”
Arul.2009/FB/#69041
பிரிவால் வருந்துகிறோம்!
அருட்செல்வரின் பெருங்குடியில் பிறந்த மூத்த திருமகள், சமத்தூர் முனைவர் கிருஷ்ணராஜ் வாணவராயரின் வாழ்வரசியார், திருமதி கருணாம்பாள்(23.2.1950-26.7.2026) அவர்களின் மறைவுச் செய்தி அதிர்ச்சித் தருகிறது.
அருட்செல்வர் திரு. நா. மகாலிங்கம் அவர்களின் நூற்றாண்டு நிறைவில் (2023), தன் பெற்றோர்களின் பெருஞ்சிறப்பினைச் சிறப்பு நேர்காணலாக ஓம் சக்தி இதழில்,
“அப்பாவைப் பார்த்துப் பார்த்து வளர்ந்ததால், மிகச் சிறிய வயதிலிருந்தே நேரம் தவறாமையும், ஒழுக்கமும் என் மனதில் அப்படியே பதிந்துவிட்டன” என்ற வரிகளையும்;
“அப்பா செய்த கோடி அர்ச்சனை மூலம் எங்கள் மனதில் மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்பட்டது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்”
என்ற நினைவு வரிகளையும் படித்தபோது நெகிழ்ந்தேன்.
அருட்செல்வர் பெயரிலான விருதினை முனைவர் ஔவை நடராசன் அவர்களுக்கு 20.03.2018 அன்று வழங்கியபோது, அப்பாவின் சார்பாக அவ்விருதினைக் கோவையில் யான் பெற்றுக்கொண்டு ஏற்புரை வழங்கிவிட்டு மேடையிலிருந்து இறங்கியவுடன், அன்னை கருணாம்பாள் வாணவராயர் என்னை அருகில் அழைத்து, “அப்பாவைப் போலவே இருக்கிறாய், வாழ்க!” என்று வாழ்த்தியபோது நெகிழ்ந்து நன்றி தெரிவித்தேன்.
விருது பெற்ற நிகழ்வையும், அன்னையார் வாழ்த்தியதையும் அப்பாவிடம் சொன்னபொழுது அவர் கூறினார்:
”02.07.1969-இல் பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் வளாகத்தில் தான் வாணவராயரின் திருமணம் தேவலோகத்து மயன் செய்தது போல அருட்செல்வர் செய்து மகிழ்ந்தார்.
இத்திருமணத்தில் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்களின் வாழ்த்துரையும், திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் ஆசியுரையும் இடம்பெற்றன.
திருமணமே திருவிழாக் கூட்டம் போலவும், திருக்கோயில் குடமுழுக்கு விழா போலவும் இருந்ததால், அமைக்கப்பட்ட பந்தல்களை அருட்செல்வர் பிரிக்க வேண்டாம், அப்படியே இருபது நாட்கள் கழித்துப் பிரிக்கலாம் என்றார்.
இவ்வளவு அழகாகப் போடப்பெற்ற கொட்டகைகளில் ஒரு சன்மார்க்க மாநாட்டைக் கூட்டலாம் என்று நாங்கள் முடிவு செய்து, முப்பெரும் விழா ஏழு நாள் விழாவாக (29.07.1969 முதல் 04.08.1969 வரை) பொள்ளாச்சியில் நடைபெற்றதற்குத் திருமதி கருணாம்பாள் கிருஷ்ணராஜ் வாணவராயரின் திருமணமே மூலக்காரணம் என்று சன்மார்க்க அன்பர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்”
என்று அப்பா கூறியது என் நினைவின் ஆழத்தில் உள்ளது.
திருமதி கருணாம்பாள் வாணவராயரின் நன்முயற்சியில் தொடங்கப்பெற்ற ‘மங்கையர்க்கரசி அறக்கட்டளை’ வாயிலாக, நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவச் செல்வங்களுக்குத் தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம், திருக்குறள் ஆகியவற்றைக் கற்றுத்தருவதோடு; பிள்ளைகளிடம் குடும்ப ஒற்றுமை, முதியவர்களிடம் அன்பு, பணிவாக நடந்துகொள்ளுதல், தேசபக்தி போன்ற நல்ல பண்புகளின் பாலமாகவும், கல்வியில் வல்லாரைக் கண்டு மகிழ்ந்திடும் கண்ணியத் தாயாகவும் விளங்கியதை
நாடு நன்கறியும்.
அவரை இழந்து வாடும் பெருங்குடும்பத்தினருக்கு
ஔவை குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Add a Comment