WhatsApp Image 2026-07-12 at 10.16.59

பண்புப் பெட்டகத்தை இழந்துவிட்டோமே!

என் தந்தையாரின் இனிய நண்பரும், எங்கள் இல்லத்திற்குத் தொடர்ந்து வருகை புரிந்தவருமான தமிழகக் காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் திரு. வைகுந்த் அவர்கள் (4.3.1937–10.7.2026) தன்னுடைய 90ஆம் அகவையில் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்.

அப்பா மறைந்த பிறகும் தொடர்ந்து எங்கள் இல்லத்திற்கு உரிமையோடு வந்து, உதவியாளர் பிரதாப் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட கடிதங்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் கணினி தட்டச்சுப் பணிகளைச் செய்வித்த பாங்கைக் கண்டு வியந்துள்ளேன்.

எந்த நேர உதவிக்கும் அரணாகத் திகழ்ந்தவர்.

ஒருமுறை என் உறவினர் தன் அலுவலகப் பணியாளர்களுக்குத் திறன் பயிற்சி நடத்துவதற்கு அண்ணாநகர் டவர் பூங்காவில் அனுமதி கேட்டபோது உடனுக்குடன் அனுமதி பெற்றுத் தந்த ஈர நெஞ்சினர்.

தமிழகக் காவல்துறையில் 36 ஆண்டுகள் பல்வேறு பொறுப்புகளில் மக்களுக்காகச் சீரிய முறையில் பணியாற்றி, ஏழு முறை குடியரசுத் தலைவர் விருதுகளைப் பெற்று அனைவரின் மனத்திலும் நீங்கா இடம் பிடித்தவர்.

இந்திய காவல் பணித்தேர்வில் 1960ஆம் ஆண்டில் இந்திய அளவில் எட்டாம் இடத்தில் தேர்ச்சி பெற்று அருணாச்சலப் பிரதேசத்தில் தன் பணியைத் தொடங்கி, கடலூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் கர்மவீரர் காமராசர் முதலமைச்சராக இருந்த காலம் தொடங்கி பல முதலமைச்சர்களின் தலைமையில் சிறப்பாகப் பணியாற்றியவர்.

அவரின் சித்தப்பா ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் துன்பப்படுத்தப்பட்டு கண்பார்வை இழந்து சிறையில் அடைக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத் தியாகி என்பதோடு மட்டுமல்லாமல், விடுதலைக்குப் பிறகு விடுதலை வீரர்களுக்கான ஓய்வூதியத்தைப் பெற மறுத்து, “இது என் நாட்டுக்கான கடமை, இதற்கு ஒரு விலையா?” என்பதை மிகப் பெருமையுடன் சொல்லி மகிழ்வார்.

அவருடைய பணிக்காலத்திலும், ஓய்வு பெற்ற பின்னரும் பொதுமக்களின் நலனுக்காக எண்ணற்ற நற்செயல்களை மேற்கொண்டவர்.

குற்றங்களைக் குறைத்ததோடு மட்டுமல்லாமல், அவை மீண்டும் தலை தூக்காதவாறு முற்றிலும் முடிவுக்குக் கொண்டு வரப் பல வழிகளை வகுத்த காவல் கோட்டமாவார்.

அவர் தொடங்கிய பாலாஜி கல்வித் தொண்டு அறக்கட்டளை மூலம் பல முன்னாள் சிறைவாசிகள் மறுவாழ்வு பெற்று, நல்ல மனிதர்களாகத் தலை நிமிர்ந்து வாழ்வதற்குக் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார்.

இதனால் பொதுமக்கள் பலர் தங்களது வீடுகளில் இவரது ஒளிப்படத்தை வைத்தும், சிலர் தங்களது குழந்தைகளுக்கு இவரது பெயரைச் சூட்டி மகிழ்ந்ததையும்
என் தந்தையார் பலமுறை பாராட்டிச் சொன்ன நிகழ்வுகள் என் நினைவில் நிழலாடுகின்றன.

அப்பாவின் 85ஆம் பிறந்த நாளை முன்னிட்டு அப்பாவுக்கு அவர் எழுதிய கடித வரிகள்:

தமிழுக்கு அமுதென்று பெயர்
அந்த அமுதுக்கு அவ்வை என்று பெயர்
அந்த அவ்வையின் தமிழுக்கு நான் அடிமை.

அப்பாவின் தீராத சர்க்கரை நோய்க்கு அவராகவே மாத்திரைகளை வாங்கிக் கொண்டு தந்தையிடம் வழங்கிய போது, அவரது அன்பைக் கண்டு நான் கண்ணீரில் நனைந்தேன்.

என்னிடம் பலமுறை உடலை உறுதியாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதோடு, மருத்துவர் எனக்குப் பரிந்துரைத்த மாத்திரைகளை உட்கொண்டு வருவதை கண்டித்தார்.

“உள்ளத் தூய்மையும், உடல் உறுதியும் தான் நம் இரு கண்கள்” என்று தொடர்ந்து வலியுறுத்திய பண்பாளர் வைகுந்த் அவர்கள் இன்று படமாகிவிட்டாலும், அவர் சொல்லித்தந்த பாடங்கள் என்றென்றும் நினைவில் நிலைத்து நிற்கும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரோட்டரி நண்பர்களுக்கும், அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *