POST: 2020-05-28T10:06:00+05:30

இடரைத் தாங்கிய இன்முகம் எங்கே?
===================================

ஊரெல்லாம் தீநுண்மித் தொற்று பரவிக்கொண்டிருக்கிறது. அப்பாவையும் அம்மாவையும் அருள் அரவணைத்துப் பார்க்கிறான் என்பது எனக்கு மகிழ்ச்சியான செய்தி. எனக்குத் தாய் தந்தையே நீங்கள்தான். அம்மாவை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஏப்பிரல் 24-ஆம் நாள் பேசிய திருமகள்தான் டாக்டர் கிருபாகரி.

டாக்டர் கிருபாகரி எங்கள் குடும்பத்தில் ஒரு வளர்ப்பு மகள் போல் இருந்தார். பல நேரங்களில், எனக்கு இந்த வீட்டில் உரிமை இருக்கிறது என்று பெருமையோடு பேசி, எங்கள் மனத்தையெல்லாம் நெகிழ வைத்த கிருபாகரி மறைந்தார் என்ற செய்தி (மே 24) எங்கள் குடும்பத்தையே உலுக்கியுள்ளது. நீங்கள்தான் வந்து என் மகன் அருள் கண்ணனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சொன்னபோது, நான் வேடிக்கையாகச் சொன்னேன், ‘நீ எப்போது பெண்பார்த்து முடிக்கப்போகிறாய்? ஏற்கெனவே 20 பெண்களைப் பார்த்துவிட்டு முடிவு இல்லாமல் இருக்கிறாயே!”, என்று நான் வருந்திச் சொன்னேன். இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருந்த கிருபாகரி மறைந்தார் என்பதற்கு எங்கள் மனம் ஆறுதல் கொள்ளவில்லை.

இராயப்பேட்டை மருத்துவமனையில் டாக்டர் தாரா அம்மையார் மருத்துவராக இருந்தபோது, உடன் பயிற்சியாளராக இருந்த மருத்துவர் கிருபாகரி, அம்மாவின் மீது அவ்வளவு அன்பைச் சொரிந்தார்கள். தனக்குப் பிறந்த பிள்ளைக்கு அருள் கண்ணன் என்றே பெயரிட்டார்கள்.

கல கலப்போடு வாழ்ந்த டாக்டர் கிருபாகிரி அவர்கள், திரைப்பாடல்கள் பாடுவதில் ஆர்வம் கொண்டவர். அதுமட்டுமில்லாமல், வாய்திறந்தால், ஆங்கிலமும் தமிழும் புரள புரள பேசுவார்கள். அவர்கள் ஓரிடத்தில் இருக்கிறார்கள் என்றால், வெண்கலச் சிரிப்பும், வெள்ளை மனமும் விளையாட்டு விருப்பமும் மிளிர இருந்தார்கள். அன்பும் பரிவும் பொங்க அம்மா அப்பா என்று ஆர்வத்தோடு அழைத்த குரல் இப்போதும் காதில் கேட்டபடி இருக்கிறது.

வாழ்க்கையில் துன்பங்கள் வரும், போகும். அதைத் துணிவோடு நின்று அதை எதிர்கொண்ட பெருமிதம் கிருபாகரியின் வாழ்வாக முடிந்தது. அருள் கண்ணன் தாயை நினைந்து உருகுவதோடு கிருபாகரி கண்ட கனவுகளையெல்லாம் நினைவில் வைத்து நிறைவேற்றி வாழ வேண்டும். அப்போதுதான் மனத்துக்கு ஆறுதல் உண்டாகும். கிருபாகரியின் பிரிவு எதிர்பாராதது! தீராத ஏக்கம் தருவது.

….. முனைவர் ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *