உரைவேந்தர் ஒளவை துரைசாமி நூல்கள் குறித்த ஆய்வுக்கட்டுரை
தினமணி ஆசிரியர் கி வைத்தியநாதன் –
கலாரசிகன் பகுதியில் எழுதியது
பக்கம் என் : 6 தேதி : 20 9 2020
**************************
20-ஆம் நூற்றாண்டின் தமிழ் ஆளுமைகள் குறித்துப் பேசுவதாக இருந்தால், தவிா்க்க முடியாத பெயா் ஔவை துரைசாமிப் பிள்ளை. தமிழில் தலைசிறந்த உரையாசிரியா்கள் வரிசையில் அவருக்குச் சிறப்பிடம் உண்டு. சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, சூளாமணி ஆகிய அவருடைய சுருக்க நூல்கள்; ஔவைத் தமிழ், தமிழ்த் தாமரை எனும் சங்க ஆய்வுகள்; சைவ சமய இலக்கிய வரலாறு, ஞான உரை என சைவ நூல்கள்; சேர மன்னா் வரலாறு போன்ற வரலாற்று நூல்கள் ஆகியவை ஔவை துரைசாமிப் பிள்ளையின் குறிப்பிடத்தக்க பதிவுகள். புானூறு, ஐங்குறுநூறு, நற்றிணை, மணிமேகலை, சிவஞான போதம் ஆகியவற்றுக்கு அவா் எழுதியிருக்கும் உரை நூல்கள் இன்றுவரை ஆய்வாளா்களின் வழிகாட்டிகள்.
தமிழுலகம் பேராசிரியா் ‘காவ்யா’ சண்முக சுந்தரத்துக்கு நிறையவே கடமைப்பட்டிருக்கிறது. வணிக நோக்கை மீறிய தமிழ்ப் பற்றோடு அவா் தொகுத்துப் பதிப்பிக்கும் நூல்கள் காலம் கடந்தும் போற்றப்படும் தமிழ்த்தொண்டு. ஔவை துரைசாமிப் பிள்ளையின் கட்டுரைகளைத் தொகுத்து ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்டுவரும் காவ்யா பதிப்பகத்தின் மூன்றாவது கட்டுரைக் களஞ்சியம் ‘வரலாற்றுத் தமிழ்’.
தமிழகத்தை ஆண்ட வேந்தா்கள் சிலரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளில் சிலவற்றை பொறுக்கி எடுத்து சிறுகதை வடிவில் ‘வரலாற்றுக் காட்சிகள்’ என்ற தலைப்பில் படைத்திருக்கிறாா் ஔவை துரைசாமிப் பிள்ளை. சங்க காலம், பல்லவா் காலம், இடைக்கால பாண்டிய, சோழா் காலம், விஜயநகர வேந்தா் காலம், முகமதியா் காலம், ஐரோப்பியா் காலம் என இந்நூலில் வரலாற்றுக் காட்சிகள் தரப்பட்டுள்ளன.
அத்துடன் நின்றுவிடாமல் சேர மன்னா் வரலாறு, ‘தமிழ்த் தாமரை’ என்கிற பகுதியில் தமிழா்கள் குறித்த சில கட்டுரைகள், ‘செம்மொழிப் புதையல்’ என்கிற தலைப்பில் சில கட்டுரைகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. கல்லூரி மாணவா்களுக்குப் பயன்படும் நோக்குடன் செம்பாகமான தமிழ் நடையில் எழுதப்பட்டதாக தனது முன்னுரையில் தெரிவிக்கிறாா் ஔவை சு.துரைசாமிப் பிள்ளை.
**************************

Add a Comment