ஒளவை நடராசன் அவர்களின் நெடு நாள் இனிய நண்பர்,பேராசிரியர் கண.சிற்சபேசன் நூலுக்கு 8.1.2022 அன்று வழங்கிய. முன்னுரை
பூம்புகார் முதல் இமயம் வரை –
புதிய சுற்றுலா
புதுக்கோலம் வரைந்த புலமைத்திலகம்
ஒப்பற்ற தமிழ்க்காவியமாக விளங்கும் சிலப்பதிகாரம் தமிழுக்குப் பெருமை சேர்த்த முதல் காப்பியமாகும்.
பல நூற்றாண்டுகள் கடந்த நிலையில் இன்றும் மக்களால் போற்றப்படும் இக்காப்பியத்தில் இளங்கோவடிகளின் செழிப்பான மொழித்திறனைக் கண்டு இன்புறலாம்.
தன்னுணர்ச்சிப்பாக்கள் கொண்டு திகழ்ந்த சங்க காலத்திற்குப் பின்னர் சிலப்பதிகாரம் ஒரு புதிய காப்பியப் பாதையைத் தோற்றுவித்தது .
பொதுவாகக் காப்பியங்கள் அதில் இடம்பெறும் நாடகத் தலைவி அல்லது தலைவனின் பெயரால் அமைந்திருக்கச் சிலப்பதிகாரத்தில் அதில் வரும் திருப்புமுனைக்குக் காரணமான சிலம்பையே காப்பியத்தின் பெயராக அமைக்கப்பட்டது.
சிலம்பு பெண்ணுக்குப் பெருமை சேர்க்கும் உயரிய நோக்கு கொண்ட இனிய காவியம்.
தமிழன்னையின் திருவுருவத்தை அலங்கரிக்கும் “ சிலப்பதிகாரத்தை ” த்திறனாய்வு செய்து நூல்கள் பல வெளிவந்துள்ளன எனினும் , என் இனிய நண்பர் பேராசிரியர் கண.சிற்சபேசன் அவர்களின் “ பூம்புகார் முதல் இமயம் வரை ” எனும் நூல் சிலப்பதிகாரத் திறனாய்வு குறித்த எவரும் அணுகாத சிந்தனைக்குரிய ஒரு புதிய முயற்சி என்றே கூற வேண்டும்.
சமயம், சமூகம், அரசியல் சார்ந்த பல கருத்துக்களோடு தமிழர்தம் நாகரிகம், பண்பாடு முதலானவற்றை உள்ளடக்கிய கருவூலமாகத் திகழும் சிலப்பதிகாரத்தில், தமிழகத்தை ஆட்சி செய்த மூவேந்தர்களும் உண்டு.
சமண, பௌத்த, வைதிக நெறிகளும் உண்டு.
அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆய்ச்சியர், குறவர், பரத்தையர் எனப் பல இனத்தவர்களும் உண்டு.
இவற்றோடு சேர்ந்து “ பூம்புகார் முதல் இமயம் வரை ” எனும் இந்நூலில் என் இனிய நண்பரின் அனுபவங்களும் கற்பனைகளும் மிக உண்டு.
தமிழர்களிடம் வழக்கத்தில் இருந்த ஆடல், பாடல், கூத்து, இசைக்கருவிகள், அவற்றை இசைக்கும் முறைகள் யாவும் சிறப்பாக கூறப்பட்டுள்ள சிலப்பதிகாரத்தைத் திறனாய்வு செய்யும் முயற்சியின் விளைவாக உருவான இந்நூலில் சிலப்பதிகாரக் காட்சிகளோடு இன்றைய உலகில் நாம் நாளும் கடந்து வரும் காட்சிகளையும் பேச்சு வழக்கில் நாம் பயன்படுத்தும் சொற்களையும் ஒப்பிட்டு இந்நூலைக்கண்டு புதிய வடிவில் பேராசிரியர் புனைந்துள்ளார் .
எடுத்துக்காட்டாகச் சிலப்பதிகாரம் என்று தொடங்கினால் நம் நினைவில் முதலில் வருவது கோவலன் மரணத்திற்காக பாண்டிய மன்னரிடம் கண்ணகி நீதி கேட்கும் காட்சி தான்.
ஆனால், பாண்டிய மன்னன் கோவலனுக்கு அளித்த தூக்குத் தண்டனையை உணவகத்தில் உணவு பரிமாறப் பயன்படும் தூக்குடன் நகை மிளிர இணைத்து இந்நூலில் கற்பனையாக எழுதப்பட்டுள்ளது.
மதுரை தீப்பற்றி எரியும் காட்சியில் ஆசிரியரின் கற்பனையும் கொழுந்து விட்டு எரிகிறது என்றே கூற வேண்டும்.
கோவலன், கண்ணகி, மாதவி போன்ற கதை மாந்தர்களோடு இந்நூலாசிரியரும் அவர்தம் நண்பர்களும் கூட சிலப்பதிகாரக் கதை மாந்தர்களாகவே இந்நூல் முழுவதும் தொடர்கிறார்கள்.
” நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் ” என்று பாரதியாரால் போற்றப்பட்ட சிலப்பதிகாரத்தைத் திறனாய்வு செய்யும் முயற்சியில் இந்நூல் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கித் தந்துள்ளது.
புதிய சிந்தனையுடன் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ள நண்பர் திரு.கண.சிற்சபேசன் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.
நூலாசிரியர் இத்தகைய தமிழ்ப் பணிகளைத் தொடர்ந்தாற்றித் தமிழ்வளம் சேர்த்திட வாழ்த்திப் போற்றுகிறேன்.
என் தந்தையார் எழுதிய நற்றிணை உரைக்குப் பேராசிரியர் கண சிற்சபேசன் அணிந்துரை எழுதிய ஆற்றல் வாய்ந்தவர் .சிந்தனைக்
களஞ்சியமாக மிளிரும் பேராசிரியர் புலமைத்திறத்தை என் தந்தையார் பலமுறை பாராட்டியுள்ளார் .
பேராசிரியர் கண சிற்சபேசன் எழுத்து ,பேச்சு ,எண்ணம் ,
நகைச்சுவை ,கணக்கியல் எனப் பல்வேறு கலைகளில் சீரோங்கிய புலமைவானர் .
எதனையும் தன் புதிய போக்கால் அழகுறப் புனையும் கலைத்திலகம் பேராசிரியர் கண சிற்சபேசன் அவர்கள் பல்லாண்டு வாழ்க !
வாழ்த்துக்களோடு
ஒளவை நடராசன்
8 1 2022

Add a Comment