செய்தி வெளியீடு எண்: 1375
நாள்: 05.09.2024
செய்தி வெளியீடு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ் வளர்ச்சித் துறை முதன் முதலாக ஆறு மண்டிலங்களாகப் பிரிக்கப்பட்டு முனைப்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன
இந்திய அரசமைப்புச் சட்டப்படி, ஆட்சிமொழி என்பது ஒரு மாநிலத்தில் சட்டப் பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழியாகும்.
அதன்படி தமிழ்நாட்டில் தமிழ் மட்டுமே ஆட்சிமொழியாகும் என்று 27.12.1956இல் நிறைவேற்றப்பட்ட தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தினை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதிலுமுள்ள அரசு அலுவலகங்களில் தமிழில் அலுவல்களை நடத்த அறிவுரையும் ஆட்சிமொழித் திட்டத்தை செயற்படுத்திடவும் 1957இல் ஆட்சிமொழிக்குழு உருவாக்கப்பட்டது.
ஆட்சிமொழித் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் பரவலாகவும் முழுமையாகவும் செயற்படுத்தும் நோக்கில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் “தமிழ் வளர்ச்சி இயக்ககம்” எனும் தனித்துறைத் தலைமை அலுவலகம் 1971ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டு சென்னை, பாரிமுனையில் உள்ள குறளகத்தில் இயங்கி வந்தது.
பின்பு 16.01.2000இல் சென்னை. எழும்பூரில் உள்ள அருங்காட்சியக வளாகத்தில் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கென தனி வளாகம் உருவாக்கி தனிக்கட்டடத்தில் சிறப்புடன் இயங்கி வருகிறது.
ஆட்சிமொழித்திட்டச் செயலாக்க மேம்பாட்டிற்கு சேலம் மற்றும் திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு இரு மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகங்கள் 12.02.1998 அன்று தொடங்கப்பட்டு இரண்டு மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்கள் பணிபுரிந்து வந்தனர்.
பின்பு 08.08.2013 அன்று சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி. ஈரோடு, வேலூர் மற்றும் திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களிலுள்ள உதவி இயக்குநர் பணியிடங்களை துணை இயக்குநர் பணியிடங்களாக நிலை உயர்வு செய்து ஆணையிடப்பெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தமிழ்நாடு அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுசார் நிறுவனங்கள் ஆகியவற்றின் நிருவாகம் சிறப்பாகவும் தொய்வின்றியும் நடத்திட தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அதற்கிணங்க தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நிருவாகப் பணிகள் சிறப்பாகவும் தொய்வின்றியும் எளிமையாகவும் மேற்கொள்ளப்படும் வகையிலும் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் ஆட்சிமொழி ஆய்வுக் கூட்டத்தில் செய்தித்துறையில் உள்ளதைப் போன்றே தமிழ் வளர்ச்சித் துறையிலும் தமிழ் வளர்ச்சி இயக்குநரின்கீழ் ஏற்கனவே உள்ள திருநெல்வேலி மண்டிலத்துடன் சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி. தஞ்சாவூர், மதுரை என ஆறு மண்டிலங்களாக வகைப்படுத்தி தமிழ் வளர்ச்சித் துறையில் பணிபுரியும் ஆறு துணை இயக்குநர்களை மண்டில அளவிலான பொறுப்பு கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டதற்கிணங்க 20.08.2024 முதல் செயற்பட தமிழ்நாடு அரசால் ஆணை வெளியிடப்பட்டது.
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் / தமிழ் வளர்ச்சி
மற்றும் செய்தித்துறை
அரசு செயலாளர்
தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஆகியோரால்
தொடர்ந்து நடத்தப்பெறும் ஆய்வுக்கூட்டங்களில் ஆறு மண்டிலத் தமிழ் வளர்ச்சித்
துணை இயக்குநர்கள் கலந்து கொண்டு அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட
மாவட்டங்களின் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் தொடர்பான விவரங்கள் மற்றும்
அந்தந்த மாவட்டங்கள் வாயிலாக செயற்படுத்தப்படும் திட்டப்பணிகளின் முன்னேற்ற
அறிக்கை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரின் சிந்தனை வடிவமான இவ்வாணையின் வாயிலாக தமிழ் வளர்ச்சித் துறையின் பணிகள் தொய்வின்றி சிறப்பாகவும் விரைவாகவும் நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சி இயக்குநர்
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

Add a Comment