POST: 2021-04-06T11:20:59+05:30

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் !

” பொதுநலம் ; என்றும் பொதுநலம்;புகழ் உடலை காக்கும் புனிதச்செயலே பொது நலம்…அறநெறியுடன் அன்போடு வாழும் நற்மருந்து பொது நலம் ”

என்று இசைச்சித்தர் சிதம்பரம் ஜயராமன் அவர்கள் பாடிய வரிகள் தான் என் நினைவில் ஒலித்தது .

1957 ஆம் ஆண்டு தொடங்கி மதுரையில் எந்தையாரோடு வாக்குச்சாவடிச் சென்றதை நினைந்து 1965 ஆம் ஆண்டிற்குப்பின் என் மனைவி தாராவோடு இராயப்பேட்டை ,பிறகு 1974 இல் இருந்து அண்ணாநகர் வள்ளியம்மாள் பள்ளியில் தொடர்ந்து வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்குப்பதிவு செய்து வந்தோம் .

ஈராண்டுகள் முன் எங்கள் உறவினர் , அம்மாவின் செல்லப் பெயர்த்தி டாக்டர் குறிஞ்சியின் திருமணத்திற்காக மாமல்லை அருகில் சென்றிருந்த போதும் திருமணம் முடித்துவிட்டு நானும் என் துணைவியாரும் பாராளுமன்ற தேர்தல்(18.4.2019)வாக்குப்பதிவு செய்து மறுபடியும் மாலை திருமண வரவேற்புக்குக் கிழக்கு கடற்கரைச் சாலை சென்றோம் .

எங்கிருந்தாலும் இதுவரை நாங்கள் வாக்களிக்கத் தவறியதே இல்லை .

எங்கள் மூத்த மகன் டாக்டர் கண்ணனும் அன்னையாரை அரவணைத்து அழைத்து வந்தார் .

சென்றமுறை மட்டும் என் கையைப் பிடித்து அழைத்துவந்த என் மனைவியின் உருக்கத்தை இப்போது நினைத்தாலும் கண்களில் நீர் மல்குகின்றன .

தாராவின் மறைவிற்குப் பிறகு ( 14 – 8 – 2020 ) எங்கும் வெளியில் செல்லாத என்னை என் நேர்முக உதவியாளர் பொன்னேரி பிரதாப் காட்டிய ஒருங்கிணைப்பால் 31 3 2021 அன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு என் இல்லம் தேடி வாக்குப்பதிவு அலுவலர்கள் அறுவர் வருகை தந்து என் இல்லத்திலேயே அமர்ந்தபடியே நான் வாக்களித்ததை எண்ணி நான் அமைப்பாளர்களைப் பாராட்டுகிறேன் .

2021 சட்டமன்ற தேர்தலுக்கு எண்பது வயது நிறைவடைந்த மூத்த குடிமக்களுக்காகப் பெருநகர சென்னை மாநகராட்சி 6591 வாக்காளர்கள் தம் இல்லங்களில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கும் முறையை அமைத்த அலுவலர் பெருமக்களை வாழ்த்தி மகிழ்கிறேன் .

அன்பின் பிழம்பாகிய என் துணைவியாரைப் பிரிந்த தழும்பு மாறாத நிலையில் இப்போது தேர்தல் வந்துள்ளது .

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 3998 பேர் போட்டியிடுகின்றனர் .

இதில் 3585 ஆடவர் வேட்பாளர்களும் ,411 மகளிர் வேட்பாளர்களும் ,மூன்றாம் பாலினத்தவர் 2 பேரும் அடங்குவர் .

இதற்காக 88,937 வாக்குச்சாவடிகளும் ,1,55,102 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் பயன்படுத்த உள்ளன

இன்றும் என் மனைவி தாரா ( BD25663075 ) என்னுடன் இருக்கிறார் என்று நினைவூட்டிய தேர்தல் ஆணையத்திற்கும் நன்றி.

இன்று(6.4.2021)என் மகன் முனைவர் அருள் காலையிலேயே சென்று தன்னுடைய வாக்கை வள்ளியம்மாள் மகளிர் கல்லூரியில் பதிவு செய்திருக்கிறார் .

இவ்வாண்டு அம்மா இல்லையே என்று கண் கலங்கிய அருள் ,எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு தனியராக வாக்களிக்கச் சென்றார் .

ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *