POST: 2022-10-17T11:14:15+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 75

ஒளவை நடராசன்

மேனாள் துணைவேந்தர்

அன்னச் சேவலுக்கு அனுப்பிய தூது !

பேசுமொழி தமிழ்மொழி என்றதாலும்; பேசியவர் பிசிராந்தைப் பெருமகனார் என்றதாலும் மாசு மறுவின்றி இனி ஆட்சி நடக்குமென மன்னன் உறுதிமொழி தந்ததோடு தந்திட்ட மொழி தவறாது காத்திடவும் செய்தான் தரணியிலே தன்புகழ் பூத்திடவும் செய்தான்.

அறிவுடைநம்பிக்கோர் அறிவு விளக்காக அமைந்திட்ட தெளிவுடைச் செந்தமிழ்ப் பேரொளியாம் பிசிராந்தையார் ;

சோழநாட்டு வேந்தன் கோப்பெருஞ்சோழன்பால் சொல்லாலே நெய்வதற்கு இயலாத அன்புதனைக் கொண்டிருந்தார்

கவிபுனையும் ஆற்றல், கற்றாரைப் போற்றுகின்ற பாங்கு, புவியெங்கும் மெச்சுகின்ற கொடைத் திறம்,கண்ணிமை போல் நாட்டுக்குக் காவல், தண்ணிலவை மிஞ்சுகின்ற தகைசால் உள்ளம்; கோப்பெருஞ்சோழனிடம் குடி கொண்ட இக்குணங்கள் குளிர்புனல் இதயக் கவிஞரை ஈர்த்தது மிகவே !

பிறந்த இடமாம் பிசிர் எனும் ஊரில் – நிழல் அடர்ந்த தோப்பில் நெறியுடைக் கவிஞர் ஒருநாள்; ஆய்வுக்குரிய பல்பொருள் குறித்து –

சிந்தனை அசைபோட்டவாறு, ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அன்னச் சேவல் ஒன்று இறக்கைகள் விரித்து ஆகாயவெளியிற் பறந்து செல்வதைக் கண்டார் புலவர் !

ஆருயிர் நண்பன் சோழனைக்குறித்துப் பாடலொன்று; யாத்திடும் ஆசை நிறைவேற வேண்டுமென்று ,அன்னச் சேவலை மையமாய் வைத்து – அழகுறப்பாடல் கன்னல் தமிழில் கற்பனையூற்றாய் எழுதினார்

புலவர் “அன்னச் சேவலே ! அன்னச் சேவலே ! ”

என அழைத்து இன்னலுற்றுள்ள தன் நெஞ்சைத் திறந்து காட்டி, மன்னவன் பெருங்கோக் கிள்ளியெனும் கோப்பெருஞ்சோழனை இன்னமும் காணும் வாய்ப்பினைப் பெறவில்லையே யென்ற மனப்புயல் ஒருபுறம், அடக்கிக்கொண்டு – அவன் மாப்புகழ்பற்றி எடுத்துரைத்தார் !

கோக்காமல் முத்துக்கள் மாலையாவதில்லை – ஆனால் பார்க்காமலே சோழனும் புலவரும் நட்பின் ஆரமாய்த் திகழ தமிழே மணியாய் – தமிழ் உணர்வே இழையாய் ஆனதுவாம்! தடந்தோள் சோழனின் கொடையும் அன்பும் பாட்டின் கருவாய் அமைந்ததுவாம் !

“அன்னச்சேவலே ! அன்னச் சேவலே !

நீயோ கன்னிக் குமரியின் முனையிலேயிருந்து அயிரைமீனைக் கொத்திய அலகுடன் – வெகு உயரம் விண்ணில் பறந்தவாறு, பனிமலை நிறைந்த வடக்கு திசைக்குப் பயணம் செய்கிறாய்; நின் பயணம் வெல்க ! கடக்கும் வழியில் என் கண்மணிச்சேவலே !

பகை அடக்கும் சோழன் தலைநகர் உளது !

கோழியூர் எனப்படும் உறையூர் நகரே – எனது கோப்பெருஞ்சோழனுக்குரிய தலைநகர் !

மேழிச்செல்வம் கோழைபடாது எனும் கொள்கையுடனே மேன்மையாய் நாட்டைக் காக்கும் மன்னவன் !

வலக்கரம் வழங்குவது இடக்கரம் அறியாமல் வழங்கிடும் தென்னவன் ! வழியில் நீயும் நின் பெடையுடன் சென்றால் – சோழன் விழியில் அன்பின் ஒளியினைக் காண்பாய் !

இடையில் எவரும் தடுத்து நிறுத்தினால் பெடையுடன் நீயும் திரும்பிடல் வேண்டாம் !

இறைவனாம் சோழன் செவியில் விழுமாறு உறையூர்க் காவலர்பால் உரக்கக் கூறிடு !

ஆந்தையார் எனும் புலவர் வாழ் பிசிர் எனும் ஊரைச் சார்ந்தோர் நாங்கள் எனச் சாற்றுவாயாகில்; அரசனே ஓடிவந்துமை வரவேற்று வாழ்த்தி அணிமணி பலவும் நின் பேடைக் களிப்பான் !

ஏனெனில் அத்துணை நட்பு அவனுக்கென்னிடம் உண்டு தேன் எனில் தெவிட்டிவிடும்; இதுவோ எம் இருவரிடை என்றுமே தெவிட்டாத நட்பு.”

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் புத்தரை கண்டோம் .

புறநானூற்றுப் பழைய உரையில் காணப்பட்ட குறிப்பையும் காணலாம் .

இப் பெருஞ்சோழன் உறையூரிலிருந்து ஆட்சி புரிந்த பெரு வேந்தன்; சிறந்த புலவன். இவன் ஆட்சிகாலத்தே, இவனுடைய மக்கள் இவற்கு மாறாக வெழுந்து போருடற்றக் கருத, அவரைச் செகுத்தற்கு இவனும் போர்க்கெழுந்தான்; ஆயினும், புல்லாற்றூர் எயிற்றியனார் முதலிய சான்றோர் விலக்க விலக்குண்டு அமைந்தான்.

அம் மானம் பொறாது வடக்கிருந்து உயிர் துறந்தான்.

இவனுக்குப் பிசிராந்தையார், பொத்தியார் முதலிய சான்றோர் உயிர்த் தோழர்.

நட்புக்குரிய காரணங்களான புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சி என்ற மூன்றனுள், உணர்ச்சி காரணமாகப் பிறக்கும் நட்புக்கு இவற்கும் பிசிராந்தையார்க்கும் உளதாய நட்பினைச் சான்றோர் எடுத்துக்காட்டுவர்.

இவன் வடக்கிருந்த காலத்தில், அவ்வாறே தாமும் இருந்து உயிர்நீத்தற்குப் போந்த பொத்தியாரை விலக்கி, “ நின் மனைவி கருவுயிர்த்தபின் வருக ” என இச்சோழன் பணித்தான்.

அவ்வாறு அவர் வருவதற்குள் இவன் உயிர் துறந்து நடுகல் ஆயினான், பின்னர், அவர் வந்தபோது நடுகல்லாகியதான் அவர்க்கு இடமளித்தான்.

இவன் தானே அவ்வப் போது பாடிய பாட்டுக்களும் உள.

அவை உயர்ந்த கருத்தும், சிறந்த இலக்கிய நயமுமுடையன.

இப்பாட்டின்கண் ஆசிரியர் பிசிராந்தையார்,

அன்னச் சேவலுக்குக் கூறுவாராய்க் கோப் பெருஞ்சோழன் தன்பால் கொண்டிருக்கும் அன்பினையும், நன்மதிப்பையும், எடுத்தோதிக் காட்டுமுகத்தால் உண்மை யன்பு கலந்த நண்பர் மனப்பாங்கினை வெளிப்படுக்கின்றார்.

– பிசிர் என்பது பாண்டிநாட்டிலிருந்ததோரூர். ஆந்தையார் என்பது இச் சான்றோரது பெயர்.

இவர் காலத்தே பாண்டி நாட்டை அறிவுடைநம்பி யென்பான் ஆண்டுவந்தான்.

சோழனும் இவர்பால் மெய்யன்பு கொண்டான்.

உணர்ச்சி யொருமையால் ஒருவரையொருவர் அறியாமே பிறந்த நட்பு முடிவில் ஒருவரை யொருவர் இன்றியமையாத நிலையினைப் பயந்தது.

கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து நடுக்கல்லாகிய பின்பு இவர் சென்று கண்டு தாமும் உயிர்நீத்தார்.

அந் நிகழ்ச்சிக் குறிப்புகள் இத் தொகை நூற்கண் காணப்படும்.

அன்னச் சேவ லன்னச் சேவல் ஆடுகொள் வென்றி யடுபோர் அண்ணல் நாடுதலை யளிக்கு மொண்முகம் போலக் கோடுகூடு மதிய முகிழ்நிலா விளங்கும் மையன் மாலையாங் கையறு பினையக் குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி வடமலைப் பெயர்குவை யாயி னிடையது சோழநன் னாட்டுப் படினே கோழி உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ வாயில் விடாது கோயில் புக்கெம் பெருங்கோக் கிள்ளி கேட்க விரும்பிசிர் ஆந்தை யடியுறை யெனினே மாண்டநின் இன்புறு பேடை யணியத்தன் நன்புறு நன்கல நல்குவ னினக்கே.

( 67 ) திணை : பாடாண்டிணை; துறை : இயன் மொழி.

கோப்பெருஞ்சோழனைப் பிசிராந்தையார் பாடியது.

உரை : அன்னச் சேவல் அன்னச் சேவல் – அன்னச் சேவலே அன்னச் சேவலே; ஆடு கொள் வென்றி அடுபோர் அண்ணல் – கொல்லுதலைப் பொருந்திய வென்றியையுடைய அடுபோ ரண்ணல்; நாடு தலையளிக்கும் ஒண் முகம் போல – தன்னாட்டைத் தலையளி செய்யும் விளங்கிய முகம் போல; கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும் – இரண்டு பங்கும் வந்து பொருந்திய மதியம் அரும்பு நிலா விளங்கும்; மையல் மாலை – தமியோராயினார்க்கு மயக்கத்தைச் செய்யும் மாலைப் பொழுதின்கண்; யாம் கையறுபு இனைய – யாம் செயலற்று வருந்த; குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி – குமரியாற்றினது பெரிய துறைக்கண்ணே அயிரையை மேய்ந்து; வட மலைப் பெயர்குவை யாயின் – வடதிசைக்கண் இமயமலைக் கண்ணே போகின்றாயாயின்;

இடையது சோழ நன்னாட்டுப்படினே – இவ்விரண்டிற்கு மிடையதாகிய நல்ல சோழ நாட்டின்கண் சென்று பொருந்தின்; கோழி – உறையூரின்கண்; உயர்நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ – உயர்ந்த நிலையை யுடைய மாடத்தின்கண்ணே நினது குறும்பறையோடு தங்கி; வாயில் விடாது கோயில் புக்கு – வாயிற் காவலர்க்கு உணர்த்தி விடாதே தடையின்றிக் கோயிற் கண்ணே புக்கு; எம் பெருங்கோக் கிள்ளி கேட்க – எம்முடைய பெருங்கோவாகிய கிள்ளி கேட்ப; இரும் பிசிர் ஆந்தை அடியுறை எனினே – பெரிய பிசிரென்னும் ஊரின்கண் ஆந்தையுடைய அடிக்கீழென்று சொல்லின்; மாண்ட நின் இன்பறு பேடை அணிய – மாட்சிமை யுடைய நினது இன்புறும் பேடை பூண; தன் நன்புறு நன்கலம் நல்குவன் நினக்கு – தனது விருப்பமுறும் நல்ல அணிகலத்தை அளிப்பர் நினக்கு எ-று.

ஆடுகொள் வென்றி யென்பதற்கு, வென்றி மிக்க வென்றி யெனினுமமையும்.

குறும் பறை யென்றது, பேடையை. வாயில் விடா தென்றதற்கு வாயில் காவலர் விடவேண்டா தெனினு மமையும்.

முகிழ்நிலா வென்பது ஒரு சொன்னடைத்தாய் மதியம் முகிழ் நிலா விளங்கு மென முதல்வினை கொண்டது.

மதியம் முகிழ்க்கும் நிலா வெனினு மமையும். ஆந்தை யடியுறை யென்பதற்கு, ஆந்தை நின் அடிக்கண் உறைவானென்பாருமுளர்.

பேடை யணிய நன்கலம் நல்குவ னென்றதனாற் பயன், மறவாது போதல் வேண்டும் என்னும் நினைவாயிற்று.

விளக்கம் : ஆடு கொள் வென்றிக்கு இடமும் ஏதுவுமாகலின். ”

அடு போர் அண்ணல் ” என்றார். அடு போர் அண்ணல் பகைவரை வஞ்சியாது கொல்கின்ற போரையுடைய அண்ணல்.

காதலன்பாற் பிணிக்கப் பட்டார் இருவர் பிரிந்திருக்குமிடத்து, இம் மாலைப்போது வருத்தத் தால் மயக்க முறுவிக்குமாகலின், ” மையல் மாலை ” யெனப்பட்டது.

மாலைப்போதில் வெயிலொளி குன்ற இருள் விரவுதலின், மையல் மாலையெனப்பட்ட தென்றுமாம்.

வடமலை – இமயமலை. திரு வேங்கடமும், விந்தமும், வடமலை யெனப்படுமாயினும், அவை தாமும் வடக்கே பிறமலைகளை யுடைமையின் அவ்வாறில்லாத இமயமே ஈண்டுக் கொள்ளப்படுவதாயிற்று.

இவற்றின் கண்ணுள்ள நீர்நிலை ஒருகால் நீர் வற்றுமாயினும், இமயத்து நீர்நிலை என்றும் வற்றாமையின், அது நோக்கி அன்னச் சேவல் செல்வதாகக் கருதுகின்றார்.

குறும்பறை இளமை பொருந்திய பெடையன்னம்.

குறுமை – இளமை குறித்து நின்றது, குறுமகன் என்றாற் போல, பறத்தலையுடையது.

பறை வாழ்க்கைத் துணையாகிய பெடை தனக்குரிய பெண்மைக்குணத்தால் மாட்சிமைப்படுவதையே இவர் பெரிதும் விரும்புபவராதலால், “ மாண்ட நின் பெடை ” என்றார்.

தலைவி ” ( குறுந் – 57 ). காதலன் பொருள் சேர்க்கும் காரணமாகப் பிரிந்து வேற்றூர் சென்றுவிட்டான். அப்பிரிவினைத் தாங்க இயலவில்லை.

புலம்புகிறாள் தலைவி ! யாரிடம் ? தோழியிடமா ? இல்லை ! தன் பூந்தோட்டத்தில் உள்ள அரும்புகளிடமும், அன்னப்பறவைகளிடமும் ! கல் மனது கொண்டவர் அவர். என்னை மட்டுமா…. உன்னையும் அல்லவா மறந்துவிட்டார்.

ஆனால், நாம் அவ்வாறல்லவே ! நம்மை அவர் மறந்தார் என்ற காரணத்தால் நாம் அவரை மறக்க மாட்டோமே ? – என்கிறாள்.

” அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்

நமை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால் ‘

( சிலம்பு )

தொடர்புக்கு : thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *