





பக்கம் 221
திருவள்ளுவ மாலையிலுள்ள சில மலர்களின் மணங்கள்..!
ஔவை அருள்,
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை
திருவள்ளுவரையும் திருக்குறளையும் சிறப்பிக்கும் நூலாக விளங்குவது, ‘திருவள்ளுவமாலை’.
அதில், ஈரடி வெண்பாக்களாக குறள் வெண்பாக்களாக அமைந்தவை இரண்டு;
நாலடி வெண்பாக்களாக அவற்றிலும் பெரும்பான்மையாக நேரிசை வெண்பாக்களாக அமைந்தவை ஐம்பத்து மூன்று.
ஆக மொத்தம் ஐம்பத்தைந்து.
அறிவுமூதாட்டியார் ஔவையார்,
‘அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’ என்றார்.
இடைக்காடனாரோ,
‘கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’ என்றார்.
ஆண்பாற் புலவரினும், பெண்பாற் புலவர் அறிவிற் சிறந்திருந்தனர் என்பதற்கு இவையே சான்றுகள்.
திருவள்ளுவ மாலையிலுள்ள சில மலர்களின் மணங்களை நுகரலாமே!
உக்கிரப் பெருவழுதியார், நான்முகனே வள்ளுவனாய்த் தோன்றி, நான்மறைகளின் மெய்ப்பொருள்களை, அறம், பொருள், இன்பமெனும் முப்பால்களாகத் தந்ததாகவும், அந்த முப்பாலைத் தலைவணங்க வேண்டுமெனவும், வாய் வாழ்த்த வேண்டுமெனவும், நன்னெஞ்சம் சிந்திக்க வேண்டுமெனவும், செவிமடுக்க வேண்டுமெனவும் கூறுகின்றார்.
மதுரைக் கூலவாணிகர் சீத்தலைச் சாத்தனாரோ, வள்ளுவரின் முப்பால் எத்தகையது என்பதை, மிகச் சிறப்பாகப் புலப்படுத்தியுள்ளார்.
‘திருக்குறள், கொல்லிமலை, நேரிமலை, பொதியமலை என்னும் மூன்று மலைகளையும்,
குடநாடு, புன்னாடு, தென்னாடென்னும் மூன்று நாடுகளையும்,
பொருநைநதி, காவிரிநதி, வையை நதியென்னும் மூன்று நதிகளையும்,
கருவூர், உறையூர், மதுரையென்னும் மூன்று பகுதிகளையும்,
மங்கலமுரசு, வெற்றிமுரசு, கொடை முரசென்னும் மூன்று முரசுகளையும்,
இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத்தமிழென்னும் மூன்று தமிழ்களையும்,
விற்கொடி, புலிக்கொடி, கயற்கொடியென்னும் மூன்று கொடிகளையும்,
கனவட்டம், பாடலம், கோரமென்னும் மூன்று குதிரைகளையும்
தாம் முறையே பெற்றுள்ள சேர, சோழ, பாண்டியராகிய மூவேந்தர்தம் முடிகளின் மீதுள்ள ‘மாலைகள்’.
மாமூலனார், ‘
அறம், பொருள், இன்பம், வீடாகிய நான்கு உறுதிப் பொருள் களின் தன்மைகளை அறிந்து கூறிய தெய்வமாந்தன் வள்ளுவன்’ என்கின்றார்.
அரிசில் கிழாரோ,
‘சுருங்கிய சொற்களால் விளக்கமாகச் சொல்ல வல்லவர் திருவள்ளுவரைத் தவிர, வேறொருவர் யார்?’ என, வினா தொடுக்கின்றார்.
அதற்கு, ‘ஒருவருமில்லை’ எனும் எதிர்மறை விடைதான்.
முகையலூர்ச் சிறு கருந்தும்பியாரும், ஆசிரியர் நல்லந்துவனாரும் ‘எப்பா வலரினு மில்’ எனும் ஈற்றடியை வைத்தே பாடியுள்ளனர்.
முதலாமவர், ‘முப்பாலின் மிக்க மொழியுண்டெனப் பகர்வாரில்லை’ என்கின்றார்;
இரண்டாமவர், ‘முப்பால் மொழிந்த முதற்பாவலரொப்பாரில்லை’ என்கின்றார்.
முன்னடி திருக்குறளைக் குறிப்பதும், பின்னடி திருவள்ளுவரைக் குறிப்பதுமே வேறுபாடு.
திருவள்ளுவமாலையில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு மலராக உள்ள மாங்குடி மருதனாரின் வெண்பா மலரின் நறுமணத்தை முழுமையாக நுகர்வது சிறப்புடைத்து.
‘ஒதற் கெளிதா யுணர்தற் கரிதாகி வேதப் பொருளாய் மிக விளங்கி – தீதற்றோ ருள்ளுதொ றுள்ளுதொ றள்ள முருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு!
‘மலர்களுக்குள்ளே தாமரை; பொன்களுக்குள்ளே சாம்புநதம்; பசுக்களுக்குள்ளே காமதேனு; யானைகளுக்குள்ளே ஐராவதம்; தேவர்களுக்குள்ளே திருமால்; நூல்களுக்குள்ளே திருவள்ளுவரின் திருக்குறளைச் சிறந்ததெனக் கூறுவர்’ என்கின்றார் மதுரை பெருமருதனார்.
முன்னர்க் குறிப்பிட்ட முகையலூர்ச் சிறுகருந்தும்பியார், ஆசிரியர் நல்லந்துவனார் போலவே, நப்பாலத்தனாரும், மதுரை பாலாசிரியனாரும் ஒன்றுபடுவதைக் காணலாம்.
முன்னவர்,
‘வள்ளுவனா ரேற்றினார் வையத்து வாழ்வார்க்களுள்ளிரு ணீக்கும் விளக்கு என்கின்றார்;
பின்னவரோ,
‘வள்ளுவ ரின்குறள் வெண்பா வகிலத்தோருள்ளிரு ணீக்கு மொளி’
என்கின்றார்.
முன்னதன் ஈறு ‘விளக்கு’;
பின்னதன் ஈறு ‘ஒளி’ விளக்கின்றி ஒளியில்லை; ஒளியின்றி விளக்கில்லை.
திருக்குறளுக்குப் பதின்மர் பழைய உரைகாரரெனப் பழம்பாடல் ஒன்றுண்டு. அது வருமாறு:
‘தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பரிமே லழகர் பரிதி – திருமலையாள் மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற் கெல்லையுரை கண்டா ரிவர்’
இப்பதின்மருள்,
நமக்குக் கிடைத்துள்ள உரைகள், மணக்குடவர், காளிங்கர், பரிதியார், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகிய ஐவர் உரைகள்தாம்.
இவருள்ளும்
முந்தையோர் மணக்குடவரெனவும், பிந்தையோர் பரிமேலழகரெனவுங் கூறுவர்.
முந்தையோருரை சிறந்ததென்பது, சிலரின் கருத்து; பிந்தையோருரையே சிறந்ததென்பது, பலரின் கருத்து.
முந்தையோர் பலரிருக்கப் பிந்தையோராகிய பரிமேலழகர் சிறப்பாக உரைவகுத்தமைக்கு காலம் கை கொடுத்ததாக இருக்கலாம்.
‘தொண்டை நன்னாடு சான்றோருடைத்து’ என்பதற்கேற்ப, அவர் காஞ்சி மண்ணில் வாழ்ந்தவர் தவர் என்பதும், உலகளந்த பெருமாள் உயர்கோயிலில், அர்ச்சகராகப் பணிபுரிந்தார் என்பதும் எண்ணி மகிழ்தற்குரியன.
‘வள்ளுவர்தாம் அறம், பொருள், காமமென்னும் முப்பால்களையும் அமைத்தாரென்பதில் ஐயமில்லை.
அதிகாரத் தலைப்புகளையும் அவரே கொடுத்தார் என்பதிலும் ஐயமில்லை
ஒவ்வோரதிகாரத்திலும், குறட்பாக்கள் முறைவைப்பை, யார் செய்தார் என்பது தெரியவில்லை’ என்பார் மூதறிஞர் செம்மல் ச.வே.சுப்பிரமணியனார்.
மேலும், ‘பரிமேலழகருரையே சிறப்பானது’ என்பதற்குச் சான்றோர் சிலரின் வாய்மொழிகளை ஈங்கெண்ணிப் பார்த்தல் நலமே.
திரிசிபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, அவர்தம் மாணாக்கர் தியாகராசச் செட்டியார், தெய்வ நாயகப்பிள்ளை, சுப்பராயச் செட்டியார் ஆகிய பெருமக்கள் நால்வரின் பாக்கள், விருத்தங்களாக அகவல்களாக இடம் பெற்றுள்ளன.
பானைச் சோற்றுக்கு ஒருசோறு பதமென்பர்.
நால்வரின் பாச்சோற்றுப் பானைகளினின்றும் பாச்சோறுகளின் பதங்களைப் பார்ப்போம்.
…பலருரையும் வியாப்பிய மாயிருக்க நாளு முன்னவாம் வியாபகமே யாகநூற் கருத்துணர்ந்தே மொழிந்தாரென்ன நன்னர்வான் புகழ்ப்பரிமேலழகருரை…
-மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்னை,
‘ஒருவா புலமைத் தருமர்முன் னாய பாடல்சால் சிறப்பிற் பதின்மர் செய்த நாடுறு முரைகளுட் பீடமைந்த தோங்கும் பரிமே லழகர் பண்ணிய வுரை”
தியாகராசச் செட்டியார்.
‘தெய்வத் திருக்குறள் மெய்ம்மலி நூலைப் பொற்பமர் தருக்களுட் கற்பக மென்னப் பலருரை யுள்ளு நிலவுற விளங்கும் பரிமே லழகர் புரியுரை..!
-தெய்வநாயகப்பிள்ளை
‘தருமர் முதலிய சால்பினர் வகுத்த திருகில்பே ருரைகளுட் சிறந்து நிலைஇய வரிமே லியல்புகழ்ப் பரிமே லழக ருளங்கனிந் தியற்றிய வளங்கனி யுரை…!
-சுப்பராயச் செட்டியார்.
தமிழ்ப் பல்கலைக்கழக முன்னைத் துணை வேந்தர் நாவரசர் ஔவை நடராசனார்,
‘திருக்குறள் உரை, பலவாகப் பெருகி வருகின்றது.
நாடெங்கும் திருக்குறள் ஆர்வம், தழைத்துச் செழிப்பது, நமக்குப் பெருமிதம் தருகின்றது.
செவ்விய புலமைக்கும், சிந்தனைச் செறிவுக்கும் ஏற்ப, நினைவார்க்கு நினையும் வகையில் புதிய விளக்கங்கள், நாளும் மலர்கின்றன’ என்கின்றார்.
மூதறிஞர் செம்மல் முனைவர் வ.சுப.மாணிக்கம் ஐயா,
‘சுருங்கிய ஈரடியால் செறிவான முறையில் நுணுகிய பொருள்களை, யாப்பு வேலியுள் அடக்க முயன்றவராகலின், பல்வேறு எழுத்து உத்திகளை வகுத்துக் கொண்டு, குறள் நூல் படைத்தார் வள்ளுவர்.
தமக்கெனச் சில உத்திகளைப் படைத்துக்கொண்டு, நூல் யாத்தார்.
1330 குறள்களையும் சில உத்திகளுக்குள் அடக்க முடியும்;
அவ்வுத்திகளைப் பயன்படுத்தினால், மயக்கமற்ற பொருள் தோன்றும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகின்றார்.
‘பௌத்தத் தமிழ்க் காப்பியச் சாத்தனார், தம்நூலுள் திருக்குறள் கருத்துகளையும் தொடர்களையும் நிரம்ப ஆளுவர்.
திருக்குறளை யாப்பாங்கு எடுத்தாண்டதோடு, தமிழிலக்கியவுலகில் முதன் முதலாகத் திருவள்ளுவரை ‘பொய்யில் புலவன்” என்ற சிறப்பு பெயராற் பாராட்டினார்.
திருக்குறளில் அதிகாரத் தலைப்புகள் கூடக் கல்வி – கல்லாமை, செங்கோன்மை-கொடுங்கோன்மை, ஊக்கமுடைமை-மடியின்மை, பெரியாரைத் துணைக்கோடல்-சிற்றினஞ்சேராமை, இரவு – இரவச்சமென, இருமை வகைபட வருதலுமுண்டு.
நட்பினை ஐந்து அதிகாரங்கள் விதிமுகத்தானும், பன்னிரண்டதிகாரங்கள் எதிர்மறை முகத்தானும் கூறுவர் திருவள்ளுவரென்பதைப் பரிமேலழகருங் குறிப்பிட்டுள்ளார்.
இன்ன அறத்தைச் செய்தால் வரும் தன்மைகளிவையென ஒரு பாங்காகவும்,
செய்யாமையால் வரும் குற்றங்களிவையென மறுபாங்காகவும் திருக்குறள் தொகுத்துக் கூறுகின்றது.
திருக்குறளின் வாழ்வுக்கோட்பாடு, இல்லறமும் துறவறமும் இணைந்தது.
பாலின்பத்தை உரிய பருவங்களிற் போற்றுவது.
ஐம்புலவின்பம் நன்கு முறையாகத் துய்க்க வேண்டும் என்பதற்காகவே, ‘காமத்துப்பால்’ பாடினார் திருவள்ளுவர்.
‘தம்பொருள் என்பதம் மக்கள்’ எனவும், ‘பெறுமவற்றுள் நன்மக்கட்பேறே சிறந்தது’ எனவும் குழந்தைச்செல்வத்தை மதித்து, ஓரதிகாரம் கண்டவர்.
ஒழுக்கத்தால்
மேன்மை எய்தலாம், அரியன செய்வார் பெரியர், முயற்சி திருவினைத் தரும்,
நாடென்ப நாடா வளத்தன.
உள்ளம் உடைமை, கண்ணோட்டத்துள்ளது உலகியல், சிற்றினமஞ்சும் பெருமை, அறிவுடையார் ஆவதறிவார், அறிவுடையார் எல்லாருடையார், கண்ணுடையரென்பவர் கற்றோர், தலைப்பட்டார்
தீரத்துறந்தார், தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்,
தோன்றிற் புகழொடு தோன்றுக, அடக்கம் அமரளுய்க்கும்,
அறத்தான் வருவதே இன்பம்
எனப் பல குறள்களில் முதற்கண் விதிமுகம் நடைப்படுத்துவதை அறிகின்றோம்.
மணிவாசகர் பதிப்பக நிறுவுநரும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியரும், பதிப்புச் செம்மலுமாகிய முனைவர் ச.மெய்ப்பனார்,
“நீதி நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களெனத் தொகுக்கப் பெற்றுள்ளன.
அவற்றுள் திருக்குறளும் நாலடியாரும் பெரிதும் பயிலப் பெறும் நூல்கள்” என்பார்.
அறிவு மூதாட்டியார் ஔவையாரும், ‘ஆலும் வேலும் பல்லுக் குறுதி; நாலு மிரண்டுஞ் சொல்லுக் குறுதி’ என்றார்.
எதுகை நோக்கி நாலடியாரை முதற்கண் குறிப்பிட்டாலும், முதன்மை கருதத் திருக்குறளே சாலப் பொருந்தும்.
‘பழகு தமிழ் சொல்லருமை நாலிரண்டில்’ ல்’ என்பதும் தனிப்பாடலடி.
மேலும், சமண முனிவர் பலரால் இயற்றப்பட்டது ‘நாலடியார்’;
திருவள்ளுவர் ஒருவராலே இயற்றப்பட்டது ‘திருக்குறள்’.
திருக்குறளைப் பற்றியும், திருவள்ளுவரைப் பற்றியும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
இவ்வளவுதாம் என்றில்லாமல், எவ்வளவும் சொல்லலாம்.