POST: 2026-05-04T08:48:41+05:30

”
Arul.2009/FB/#68955

அன்னையின் அரும்பணியும்!
தந்தையின் சொல்நயமும்!!

காலத்தின் சுவடுகளில் சில நிகழ்வுகள் மட்டும் என்றும் பசுமை மாறாத காவியங்களாக நிலைத்துவிடுகின்றன.

அத்தகையதொரு நெகிழ்ச்சியான பொழுதினை அண்மையில் தஞ்சை மண்ணில் கிட்டியது.

​கடந்த ஏப்ரல் 30,வியாழக்கிழமை காலை 10 மணியளவில், கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரியின் முதல்வர் முனைவர் முத்துராமலிங்க ஆண்டவர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பசுமை மாறாத விருந்தினர் இல்லத்திலிருந்து புறப்படும் பொழுது “அப்படியே ஒரு கோயிலுக்குச் சென்றுவிட்டுச் செல்லலாமே?” என்று அவர் என்னிடம் சொன்னார்.

உடனே நான், “நிச்சயமாக… என் அன்னையார் கட்டிய கோயிலுக்கே உங்களை அழைத்துச் செல்கிறேன்” என்று கூறியபோது, அவர் வியப்பில் ஆழ்ந்தார்.

​ஆம், என் தந்தையார் தாமரைத்திரு ஔவை நடராசன் அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பணியாற்றிய காலகட்டம் அது.

பல்கலைக்கழகக் குடியிருப்பு வளாகத்தில் வசிப்போர் ஒரு திருக்கோயில் வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தபோது, என் அன்னையார் மருத்துவமாமணி தாரா நடராசன் (அன்றைய தஞ்சை அரிமா மகளிர் சங்கத் தலைவர்) அவர்கள் அதற்காகப் பெருமுயற்சி எடுத்தார்.

இந்தியன் வங்கியின் அந்நாளைய தலைவர் டாக்டர் எம். கோபாலகிருஷ்ணன் அவர்களின் நிதியுதவி எனும் பெருங்கொடையால்அருள்மிகு ஆலயம் கட்டப்பெற்றது

​அக்கோயிலுக்குப் பொருத்தமான ஒரு பெயரைத் தேடியபோது, என் தந்தையார் தனது வழக்கமான சொல்நயத்தோடும் அறிவுக்கூர்மையோடும், “பல்கலைக்கழக வளாகத்தில் வீற்றிருப்பதால் இவர் ‘பல்கலை விநாயகர்’!” என்று திருப்பெயர் சூட்டினார்.

அன்று சூட்டப்பட்ட அந்தப் பெயர், இன்றும் அங்கே தமிழோடு மணம் வீசிக்கொண்டிருக்கிறது.

​இத்தகைய சிறப்புமிக்க பல்கலை விநாயகர் திருக்கோயில் குடமுழுக்கு, 16.05.1994 திங்கட்கிழமை அன்று தவத்திரு. காத்தையா சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.

​காலத்தின் ஓட்டத்தில் பொலிவிழந்திருந்த திருக்கோயிலையும், தேய்ந்திருந்த கல்வெட்டையும் கண்ட முனைவர் ஆண்டவரும், மாநிலக் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் காமராசரும், “நண்பரே… இந்தக் கோயிலை யாராவது புதுப்பிக்க மாட்டார்களா?” என்று ஏக்கத்துடன் வினவினார்கள்.

​அன்று கோயிலிலிருந்து திரும்பியபோது எடுத்த ஒளிப்படங்களை என் உடன்பிறந்தவர்களுடன் பகிர்ந்துகொண்டேன்.

அவற்றைப் பார்த்த என் அண்ணன் கண்ணன், “நீ அனுப்பிய கல்வெட்டு வரிகளைப் படிக்க முடியவில்லையே!” என்று வருந்தினார்.

​அண்ணனுடைய அந்த ஏக்கத்தைத் தீர்க்கும் விதமாக, திருவாரூரைச் சேர்ந்த திருக்குறள் செல்வன், செயற்கை நுண்ணறிவுத் திறனில் திளைக்கும் அன்பன், கலைத்திறன் மிக்க வெற்றிச்செல்வன் வாயிலாக, சிதிலமடைந்திருந்த அக்கோயிலின் தோற்றத்தையும் கல்வெட்டையும் அச்சு அசலாகப் புதுப்பித்து மெருகேற்றி எழிலுற அனுப்பி வைத்திருந்தார்.

​என் அன்னையார் எழுப்பிய கோயில் என்கிற பெருமிதம் ஒருபுறம்… அது உருவானபோது என் தந்தையார் அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார் என்கிற நெகிழ்ச்சிப மறுபுறம்…

காலங்கள் கடந்தாலும், இந்தப் ‘பல்கலை விநாயகரின்’ அருளும், எங்கள் பெற்றோரின் நினைவுகளும் தமிழின் சுவையென என்றும் நிலைத்திருக்கும்.

குறிப்பு:

முதல் நிலையில் பதிவிட்ட ஒன்பது ஒளிப்படங்களும் இன்றைய சூழலை படம் பிடித்தது.

அடுத்த மூன்று ஒளிப்படங்களும் செய்யறிவுத் திறனால் செதுக்கப்பட்டது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *