POST: 2026-03-27T09:58:07+05:30

”
Arul.2009/FB/#68917

காலப் பெட்டகத்தின் கருப்பு வெள்ளை ஓவியம் – ஐந்து வயது நினைவுகளின் அணிவகுப்பு!

காலம் தன் சிறகுகளால் எத்தனையோ ஆண்டுகளைக் கடந்திருக்கலாம்;

ஆனால், நினைவுகள் மட்டும் என்றும் அழியாத வண்ணங்களால் நம் மனச் சுவர்களில் ஒட்டிக்கொண்டிருக்கின்றன………

இதோ, 15.10.1972 ஞாயிற்றுக்கிழமை மாலையில் சென்னை இராயப்பேட்டை, பெசன்ட் சாலையின் பத்தாம் எண் இல்லத்தில் முன் தேதியிடப்பட்ட பிறந்தநாள் தருணம்!

அந்த ஐந்து வயதுச் சிறுவனாக நான் நின்றுகொண்டிருக்கும் இந்தக் காட்சி, வெறும் ஒளிப்படமன்று,
அஃது என் பசுமையான இளமையின் பொற்கால ஆவணம்.

அன்று வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது.

படத்தில் எனக்கு வலப் பக்கத்தில் தம்பி பரதன், அண்ணன் கண்ணன், சின்னண்ணா என்கிற நாராயணன்
அவருக்குப் பின் அக்கா சுதா எனக்கு இடப்பக்கத்தில் அண்ணன் முரளி உடன்பிறப்புகளின் குதூகலத்தால் அந்த அறை நிறைந்திருந்தது.

எங்களுக்குப் பின்னால், இல்லத்திற்கே வந்து ஆங்கிலப் பாடம் பயிற்றுவிக்கும் ஆங்கிலோ-இந்திய ஆசிரியர் திருமதி ஒக்கானோ அவர்களின் அன்பு முகம் தெரிகிறது.

அவருக்கு அருகில் இராயப்பேட்டை மருத்துவமனையின் கணக்கு அலுவலர் திருமதி சுசீலா அவர்களும், பாசத்தின் ஊற்றாக என் அம்மா மற்றும் பெரியம்மா அக்கா உஷா, ஆகியோர் புன்னகை பூக்க நிற்கிறார்கள்.

அன்று நாங்கள் அணிந்திருந்த ஆடைகளில் ஒரு தனிப்பெருமை உண்டு.

கௌடியா மடத்தில் புகழ்பெற்ற ‘ஸ்டார்’ தையல்காரர் பெரியவரின் கைகளால் தைக்கப்பட்ட அந்த உடைகள், அக்காலத்தின் நாகரிக அடையாளங்கள்.

அப்பா (தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள்) வழக்கம்போல மாலை நேரத் தமிழ் முழக்கங்களுக்காகவும் கூட்டங்களுக்காகவும் சென்றுவிட்டதால் இப்படத்தில் இல்லையென்றாலும், அவரின் வாழ்த்தும், தமிழும் எந்நேரமும் நிறைந்தே இருந்தது.

கண்ணாடியில் தெரியும் பிம்பம் மாறுபடலாம், ஆனால் இந்த நிழற்படத்தில் உறையும் உறவுகளின் அன்பும், அந்த இராயப்பேட்டை இல்லத்தின் வாசனையும் என் இதயத்தில் இன்றும் மாறாமல் அப்படியே இருக்கிறது.

தொலைந்து போன வசந்தத்தை மீண்டும் ஒருமுறை தொட்டுப் பார்க்கும் இந்தத் தருணம், மனதிற்குள் ஒரு மெல்லிய கவிதையை வாசிக்கிறது!

வற்றாத நினைவுகளுடன்

அருள்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *