”
Arul.2009/FB/#68997
ஷேக்ஸ்பியர் வரிசை 4
ஷேக்ஸ்பியர் நாடகங்கள்
OTHELLO
ஒதெல்லோ
AS YOU LIKE IT
விரும்பிய வண்ணமே
இலக்கியச் செல்வர்
வி ஆர் எம் செட்டியார்
முன்னுரை
V.R.M. செட்டியார் B.A.,
ஷேக்ஸ்பியர் ஒரு சிறந்த நாடக மேதை :
அவருடைய நாடகத்திலே, கற்பனை எழிலும், பாத்திர சிருஷ்டியும் கவிதை அழகும், புயலும் அருமையாகக் கலந்து புரளுகின்றன:
தொட்ட இடமெல்லாம், இலக்கிய எழிலையும், கவிதை மின்னலையும் நாம் காணும்போது, ஷேக்ஸ்பியரின் மேதைமையை நம்மால் மறக்க முடியுமா ?
இயற்கையிலே,மனித இயற்கையிலே,கவிஞன் ஷேக்ஸ்பியர் அழகைக்கண்டான்; உண்மையைக் கண்டான்; அழகிலே உண்மையைக் கண்டான், உண்மையிலே அழகைக் கண்டான்.
இரண்டையும்
உலக சிருஷ்டியிலே கவிஞன் கண்ணால் பருகி, ஆனந்தமாக இலக்கிய சிருஷ்டியிலே இறங்கும்போது, ஆங்கில மொழி சொல்லோவியமாக மலர்ந்து மணக்கும் போது, உலகமே மதிமயங்கிச் செவி சாய்த்துக் கேட்க ஆரம்பித்து விடுகிறது.
ஷேக்ஸ்பியர் 52 வயது தான் வாழ்ந்தார். ( 1564 -1616 )
24 வருஷங்கள், ஷேக்ஸ்பியர் நாடக சிருஷ்டியிலே ஈடு பட்டிருந்தார்.
37 நாடகங்களும் சில நயமான கவிதைகளும் எழுதினார்: அவைகளில், சில இன்பியல் நாடகங்கள்; சில துன்பியல் நாடகங்கள்.
‘ஒதெல்லோ’ ஒரு சிறந்த சோக நாடகம்:
காதல் உலகம், விரிந்து மலர்ந்து, இறுதியில் காய்ந்து கருகிச் சிதறிப்போகிறது.
ஒதெல்லோவும் டெஸ்டிமோனாவும், அருமையாகக் காதலிக்கிறார்கள்:
அவர்களுடைய இனிய காதல் உணர்ச்சி, மலையுச்சியிலிருந்து ஒளி வீசுகிறது.
கதையும், கலையும், கவலையும், ஆன்மீக ஒருமையுடன் சுந்தரக் கவிதையாக, ஷேக்ஸ்பியரின் இதயக் கமலத்திலே மலர்கின்றன.
கண்ணீரே, ஒதெல்லோவின் நெஞ்சிலே கவிதை மின்னலாகக் காட்சியளிக்கிறது.
டெஸ்டிமோனாவின் அழகும், நிகரற்ற மன நிலையும், எல்லோருடைய உள்ளங்களிலும் நிலைத்து நிற்கும் சித்திரங்கள்:
காந்திய மனம், சாந்தியை அடைவது எப்போது ? நாடக இறுதியிலே, கலகம், மனக்கலக்கம்,சோகச் சூறாவளி !
வில்லன் ஐயாகோ, எல்லோரையும் வெறிபிடிக்கும்படி செய்துவிடுகிறான்; அவனை எல்லோரும் நம்பி நாசமடைகிறார்கள்.
வயதான ஒதெல்லோ கூட; அவனை நம்பி, மயங்கி, டெஸ்டிமோனாவின் மனநிலையைச் சந்தேகித்து, அவள் தொண்டையை நெரித்து, அவள் இறந்ததும் பின்னால் உண்மையறிந்து, கவலை மிகுதியால் தன் உயிரையே போக்கிக் கொள்ளுகிறான்.
இறுதியிலே அழுது கதறி யாது பயன் ? இறந்த இனிய இன்ப அழகி, மீண்டும் உயிரோவியமாகத் திரும்ப முடியுமா ?
ஒதெல்லோ நாடகத்தில், வாழ்க்கையின் தத்துவம், எழிலோவியமாகக் காட்சியளிக்கின்றது.
கவிதை மெருகேறிய தத்துவம், எங்கும் தாண்டவமாடுகிறது.
ஷேக்ஸ்பியர், உலக உண்மைகளைக் கண்டவரல்லவா ?
உண்மையே பேசி, நாடக எழிலை நயமாகச் சித்திரித்துக் காட்டுகிறார்.
சொல்லோவியம், சுடுசரம் போல் பறந்தே வருகிறது; கவிதை, இதயக்குகையில் கொந்தளிக்கிறது; உணர்ச்சி வளையங்கள், சிறகடித்துப் பறந்தே வருகின்றன.
ஆம், எல்லாம் உண்மைதான் !
1604 – ல் இந்த நாடகத்தை, ஷேக்ஸ்பியர் தன்னுடைய நாற்பதாவது வயதில் எழுதினார்:
சிந்தியோவின் சீரழிந்த கதையிலிருந்து, ஷேக்ஸ்பியர் ஒரு சிறந்த சோக நாடகத் தையே சிருஷ்டிசெய்தார்.
கதையின் தன்மையைத் தனது கற்பனை நலத்தால் மாற்றி, அதனுள் கவிதை இன்பத்தையும் பெய்து, சதியின் கட்டுக்கோப்பை ( Plot ) நாடகப் போக்கில் அருமையாகப் பின்னி, உலக உண்மையை வாழ்வின் சிகரத்திலே எல்லோரும் அறிந்து அனுபவிக்கும்படி செய்திருக்கிறார், நமது உலக மகாகவி ஷேக்ஸ்பியர்.
முதலில் ஏழையாக இருந்த கவிஞர், ஏக்கப்பாதையெல்லாம் தாண்டி, நாடகத்தை நடிக்கவும் எழுதவும் பழகி, புகழ் உலகிலே புகுந்து, போதிய செல்வமும் சேர்த்து, கொட்டகையில் பங்குதாரராக ‘ குளோப் ‘ நாடகக் கொட்டகையில் பங்குதாரராகவும் ஆனார்.
வாழ்வின் இறுதியிலே, தன் ஊர் திரும்பிச் சொந்தமாக வீடு நிலம் வாங்கி வாழ்ந்தார்.
ஆரம்பத்தில், லண்டனில் நிதானமாக தன் ஊரை விட்டு வாழ்ந்து நடிகராகப் பேர் வாங்கி, பல அரிய நாடகங்கள் எழுதி உலகப்புகழ் அடைந்தார்.
ஷேக்ஸ்பியர் தம் நாடகங்களிலே, முப்பதினாயிரம் வார்த்தைகளை அருமையாக உபயோகப்படுத்தி, ஆங்கில நாடக இலக்கியத்தை வளப்படுத்தியிருக்கிறார்;
பலவிதமான நடையோவியங்களையும்
எழுதிக்காட்டியிருக்கிறார் .
Varieties of Style :
உண்மையால் ஒளி நிறைந்த ஷேக்ஸ்பியர் சிருஷ்டி செய்திருக்கிறார் .
எழுதும் நடையிலே, கவிஞனின் இதய ஒளி பிரதிபலித்து, மின்னலிடுகிறது.
உண்மை, உள்ளத்தின் எதிரொலியாகவே பவனி வருகிறது.
சொல்லாட்சியின் ஓவியச்சிலிர்ப்பு ஓடோடி வருகிறது :
சொற்கள் சிரிக்கின்றன, கண்ணீரைச்
சொரிகின்றன.
கற்பனை உலகின் அமுதக்கதவுகளைத்திறந்து காட்டுகின்றன.
உணர்ச்சியின் சிறகொலி கேட்கிறது.
மனிதகுணங்கள் அனைத்தும், ஷேக்ஸ்பியரின் நாடக உலகிலே புகுந்து
பரிமளிக்கின்றன.
கவிஞரின் நாடக உலகம், மனித உணர்ச்சியின் பூந்தோட்டமாகக் காட்சியளிக்கிறது.
ஒவ்வொரு சொல்லும்,உணர்ச்சிக் கனியாகப் பழுத்து நம்முன் இனிமையின் சிகரமாகவே
காட்சியளிக்கிறது.
சோகத்தின் சிகரத்திலே, உலக உண்மை நடனமாடுகிறது.
மனைவியை முத்தமிட்டு,மனைவியின் கழுத்தை நெரிக்கும்போது,ஒதெல்லோவின் கலங்கிய மொழியிலே உண்மையே பேராவலோடு ஓலமிடுகிறது !
ஆம், இது
தான் கலை, இது தான் கவிதையின் சிகரம், இதுதான் நாடகத்தின் நாதச் சிலிர்ப்பு.

Add a Comment