POST: 2021-11-21T10:23:14+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 84

விடுதலை இனத்தின் வெற்றி முரசு

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு

மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழிலக்கியம் (1985-88) பயிலும் பொழுது தமிழுலகத்தில் ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ்ப்புதின ஆசிரியர் அகிலனின் திருமகள் ஆனந்தி, திரைத்தயாரிப்பாளர் கோவை செழியனின் மகன் செம்பியன், இலியது காவியத்தை மொழிபெயர்த்த பெருந்தகை ஆ.கு. ஆதித்தர் பெயரன் குகன், மாநிலக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் இராஜாராமன் மகன் பூம்பொழிலன், பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் மகன் முத்துராமலிங்க ஆண்டவர், திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.கே.இராஜு மகன் இரவிசங்கர், புலவர் புலமைப் பித்தன் மகன் புகழேந்தி போன்ற நண்பர்கள் அறிமுகமாயினர்.

பெருங்கவிக்கோவும், புலவர் புலமைப் பித்தனும் எந்தையாரின் நெருக்கமான நண்பர்களாவார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

அரசவைக் கவிஞர் புலவர் புலமைப் பித்தனைப் (06.10.1935 – 08.09.2021) பெரியப்பா என்ற அடைமொழியுடனே அழைத்து மகிழ்வேன்.

அவருடைய சொந்த தயாரிப்பில் வெளியான திரைப்படம் ‘சொர்க்கத்தின் திறப்பு விழா’ என்ற படத்தின் சிறப்பு முன்காட்சியைப் பெற்றோர்களுடன் இளங்கலை மூன்றாமாண்டு பயிலும்போது ‘உட்லேண்ட்ஸ்’ திரையரங்கில் கண்டு வந்தபொழுது என் அம்மா, அப்பாவிடம் ‘நம்முடைய புலவரா, இப்படியெல்லாமா படமெடுப்பது? நீங்கள் யாராவது சொல்லக் கூடாதா?’ என்று உரிமையாகச் சொன்னபொழுது,

புலவரும் அப்பாவிடம், ‘அம்மா அம்மாதான். அவருடைய மருத்துவ அறிவுக்கு ஈடு இணையில்லை. என்னுடைய பிள்ளைகளையெல்லாம் மருத்துவம் பார்த்த மருத்துவத் தாயல்லவா! நான் என்ன செய்வது? வணிகச் சுழலில் சிக்கியதால் இவ்விளைவுகள் உண்டாகி விட்டன.

உங்களுக்குத் தெரியாதா நான் பட்ட தொல்லைகள்.

ஏற்கெனவே ஒருமுறை நான் பெற்ற வங்கிக்கடனுக்கு நீங்கள் பிணையொப்பமிட்டு, என்னால் பணம் கட்ட இயலாத சூழலில் தாங்கள் அல்லலுற்றது நினைவிலில்லையா?’ என்று உருக்கமாக அப்பாவிடம் சொன்னதை நான் அருகிலிருந்து கேட்டது என் நெஞ்சில் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளது.

புலவர் புலமைப் பித்தன் தான் திரைப்படங்களில் பாடல் எழுத வந்தபோது,
‘ஐ.ஏ.எஸ். படித்து விட்டு பியூன் வேலைக்கு வந்ததற்குச் சமமான ஒரு விபத்து இது” என்று அவர் சொன்னது

‘அம்மிக்கல்லைச் செதுக்குவதற்கு சிற்பியா தேவை?’ என்ற கவிக்கோவின் வரிக்கு நிகரான தொடராகும்.

எந்தச் சூழ்நிலைக்கும் இலக்கியத் தரமாகவே பாடல்கள் எழுதுவதில் முன்னோடி என்று இவரைச் சொல்லலாம். ”

பிறவி கம்யூனிஸ்ட் நான்.

ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கப் போராடும் யுத்தக்காரன்.

சமூக அநீதி கண்டு பொங்கும் போராளி.

பாரதி, பாரதிதாசன் வழியில் வந்த தொடர்ச்சி.

பொது உடைமையும் சம உரிமையும் விரும்புபவன்.

சினிமாவில் பாட்டெழுதுவது என் லட்சியம் அல்ல.

பாடலாசிரியன் என்பது மட்டுமே என் முகவரி அல்ல.

என் முகங்களில் ஒன்று” என்று பெருமிதமாகத் தன்னைப் பற்றி அனைவரிடமும் சொல்வார்.

அஞ்சா நெஞ்சமும், அரிமாத் தோற்றமும் கொண்டு, நெஞ்சார்ந்த கவிதைகளை நெருப்புப் பொறிகளாக உதிர்த்த நிறைபுலவர் புலமைப் பித்தன் உடுத்துகிற சட்டை-வேட்டி, முறுக்கேறிய மீசை, வெடித்துக் கிளம்புகிற சிரிப்பு என அத்தனையும் வெண்ணிலாவைத் தோல் உரித்தது போலிருக்கும்.

‘ஒரு பைத்தியக்காரன் பாடுவது போல் எழுதுங்கள்!’ என்று அவரிடம் சொன்ன போது,

மாம்பலம் பவர்ஹவுஸ் அருகில் ஒரு பெட்டிக்கடை வாசலில் நின்றுகொண்டே ‘குடியிருந்த கோயில்’ படத்துக்காக அவர் எழுதிய பாடல்தான்,

‘நான் யார்? நான் யார்? நீ யார்?
நாலும் தெரிந்தவர் யார்- யார்?’

புலவரின் பாடல்களின் மீது புரட்சித் தலைவருக்கு மயக்கமே உண்டு.

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே – அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே.

என்கிற, ‘நீதிக்குத் தலைவணங்கு’ பாட்டு வரிகளை குடும்பநலத் துறை சார்பாக மாநிலம் முழுக்க எழுதச் செய்தது, அரசின் மரியாதை என்று பெருமிதமாகச் சொல்வார்.

இந்தியா புண்ணிய பூமியா? என்ற ஆதங்கத்தில் எழுதிய பாடல்தான்,

“புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை”

இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் ஒருமுறை தனக்கு மிகவும் பிடித்த பாடல் எது? என்று கேட்ட பொழுது, அவர் சொன்ன பாடல்,

‘சாதி மல்லிப் பூச்சரமே..’ பாட்டின் சரணத்தில்,

எனது வீடு எனது வாழ்வு
என்று வாழ்வது வாழ்க்கையா?

புலவர் புலமைப் பித்தனுக்கு எப்பொழுதும் ஒரு அழல் இருந்துகொண்டே இருக்கும்.

சிலபொழுது எரிந்து கொண்டும், சிலபொழுது கனிந்து கொண்டும் இருக்கும்.

நாத்திகராக புலவர் இருந்தாலும், ‘பாரதி’ திரைப்படத்தில்

‘எங்கும் எதிலும் இருப்பான் அவன் யாரோ?’

என்கிற பாடல் பெற்ற வரவேற்பை அனைவரும் அறிவர்.

என்னிடம் பரிவாகப் பேசும் பாங்குடைய புலவரை ஓரிரு முறை நண்பர் பார்த்திபனுடன் சந்தித்து அளவளாவியுள்ளேன்.

ஈழத் தமிழர்கள் மீது மிகுந்த பரிவும் நெகிழ்ச்சியும் பொழியும் அண்ணலாகவும் இலங்கை போல் இதயம் கொண்ட இன உணர்வு போராளியாவும் திகழ்ந்தார்.

ஓரிரு முறை அவருடைய பாடல்கள் அனைத்தையும் ஒரு தொகுப்பாக வெளியிட வேண்டும் என்று பல நண்பர்கள் தன்னிடம் பகிர்ந்து கொண்டதை ஏற்காமல், சிரித்த வெள்ளை மீசை வைத்த குட்டிப் பெரியாராகத் திகழ்ந்தார் எங்கள் புலவர் என்று நண்பர் பார்த்திபன் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

அதேபோல பார்த்திபன் சண்முகம் புலவரைப் பற்றிப் பெருமிதமாக என்னிடம் மேலும் சொன்னது,

‘பலர் தங்கள் பேனா முள்ளிலேயே காலைத் தைத்துக் கொள்கிறார்கள், இவர் மட்டும்தான் தன் பேனா முள்ளாள் சமூக இழிவைத் தைத்துக் காட்டிய பாவேந்தரின் பாட்டுக் குயில்’ என்பார்.

புலவருக்கு முற்போக்குதான் பொழுது போக்காகும்.

‘எங்களைப் போன்ற இளைஞர்களின் இரண்டாம் தாய் புலவர்தான்’ என்று மாநிலக் கல்லூரி அரங்கில் அவரை அறிமுகம் செய்ததை நினைந்து மகிழ்கிறேன்.

——————————-
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (8)

“பாழான இந்தப் பழந்தமிழ் ஏடுகளைத் தேடித்திரிந்து ஆராய்ந்து கழித்த உங்கள் காலத்தை, பி.ஓ.எல், எம்.ஓ.எல் என்ற பட்டங்களைப் பெறுவதற்குக் கழித்திருந்தால் உங்கள் வாழ்க்கை பொருள்நிலையில் மிக்க சிறப்புற்றிருந்திருக்கும்” என்று என் நண்பரொருவர் என் சங்கவெளியீடுகளை நோக்கி என்பால் கொண்ட உண்மையன்பினால் கழறிக் கூறினார்.

பொருள்நிலை நோக்கி அவர் கூறிய பொருளுரை உண்மையுரையே.

அதனை எண்ணி ஒருகால் உள்ளம் அலையினும் பிற எக்காலத்தும் இந்த இனிய தமிழ்ப்பணியிலே அதனை உறைப்புற்று நிற்பித்து இதனை இவ்வளவில் முற்றுவித்த தமிழ்த்தாயின் தண்ணிய திருவருளையே வியந்து பரவுகின்றேன்.”
(ஒளவை, புறநானூறு, பகுதி 2, முகவுரை).

எந்நிலையிலும் கொள்கைகளை விட்டுக்கொடுப்பதோ, ஆய்ந்து தெளிந்த கருத்துக்களை மாற்றிக்கொள்வதோ, வல்வழக்காடுவாரை வெல்லாமல் விட்டுவிடுவதோ அவரது இயல்பன்று.

எந்த நூலையும் நுனிப்புல் மேயும் பழக்கம் அவருக்கில்லை;

அவையஞ்சாமையும், உண்மையென உணர்ந்ததை வன்மையோடு நிலைநிறுத்தும் உறுதியும், பிழை கண்டபோது அஞ்சாமல் எடுத்துரைக்கும் துணிவும் உடையவர்.

‘தன் கடன் அடியேனையும் தாங்குதல், என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்பதை ஒழுகலாறாகக் கொண்டு ஆரவாரமின்றி அமைதியாக அவர்போல் தமிழ்ப்பணிபுரிந்தவரைக் காண்பது அரிது.

மனப்பாட நூல்கள்
“சங்கத்தொகை நூல்கள், திருக்குறள், பெருங்காப்பியங்கள், சிறுகாப்பியங்கள், கம்பராமாயணம், பெரியபுராணம் ஆகிய இலக்கியங்களும், தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம், சைவ சாத்திரங்கள் ஆகிய சமய நூல்களும், தொல்காப்பியம், பிரயோக விவேகம், வீரசோழியம், இலக்கண விளக்கம், இலக்கண விளக்கச் சூறாவளி, யாப்பருங்கலம் ஆகிய இலக்கண நூல்களும், அவற்றிற்குப் பண்டையாசிரியர்கள் கண்ட உரைகளோடு அவருக்கு மனப்பாடம்.

இலக்கியத்தினும் இலக்கணத்தில் அவருக்கு ஈடுபாடு மிகுதி.

தொல்காப்பியத்தில் அவருக்குள்ள தேர்ச்சியும் அதன் பல்வேறு உரைகளில் அவர் அரிதில் முயன்று பெற்றுள்ள பயிற்சியும், ஆராய்ச்சியும் நான் அறிந்து அனுபவிக்கும் பேறு பெற்றவை.

இலக்கியங்களுள் சிறப்பாகச் சங்கத் தொகை நூல்களிடத்தும், திருக்குறளிடத்தும் அவர் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர்.

காப்பியங்களுள் சிந்தாமணியும், கம்பராமாயணமும் அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவை.

சிந்தாமணியின் தமிழ்ச்சுவையையும் கம்பராமாயணத்தின் கவிச்சுவையும் அவர் தெவிட்டாமல் நுகர்ந்து திளைப்பவர்.”

(இராகவன்)

ஓய்வறியாத் தமிழ்த் தேனீ
பள்ளிக் கடமை முடித்து வீடு வந்ததும் திண்ணையில் அமர்ந்து ஆராய்ச்சியில் மூழ்க விடுவார்;

இரவில் மின்விளக்குவசதி இல்லையென்றாலும் எண்ணெய் விளக்கொளியில் விடியல்வரை எழுதிக்கொண்டிருப்பார் ;

எப்பொழுது தூங்கினார் , எப்பொழுது விழித்தார் என்பதை எவரும் அறிந்திலர்.;

விடிந்தபின் பள்ளி செல்லும் வரை அதே அல்லென்றும் பகலென்றும் பாராமல் ஊணும் உறக்கமும் நினையாமல் பிள்ளையைப் போலத் தமிழுக்காகப் பேயுழைப்பு உழைத்தவர்களை நான் கண்டதில்லை.

ஒய்வு என்பது இன்னதென்று அறியாத ஓர் அற்புதப் பிறவி அவர்.

அவர் மேற்கொண்ட முயற்சியில் அவருக்குத் துணைசெய்யும் அறிவும் ஆற்றலும் பண்பும் வாய்ந்த புலவர்களோ, அன்பு கொண்டு ஆதரவு காட்டும் செல்வர்களோ அக்காலத்தில் இல்லை.

ஆனால், அவர் ஆக்கம் கண்டு ஆற்றாது அழுக்காற்றால் புறங்கூறப் புல்லறிவினோர் பலர் இருந்தனர்”

(இராகவன்)

ஒளவை தமிழகம் – நிறுவுதல்
பள்ளியில் பயின்றோர் மட்டுமின்றித் தமிழ் ஆர்வலர்களும் தனிமுறையில் வித்துவான் தேர்வெழுத முனைந்தோரும் ஒளவைக்கு மாணவர்களாக அமைந்தனர்.

ஒளவைத் தமிழகம் எனும் ஓர் அமைப்பை நிறுவி அதன் வழியே அருந்தமிழ்த் தொண்டாற்றினார்.

ஔவைத் தமிழகத்தின் முதல் மாணவர் இராகவன் கூற்றுக்கள் ஒளவையின் பன்முக ஆளுமையைப் பறைசாற்றுகின்றன.

“நான் தகுதி வாய்ந்த தமிழாசிரியரைத் தேடியலைந்து கொண்டிருந்த தமிழார்வம் கொண்ட இளைஞன்.

புலவர் சிலரை அடுத்துச் சிறு நூல்கள் பலவற்றைப் படித்துமுடித்த நான், பெருங்காப்பியங்கள், சங்கத்தொகைநூல்கள் பேரிலக்கணங்கள் ஆகிய பெருநூல்களைத் தொடர்ந்து பயின்று பல்கலைக்கழகப் புலவர் (வித்துவான்) தேர்வு எழுத விரும்பினேன்.

அதுபோது அருகிலிருந்த புலவர்களுள் எவரையும் அப்பெருநூல்களைப் பாடம் சொல்லுதற்குரிய தகுதிவாய்ந்தவராக என்மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.

என் நல்வினைப்பேறாகப் பிள்ளையவர்கள் சேயாறு கழக உயர்நிலைப்பள்ளிக்குத் தலைமைத் தமிழாசிரியராக வந்து சேர்ந்தார்கள் (1931).

பணியேற்ற சில நாட்களுக்குள்ளேயே பிள்ளையவர்களின் புகழ் வெள்ளமென எங்கும் விரைத்து பரவலுற்றது.

பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும், நகர அறிஞர்களும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பாராட்டிப் பேசலானார்கள்.

என் தமிழ்ப் பசியைத் தணிக்கும் தகவுடையார் அவரே எனத் துணிந்தேன்.”

அதற்குப் பின்பு, இராகவன் ஒளவையைப் போற்றி ஒரு செய்யுள் எழுதியெடுத்துக்கொண்டு போய் அவர் முன்பு அரங்கேற்றித் தம்மையும் ஒரு மாணவராகச் சேர்த்துக்கொள்ளும்படி வேண்டினார் .

சில வினா விடைக்குப்பின் அவரை மாணவராக ஏற்றுக்கொண்டார் எனப் பெருமிதத்துடன் தம் ஆசிரியரைப் பற்றி இராகவன் கூறுகிறார்.

பல்துறைப் புலமை
“பிள்ளையவர்களின் புலமை பல துறைகளிலும் பாய்ந்து பரவியது. இலக்கியம், இலக்கணம், சமயம், அளவை, வரலாறு, கல்வெட்டு ஆகிய பல்வேறு துறைகளுள் ஒவ்வொன்றிலும் தனிப்புலமை பெற்றவர் பலர் இருக்கக்கூடும்; ஆனால் பிள்ளையவர்களைப் போல அவ்வனைத்திலும் ஆழ்ந்தகன்ற புலமைபெற்றவர் அரியராவர்.

அவர் எடுத்துக் கொண்ட நூல் எதுவாயினும் அதனைப் படித்தறிவதோடு அமையாமல் தம் நுண்மாண் நுழைபுலத்தால் நுணுகி ஆராய்ந்து அதன் உண்மைப் பொருளைஉணர்வதில் ஆர்வமும் முயற்சியும் உடையவர்.

பிறர் கடுமையானவை என்று கருதிக் கைவிடும் நூல்களைக் கைக்கொண்டு , பொறுமையாகப் பலகால் பயின்று பயன்கண்டு மகிழும் பண்புடையவர்.

கற்பிக்கும் முறை
ஒவ்வொரு நாளும் பாடம் தொடங்குமுன், அவரிடம் தமிழ் பயின்ற மாணாக்கர்கள் அகத்தியர், தொல்காப்பியர், திருவள்ளுவர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் ஆகிய புலவர் பெருமக்களுக்கு வணக்கம் கூறும் பாடல்களைச் சொல்ல வேண்டும்.

அவற்றுடன் அவர் தமிழ் பயின்ற காந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வாழ்த்தாகிய,

“வாழி பகலோன் வளரொளிசேர் ஞாலமெலாம்
ஆழி செலுத்து தமிழன்னையே – வாழியரோ
தங்கள் கரந்தைத் தமிழ்ச்சங்கம் நாணாளும்
அங்கம் தழைக்க அமைந்து!”

என்ற பாடலையும் பாடுமாறு பணித்திருந்தது அவர் சங்கத்தின்பால் கொண்டிருந்த ஆழ்ந்த பற்றுக்கும் நன்றிக்கும் சான்று பகர்கிறது.

தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களைப் பாடம் சொல்லும் பொழுது ஓர் ஆசிரியன் தேர்வுக்குரிய உரையை மட்டும் விளக்குவதோடு அமையாது, வேறு ஆசிரியருடைய உரைகளையும் உடன்வைத்துத் தொல்காப்பிய முதற்சூத்திரவிருத்தி, இலக்கணக்கொத்து, இலக்கண விளக்கம், இலக்கண விளக்கச் சூறாவளி ஆகிய தொடர்புள்ள பிற நூல்களையும் சேர நடத்துவார்.

நச்சினார்க்கினியர், பேராசிரியர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர், சிவஞான முனிவர் ஆகியோர் தாம் உரைகண்ட இலக்கிய, சமய நூல்களின் உரைகளில் தந்துள்ள இலக்கணக் குறிப்புகளை எடுத்துக்காட்டி இனிது விளக்கம் செய்வார்.

உரையாசிரியர்கள் தம்முள் மாறுபட தனித்தனியாக உரை கண்டுள்ள இடங்களில் ஒவ்வொருவர் உரையையும் விளக்கி அவர்கள் மாறுபாட்டுக்குரிய காரணங்களை நுணுகி ஆராய்ந்து முடிவு கூறுவார்.

தொல்காப்பியப் பகுதிகள் பற்றிப் பிற்காலப் புலவர்கள் ஆய்ந்து வெளியிட்டுள்ள ஆய்வுரைகளையும் – நூல்களையும் படிக்கச் செய்து அவர்கள் கொண்ட கருத்துக்களின் வன்மை மென்மைகளைக் காரண காரியத்தோடு விரிவாக விளக்கிக் காட்டுவார்.

தனித்தனித் தலைப்புகளில் ஆய்வுரைகள் எழுதிவரச் செய்து படித்துத் திருத்தம் செய்வார்.

இம்முறையால் மாணவர்கள் தாம் பாடம் கேட்ட நூல்களில் ஐயம், திரிபு, அறியாமையின்றித் தெளிவும் தேர்ச்சியும் பெறலாயினர் .

வளரும்…

– முனைவர் ஔவை அருள்,

தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *