அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 58
“நாளிதழால் வளரும் நல்லறிவு”
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
பேரறிஞர் அண்ணாவின் மூன்று நாள் அறக்கட்டளைப் பொழிவுக்குப் பிறகு, பல நண்பர்கள் அப்பாவைச் சூழ்ந்து கொண்டு தாங்கள் ஓர் இலக்கிய இயக்கப் பாசறையைத் தொடங்க வேண்டும்.
இளைஞர்கள் பலரை ஊக்குவித்து வருங்காலத் தலைவர்களாக மாற்ற வேண்டும் என்று ஆர்வமாக வேண்டினர்.
அரசுப்பொறுப்பில் இருப்பதனால் மன்றம், இயக்கம் எல்லாம் நானெப்படி நடத்துவது என்றவுடன், அண்ணல் அருசங்கர், புலவர் வீரமணி, திருமதி சாவித்திரி இராகவேந்திரா போன்றோர் ‘நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் எங்களை வழிநடத்தினால் போதும்’ என்று பேசிக் கொண்டார்கள்.
பொற்குடத்திற்குப் பொட்டு வைத்தாற்போல வட சென்னையிலுள்ள அண்ணல் அருசங்கரின் தொழில் வளாகத்தில் முதற் கூட்டம் தொடங்கப்பெற்றது.
அமைப்புக்குச் ‘செயல்’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.
பல நிலைகளில் எழுச்சிக் கூட்டங்கள், சிந்தனை மன்றங்கள் நடத்தப்பட்டன.
திருமதி சாவித்திரி இராகவேந்திராவின் இல்லத்தில் (நந்தனம் ‘டவர்’ அடுக்ககத்தில்) நடைபெற்ற செயற்கூட்டங்களில் பல நல்லிளைஞர்கள் வருகை தந்ததும், அவருடைய கணவர் டாக்டர் இராகவேந்திரா, செல்வ மகள்கள் குந்தவை மற்றும் ஜானவி விருந்தோம்பியதும் இன்றும் பசுமையாக என் நெஞ்சில் நிழலாடுகிறது.
அவர்கள் இல்லத்தில் உதவியாளராக இருந்த தம்பி குணசேகரன் இன்றைக்கு தலைமைச் செயலகத்தில் பதிவுரு எழுத்தராய்ப் பணியாற்றுவது அவர்களின் சிறந்த வளர்ப்புக்குச் சான்றாகும்.
சில திங்களுக்குப் பிறகு, இலக்கியக் கூட்டத்தில் பங்கு கொண்டு அப்பா அரங்கத்தை நீங்கி மகிழுந்தில் ஏறும்போது, வேறுசில நண்பர்கள் ‘செயல்’ என்னாயிற்று என்றார்கள்.
அப்பா நகைச்சுவையாக, ‘செயல் மறந்து வாழ்த்துதுமே!’ என்று சிரித்துக் கொண்டே சொல்லிச் சென்றார்.
தொடர்ந்து பல நூலாசிரியர்களின் கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருந்த தருணத்தில், அப்பா என்னை அழைத்து ஆங்கில நாளிதழான இந்து நாளேட்டினை நாள்தோறும் படிக்குமாறும், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஆங்கிலக் கட்டுரைகளை உரக்க வாசிக்குமாறும் வலியுறுத்தினார்.
இந்து நாளிதழை எப்படிப் படிக்க வேண்டுமென்று வரையறையொன்றைக் கட்டமைத்தார்.
குறிப்பாக, முதல் பக்கம், நடுப்பக்கம், ஆசிரியர் உரை (Editorial), வாசகர் கடிதங்கள் (Letters to Editor), சமயம் குறித்த கையகலக் கட்டுரை, இலக்கியம் சார்ந்த கட்டுரைகள், குறிப்பாக ஆங்கிலக்கடல் கே.ஆர். சீனிவாச ஐயங்கார், திருமதி பிரேமா நந்தகுமார், திரு டி. ஆஞ்சநேயலு, திருமதி கௌரி இராம நாராயணன், திரு. ஆர்ட் புக்வால்டு, என். இராம் கட்டுரைகளைத் தொடர்ந்து படிக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.
அக்கட்டுரைகளில் உள்ள சிந்தனைச் சுடர் மணிகளை அங்கிங்கெனாதபடி என்னுடைய குறிப்பேட்டில் பதிவிட்டிருந்தேன்.
அப்பா சொல்லாததைச் செய்வதுதானே மகனின் ஆர்வமாகும்.
அங்ஙனம் கடைசிப் பக்கங்களில் உள்ள விளையாட்டுச் செய்திகள் மீதும், எனக்கு அளப்பரிய ஆர்வமுண்டு. விளையாட்டுப் பிள்ளையல்லவா!
குறிப்பாக, கிரிக்கெட் விளையாட்டின்மீது அளப்பரிய ஆர்வம்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் முடிசூடா மன்னர் சுனில் கவாஸ்கர் முப்பத்து மூன்றாவது சதம் எடுத்த ஆங்கிலக் குறிப்பின் (16.10.1986) தமிழாக்கம் பின்வருமாறு:-
“மட்டைப்பந்தாட்டத் தொடர் போட்டியின் அடுத்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக அமைந்தது.
மட்டைப்பந்தாட்டத்தின், இந்திய நட்சத்திர வீரர் தனது 33ஆவது சதத்தை அடிக்கக் கூடும் என அனைவரும் எதிர்நோக்கிக் காத்திருந்த நாளது.
தொடர் போட்டியின் இரண்டாவது நாளின் இறுதியில், இந்திய நட்சத்திர வீரரான கவாஸ்கர் தனது 30ஆவது சதத்தை அடித்த விதமும் அவர்தம் திறனும் எங்களை அவ்வாறு காத்திருக்கச் செய்தன.
தனது உடலையும் மனதையும் ஒருமுகப்படுத்தித் தன்னை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு பந்தையும் திறன்மிகு வகையில் கையாளும் திறன் பிற விளையாட்டு வீரர்களுக்குக் கலங்கரை விளக்காய் ஒளி காட்டியது. கவாஸ்கர் அவர்களின் மணிமகுடத்தில் மற்றொரு மாணிக்கக் கல்லாக இந்த 33-ஆவது சதத்தை பதிப்பதற்கு, அவர் பல பந்துகளை சந்திக்கக் கூடும் எனக் கருதினோம்.
தன்னை நோக்கி வீசப்படும் பந்தை அவர் கையாளும் முறை மிகவும் புதுமையாக இருந்தது.
அவர்தம் சிறப்பு வாய்ந்த மற்றும் தனித்துவமான விளையாட்டுத் திறனும் அவர் கொண்டிருந்த சுறுசுறுப்பும், வரம்புக் கோட்டை அவர் அடையும் பாங்கும், மட்டைப்பந்தாட்டத்தில் உறுதியாக அவரைச் சிகரங்களை அடையச் செய்யும் என்ற நம்பிக்கை ஆர்வலர்களை மகிழச் செய்தது.”
அவ்வண்ணமே, 18.10.1986-ஆம் நாளன்று இந்து நாளிதழில் வரப்பெற்ற ‘மாணவர்கள் போராட்டம்’ குறித்த கோவையைச் சேர்ந்த நல்லன்பர் கே.இராமராசனின் ஆங்கிலக் கடிதத்தின் தமிழாக்கம் பின்வருமாறு:-
“பருவகால மழை கூடப் பொய்த்துப் போகலாம், ஆனால், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் போராட்டம் மட்டும் உறுதியாக நடந்தே தீரும்.
பெரும்பாலும், குறிப்படத்தக்க எண்ணிக்கையிலான, மாணவர் சங்க நிருவாகிகளால்தான் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
உண்மையில், பெரும்பாலான மாணவர்கள் இத்தகைய போராட்டங்களை ஆதரிக்கின்றனரா என்றால், நிச்சயமாக இல்லை என்பதே இதற்கான பதில்.
எவ்வாறு அவர்கள் அந்த போராட்டங்களை ஆதரிக்கின்றனர் எனில், அப்போராட்டங்கள் நடந்த நாட்களில் கல்லூரிகளில் நடத்தப்பட்ட சிறப்பு வகுப்புகளில், போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் என்பதே சான்றாகும்.
மேலும், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு முன் உதாரணமாய் விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில், போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்த சில மாணவர்களும், இத்தகைய போராட்டம் நடப்பதற்கு நான்தான் முக்கிய காரணம் என்று பிறர் தன்னை உயர்வாக நினைக்கவேண்டும் என்று கருதும் மாணவர்கள்கூட இந்தச் சிறப்பு வகுப்புகளில் சீராகப் பங்கேற்றதைக் காண இயன்றது.
இது இரட்டை வஞ்சகமாகும்.
அதாவது போராட்டம் நடத்துவதற்கான காரணத்திற்கும், மாணவர்களுக்கும் இழைக்கும் மாறான இரட்டைப் போக்காகும்.
இத்தகைய நாள்களில், கல்லூரிகளில் மாணவர்கள் வருகை கட்டாயமாக்கப்படவில்லையெனில், இந்தச் சிக்கலுக்கு ஓரளவு தீர்வு காண இயலும்.
மேற்கத்தியப் பல்கலைக்கழகங்களில், வருகைப் பதிவேடு எனும் முறைமை கிடையாது.
விருப்பமுள்ள மாணவர்கள் வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
வகுப்பிற்கு வருவதற்கு விருப்பமில்லாத மாணவர்கள், அவர்களுக்கு பயனளிக்கக்கூடும் என்று தாம் கருதும் வகையில் தங்கள் நேரத்தைச் செலவிடலாம்.
வகுப்பறையைச் சுற்றியுள்ள நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து விரிவுரைகளைக் கேட்டால் மட்டும் அறிவைப் பெற்றிட இயலாது.
மிகவும் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவன், வகுப்பில் இருப்பதை விட நூலகத்தில் ஒரு மணி நேரம் செலவிட்டால், அது தனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதலாம்.
செய்முறை வகுப்புகள் நீங்கலாக, ஏனைய அனைத்து வகுப்புகளும் வருகைப்பதிவேடின்றி நடத்தப்படலாம், மாணவர்கள் விரும்பினால் வகுப்புகளுக்கு வரலாம், இல்லையெனில் அவர்கள் வகுப்புகளுக்கு வர வேண்டாம் எனும் இந்த நடைமுறையை நாம் பின்பற்றினால், போராட்டங்கள் நடப்பதற்குக் காரணமாக விளங்கும் மாணவர்களின் பிடியை நாம் தளர்த்தலாம், போராட்டக் காலத்தின்போதும் அனைத்து மாணவர்களும் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்றதே இதற்கான சான்றாகும்.”
ஆங்கில வாணர் ஆர்ட் புக்வால்டு ‘Money’ என்ற தலைப்பில் எழுதிய 03.11.1986-ஆம் நாளிட்ட கட்டுரையில் இடம்பெற்ற கருத்து மணிகளின் தமிழாக்கம் பின்வருமாறு:-
“ஏழைகளுக்குப் பணம் இவ்வுலகை இயக்கும் பெரிய சக்தியாகும்.
நாளொன்றுக்கு மூன்று வேளை உணவு எனும் தங்கள் கனவை நனவாக்கும் வல்லமை பெற்ற ஆயுதமாகும்.
நடுத்தரக் குடும்பத்தினருக்கு, அவர்கள் விரும்பும் வாழ்க்கை முறையை அடைய உதவும் மைல்கல் பணமாகும்.
அவர்களின் இலட்சியத்திற்கும் எதிர் காலத்திற்குமான அடிப்படை தேவைப் பணம் தான்.
செல்வந்தர்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தரும் ஒரே காகிதம் பணம்தான்.
தங்கள் மனநிறைவிற்கான கடவுச்சீட்டு… உங்களுக்கு? சிந்தியுங்கள் நண்பர்களே!”
அதேபோல, வேறு ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்:
“நண்பர்களால் பயனேதுமில்லை. என் குடும்பம் என்னைப் புரிந்து கொள்ளவில்லை.
தனிமையில் அமர்ந்து ஆழ்ந்து சிந்திப்பதற்காக, மதிகேடான இந்த கூட்டத்திலிருந்து விலகி இருக்க வேண்டியதொரு சூழலை ஒவ்வொரு மனிதரும் கண்டிருப்பார்கள்.
வாழ்க்கை என்றால் என்ன என்பதையும், தன்னைத் தானே அறிந்து கொள்வதற்கும், உங்கள் மீது முதலில் நீங்கள் இரக்கம் கொள்ளுங்கள் அல்லது, மன உறுதியுடன் வாழ்க்கையோடு துணிந்து போராடுங்கள்.
நீங்கள் நீங்களாகவே இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள் – அவ்வாறு நான் வாழ ஏன் தடையாக உள்ளீர்கள்? எனது தனிப்பட்ட வாழ்வில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
எனது நலன் கருதியே நீங்கள் அறிவுரை வழங்குகிறீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.
ஆனால், நான் நானாகாவே வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொள்ள விழைகிறேன்.
வாழ்க்கைப் பாதை என்பது மிகவும் குறுகிய மற்றும் நீண்டதொரு பாதையாகும்.
கடும்பாறைகளும் முட்களும் அதில் நிரம்பியிருக்கும்.
சிலர் அதனை நரகம் என்று அழைப்பார்கள்.
ஆனால், வெற்றிக்கான ஒரே பாதையாகும்.
ஒருவேளை, அவனது வாழ்க்கையை மீண்டும் வாழ்வதற்கான வாய்ப்பு ஒரு மனிதனுக்கு வழங்கப்பட்டால், அவர் அதனை ஏற்பாரா? அவர் வாழக் கருதிய முறையில், தவறுகள் ஏதுமின்றி, இதய வலிகள் அனைத்தையும் தவிர்த்து, அவர் விரும்பியதொரு வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டால், அவர் அதனை ஏற்றுக் கொள்வாரா? எனக்குத் தெரியவில்லை.
ஆனால், ஒன்று மட்டும் கூறுவேன். நீங்களாக இருந்தாலும் சரி, நானாக இருந்தாலும் சரி, இளமை என்பது நம் வாழ்வில் ஒரே ஒருமுறை மட்டும் தான் வந்துபோகும் வானவில்லாகும்.”
‘மாதிரிப் பள்ளி’ அறிமுகம் தொடர்பாக 86-களில் அதிக விவாதம் நடைபெற்றது.
அதுகுறித்து வந்தவொரு கட்டுரையின் தமிழாக்கத்தைக் காணலாம்.
“நவீன பள்ளிகள், தங்கள் பள்ளிகளில், தேசிய ஒருமைப்பாட்டை முனைப்புடன் ஊக்குவித்து வருகின்றனவா?
அங்குப் பயிலும் மாணவர்கள் உண்மையிலேயே ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும் திறன்மிக்கவர்களாகவும் உள்ளனரா?
உண்மையில், அங்கு எவ்வித முறைகேடுகளும் நடப்பதில்லையா?
பழைய மெக்காலேயின் கல்வி முறையை “தரம் நிறைந்த கல்வி – பரவல் மற்றும் தேசிய ஒருமைப்பாடு” என்று புதிய தலைப்பிட்டு இன்றைய நவீன பள்ளிகள் வழங்கி வருகின்றனவா?
அல்லது தமிழர்கள் மற்றும் வங்காளர்களிடையே இந்தி மொழியைத் திணிப்பதற்கான முயற்சி இதுவா?
மாய வித்தைகளில் ஈடுபடுபவர்கள், பிறர் கவனத்தைத் திசை திருப்புவதற்காக, “ஓம் சூம் சீபூம்பா” போன்ற சில போலி மந்திரங்களை உச்சரிப்பர்.
பிறரைக் குழப்புவதற்காக அல்லது ஏமாற்றுவதற்காக இத்தகைய தேவையற்ற செயல்களில் சிலர் ஈடுபடுவர்.
அரசியல் சூழ்ச்சி குறித்து என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.
ஒருவரது தனிப்பட்ட ஆதாயத்திற்காகச் சிக்கலில் இருக்கும் நபர்களை பயன்படுத்திக் கொள்ள நினைப்பதை, குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது என்பர்.
இவர்களும் இதனைத்தான் செய்து வருகின்றனர்.
நம் “தமிழ் உடன் பிறப்புக்களின் பாதுகாப்பு” எனும் பெயரில் எத்தகையதொரு சமூகத்தை நாம் உருவாக்கி வருகிறோம் என்பதை இப்பொழுதாவது தமிழக மக்களுக்கு நலம் புரிந்திடச் செய்ய வேண்டும்.”
——
பத்துப்பாட்டில் மனம் பற்றுக!
திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி
திருமுருகாற்றுப் படையில் ,-
-அங்குசம், உரு (ரூபம்), கணம், சதுக்கம், சந்தி, சிரை, பலி, மகரம், மந்திரம், மனன், முகம், வட்டம், விடை என்றற் போல மிகச்சில வடமொழிச் சொற்களே வந்துள்ளன: ஏறக்குறைய இரண்டாயிரம் சொற்கள் கொண்ட இப்பாட்டில் நூற்றுக்கு ஒன்று வீதம் வடமொழி வந்துள்ளதெனலாம்:
ஆகவே, செந்தமிழே நிறைந்து இயற்கைப் புனைவு மிகுந்து இந்நூல் மிகச்சிறந்து விளங்குகின்றது என்க.
பேரறிஞர் ‘உபய வேதாந்த’ வை. கோபால கிருஷ்ணமாசாரியாரின் மாணாக்கரும், விவேகாநந்தர் கல்லூரித் தமிழ்த்துறைப் தலைவராகத் திகழ்ந்த பேராசிரியர் சி. ஜெகன்னாதச்சாரியர் இயற்றிய பத்துப்பாட்டு ஆராய்ச்சியுரையின் அருமை கருதி இதனைச் சேர்த்துள்ளேன்.
திருமுருகாற்றுப்படையுடன் தொடர்ந்து ஆர்வலர் ஓதிவரும் வெண்பாக்கள் சொற்றெறிவும், பொருட்பொலிவும் பொதிந்தன.
பகுதி – 1
குன்ற மெறிந்தாய் குரைகடலிற் சூர்தடிந்தாய்
புன்றலைய பூதப் பொருபடையாய் – என்றும்
இளையாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே
உளையாயென் னுள்ளத் துறை. குன்றம் எறிந்தாய் – கிரௌஞ்ச மென்னும் மலையைப் பிளந்தவனே! குரை கடலில் – ஒலிக்கின்ற கடலினிடையே புக்கிருந்த, சூர் – மாமர வடிவான சூரபன்மனை, தடிந்தாய் – வீழ்த்தியவனே! புன் தலைய பூதம்-புற்கென்ற தலையினையுடைய பூதத்தை, பொரு – போர் செய் தழித்த, படையாய் – படைக்கலத்தை ஏந்தியவனே ! என்றும் இளையாய் – எக்காலத்தும் இளமை குன்றாத குமரனே ! அழகியாய் – பேரழகு பொருந்தியவனே ! ஏறு ஊர்ந்தான் ஏறே – இடபவாகனத்தையேறிச் செலுத்தும் சிவபிரானுக்குச் சிங்கவேறுபோன்ற மைந்தனே ! ( நீ ) உளையாய் – எஞ்ஞான்றும் நிலை பெற்றிருப்பவனாய், என் உள்ளத்து – அடியேன் மனத்தில், உறை – தங்கியிருப்பாயாக;
இதனால் புலவர் குமரனைத் தம்முள்ளத்துக் கோயில் கொள்ளுமாறு வேண்டுகிறார். எறிந்தாய் முதலிய விளி ஆறும் அறுமுகனுக்கு ஏற்ப வந்தன போலும்.
‘யசோதையிளஞ்சிங்கம்’, சிறியனென்று என்னிளஞ்சிங்கத்தை இகழேல் கண்டாய்’ என்பன போல, ஈண்டு ‘ஏறே’ என்பது சிங்கவேற்றைக் குறித்தது.
இனி, விடையெனக் கொள்ளலுமாம்;
”மழவிடையே! திருமாமடிகட்கென வைத்த கௌத்துவமே’ என்று குமரகுருபரர் விடையாகக் கூறியிருத்தலுங் காணலாம்.
முருகனாதலின் இளையாய் அழகியாய் என்றது.
”என்றுமழியாத விளமைக்கார” என்றது திருப்புகழ். உளையாய் – முற்றெச்சம்.
உளையாய் உறை என்றமையால், நீங்கா துறைதல் வேண்டப்பட்டது.
இனி, குன்றமெறிந்த கதை :- சிவபிரானின் இளைய குமாரனாய்த் தேவர் வேண்டுகோளால் அசுரர்களை யொழித்தற்குத் தவசேனாபதியாம் பொருட்டு அவதரித்த முருகக் கடவுள், சூரபதுமனைப் பொருது அழித்தற்குச் செல்லும் வழியிடையே, கிரௌஞ்சமென்னும் அசுரன் பெரிய மலை வடிவங் கொண்டு அவனை நலிவதாக எதிர் வந்து நிற்க, அதன்மேல் அப் பெருமான் தனது தெய்வத்தன்மையுள்ள வேற்படையை யேவி அதனைத் துளைத்து அழித்திட்டானென்பது.
இனி, பரசுராமனும் சுப்பிரமணியனும் பரமசிவனிடம் வில் முதலிய ஆயுதப்பயிற்சியைச் செய்து முடித்த பின்பு, இவர்களுள் உயர்வு தாழ்வு அறியும் பொருட்டுச் சிவபிரான் உமாதேவியின் முன்னிலையிலேயே இவர்களுக்குக் கிரௌஞ்ச மலையைச் சுட்டிக்காட்டி ‘இதனைத் துளைத்திடும்’ என்று நியமிக்க, பரசுராமபிரான் அம்பெய்து அதனைத் துளையிட்டுக் காட்ட, முருகக்கடவுள் வேலாயுதத்தை வீசியெறிந்து அம்மலையைப் பிளந்திட்டனனென்றும் கதை கூறப்படும்.
சூர் தடிந்த வகையை ” மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து” என்ற தன் உரையிடத்துக் காண்க.
பூதம் – நக்கீரனைச் சிறைவைத்த பூதம். பொருபடை – வேல்; கதாயுதம் எனினுமாம்.
பூதத்தைக் கதா யுதத்தால் மோதி முடியைத் தகர்த்துக் கொன்றனர் என்பர்;
இனி, வேல்வகுப்பில் ” பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு கவிப் புலவனிசைக் குருகி வரைக்குகையையிடித்து வழி காணும்” என்றும், ‘மலைமுகஞ் சுமந்த புலவர் செஞ்சொல்கொண்டு வழி திறந்த செங்கை வடிவேலா’ என்றும் வருவன நோக்கி வேலெனலாம்.
மேலை வெண் பாவில்” கற்பொதும்பிற் காத்ததுவும்… வேல்’ என வருதலும் நோக்குக.
குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்
அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் – இன்றென்னைக்
கைவிடா நின்றதுவும் கற்பொதும்பிற் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல்.
குன்றம் எறிந்ததுவும் – கிரௌஞ்சகிரியைப் பிளந்ததும், குன்ற – பகைவர் ஒழியும்படி, போர் செய்ததுவும் – போரிட்டதும், அன்று போரிட்ட அக்காலத்து, அங்கு – அவ்விடத்து, அமரர் இடர் தீர்த்ததுவும் – தேவர்களின் துன்பத்தைப் போக்கியதும், இன்று – இற்றைவரை, என்னை – அடியனாகிய என்னை, கைவிடா நின்றதுவும் – விட்டொழியாது நின்றதும், கல் பொதும்பில் காத்ததுவும் – கல் முழையினிற் சிறையினின்று காப்பாற்றியதும், (எதுவெனில்), மெய் விடா வீரன் – சத்தியத்தினின்றும் பிறழாத வீரனாகிய முருகனின், கை வேல் – கையிடத்துள்ள தாகிய வேலாகும்;
இதனால், முருகன்கை வேலின் சிறப்புக் கூறப்பட்டது.
அமரிடர் தீர்த்தது – தேவசேனாபதியாகி அசுரர்களையொழித்தமையாலாகும்.
கற்பொதும்பிற் காத்தது – பூதத்தினின்று.
‘எறிந் ததுவும்’, ‘செய்ததுவும்’ எனக் குற்றியலுகரம் ஒரோவிடத்துக் கெடாமல், வகரவுடம்படு மெய்பெற்று வந்தது.
தொடரும்
Dr.n.arul@gmail. Com

Add a Comment