Arul.2009/FB/#6816
எத்திசையும் புகழ் மணக்கும்
எழில் மிகுந்த தமிழ்நாடு
வடக்கே ஒலிக்கும் தெற்கின் குரல்
இந்தியாவின் தலைநகரான புதுதில்லியில் அமைந்துள்ள அறிவுச் சுரங்கமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், தமிழின் பெருமையை நிலைநிறுத்தும் வகையிலும், வான்புகழ் கொண்ட அய்யன் திருவள்ளுவரின் புகழைப் பறைசாற்றும் வகையிலும் தமிழ்நாடு அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
சிறப்பு நிலைத் தமிழ்த்துறை:
ஒரு வரலாற்றுப் பயணம்
புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சிக்கான விதை 2003ஆம் ஆண்டிலேயே ஊன்றப்பட்டது.
தமிழ் இருக்கை அமைப்பதற்காகத் தமிழ்நாடு அரசின் சார்பில் அப்போதே ரூ.50 இலட்சம் வழங்கப்பட்டது.
அந்த விதை இன்று விருட்சமாகி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய முயற்சியால், 2022ஆம் ஆண்டில் ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறையாகச் செயற்பட ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுப் புத்துயிர் பெற்றது.
தற்போது இத்துறை ‘சிறப்புநிலைத் தமிழ்த்துறை’ (Special Centre for Tamil Studies) எனப் பெயர் மாற்றம் பெற்று, வட இந்தியாவில் தமிழாய்வுகளை விரைந்தும், விரிந்தும் முன்னெடுக்கும் தனித்துவம் வாய்ந்த துறையாக முகிழ்த்து எழுந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, 2003இல் வழங்கப்பட்ட வைப்பு நிதிக்கான வட்டித் தொகையான ரூ.38,99,896 இல், ரூ.20 இலட்சத்தை மூலதன வைப்புநிதியாகவும், மீதமுள்ள ரூ.18,99,896ஐத் துறை சார்ந்த பணிகளுக்கும் பயன்படுத்த அரசு ஆணையிட்டுள்ளது.
ஆகமொத்தம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் இதுவரை ரூ.5,88,99,896/- (ரூபாய் ஐந்து கோடியே எண்பத்தெட்டு இலட்சத்துத் தொண்ணூற்று ஒன்பதாயிரத்து எண்ணூற்றுத் தொண்ணூற்று ஆறு) வழங்கப்பட்டுள்ளது என்பது உலக அரங்கில் தமிழாய்வுத் துறையைத் தலைநிமிரச் செய்யும் பெருமுயற்சியாகும்.
புதுதில்லியில் அய்யன் திருவள்ளுவர் சிலை
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் செயற்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு. க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பல்கலைக்கழக வளாகத்தில் உலகப் பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவருக்குச் சிலை அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 16.04.2025 அன்று நடைபெற்ற 2025-2026 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின் போது,
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்களால் “பல்கலைக்கழகத்தின் பன்னோக்குக் கலையரங்கு அருகில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும்” என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினைச் செயற்படுத்தும் விதமாக,
21.02.2025 மற்றும் 25.08.2025 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட அரசாணைகளின்
(எண்.39 மற்றும் எண்.179) வாயிலாக, இதற்கான நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட்டு, மொத்தம் ரூ.66,00,000/-
(ரூபாய் அறுபத்தாறு இலட்சம்) நிதியொப்பளிப்புச் செய்யப்பட்டு நிருவாக அனுமதி வழங்கப்பட்டது.
கள ஆய்வும், கலந்துரையாடலும்
மேற்கண்ட திட்டங்களின், குறிப்பாகத் திருவள்ளுவர் சிலை அமைக்கும் பணியின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யும் பொருட்டு, கடந்த 15.11.2025 சனிக்கிழமையன்று,
காலை 10 மணியளவில்
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு நேரில் வருகை புரிந்து
பல்கலைக்கழகத்தின் பன்னோக்குக் கலையரங்கிற்கு (Multi-purpose Auditorium) எதிரே சிலை அமையவுள்ள இடத்தைப் பார்வையிட்டு, நுணுக்கமான கள ஆய்வினை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, சிறப்பு நிலைத் தமிழ்த்துறை ஆய்வு மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்விலும் பங்கேற்ற மாண்புமிகு அமைச்சர், தமிழின் வளர்ச்சி குறித்தும், ஆய்வுகளின் போக்கு குறித்தும் மாணவர்களுடன் மனதிற்கு நெருக்கமான முறையில் உரையாடி மகிழ்ந்தார்.
தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் இந்நிகழ்வின் போது, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள் அவர்களும், சிறப்பு நிலைத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் திரு. அறவேந்தன் அவர்களும் உடனிருந்து சிறப்பித்தனர்.

Add a Comment