக தான்
எந்நிலையிலும் பார்க்கவில்லை என்று சொன்னபோது வியந்து நின்றேன்

அப்பாவின் அரிய கையெழுத்து வடிவங்களை குறித்துப் பேசிய பொழுது ஆர்வமாகக் கேட்டார் பிறகு அப்பாவின்
சிந்தனைப்புதையல் என்ற நூலினை பரிசளித்தேன்.

www. Sorkuvai.tn.gov.in வலைதளத்தை பாராட்டி மகிழ்ந்தார்… அதனின் பயனை வருங்காலம் பெரிதும் பயன்படுத்தி பெருமிதம் அடையும் என்று ஊக்கப்படுத்தினார்

Capture

உலகத்தமிழ் இதழ்-252

பல்லான்ற கேள்வி பயனுணர்வார் என்று தொடங்கும் நாலடியார் பாடல் இருநூற்(று) ஐம்பத்(து) இரண்டு;

சொல்லான்ற கன்னல்-சுவை நிகர் கட்டுரைகளைக் கொண்டு வரும்
உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து) இரண்டு

1eac6eb7-1a78-4d50-91b3-82070592b409 (1)

காந்தி ஜெயந்தி முன்னிட்டு மக்கள் நலத்திட்ட பணிகள் நிகழ்ச்சி

தமிழ்நாடு மீனவர் சங்கம் மற்றும் தமிழ்நாடு ப்ளெக்ஸ் டிசைனர் அசோசியேஷன் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மக்கள் நலத்திட்ட பணிகள் நிகழ்ச்சியில் 2.10.24 புதன்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் பட்டினப்பாக்க கடற்கரையில் கலந்துகொண்டு மீனவக் குடும்பங்களை சார்ந்த மகளிருக்கு தையல் கருவிகளை வழங்கி காந்தியடிகளின் சிறப்புகளை குறித்து உரையாற்றினேன் .

திரு அன்பழகன் நடத்திய நிகழ்வில் லியோ சங்கத்தில் பழகிய நண்பர்களான திரு விஜி குமார் மற்றும் திரு ராம் இருவரையும் ஆண்டுகள் பல கடந்து சந்தித்தது பெரு மகிழ்ச்சியாகும்.

WhatsApp Image 2024-09-29 at 20.07.48_9adf155a

26 – ஆம் ஆண்டு கம்பன் கழக விழா

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் – அவர்
தலைவர் ; அன்னவர்க்கே சரண் நாங்களே

அன்புடையீர் !
வணக்கம்.

நம் கழகத்தின் 26 ஆம் ஆண்டு விழா 29.09.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் இராமநாதபுரம், வெளிப்பட்டணம், ஆயிரவைசிய மகாஜன சபை திருமண மாளிகையில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

அனைவரும் தவறாது கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

இவண்…

கம்பன் கழகம்,
இராமநாதபுரம்.

06.00 மணி : தலைமையுரை
06.30 மணி : விருது வழங்குதல்
07.00 மணி : விருதாளர்கள் ஏற்புரை

07.15 மணி : சிறப்பு விருந்தினர்

திரு. ஒளவை அருள் அவர்கள்

 இயக்குநர் 
தமிழ் வளர்ச்சித்துறை
WhatsApp Image 2024-09-27 at 11.12.12_62917ccf

மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவர் முத்தமிழ்முரசு இரா.திருமாவளவனார் பேருரை !

மணக்கும் மலேயாவில் மாத்தமிழை நிகரற்ற பெருமிதத்துடன் வழி நடத்தும் தனித்தமிழ் தென்றல் திருமாவளவன் மாநிலக் கல்லூரியில் உரையாற்றிய நிகழ்ச்சியில் 25.9.24 புதன் கிழமையன்று கலந்து கொண்டு வாழ்த்தினேன்

தமிழ்நாட்டின் முதல் கல்லூரியான சென்னை மாநிலக்கல்லூரியில் திராவிட மொழிநூல் ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் விழா !

சென்னை மாநிலக் கல்லூரியில் 25.9.2024 அறிவன் (புதன்) கிழமை காலை 10.30 மணிக்குத் ‘தமிழும் பாவாணரும்’ என்னும் தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.தாமரைக்கண்ணன் வரவேற்புரை ஆற்றினார்.

மாநிலக் கல்லூரி முதல்வரும் கல்லூரிக் கல்விஇயக்ககத் இணை இயக்குநருமான முனைவர் இரா. இராமன் அவர்கள் தலைமை தாங்கினார்._

மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவரும் மலேசிய அரசின் கலைச்சொல்லாக்கக் குழுத் துணைத்தலைவருமான தமிழறிஞர் இரா.திருமாவளவன் அவர்கள் , பாவாணர் குறித்த செறிவான பேருரையை வழங்கினார்.

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை ந.அருள், முன்னாள் கல்லூரிக் கல்வி இயக்கக இணைஇயக்குநர் அ.மதிவாணன், பாவேந்தர் விருதாளர் வாலசாவல்லவன் முதலிய பலரும் விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

_கல்லூரி முதல்வர் முனைவர் இரா.இராமன் அவர்கள் பேசும்போது ,

மாநிலக் கல்லூரி வளாகத்தில் பாவாணருக்குச் சிலை விரைவில் அமைக்கப்பட உள்ள இனிய செய்தியை அறிவித்தார்.

பாவாணர் சிலையோடு அவர்பெயரில் 200 பேர் அமரும் வகையில் குளிரூட்டப்பட்ட அரங்கமும் பாவாணர் கோட்டமும் தமிழ் வளர்ச்சித் துறையால் இதே வளாகத்தில் உருவாக்கப்படவுள்ள செய்தியைப் பெரும் கையொலி வரவேற்போடு தெரிவித்து மகிழ்வித்தார்._

செய்தி : முல்லைவேனிலன்

Capture

உலகத்தமிழ் இதழ்-251

நெடுநீர் அருவிய கடும்பாட்(டு) ஆங்கண்
எனத் தொடங்கும் மதுரைப்
பெரு மருது
இளநாகனாரின் நற்றிணைப் பாடல்
இருநூற்(று) ஐம்பத்(து) ஒன்று;

பீடுநிறை தமிழாய்ந்த கட்டுரைகளைத் தாங்கி வரும் உலகத்தமிழிதழ்
இருநூற்(று) ஐம்பத்(து) ஒன்று

a6c07d04-a79b-4a7c-9bb7-514d279e0058

பத்தாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நேர்முகம் இலக்கியப்பீடம- 04.02.2014

மலரும் நினைவுகள்

மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்று

(பத்மஸ்ரீ ஔவை நடராசனுடன் நேர் காணல் கண்டவர்
திருச்சி புலவர்_இரா. இராமமூர்த்தி)

“எது வரைக்கும் ஒரு தமிழன் உயர்ந்தான் என்று எவரேனும் என்னிடத்தில் கேட்டால் இங்கே இதுவரைக்கும் இதுவரைக்கும் இந்த நாட்டில் இவரைத்தான் நான் உரைப்பேன்; இன்பத்தேனாம்
மதுசுரக்கும் தமிழ்ப்பேச்சால் கேட்போர் தங்கள் மனங்கவர்ந்த நடராசன்…”

என்று சுரதாவின் பாராட்டுப் பாடலைப் பெற்றவர்.

ஒரு முறை குமரி அனந்தனுடன் ஒரே மேடையில் அமர்ந்த போது தமிழ்நாட்டில் குமரியும் கிழவியும் அமர்ந்த மேடை இதுவே என்று
ஔவையாகிய என்னையும் குமரி அனந்தனையும் குறிப்பார்கள் என்று கரவொலிக்கிடையே பளிச்சென்று பேசிப் பாராட்டுப் பெற்றவர்.

ஏறிய மேடைதோறும் இனிய, அரிய, பெரிய கருத்துகளை அலட்டிக் கொள்ளாமல் நளினமாகப் பேசி நாட்டினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியவர்.

உலகறிந்த பேரறிஞர்,
மேனாள் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்,
கலைமாமணி, பத்மஸ்ரீ முனைவர் ஒளவை நடராசனை, தியாகராய நகரில் அண்மையில் சந்திக்க அவர் வாய்ப்புக் கொடுத்தார்.

சித்தாந்தப் பேரறிஞர்,
பழம் பெரும் பேராசிரியர், ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளையின் இனிய மைந்தர்.

அவர் தந்தையார் வந்தவாசிக்கு அருகில் உள்ள ஒளவையார் குப்பம் என்ற சிற்றூரில் பிறந்து வளர்ந்த போது பள்ளியில் ஒரே வகுப்பில் இரண்டு துரைசாமிகள் பயின்றதால் ஔவை துரைசாமி என்று ஆசிரியர் இட்ட பெயருடன் அவர் விளங்கினார்.

வடஆர்க்காடு மாவட்டப் பள்ளிகளில் அவர் பணிபுரிந்தார்.

செய்யாற்றில் அவர் பணிபுரிந்தபோது அவர் தம் அருமை மைந்தராய் நடராசன் பிறந்தார்.

புலமைச் சிறப்புக் கருதி தந்தையாரை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிய அழைத்தார்கள்.

சிதம்பரத்தில் இராமசாமிச் செட்டியார் மேல்நிலைப்பள்ளி இணைப்பில் நான்காம் வகுப்பு வரை நடராசன் பயின்றார்.

அவர் தந்தையார் திருப்பதி கீழ்த்திசைக்கலைக் கல்லூரியில் பணிபுரியச் சென்றபோது, அங்கு நடராசனின் பள்ளிக்கல்வி நிறைவு பெற்றது.

அவர் தந்தையார் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பணிபுரியும் வாய்ப்புப் பெற்றபோது நடராசனும் தியாகராசர் கல்லூரியில் – தமிழ் இடைநிலை வகுப்பில் சேர்ந்தார்.

டாக்டர் மு.வ. அவர்களின் சிறப்புகளை அறிந்த நடராசன் அவரிடம் வேண்டி சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்று பி.ஏ. ஆனர்சு பட்டம் பெற்றார்.

படிக்கும்போதே மேடைகளில் பேசும் திறன் பெற்று இளைஞர்களிடையே பாராட்டும், போட்டிகளில் பரிசுகளும் பெற்றார்.

மிகவும் முயன்று தஞ்சை சரபோஜிக் கல்லூரியில் டியூட்டர் பணிபுரிந்தார்.

அப்போது நாடகம் ஒன்றுக்குத் தஞ்சைக்கு வந்த புகழ் வாய்ந்த நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களைத் தம் கல்லூரிக்குப் பேச அழைத்தார்.

பெரும்புகழ் பெற்ற வள்ளல் எம்.ஜி.ஆர் தஞ்சை சரபோஜி கல்லூரியில் பேசியதை அறிந்த தஞ்சை நகரமே
அல்லோலகல்லோலப்பட்டது.

ஔவை சு. நடராசனின் புகழும் உயர்ந்தது.

பின்னர் நடராசன் தில்லி வானொலி நிலையத்தின்
கீழ்த்திசை ஒலிபரப்புத் துறையில் ஆறு மாதங்கள் பணியாற்றினார்.
அப்போது ஆங்கிலப் புலமையும் பெற்றுச் சிறந்தார்.

ஒருமுறை கோவையில் வள்ளற் பெருமானின் திருவருட்பா பற்றி நடராசுன் பேசினார்.

அந்த நிகழ்ச்சிக்குத் தலைமைத்தாங்கியவர் தமிழநாட்டின் அன்றைய முதல்வர் ஓமந்தூரார்.

ஔவை பேச்சைக் கேட்டு வியந்து மகிழ்ந்தவர் அருட்செல்வர் நா. மகாலிங்கனார் அன்று நடராசனின் தோளைத் தட்டிப் பாராட்டியவர் அருட்பா அரசு கிரிதாரிப் பிரசாத்.

அதன் விளைவாக சென்னையில் அருட்செல்வர் தொடங்கிய இராமலிங்கர் பணிமன்றத்தின் செயலாளர் ஆனார்.

தகுந்த அரசுப் பணி கிட்டாமல், தந்தையாருடன் மதுரை தியாகராயர் கல்லூரியில் ஆசிரியர் பணிபுரிந்தார்.

அக்காலத்தில் தான் நடராசன் ‘சங்ககாலப் புலமைச் செல்வியர்’ என்ற பொருளில் ஆய்வுக் கட்டுரை அளித்து முனைவர் பட்டம் பெற்றார்.

அப்போது ஆய்வுக்கட்டுரை ஆங்கிலத்தில் எழுதியதோடு, எழுபதுக்கும் மேற்பட்ட சங்க இலக்கியப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் புகழ் பெற்றார்.

அவரது முனைவர் பட்ட ஆய்வேட்டைப் பரிசீலனை செய்து பாராட்டியவர், அமெரிக்கப் பல்கலைக் கழகப் பேராசிரியராயும், உலகம் போற்றும் தமிழறிஞராகவும் விளங்கிய டாக்டர் ஏ.கே. இராமானுஜம் ஆவார்.

அவரிடம் தனி அன்பு பாராட்டிய அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள், நடராசனைத் தமிழக அரசின் செய்தித்துறைத் துணை இயக்குநர் பதவியில் அமர்த்தினார்.

அப்போது அவர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டது.

பல்கலைக் கழகத்தின் எம்.லிட். பட்டமும் பெற்றார்.

அரசின் ஒப்புதலுடன் நாள்தோறும் மேடைகளில் முழங்கினார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டுப் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் முதல்வரான போது, மொழிபெயர்ப்புத்துறை இயக்குநராகப் பணிபுரிந்த திரு. கு. இராசவேலு ஓய்வு பெற்றார்.

எம்.ஜி.ஆர். ஔவை நடராசனுக்கு அப்பதவியை அளித்துப் பெருமைப்படுத்தினார்.

புரட்சித்தலைவர் நடராசனின் நட்பை மதித்துத் தோளைத் தட்டியும், தொட்டும் நெருங்கிப் பேசினார்.

அவர் வேண்டுகோளை ஏற்றுப் புரட்சித் தலைவர் பச்சையப்பன் கல்லூரி இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு நன்கொடை வழங்கினார்.

மொழிபெயர்ப்புத்துறைக்கு ஒருமுறை வந்த புரட்சித் தலைவர் ‘என்னிடத்தில் நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் இன்று நான் உங்களிடம் வந்து விட்டேன்!’ என்று பெருமிதத்துடன் பேசியதை இவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

“உங்களுக்கு ஏதேனும் உதவி தேவையா?” என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.

ஔவை நடராசன் முதல்வரிடம் மத்திய அரசின் துறைகளுக்கு அந்தந்தத் துறைகளில் படிப்பறிவு பெற்றவர்கள் துறைச் செயலாளர்கள் ஆகின்றனர்.

தமிழ்மொழி சார்ந்த பத்துத்துறைகளையும் சிறப்பாக நிர்வாகம் புரியும் வகையில் அரசுச் செயலாளர் பதவி ஒன்றை உருவாக்கலாம் என்றார்.

பிற்காலத்தில் மைய அரசின் அமைச்சராகவும் கல்வி நிறுவனங்களின் தலைவராகவும் விளங்கிய கொடைப்பண்பு மிக்க ஜகத்ரட்சகனுடன் பேசிக் கொண்டிருந்தபோது, புரட்சித் தலைவர் ‘இனி நீங்கள் தமிழக அரசுச் செயலராகப் பணியில் அமர்த்தப்படுகிறீர்கள்!’ என்று அறிவித்தார்.

எந்தத் துறையில் பணிபுரிய ஏங்கினாரோ, அத்துறைகள் பத்தினுக்கும் தலைவராகும் பொறுப்பைத் தம் திறமையால் நடராசன் பெற்றார்.

அந்தப் பத்துத் துறைகள் யாவை என்று கேட்டபோது, சற்றும் தயங்காமல்,

தமிழ் வளர்ச்சித் துறை, உலகத்தமிழாய்ச்சி நிறுவனம், அருங்காட்சியகம் தொல்பொருள் ஆய்வுத்துறை, இயலிசை நாடக மன்றம், தமிழ்நாடு இசைக் கல்லூரி, ஓவிய நுண்கலைக் கழகம், தமிழ்க்கலைப் பண்பாட்டியக்ககம்,
பொது நூலகத்துறை,
தமிழ்ப் பல்கலைக் கழகம் என்று விரல்விட்டுக் கொண்டே வரிசைப்பட அவர் கூறியதைக் கேட்டு நான் வியந்து போனேன்.

‘இப்பொறுப்பு’ புரட்சித் தலைவர் எனக்களித்த அரிய வாய்ப்பாகும் என்றார்.

அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த புரட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா அவர்கள் ‘திடும்’என்று ஒருநாள் ஔவை நடராசனை அழைத்துத் ‘தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக உங்களை நியமிக்கக் கருதுகிறேன்” என்றார்.

அரசுத்துறையில் மேலும் சில ஆண்டுகள் புணிபுரிந்தால் ஊதிய உயர்வும், ஓய்வுப் பயனும் கிட்டும் என்று தயங்கி விடையளித்தபோது, ‘எதிர்காலத்தைப் பற்றி எண்ணாமல் உடனே செயல்படுவது நல்லது’ என்று அவர் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள உரிய அறிவுரை கூறினார். மறுநாளே அப்பொறுப்பினை ஏற்றார்.

‘எம்.ஜி.ஆர். ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டுப் பொறுப்பை எனக்கு அன்று அளித்தார்.

புரட்சித் தலைவியோ எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டைத் தஞ்சையில் நடத்தும் பொறுப்பை அளித்தார்.

இவ்வகையில் அறிஞர் அண்ணாவின் அன்பைப் பெற்றுத் தொடர்ந்து பதவியேற்ற கலைஞர், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகிய மூன்று முதல்வர்களின் நன்மதிப்பையும் பெற்றேன்” என்றார் ஒளவை.

‘அருட்செல்வர் மகாலிங்கனார் என் வாழ்வில் ஒளியேற்றி உயர்த்தியவர்.

இன்று வரை அவர் நிறுவிய வள்ளலார் – மகாத்மா காந்தியடிகள் விழாவை, இராமலிங்கர் பணிமன்றத்தின் சார்பில் நடத்தி வருகிறேன்.

தனிப்பட்ட செல்வர் என்ற முறையில், தம்மை மிகவும் எளியவராகக் கருதி பெரிதும் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாத அடக்க குணம் வாய்ந்தவர் ஸ்ரீராம் நிறுவனங்களின் தலைவர் பத்மபூஷண் திரு. தியாகராசன் ஆவார்.

அவருக்கு அந்த விருது கிட்டியபோது பாராட்டச் சென்ற எங்களிடம் ‘அப்படியா? எனக்கா விருது கொடுத்திருக்கிறார்கள்? உங்களுக்கும் சேர்த்தல்லவா அந்த விருது?’ என்று தம் அடக்கத்தைப் புலப்படுத்தினார்.

அவருடைய ஸ்ரீராம் நிறுவனங்கள் ஆண்டுதோறும் இரண்டு விழாக்களை நடத்துகின்றன.

திருவள்ளுவர் விழா,
பாரதியார் விழா என்ற இரண்டிலும் இலட்சக் கணக்கான மாணாக்கர்கள் ஆண்டுதோறும் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

ஆண்டுதோறும் பாரதியாரைப் பற்றிய நூல் ஒன்றை எழுத்தாளர்களிடம் எழுதி வாங்கி, ஸ்ரீராம் இலக்கியக் கழகத்தின் இலவச வெளியீடாக வெளியிட்டு வழங்கி எழுத்தாளர்களைப் பெருமைப்படுத்தும் எழுத்தாளர் தலைவர் கலைமாமணி விக்கிரமன் அவர்களைப் பாராட்ட என் தமிழில் வார்த்தைகள் இல்லை.

இராவணனுக்கு இருபது தோள்கள் என்றால் கலைமாமணி விக்கிரமனுக்கு இரண்டாயிரம் தோள்கள் என்பேன்.

ஆயிரம் ஆயிரம் எழுத்தாளர்களைத் தம் தோள்களில் தாங்கி உயர்த்துகிறார்.

எழுத்தாளர்களின் தாயாய், தந்தையாய், ஞானாசிரியராய் விளங்கும் விக்கிரமன், கல்கிக்குப் பிறகு அவதரித்த ‘கல்கி’ என்றால் மிகையாகாது.

ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களை எட்டையபுரத்துக்கு அழைத்துச் சென்று, பாரதியாரின் இல்லத்திலிருந்து பாரதியார் நினைவு மண்டபம் வரை ஊர்வலமாக வந்து எழுத்தாளர்களுக்கு விருதுகள் அளித்து மகத்தான சாதனை செய்கின்றார்.

பாவேந்தர், பட்டுக்கோட்டையார், கண்ணதாசன், ம.பொ.சி. போன்றவர்களுக்கும் அவர் தம் சங்கத்தின் மூலம் விழாக்கள் நடத்துகிறார்.

அமுதசுரபி என்னும் இலக்கியத் திங்களிதழை பல்லாண்டுகளாகச் சீர்மையும் கூர்மையும் உடையதாக உருவாக்கி வளர்த்தவர் அவர்.

கூட்டு ஒருவரையும் வேண்டாத கொற்றவராய்த் தன்னந்தனியாகக் கடந்த பதினைந்தாண்டுகளாக ‘இலக்கியப் பீடம்’ என்னும் தமிழகத்தின் ‘ஞான பீடத்தை’ நடத்தி எழுத்தாளர்களுக்குப் பரிசுகள் வழங்குகிறார்.

இந்நாளில் மூத்தவர்கள் தமக்கொரு கைத்துணை தேவை என்று கருதுகின்றனர்.

என் மனைவி இன்றும் என் கைத்துணையாகப் பெரிதும் உதவுகிறார்.

சிறந்த குழந்தை நல மருத்துவராகத் திகழும் அவர் ஒருமுறை ‘லிபியா’ நாட்டுக்குப் பணிபுரியச் சென்றார்.

தம் தமக்கையாரின் உடல்நலக் குறைவைக் கருதி அவருக்கு உதவி புரிவதற்காகத் தமக்கு லிபியா அரசாங்கம் வழங்கிய மூன்றாண்டுக்கால ஊதியத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டுத் தாய்நாடு திரும்பியவர் அவர்.

“என் மைந்தர்களுள் மூத்தவன் கண்ணன் மருத்துவராக வெளிநாட்டில் பணிபுரிகிறார்.

இளைய மகன் பரதனும் மருத்துவராக அயல்நாட்டில் உள்ளார்

இருவருக்கும் இடையில் பிறந்த மகன் அருள்
தமிழக அரசின் மொழி பெயர்ப்புத்துறையில் என்னைப் போல்வே பணிபுரிகிறார்.

மாண்புடைய மனைவியுடன் மக்கட் செல்வமும் பெற்று மகிழ்ச்சியாகவே நான் வாழ்கிறேன்.

“ஏறத்தாழ நாற்பது நாடுகளுக்குப் பயணம் செய்து உரையாற்றிய நான், இளைய தலைமுறையினரின் புதிய கல்வி முயற்சிகளை ஆதரிக்கிறேன்.

அயல்நாடுகளில் இளைஞர்கள் அரசியல் தலைமையை நாற்பது வயதுக்குள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

இன்றைய தலைவர்கள் எழுபது வயதையும் தாண்டி ஒரு தலைமுறை தாண்டி விளங்குகிறார்கள்.

இந்த இடைவெளிதான் இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் இடையே உள்ள பெரிய இடைவெளி”
என்று சொல்லி, நளினமாகப் புன்னகை செய்தார் 
ஔவை நடராசன்.

WhatsApp Image 2024-09-21 at 14.52.56_d2a7e9a8

மொழிபெயர்ப்புத்துறையின் நன்முத்துக்கள்

2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு தேர்வாணையத்தின் மகத்தான தேர்வில் வென்று, தமிழ் நாட்டின் அதிகார மணிமுடியாக இலங்கும் தலைமைச்செயலகத்தில் மொழிபெயர்ப்புப்பிரிவில் 2015-ஆம் ஆண்டு உதவிப்பிரிவு அலுவலர்களாகப் பணியில் சேர்ந்த

வீரமங்கை திருமதி
தி விஜயலட்சுமி துப்பாக்கி சுடுதலிலும் தேர்ச்சி பெற்றவர்.

திருமதி ஆ.ர. சுபத்ராதேவி புதுயுகக் கவிஞர்
தமிழ் ஆங்கிலம் மற்றும் வடமொழியிலும் தேர்ச்சிப் பெற்றவர்

திரு. இரா. சந்திரசேகரன்
எண்ணியதை எண்ணியாங்கு செய்பவர்…
நீங்கள் எண்ணியது இதுதான் என நமக்கே நினைவூட்டியவர்.
உலகத்தமிழ் இதழுக்குக் கோலமிட்டவர்

திருமதி இரா. சித்ரா
தோட்டக்கலை ஆர்வலர்
எழுத்தாளர் விந்தனின்
மரபு வழியினர்

ஆகிய பல்திறன் கொண்ட நால்வரும்
(18.9.24 புதன்கிழமை) முற்பகல்
பிரிவு அலுவலர்களாகப் பதவியுயர்வு பெற்றனர்.

மொழியாக்கத்தில் செறிவும்,
கணினிக் கலைபயில் தெளிவும் வாய்ந்த
நன்முத்துக்களை
நெஞ்சார வாழ்த்தி மகிழ்வோம்.