POST: 2022-02-10T11:55:46+05:30

உகரம் உசேன் எங்கே?

நேற்று முன்தினம் கூட உகரம் இதழைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.

எதிர்பாராதது என்றால், எள்ளளவும் நினைக்கவே முடியாதது நேர்ந்திருக்கிறது.

மதுரை தியாகராசர் கல்லூரியைப் போல, கலை வளரும் தலைநகரமாகிய சென்னை மாநகரில், அந்நாளில் புகழ் பரப்பிய புதுக் கல்லூரியில் தமிழ் வளர்த்து, மாணவர் நெஞ்சங்களில் தமிழைப் பதியம் போட்ட நாளிலிருந்து, எண்ணினால் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக, உவமைக் கவிஞரும், நானும் புதுமைக் கவிஞர் டாக்டர் உசேனுடன் பல்வேறு பூங்காக்களுக்குச் சென்று வந்திருக்கிறோம்.

மணிக்கணக்கில் தமிழ் பற்றிப் பேசி மகிழ்ந்திருக்கிறோம்.

ஏதேனும் கூட்டம் நடக்குமென்றால், நாங்கள் மூவரும் ஒன்றாகப் போய்ச் சென்று திரும்புவது வழக்கம்.

புலமைக் குவியல்களைப் படைத்த கனிமரமாவார் புலவர் உசேன்.

இம்மரத்தில் படர்ந்த கொடிகளில் பூக்கும் அரும்புகளாக அவர் தம் கவிதைகள் மணம் வீசியதை நான் பல மேடைகளில் பாராட்டியுள்ளேன்.

கடந்த மூன்றாண்டுகளாக அவர் நெருங்கிப் பழகினார்.

நான் வேண்டிய படி உவமைக் கவிஞர் உறவு என்று தொடர்ந்து எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்டேன்.

அந்த வகையில் நான் எழுதுகிறேன் என்றார்.

கவியரசர் நீலமணிக்கும் கடிதம் எழுதி அவருடைய கவிதைகளை வேண்டிப்பெற்று வெளியிட்டதால் அவ்வப்போது பெருமகிழ்ச்சி அடைவார்.

வணிகத் தொடர்பான கூட்டங்களை சில நேரங்களில் நடத்தினார்.

உகரம் இதழுக்கு விளம்பரம் இல்லையென்றால், மூச்சுக்கூட விட முடியவில்லையே என்று பலமுறை மனம் வெதும்பினார்.

திங்களுக்கு ஒருமுறை பழக்கூடைகளோடு வருவார்.

திடுமென உடல் நலமில்லாமல் அவர் படுத்தார் என்பதை நம்ப முடியவில்லை.

மாண்புமிகு அமைச்சர் அவர்களின் கடிதத்தைப் பெற்று அவர் தக்க சிகிக்சை பெற்று வந்ததாக நண்பர்கள் சொன்னார்கள்.

மாசில்லாத மாணிக்கம்தான் மாண்புமிகு அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்களை நான் எண்ணி எண்ணி மகிழ்வதுண்டு.

புலவருக்கு உடல் நலமில்லை என்றதும் அவர் உடனே கடிதம் கொடுத்தார் என்பதைக் கேட்டு நான் மகிழ்ந்தேன்.

எவ்வளவு முயற்சி செய்தும் சிகிச்சை தான் வென்றது.
அவர் உயிர் பிரிந்தது!

எண்ணிப் பார்க்க முடியாத ஏக்கத்தில் அவர் மறைவை நான் எழுத வேண்டியிருக்கிறது!

துயரோடு
ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *