Capture

உலகத்தமிழ் இதழ் – 270

பல்மீன்
இமைக்குமாக விசும்பின்
எனத் தொடங்கும் கழாத்தலையார்
பாடிய புறநானூற்றுப் பாடல் எண்
இருநூற்(று) எழுபது

விண்மீன் போன்ற தமிழறிஞர்களின் செம்மாந்த கட்டுரைகளை ஏந்தி வரும்
உலகத்தமிழிதழ் அணி எண்
இருநூற்(று) எழுபது

70ac7828-3406-4eda-9495-3a8c8ef2054a

தாயின் மணிக்கொடி பாரீர்சேர்ந்ததைக் காப்பது காணீர்

76ஆம் ஆண்டு இந்திய குடியரசு நாளை (26.1.25) முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு எழுமூரில் உள்ள தமிழ்ச்சாலையில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துறை அலுவலக வளாகத்தின் கம்பத்திலுள்ள தேசியக்கொடியினை மேலிருந்து அவிழ்த்து கொடியேற்றி பறக்கவிட்டு பூ மாரி பொழிந்து பாரதியாரின் பாடலினை பாடி அருகிலுள்ள ஐயன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் செய்து மகிழ்ந்து கொடிக்கம்பத்தின் கீழ் நின்ற வண்ணம் அலுவலகத்தில் உள்ள அனைத்துப்பணியாளர்களுக்கும் சிறந்து பணியாற்றுவதற்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
அவ்வண்ணமே மதுரையிலுள்ள உலகத் தமிழ்ச் சங்க வளாகத்திலும் கொடி வணக்கமும் நற்சான்றிதழ் வழங்குதலும் இனிதே நடைபெற்றது.

2ecface7-fc4f-4f36-a855-4136b84bdf3a

இன்று என் அண்ணன் கண்ணன் அறுபதாம் அகவை பிறந்தநாள் வாழ்த்து

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி. தேனினும் இனிய தமிழால் வளர்த்து
நானிலம் மகிழ நல்கிய
மூத்த மகன்
முத்து மகன்
மூப்பியல் மருத்துவர்
எங்கள் இனிய அண்ணன்
கண்ணன்
காப்பென வந்து
காதல் கொண்டு
கைப்பிடித்த துணைநலம்
மருத்துவர் சாந்தி கண்ணன்
ஆகியோர்
மணி விழா
31.01.2025 வியாழக்கிழமையன்று காலை 9.00 முதல் 12.00 மணி வரை திருக்கடவூர் அருள்மிகு அபிராமி அம்மை உடனமர் அமுதகடேசர் ஆலயத்தில்
மாதொருபாகருக்கு
வாழையடி வாழையெனத் திகழும்
வேள்வி நெறி வித்தகர்
திரு டி எஸ் வி சுந்தரமூர்த்தி குருக்கள் தலைமையில்
நன்னிகழ்வு இனிதே நடைபெற்றது.

e311c843-c589-419f-8006-cd04ebb06a25

களப்போராளியை இரக்கமில்லாத காலன் கவர்ந்து விட்டானே!

பாண்டிய மன்னரை போன்ற தோற்றமும்
செம்மாந்த நடையும்
பெருமித குரலும்
கண்டாரைக் கவரும் காசிக்கோ என்கிற கண்ணு சிவகுமாரன்(23.12.1964-25.1.2025)
சனிக்கிழமை 25.1.25 அன்று காலை
மலேசிய மருத்துவமனையில் மறைந்தார் என்ற திடுக்கிடும் செய்தியை வழக்கறிஞர் சிவகுமார் தொலைபேசி வாயிலாக
சொன்ன போது
அந்தோ!
மணி நிகர் இனிய நண்பரை இழந்தோமே!
என்று துயரத்தில் வெம்பினேன்.

சென்ற மாதம் தான்(24.12.24) தனக்கு மணிவிழா மலேசியா வர வேண்டும் என்று அழைப்பிதழ் நீட்டிய கரத்தை என்னென்று சொல்வது…

வாய் திறந்தால் தமிழ் தான் உலகில் தலைசிறந்த மொழி

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை அனைவரும் மறவாமல் கடைபிடிக்க வேண்டும்

அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று உரிமையுடன் நாள் தவறாமல் மலேசியாவில் இருந்து
எப்பொழுது தொலைபேசி எடுத்தாலும் வணக்கம் தமிழகம் என்று விளிக்கும் வணிக வித்தகர்
எப்படி நம்மை விட்டுப் பிரிந்தார்?

நாடு போற்றும் நயவுரை நம்பி அவர்களை சென்னைக்கு வரும்பொழுதெல்லாம் சந்தித்து அளவளாவும் வணிகச்செம்மலாக திகழ்ந்தவர்.

மாலத்தீவில் மாபெரும் அளவில் வணிகச் சிறகுகளை விரித்த நயத்தகு நாகரீகர்.

சென்னை வந்தவுடன் கந்தக்கோட்டத்தில் தவறாது வழிபடும் நண்பரை
முருகா கந்தா கதம்பா விரைந்து ஏன் அழைத்துக் கொண்டாய்?

நினைவில் வாழும் டான்ஸ்ரீ
சாமிவேலுவின் நெருக்க வளையத்தில் இருந்த பண்பாளர் திலகத்தை இழந்து விட்டோமே!

மரத்தால் என்ன செய்ய முடியும் என்று கேட்டால் அதில் மகத்தான பல வடிவங்களான நாற்காலிகளை, மேசைகளை, அறைகலன்களை ஏன் வீடுகளையே வடிவமைத்து மலேசியாவில் தொழிற்சாலையே உருவாக்கி மாலத்தீவு கடலிலேயே சுற்றுலாப்பயணர்களுக்கு உயர்தர மரக்குடில்களை வடிவமைத்த மறவர் எங்கள் காசிக்கோ என்று பெருமிதமாக 27 ஆண்டுகளுக்கு முன்பு நல்லறிஞர் நல்லகுமார் வாயிலாக அறிமுகம் செய்யப்பட்ட இணையற்ற நண்பரவார்.

25 ஆண்டுகளுக்கு முன்பே சென்னை தரமணியிலுள்ள டைடல் மென்பொருள் வளாகத்தில் உட்புற வாயிலில் மேற்கூரையில் வைரம் மின்னுவது போன்ற
வண்ணப்படிம உமிழ் விளக்குகளை உலகளாவிய ஒப்பந்த வாயிலாக வெற்றி பெற்று அணி செய்த
நுட்பவாணர் என்று பாராட்டப்பட்டவர்.

அவரின் போற்றுதலுக்குரிய வாழ்க்கைத் துணைவியார் திருமதி தேவிகா ராணி மற்றும் வெற்றித் திலகங்களான
இரு மகன்கள் தருமேந்திரன்
யுகேந்திரன்
செல்ல மகள் நித்திய லட்சுமிக்கும் மற்றும் இனிய நண்பர் நல்லகுமாருக்கும் என்ன ஆறுதல் சொல்வது?

இளவல் காசிக்கோ அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது

ஆழ்ந்த இரங்கலோடு

ஔவை அருள்
25.1.25

Capture

உலகத்தமிழ் இதழ் – 269

குயில் வாய் அன்ன கூர்முகை அதிரல் …
எனத் தொடங்கும் ஔவையாரின் புறப்பாடல் எண்
இருநூற்‌‌(று) அறுபத்(து) ஒன்பது;

பயில் வாய்
மணம் பரப்பும் உலகத்தமிழிதழ்
இருநூற்(று)
அறுபத்(து) ஒன்பது.

c2e96e04-efda-4530-80fd-d19b6acedbca

தொண்டு துலங்குக!

பட்டு வணிகத் திலகமாகவும்,
கலைகளைக் காக்கும் கரமாக மிளிரும் பத்மஸ்ரீ நல்லி செட்டியார் அவர்களின் மகுடத்திற்கு மற்றொரு சிறகாக பத்மபூஷன் விருது பெறவிருக்கும் 86 அகவை நிறைந்த
நல்லிதய செம்மலை
குடியரசு திருநாளன்று (26.1.25) காலை நேரில் அவரின் கடையில் சந்தித்துப் பட்டாடை சூட்டி வாழ்த்து தெரிவித்துவிட்டு

உடனே அடுத்த நிகழ்வாக

நாட்டு மக்கள்
நலமுற்று வாழவும் நானிலத்தவர் மேனிலை எய்தவும்-வேண்டிப் பாடல்கள் புனைந்த பாரதியின் அனைத்து ஆக்கங்களையும் எழுத்தெண்ணி ஆண்டாண்டுக் காலமாக ஒரே பணியாக ஒப்பற்ற பணியாக செம்மையற செய்துவரும் பேரறிஞருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெறவிருக்கும்
எந்தையாரின் இனிய நண்பர் மாபெரும் தொகுப்பாளர்
பாரதியாரின் பெறாத மகன்
தனிநிலை பல்கலைக்கழகமாக மிளிரும் 91 அகவை நிறைந்த
அண்ணல் சீனி விசுவநாதன் அவர்களை குடியரசு நாளன்று (26.1.25) காலை மேற்கு மாம்பல இல்லத்தில் நேரில் சந்தித்து வணங்கிப் பட்டாடை சூட்டி வாழ்த்திய போது பெரியவரிடம் சொன்னேன் கவியரசு கண்ணதாசன் உங்களைக் குறித்து சொன்ன வரிகளை இப்போது மாற்றிச் சொல்லுகிறேன்

பாரதியே
இன்றிருந்து இந்த பத்மஸ்ரீ விருது செய்தியினை அறிந்திருந்தால் சபாஷ் பாண்டியா!
என்று தட்டிக் கொடுத்து ஒரு மாலையும் போடுவார் என்றேன்

அதற்கு பாரதிய பேரறிஞர் உடனே நாற்காலியிலிருந்து எழுந்து திரும்பி மேலே உள்ள பாரதியின்
இளைய சகோதரர்
சி விசுவநாத ஐயர் ஒளிப்படத்தை சுட்டிக்காட்டி வணங்கி
அவரால் பெற்ற பெருமை இன்று நான் பெறவிருக்கும் இவ்விருது என்று நெகிழ்ந்து சொன்னார்.

உடன் வந்த அப்பாவின் உதவியாளர் பொன்னேரி பிரதாப்புடன் சொன்னேன் நன்னாளாம் குடியரசு திருநாளில் இரு பேரறிஞர்களையும் இன்று சந்தித்த பொழுது நினைவில் வந்த வரி என்ன தெரியுமா என்றேன்

என்ன வரி என்றார் ?

உடன் சொன்னேன்

வாழ்க வாழ்க பாரத சமுதாயம் !

9e056c16-801b-4185-b7a8-513dc2249595

புரையுநர் இல்லாப் புலமையாளர்!

கரந்தைப் புலவர் கல்லூரியிற் பயின்று, தமிழ் முழுதறிந்த தன்மையராகத் முழுமையாகப்பெற்ற தமிழாகரர் சாமி. தியாகராசன் மறைந்தார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன்.

சிவந்த மேனியும், சிரித்த முகமும், சிந்தனை மிளிரும் வகையில் சிவசொற்களை அணிந்து பேசும் தன்மையர் கண்டாரைக் கவர்ந்து ஈர்க்கும் பான்மையுடையன.

தேசிய உணர்விலும் பாரதியார் பாடல்களிலும் தம்மை ஆட்படுத்திக்கொண்டு அவர் ஆற்றிய பணிகள் பல.

நினைவில் வாழும் மூதறிஞர் தி.ந.இராமச்சந்திரன் அவர்களோடு சூழ இருந்த அவைக்களத்தில் சாமி.தியாகராசன் அவர்களுக்கும் தனித்த இடமும், மாசற்ற மனமும், பிறர் மனங்குளிரப் பேசும் திறமும் நுணுகிக் காணும் நுழைபுலமும்
தாம் பெற்ற சிந்தனை வளத்தை வழுவிலாத நடையில் வனப்புற எழுதும் திறத்தை பலமுறை எந்தையார் பாராட்டியிருக்கிறார்.

கருப்புச் சட்டை அணிந்த இளைஞராகக் காட்சி தந்த பேராசிரியர் சாமி தியாகராசன் கதருடை அணிந்ததோடு கடவுள்நெறி இணைந்தவராகப் பெருமிதமாகத் திகழ்ந்து வருவதைப் போல எனக்கெல்லாம் அப்படிப்பட்ட மாற்றங்கள் வரவில்லையே என்று எந்தையார் அடிக்கடி சொல்லி மகிழ்வார்.

தமிழ் வேளாகவும், தன்னிகரற்ற புரவலராகவும் ஒளிரும் சிவாலயா மோகன் அவர்களோடு சேர்ந்து திருக்குறள், பெரிய புராணப் பழைய உரைகளை தேடித் தொகுத்து வெளியிடும் பொறுப்பேற்றிருப்பதால் பேராசிரியர் அவர்களைச் சென்னையிலேயே கண்டு மகிழ முடிகிறது என்று அவரின் முத்து விழாவில் அப்பா குறிப்பிட்டது பசுமையாக உள்ளது.

எங்கள் அம்மா மறைந்தபோது புண்ணியவதி தாரா இன்று நம்மிடை இல்லை என்பது மாயமோ! மருக்கையோ! புரியவில்லை.
நம்மை மீறி நடைபெறும் காரியங்கட்குக் காலமே பொறுப்பாகின்றது என்று நெகிழ்ந்து எழுதிய இரங்கலுரை நெஞ்சத்தில் நிழலாடுகிறது.

உயர்ந்த குடிப்பிறப்பும்
ஓங்கிய திருவும் பாங்குறப்பெற்ற அண்ணல் இன்று நம்மிடை இல்லையே என்று யாரிடம் சொல்லி அழுவேன்!

81955869-4ee3-4388-bf73-a2f404d8855a

கற்க நிற்க அதற்குத் தக

கன்னியாகுமரியில் 30.12.24 அன்று அய்யன் திருவள்ளுவர் சிலையிலிருந்து விவேகானந்தர் பாறை வரை கண்ணாடி இழைப் பாலம் தொடக்க விழாவிற்கு பிறகு நடந்து நின்ற அற்புத தருணம்

Capture

உலகத்தமிழ் இதழ் – 268

தன்னுயிர் தான் அறப்பெற்றானை எனத் தொடங்கும் அருங்குறள்
இருநூற்(று) அறுபத்(து) எட்டு;

மன்னுயிர்க் கெல்லாம்
தமிழ்மணம் பரப்பும் உலகத்தமிழிதழ்
இருநூற்(று)
அறுபத்(து) எட்டு