Arul.2009/FB/#69010
திரையிலும், இதழிலும் தனி முத்திரை பதித்தவர்!
தமிழ் மொழியின் வளமைக்கும் வளர்ச்சிக்கும் பங்களிப்பவை இதழ்கள்.
அதில் குறிப்பாக, திரைக்கதை மன்னர் பாக்கியராஜ் அவர்கள் பெரும் ஈடுபாடு காட்டி, ‘பாக்யா’ இதழைக் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச் சிறப்பாக அச்சு வாகனம் வழியாக நடத்தி வந்தார்.
மக்களின் சிந்தனையில் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்திய தன்னுடைய ‘பாக்யா பதில்கள்’ வாயிலாக, பற்பல வினாக்களுக்குப் பல்சுவையான மறுமொழிகளைத் தனக்கேயுரிய பாணியில் தகவமைத்துத் தந்தார்.
”பெருமையுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமையுடைய செயல்”
என்ற அருங்குறளுக்கு ஏற்ப, திரைப் பயணத்திலும், இதழ்ப்பணிகளிலும் திரைப்பட இயக்குநர் பாக்கியராஜ் அவர்கள் மின்னி மிளிர்ந்தார்.
17 ஆண்டுகளுக்கு முன்பு அவரின் பாக்யா இதழில், ‘அன்புள்ள அம்மா’ என்ற தலைப்பில் என்னுடைய அப்பா ஔவை நடராசன் அவர்கள் எழுதிய உருக்கமான கட்டுரை வெளியிடப்பட்டது.
கட்டுரை வெளியானவுடன், திரு பாக்யராஜ் அவர்கள் அப்பாவிடம் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசி அளவளாவியதை நான் இன்னும் மறக்கவில்லை.
மாநிலக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த பொழுது, அவரின்
‘சின்ன வீடு’ திரைப்படத்தை நண்பர் சிவகுமாருடன் பார்க்கத் தேவி அரங்கிற்குச் சென்றிருந்தேன்.
அப்போது நுழைவுச்சீட்டு கிடைக்கவில்லை.
உடனே என்னுடைய நண்பர், என் அப்பாவின் பெயரைக் குறிப்பிட்டு, “படம் பார்க்க வந்திருக்கிறோம்” என்று சொன்னவுடன், திரையரங்கு மேலாளர் எங்களுக்கு அனுமதி வழங்கியது இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது.
அவரின் பல திரைப்படங்கள் நுட்பமான திருப்பங்களுடன் வெளிவந்தபோது, அவற்றை மகிழ்ந்து பார்த்த நினைவுகள் ஆழ்மனத்தில் இன்னும் நிழலாடுகின்றன.
”இவருடைய புகழுடம்பின் அடையாளமாக அவரின் திரைப்படங்களும், நூல்களும், காணொளி காட்சித் திரைகளும் நிலைத்து நிற்கும்” என்று நாம் ஆறுதல் அடையலாம்.
2009ஆம் ஆண்டில் பாக்யா இதழில் வெளிவந்த அப்பாவின் கட்டுரை பின்வருமாறு:
அன்புள்ள அம்மா
- ஒளவை நடராசன்
ஒளவை துரைசாமி, லோகாம்பாள் பெற்ற பதினொரு பிள்ளைகளில், புகழ்பெற்ற பிள்ளை நீ! என்று
நீ பிறந்த ஆரணியை அடுத்த கோட்டுப்பாக்கத்தில் இருந்து, என் தந்தை பிறந்த ஒளவையார் குப்பம் ரெட்டணையில் தொடங்கி ஊர் மெச்சக்காரணம் நீதானே!
உன் இருபதாவது வயதிலேயே உன் தந்தையாரை இழந்ததால், நாதியில்லாமல் என் பாட்டி லட்சுமி வீட்டில் வளர்ந்தாயாம்!
உரக்க உரக்கப் பேசுவாய், கோபத்தில் கொதித்துப் போவாய்.
ஆனால் உனக்கு ஈரமனம், இளகிய போக்கு.
எழுத்துக் கூட்டிப் படிக்க மட்டும் தெரிந்த நீ, தினம் அதிகாலையில் திருவருட்பாப் பாடலை எப்படிப் பாடினாய் என்று இப்பொழுதும் ஆச்சரியப்படுவேன்.
சித்தி பெண் ஞானாம்பாள், தாய்மாமன் ஏகாம்பரம், லட்சுமி பாட்டி, சந்திரமதியம்மாள் பாட்டி, நாங்கள் பதினொரு பேர்…
இத்தனை பேரையும் வைத்து அப்பா பார்த்த ஆசிரியர் தொழில் மூலம் கிடைத்த குறைந்த வருவாயைக் கொண்டு, குறை இல்லாமல் குடும்பம் நடத்திய சிறந்த நிர்வாகி நீ!
எனது தந்தை கற்றுத் தேர்ந்த கல்விமான்.
ஆனாலும் அவரை, “உங்களுக்கு என்ன தெரியும்?” என்று அடிக்கடி கூறுவாய்.
என் தந்தை கொஞ்சமும் கூட முகம் சுளிக்காமல், “எனக்கு என்ன தெரியும் என்று சொன்னால் அவளுக்கு என்ன புரியும்?” என்று சொல்லிச் சிரிப்பார்.
உனக்கு 5 ஆண் பிள்ளைகள் இருந்தாலும், “ஒரே பிள்ளை நான்தான்” என்பாய்; “என் மகனுக்கு ஈடில்லை” என்பாய்.
ஒருமுறை அப்பாவைப்போல் ஆசிரியர் வேலைக்குப் போகிறேன் என்று செய்யாறில் இருக்கும்போது சொன்னேன்.
“வேண்டாம்பா, நீ அரசாங்க உத்தியோகத்தில் பெரிய ஆபீசராகப் போ” என்றாய்.
ஆனாலும் நான் அப்பாவைப்போல் தஞ்சை சரபோசி கல்லூரியிலும், மதுரை தியாகராசர் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணிபுரிந்தபோதும், நீ ஆசைப்பட்டதுபோல் டெல்லி ஆல் இண்டியா ரேடியோவில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றியபோதும், தமிழக அரசில் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக ஆனபோதும் ஆனந்தத்தில் திளைத்தாய்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ‘தமிழ் மொழி வளர்ச்சி பண்பாட்டுத்துறை’ என்ற ஒரு துறையைப் புதிதாக உருவாக்கி என்னை அரசு செயலாளராக அழகு பார்த்தபோதும், மதுரை உலகத்தமிழ் மாநாடு நடந்தபோது முதன்முதலாக நம் வீட்டுக்குத் தொலைபேசி வைக்கப்பட்டபோதும் ஒரு குழந்தையைப் போல் தொட்டுத் தொட்டு மகிழ்ந்தாயே!
அப்பா மறைந்தவுடன் நீ பேசுவதையே நிறுத்திக்கொண்டாய்;
அமைதியே வடிவமாகிப் போனாய்.
இந்த நிலையில் உன்னை பொள்ளாச்சி மகாலிங்கம் மதுரை வந்து பார்த்தபோதும், அப்பாவின் மாணவர் புலவர் கோவிந்தன் உன்னை விசாரித்தபோதும் உணர்ச்சிவசப்பட்டுப் போனேன்.
மதுரை மருத்துவக் கல்லூரியில் என் மனைவி (உனது மருமகள்) தாரா நடராசன், என் தம்பிகள் மெய்கண்டான், நெடுமாறன் ஆகியோர் பிரபல மருத்துவர்கள் ஆனாலும், “ஆயிரமாகட்டும், என் பிள்ளை நடராசனை விடவா நீங்கள் பெரியவர்கள்?” என்று சொல்வாய்!
என் தந்தை எந்தப் பிள்ளைகள் வீட்டிலும் போய் இருக்கப் பிடிக்காதவர்.
ஆனால், உனக்கு ஒவ்வொரு பிள்ளைகள் வீட்டிலும் இருக்கப் பிடிக்கும்.
இராமநாதபுரத்தில் நீ நோய்வாய்ப்பட்டுக் கிடந்தபோது கடைசியாக நான் உன்னைப்பார்க்க வந்தேன்.
அப்பொழுது நான் உயர் அதிகாரி என்ற வகையில், நான் காரை விட்டு இறங்கியவுடன் 5, 6 பேர் புடைசூழ நின்று வணக்கம் வைத்தார்கள்;
நானும் வணக்கம் சொன்னேன்.
இதைப் பார்த்த நீயும் கும்பிடு போட்டாய்!
அதை இன்று நினைத்தாலும் நெக்குருகிப் போகிறேன்.
சின்ன வயதில் சர்க்கரை டப்பாவைத் திருடி எடுத்துக்கொண்டு சாப்பிடுவேன்.
ஒவ்வொரு முறையும் அடிக்கக் கை ஓங்குவாய்; ஒரு நாளும் அடித்ததில்லை.
ஒருவேளை நீ ஒரு முறையாவது அடித்திருந்தால், 50 ஆண்டுகாலமாய்ச் சர்க்கரை வியாதியால் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்காமல் இருந்திருப்பேன்!
நன்றி: பாக்யா – வார இதழ் (ஜூன் 19 – 25, 2009)

Add a Comment