”
Arul.2009/FB/#68959
தமிழ்த் தொண்டர்த் தொகை
முனைவர் தி அமலோர்
பக்கம் எண் : 392,393,394 .
100 ஔவை நடராசன்
வாழ்விக்க வந்த வள்ளலார், பேரறிஞர் அண்ணா, கம்பர் காட்சி, கம்பர் விருந்து, திருப்பாவை விளக்கம், திருவெம்பாவை விளக்கம், சங்க இலங்கியப் பெண்பாற் புலவர்கள், அருளுக்கு ஒளவை சொன்னது, Thirukkovaiyar ( திருக்கோவையார் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் ) எனப் பல்வேறு நூல்களைப் ஔவை நடராசன் படைத்துள்ளார்.
தோற்றம்
ஒளவை நடராசன் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகில் உள்ள ஒளவையார் குப்பம் என்னும் சிற்றூரில் 1936-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ல் பிறந்தார்.
தந்தையார் பெயர் ஒளவை துரைசாமி (58).
தாயார் பெயர் லோகாம்பாள்.
இவருடைய இயற்பெயர் சிவபாதசேகரன்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவருடைய தந்தையார் பேராசிரியராகப் பணியாற்றும் போது இவருக்கு ‘நடராசன்’ என்ற பெயரைச் சூட்டினார்.
கல்வியும் பணியும்
ஔவை நடராசன் மதுரை தியாகராசர் கல்லூரியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் ‘சங்க இலக்கியத்தில் பெயரிடு மரபு’ என்னும் பொருளில் ஆய்வு செய்து 1958-ஆம் ஆண்டில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார்.
அதன் பின்னர் ‘சங்க காலப் புலமைச் செவ்வியர்’ என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
இவர் தமிழ், ஆங்கிலம் என்னும் இரு மொழிகளிலும் சிறப்பாகப் பேசும் திறன் கொண்டவர்.
ஒளவை நடராசன் தஞ்சாவூரிலுள்ள மன்னர் சரபோஜி கல்லூரியில் விரிவுரையாளர் (1958-1959),
புதுதில்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர் (1960),
மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் (1961-65) எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
தமிழ்த் தொண்டு
இவர் 1984 முதல் 1992 வரை தமிழ்நாட்டின் தமிழ்வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை செயலராகப் பணியாற்றினார்.
மேலும் 1992-ஆம் ஆண்டு முதல் 1995-ஆம் ஆண்டு வரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் மற்றும் 2014-ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளிலும் இருந்து தமிழ்த்தொண்டு புரிந்தார்.
இவர் 2015 முதல் சென்னையிலுள்ள பாரத் பல்கலைக்கழக வேந்தராகப் பணியாற்றினார்.
மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் (1981) பொதுச் செயலாளராகவும் மொரிஷியசில் நடைபெற்ற ஏழாம் உலகத் தமிழ் மாநாட்டுக் (1989) குழுவில் உறுப்பினராகவும் செயலாற்றினார்.
வாழ்விக்க வந்த வள்ளலார் (1966), பேரறிஞர் அண்ணா, கம்பர் காட்சி, கம்பர் விருந்து, திருப்பாவை விளக்கம், திருவெம்பாவை விளக்கம், சங்க இலங்கியப் பெண்பாற் புலவர்கள், அருளுக்கு ஒளவை சொன்னது, Thirukkovaiyar (திருக்கோவையார் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்) எனப் பல்வேறு நூல்களை ஒளவை நடராசன் படைத்துள்ளார்.
பட்டங்களும் சிறப்புகளும்
தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது (2009), பேரறிஞர் அண்ணா விருது (2010), மத்திய அரசின் ‘பத்மஸ்ரீ விருது’ (2011), இலங்கை, கம்பர் கழகத்தின் ‘தன்னேரில்லாத் தமிழ் மகன்’ விருது, இலங்கை கொழும்புக் கம்பன் கழகம் வழங்கிய ‘கம்பன் புகழ் விருது’ (2012), தினத்தந்தி நாளிதழ் வழங்கிய சி.பா. ஆதித்தனாரின் ‘மூத்த தமிழறிஞர் விருது’ (2014) என்னும் பல பட்டங்களுக்கும் சிறப்புகளுக்கும் உரியவர் இவர்.
மறைவு
தமிழுக்கெனத் தனியே உருவாக்கப்பட்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும்
செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இருந்து தமிழ்த் தொண்டு புரிந்த ஒளவை நடராசன் 2022-ஆம் ஆண்டு நவம்பர் 21 – ல் தம் 86 -ஆம் அகவையில் பொன்னுடம்பு நீத்துப் புகழுடம்பு எய்தினார்.

Add a Comment