POST: 2022-01-09T12:03:03+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 91

தாயிற் சிறந்த கோயிலுமில்லை

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு

மாநிலக் கல்லூரியில் இளங்கலைத் தமிழிலக்கியம் சேர்ந்தபோது,
என் பேராசிரியர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அப்பா யார்? என்று நன்றாகத் தெரியும்.

வீட்டிற்கு வந்த என் நண்பர் இரவிசங்கருக்கு மட்டும் தான் என் அன்னையார் யார் என்று தெரிந்து பெருமிதமடைந்து “ஒருநாள் வரும் அருள், என்னுடைய பிள்ளைகளை அம்மாவை மாதிரி மருத்துவம் பயில வைப்பேன்.” என்று 1985-லேயே மாணவராக இருந்தபோது அவர் குறிப்பிட்டார்.

அவ்வாண்டில் அப்பாவின் இனிய நண்பர் பொறிஞர் பெருந்தகை பக்தவத்சலம் அம்மாவைப் பற்றி நுணுக்கமான கட்டுரையை வரைந்து அம்மாவின் ஒளிப்படத்தோடு தான் நடத்தி வந்த ‘கருணீகர் நலவாழ்வு’ (ஆகத்து / 1986) இதழில் முகப்புக் கட்டுரையாக வெளியிட்ட பொழுது மாநிலக் கல்லூரி நண்பர்கள் பலரிடம் அக்கட்டுரையை நான் காட்டிய பொழுது பெருமகிழ்ச்சியடைந்தார்கள்.

“புகழ்பெற்ற கவிஞர் இக்பாலுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப் பெற்றதும், அவரைத் தேடி வந்தோருள் சில நோயாளிகளும் இருந்தனர்.

“நீங்கள் டாக்டராகி விட்டீர்களாமே; என் குழந்தையின் நீண்ட நாள் நோயை நீங்கள் தான் தீர்த்துவைக்க வேண்டும்” என்று கவிஞரை அக்காலப் பாமர மக்கள் வேண்டியபோது அவர்கள் அறியாமைக்காக இக்பால் பரிதாபப்பட மட்டுமே முடிந்தது.

‘தான் உடற்பிணி தீர்க்கும் மருத்துவரில்லை’ என்பதை அவர்கள் நம்ப வைப்பதற்குள் கவிஞரின் பாடு போதும் போதுமென்றாகி விட்டது!

டாக்டர் ஒளவை நடராசனை இன்று யாரேனும் அவ்வாறு தவறாக அணுகினால் அவர் கவலையே படமாட்டார்!

தம் அருமைத் துணைவியாரும், குழந்தை நல மருத்துவருமான டாக்டர் திருமதி தாரா நடராசன் அவர்களை அன்போடு அழைத்து, பிணியால் அவதிப்படும் ஆர்வலர்களுக்கு உரிய சிகிச்சையை அளித்துதவுமாறு உடனே பரிந்துரை செய்வார்.

தமிழறிஞர்களின் பிள்ளைகள் இந்நாளில் மருத்துவத்துறையில் ‘டாக்டர்’களாகி உள்ளார்களே தவிர, தமிழறிஞர் ஒருவரின் துணைவியார் டாக்டர் என்ற பெருமையைப் பெறும் பெண்மணி தாரா நடராசன் அவர்களாவர்.

கருணீகர் குலத்தின் முதல் பெண் டாக்டர் என்ற பெருமையும் பெறும் டாக்டர் தாரா நடராசன் அவர்கள், இன்னும் பல தனித் தன்மைகளைத் தன்னகத்தே கொண்டவர்.

ஒரு டாக்டருக்குரிய பகட்டு, ஆடம்பரம் முதலியவற்றை அவரிடம் பார்க்க முடியாது.

பொறுமையும், எளிமையும், தாயன்பும் நிறைந்த ஒரு சகோதரியையே, டாக்டர் தாரா நடராசன் அவர்கள் உருவில் காணலாம்.

காலை எட்டு மணிக்கெல்லாம் மருத்துவமனைக்குச் சென்று குறைந்தது ஆறு மணி நேரம் அன்றாடம் எண்ணற்ற குழந்தைப் பிணிகளுக்குச் சிகிச்சை செய்கிறார்.

பிற்பகலில் நூலகம் அல்லது மருத்துவக் கல்லூரிக்குச் சென்று மருத்துவ மாணவர்களுக்குக் கற்பித்து, வீடு திரும்பியதும் மாலை முழுதும் ஒரு குடும்பத் தலைவியின் பொறுப்புகளை வீட்டிலிருந்து நிறைவேற்றுகிறார்.

மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சிப் பேராசிரியர் (Reader) என்ற நிலையில், மறுநாள் பாடம் நடத்த, வீட்டிலிருந்தபடியும் பல மணிநேரம் இவர் படிக்க வேண்டியுள்ளது.

இவ்வாறு வேகமாக ஓடும் நேரத்திற்கு ஈடுகொடுத்து, பொது வாழ்க்கையிலும் அமைதியாக ஈடுபடும் இவரது 52 ஆண்டுக்கால வாழ்க்கையை ஒரு சாதனை என்று தாராளமாகக் கூறலாம்.”

கண்ணன், அருள், பரதன் ஆகிய மூவரும் பிறந்த பொழுது, அம்மா எங்களுக்காகப் பாடிய தாலாட்டுப் பாடல் என்றென்றைக்கும் எங்கள் தலைமுறைக்குப் பாடப்பட்ட மிகச் சிறந்த பாடலாகும்.

அப்பா வேடிக்கையாக் குறிப்பிடுவார், ‘இப்பாடல் தாராவின் பிள்ளைகளுக்கு மட்டும் பாடப்பட்டதல்ல, அவர்களுடைய பிள்ளைகளுக்கும் தலைமுறையினருக்கும் எழுதப்பட்ட பாட்டாகும்’ என்பார்.

“கருத்தே புகுந்து கதிகாட்டும் கண்ணே வருக !

கருத்தே புகுந்து கதிகாட்டும்
கண்ணே வருக,
மெய்ஞ்ஞானக்
கரும்பே வருக,
கருணைபொழி
காரே வருக,
ஆனந்தப்
பெருக்கே வருக,
யாங்கள் பெறும்
பேறே வருக,
மறைசொல்கிளிப்
பிள்ளாய் வருக,
பிறங்கு தெய்வப்
பெம்மான் வருக,
குறமடந்தை
தருக்கே வருக,
மிடிய கற்றும்
தருவே வருக,
மன்பதைக்கோர்
தஞ்சே வருக.
எமையளிக்கும்
தாயே வருக
பவப்பிணிக்கு
மருந்தே வருக,
சமரபுரி
வாழ்வே வருக வருகவே

மறையின் சிரமெய்ப் பொருளான
வள்ளால் வருக வருக ”

என்னைப் போன்ற பிள்ளைப் படகுகளுக்கு அம்மா தான் கலங்கரைவிளக்கமாக ஒளிர்ந்தார்.

இவ்வளவு நாட்களாக அவர்களுடன் நாள் தவறாமல் பேசிக்கொண்டு இருப்பது தான் எனக்கு ஒரு மாபெரும் பொழுதுபோக்காக இருந்தது.

அம்மா எங்களுக்கெல்லாம் சின்ன வயதில் இருந்தே ஞானப் பெருவிளக்காகத் திகழ்ந்தார்கள்.

அவர்கள் தொட்டதனைத்தும் பொன்னாகும்.

எங்கள் மூவருக்கும் அவர்கள் செய்த பணி அளப்பரிய பணியாகும்.

அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பது தான் அம்மாவின் விழைவாகும்.

நல்லொழுக்கத்துடன் நாடு போற்றும் நம்பிகளாக வாழ வேண்டும் என்றுதான் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.

அம்மாவின் மேன்மை குறித்த ஓர் ஆங்கிலக் கவிதை உண்டு.

அக்கவிதையின் தமிழாக்கம் அம்மாவின் பெருமிதத்தைச் சுட்டிக் காட்டுகிறது.

அன்னையே உன்னை வணங்குகிறேன்..
அன்னையே உன்னை வணங்குகிறேன்..
அன்னையே உன்னை வணங்குகிறேன்..
அன்னையே உன்னை வணங்குகிறேன்..

அளவற்ற பாசமும் நேசமும் கொண்டவர்!
சந்தனத்தைப் போல் பொலிவு மிக்கவர்!
அளவற்ற பாசமும் நேசமும் கொண்டவர்!
சந்தனத்தைப் போல் பொலிவு மிக்கவர்!
நிலவைப் போல் அமைதியானவளே!

அன்னையே உன்னை வணங்குகிறேன்.
அன்னையே உன்னை வணங்குகிறேன்.
ஒளிகொடுத்து எம்மை மகிழ்விப்பவர்!
பூப்பூத்துக், காய்காய்த்துக் குலுங்கும் அருமையான மரங்களைக் கொண்டவர்!
என்றென்றும் புன்னகை தவழும் முகத்தவர்!

கனிவாகப் பேசுபவர்!
மகிழ்ச்சிகளையும் நல்லாசிகளையும் வாரி வழங்குபவர் !
அன்னையே !
அளவற்ற பாசமும் நேசமும் கொண்டவர்!
சந்தனத்தைப் போல் பொலிவு மிக்கவர்!
நிலவைப் போல் அமைதியானவர்!

அன்னையே உன்னை வணங்குகிறேன்.
அன்னையே உன்னை வணங்குகிறேன்.
அன்னையே… அன்னையே… அன்னையே…
உன்னை வணங்குகிறேன்.

அன்னையே உன்னை வணங்குகிறேன்.
அன்னையே உன்னை வணங்குகிறேன்.
——————————-

பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (15)

திரு. கா. கோவிந்தன் ஐங்குறுநூறு மூலமும் உரையும் என்ற நூலைப் பதிப்பிக்கும் காலத்துப் பட்ட இடர்ப்பாடுகளை அவரது முன்னுரை தெரிவிக்கிறது.

“நாங்கள் செய்யாறு போர்டு உயர்தரக் கலாசாலையில் கல்வி பயின்று வரும் பொழுது ஆசிரியர் திரு. ஔவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் இவ்விளக்க உரை எழுதி வரக்கண்டோம்.

அவர்கள் எங்களுக்குத் திருக்குறளும், தொல்காப்பியச் சேனாவரையமும் கற்பித்து வருகையில் இடையிடையே இந்நூல் செய்யுள்களின் பொருணலங்களை எடுத்துக் கூறுவர்.

யாங்களும் கேட்டுப் பெருமகிழ்வு கொள்வோம் மேலும் நாங்கள் மதுரை தமிழ்ச்சங்கப் பரீட்சைக்குப் படிக்க விரும்பிய காலத்தில் பரீட்சைக்காக வரையறுக்கப்பட்ட மருதப் பகுதியின் உரையினைப் படிக்க நேர்ந்தபோது இவ்வுரை எங்களுக்குப் பேரின்பம் பயந்தது.

இன்னோரன்ன நலன்களால் பேரூக்கம் கொளுத்தப்பெற்ற யாங்கள் இதனை வெளியிடுவது தக்கதெனத் துணிந்து இவ்வெளியீட்டுச் செயலை மேற்கொள்ளத் தொடங்கினோம்.

இக்கால நிலையில் நம் பல்கலைக்கழகங்கள் இன்னோரன்ன முயற்சிகளில் பொருளுதவி புரிவது கண்டு நம் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கும் தமிழ்நாட்டு மடாதிபதிகளும் இத்துறையில் வேண்டும் உதவி புரியுமாறு விண்ணப்பித்தோம்.

உண்மை உழைப்பினைக் கண்டு ஊக்கும் நன் மாண்பு இக்காலத்திற்கு இல்லை என்பது காட்டுவதுபோல எம் முயற்சிகள் பயன் தராவாயின.

இனியேனும் அறிஞர் உலகம் கண்டு இப்பணி முற்று பெறுவதற்கான வேண்டும் உதவியைச் செய்யும் என்னும் துணிவு கொண்டு முதற்பகுதியை வெளியிடத் துணிந்தோம்.

ஒருவகை ஊதியமும் கருதாது தமிழ்ப்பணி ஒன்றையே பொருளாகக் கொண்டு முயலும் எமது முயற்சியினை ஆதரிக்குமாறு தமிழுலகத்தை வேண்டுகின்றோம்.”

ஔவை அவர்களின் முன்னுரை ‘தமிழ்த்தாய் வாழ்க’ எனத் தொடங்குகிறது.

1938ல் இது ஒரு
வெற்று முழக்கம் அன்று;
ஆயிரம் பொருள் பொதிந்துள்ள வீரமுழக்கம்.

அக்காலத்தில் அதை முழங்குதற்கும் அஞ்சா நெஞ்சுரம் வேண்டும்.

ஔவை அவ்வாறு முழங்கியதால் ஆசிரியராகத் தாம் பணியாற்றிய 11 ஆண்டுகளில் 10 பள்ளிகளுக்குப் பந்தாடப்பட்டார்கள்.

ஔவை அவர்களே கூறியதுபோல்

“அழுக்காற்றுள்ளமும்,சுயநலச் செருக்கும் தமிழ் வளர்ச்சிக் கண் பொறாமைக் குறிப்பும் நிலவும் காலக் கேட்டால்” அறிஞர் உலகமே வியக்கும் வண்ணம் 1938 இல் நடைபெற்ற தமது தாய் நிலையம் கரந்தைத் தமிழ்ச் சங்க வெள்ளிவிழாவில் அவர்கள் கலந்து கொள்ள இயலவில்லை.

அவ்விழாவில் அறிஞர் பொழிவுகளைக் குறிப்பெடுத்துத் தமிழ் பொழிலில் வெளியிடப்பட வேண்டும் என அவர்களுக்கு இட்ட பணியை நிறைவேற்ற முடியாது போயிற்று இருப்பினும் விழா முடிந்த நான்காம் நாள் அவை அவர்கள் வந்து வெள்ளிவிழா ஒப்பனை கோலத்தைக் காணும் வரையில் தலைமையாசிரியர் சிவ குப்புசாமி அவர்கள் அதைக் கலக்கவில்லை.

என் வாழ் தமிழ் பயின்ற மாணவர் திரு கா கோவிந்த முதலியார் என்பவர் யான் எழுதி வைத்த விளக்க உரையினைக் கண்டு 200 வெண்பாக்கள் தந்து அச்சிட வேண்டும் என நயந்தனர்.

சில பக்கங்கள் அச்சாகி ஏதும் தமிழறிஞர் பலருக்கு அனுப்பி அவர்தம் மனக் குறிப்பறியத் தொடங்கினேன்.

அவ்வுரையைச் சுருக்குவதும், பெருக்குதலும் இன்றிச் சென்றாங்கு விடுவது நலம் எனக்கூறித் தெருட்டினர்.

ஒவ்வொரு பகுதியாக வெளியிடுவது தக்கது என அன்பர் பலர் விரும்பினர் .

அவ்வண்ணமே முதற்பகுதி ஆகிய மருதம் மட்டில் இப்போது வெளியிடப்படுகின்றது.
(ஔவை முன்னுரை)

“புலவரும் செல்வரும் ஆகிய சிலர் இடையூறுகள் செய்து இத்துறையில் இன்றும் யான் விலகிக்கொள்ளத் தகுவன பல செய்யவும் இப்பணியின் இன்று விலக வாறு என் உள்ளிருந்து ஊக்கம் கிட்டும் மேலே கூறிய பெருந்தகைகள் இன் நல்லுறவும் காண்பித்தும் பிறையணிச் செஞ்சடைப் பெருமான் உமை அமர்ந்து விளங்கும் ஒருவன் திருவடியை மனம் மொழி மெய்களால் வணங்குகின்றேன்.”

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளை அவர்களுக்கும் ,ஆசிரியப் பெருமானாகிய கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை அவர்கட்கும் இந்நூலை உரிமையாக்கிய செய்தி முன்னரே கூறப்பட்டது.

ஐங்குறுநூறு மூலமும் விளக்க உரையும் 1957-58 உரைவேந்தர் இன் விளக்க உரையுடன் கூடிய ஐங்குறுநூற்றில் மூன்று தொகுதிகளாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

முதல் தொகுதியில் மருதமும் நெய்தலும் இரண்டில் குறிஞ்சியும் பாலையும் மூன்றில் முல்லையும் உள்ளன.

நூலின் இறுதிப் பகுதியில் உள்ள அருஞ்சொல் அகராதி அரும்பொருள் அகராதியும் ஆய்வாளர்கள் பயன் கொள்ளத்தக்கன

ஒரு பாட்டுக்குப் பழைய உரையும் ஒளவை உரையும் அமைந்துள்ளதைக் காணலாம்
(எ-டு)

1. வாழி ஆதன் வாழி அவினி
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
எனவேட் டோளே யாயே யாமே
நனையக் காஞ்சி சினைய சிறுமீன்
யாண ரூரன் வாழ்க
பாணனும் வாழ்க வென வேட்டோமே”

புறத்தொழுக்கத்திலேயே நெடுநாள் ஒழுகி “இது தகாது” எனத் தெளிந்த மனத்தனாய் மீண்டு, தலைவியொடு கூடி ஒழுகா நின்ற தலைமகன் தோழியொடு சொல்லாடி “யான் அவ்வாறொழுக நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்கு அவள் சொல்லியது.

பழைய உரை

“காவல் பொருட்டு அரசன் வாழ்க; விருந்தோம்பல் பொருட்டு நெற்பல பொலிக;
இரவலக்கு ஈதற் பொருட்டுப் பொன்மிக உண்டாகுக”

என யாய் இல்லத்திற்கு வேண்டுவனவே விரும்பி ஒழுகியதல்லாது பிறிது நினைத்திலள்.

அவள் இத்தனை நாளாக நீ ஒழுகிய ஒழுக்கத்தால் நினக்கும் நின் ஒழுக்கத்திற்குத் துணையாகிய பாணனுக்கும் தீங்கு வரும் என்று அஞ்சி, யாணரூரன் வாழ்க பாணனும் வாழ்க என விரும்பினேம் யாங்கள் என்றவாறு”

தலைவியை யாய் என்றது புலத்தற்குக் காரணமாயின உளவாகவும் அவை மனங் கொள்ளாத சிறப்பை நோக்கித் தோழிகள் யாங்கள் என உளப்படுத்தது ஆயத்தாரை நோக்கி எனக்கொள்க.

பூவும் புலாலும் ஒக்க விளையும் ஊரன் என்றது குல மகளிரைப் போலப் பொது மகளிரையும் ஒப்புக்கொண்டு ஒழுகுவான் என்பதாம்.

ஆதனவினி என்பான் சேரமான்களிற் பாட்டுடைத்தலைவன்”

இவரை யாய், யாங்கள், ஊரன், ஆதனவினி எனும் நான்கு சொற்களுக்கு மட்டும் பொருள் கூறி அமைகிறது.

ஔவை உரை

ஆதன் வாழ்க;
அவன் குடியிற் பிறந்த அவினி வாழ்க;
நெல் மிக உண்டாகுக என்று தலைவி இல்லறமே நினைந்தொழுகினாளாக.

யாங்கள் பூக்களை நிறைய உடைய காஞ்சியும் சினைகளையுடைய சிறு மீன்களும் உடைய ஊரன் வாழ்க,

அவருக்கு வாயிலாகும் ஆண்மகனும் வாழ்க என்று விரும்பி உறைந்தேம் என்றவாறு.”

உரை விளக்கம்

அவினி என்பான் சேரமான்களில் ஒருவன்.

ஆதன் என்பது சேர மன்னரும் சிலருடைய குடிப்பெயர் என்பதைப் பிற இலக்கிய மேற்கோள் சுட்டி உறுதி செய்தல்.

“எரிவுடத்துலையா செறிசுரை வெள்வேல் ஆதன் எழினி” (அகம் 216) என்றும்,
“அந்துவஞ் சாத்தனும் ஆதன் அழிசியும்” (புறம் 71)
என்றும் வருவன காண்க.

வளரும்…

– முனைவர் ஔவை அருள்,

தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *