”
Arul.2009/FB/#68925
காலச்சுவட்டில் ஒரு அழியாச்சுவடு!
”துயில் கொள்வதற்கு முன் இன்னும் கடக்க வேண்டிய தூரங்கள் எத்தனையோ…”
(And miles to go before I sleep) என்ற இராபர்ட் பாஸ்ட் அவர்களின் புகழ்பெற்ற கவிதை வரிகளையே தன் அலைபேசியின் தாரக மந்திரமாகக் கொண்டிருந்தவர், மொழிபெயர்ப்புத் திலகம் அரவிந்தன் அவர்கள்.(18.10.1965-3.4.2026)
அரவிந்தன் என்ற பெயரைக் கேட்டாலே என் தந்தைக்குள் ஒரு தனி மகிழ்ச்சி பிறக்கும்.
‘குறிஞ்சி மலர்’ புதினத்தின் நாயகன் பெயர் என்பது அவருக்கு கூடுதல் விருப்பம்.
அவரோடு உரையாடுவதற்காகவே ‘காலச்சுவடு’ இதழைத் தொடர்ந்து நானும் அப்பாவும் படித்து வந்தோம்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவரோடு எனக்கு தொடர்பு உண்டு.
பல்வேறு மொழியாக்கப் பணிகள் குறித்து அலைபேசி வாயிலாக நாங்கள் நீண்ட நேரம் உரையாடியிருக்கிறோம்.
மொழியாக்க வானில் ஒரு முழு நிலாவாகவே காட்சித்தந்தவர்.
அவர் ஒருமுறை தன் தம்பி பாலாஜி அவர்களை எனக்கு அறிமுகம் செய்தார்.
இந்திய வானூர்தி நிலைய ஆணையத்தில் பணியாற்றும் பாலாஜி, தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மிக நேர்த்தியாக மொழிபெயர்க்கும் ஆற்றல் கொண்டவர்.
பல தருணங்களில், அரவிந்தன் அவர்களிடம் அவர் தம்பியின் திறமையைப் பாராட்டி நான் பேசும்போதெல்லாம் அண்ணனுக்குரிய பெருமிதத்தோடும் நெகிழ்ச்சியோடும் அதைக் கேட்டு மகிழ்வார்.
அதேபோல பிரவீன் குமார் என்ற மொழிபெயர்ப்பாளரை என்னிடம் அறிமுகம் செய்ததும் அவர் பல நிலைகளில் வளர்ந்து தினமணி தினமலர் நாளிதழ்களில் இன்றைக்கும் சிறந்து பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்
சிலர் பேசும்போது வசீகரிப்பார்கள்;
சிலர் எழுதும்போது வாசம் தருவார்கள்.
அரவிந்தன் அவர்களோ, தன் மௌனத்தின் ஊடாகவும் உழைப்பின் வழியாகவும் நம்மோடு என்றும் உரையாடிக் கொண்டிருப்பார்.”
யான் அவ்வப்போது எழுதும் கட்டுரைகளை அவருக்கு அனுப்பி வைப்பேன்.
அவர் அதற்கு மறுமொழி ஏதும் சொன்னதில்லை.
ஆனால், இன்று நான் எழுதும் இந்த இரங்கலையும் அவர் எங்கிருந்தோ படித்துக் கொண்டிருப்பார் என்றே நம்புகிறேன்.
மொழியின் ஊடாக என்றும் வாழ்வார் அந்தச்செம்மல்!
அவர் குடும்பத்திற்கும், நட்புக் குழுவினருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

Add a Comment