POST: 2022-02-12T10:45:19+05:30

கண்மதியன் கவிதைகள் தொகுதியிலிருந்து பக்கம்

எண் : 101 – 102 .

நாவேந்தர் அவ்வை நடராசன் !

மன்னவனே மன்னவனுக் கும்மேல் போற்ற
மன்னரவை உயர்ந்து நின்ற தமிழ்மூதாட்டி
அன்றிருந்த அறிவார்ந்த அவ்வைப் பாட்டி !

அரசனையும் வாழ்வித்தாள் தமிழ்ப்பால் ஊட்டி !

தென்பொதிகை மலையிருந்து வீசும் தென்றல்
தேகசுகம் சேர்ப்பதுபோல் இலக்கியத்தை
நெஞ்சுசுகம் சேர்த்திட்ட இந்நாள் அவ்வை
நாவேந்தர் அவ்வைநட ராசன் அன்றோ ?

அவ்வையார் குப்பமெனும் தமிழ்வளர்த்த
அவ்வைபாட்டிப் பெயரினிலே அமைந்த ஊரில்
செவ்வானம் உதித்தெழுந்த கதிரைப் போலச்
செந்தமிழைச் செழிப்பாக்க இவரின் தந்தை
அவ்வை.சு. துரைசாமிப் பிள்ளை தோன்றி
அன்னைத்தமி ழுக்கரும்பணி ஆற்ற லானார் !
சவ்வாது மணம்போலத் தமிழின் மேன்மை
தரணியிலே மணந்திட ஓர் மகவும் ஈன்றார் !!

சங்ககால அவ்வையாரைக் கண்டோ மில்லை !
சமகால அவ்வையார் இம் மகவே அன்றி
இங்குவேறெ வருமில்லை ! இவரின் தந்தை
இம்மண்ணில் என்றென்றும் நிலைத்து நிற்கும்
ஐங்குறுநூறு புறுநானூறு நற்றி ணைக்கும்
அரும்உரை கண்ட அறிஞர் கோவே ! மைந்தர்
மங்கிடாப் புகழுடைஅவ் வைநட ராசன்
நடமாடும் பல்கலைக்கழகத்தின் நாவே !

பட்டிமன்றம் என்றாலே தூக்கம் கொள்ளும்
பாட்டிமன்றம் என்ற நிலை மறைந்து போக
பட்டிமன்றம் நகைச்சுவைக்கே விருந்து வைக்க்கும்
பட்டாசு மன்றமாக மாறு தற்குக்
கட்டியமாய்த் திகழ்ந்ததிவர் நாக்கு ! நெஞ்சைக்
கட்டிப்போட்டதிவரின் சொற்பெ ருக்கிங்(கு)
எட்டாத உயரத்திற் கிவரை ஏற்றி
இமயத்தின் உச்சிக்கே சென்ற போக்கு !

வாரியர்போல் அவ்வைநட ராசன் இங்கே
வண்டமிழ்த்தேன் வண்டாகி அமிழ்தத் தேனை
வாரிவாரி வழங்கியதைப் பருகத் தானே
வங்கக்கடல் அலைகள்போல் மக்கள் வந்தார் !
‘மாரியெனக் கைத்தட்டல் மழையும் பெய்தே
மாவறிஞர் நெஞ்சமெலாம் நனையச் செய்தார் !
‘கூரறிவால் அரசுசெய லாள ராகிக்
குன்றிலிட்ட விளக்கெனவே தமிழ்வளர்த்தார் !

தஞ்சைத்
தமிழ்ப்பல்கலைக்கழகத்தின்
தரமுயர்த் தினார்துணை வேந்த ராகி !
நெஞ்சையள்ளும் இராமாயணப் பொழிவு கள்தாம்
நினைவுவிட்டு அகலாத ‘ கம்பர் காட்சி ‘
மண்புகழும் நூலாக மலர்ந்த தன்று !
மகுடத்தின் மகுடமாக விளங்கு தின்று !
வண்டமிழை நாவேந்தி வான்புகழ் சேர்த்த
நாவேந்தர் அவ்வை நட ராசன் வாழி !

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *