POST: 2020-04-13T09:46:28+05:30

தின செய்தி நாளிதழில் இன்று (13.04.2020) வெளியான கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி – 30)

‘‘தமிழிசையே ஒரு தனி இயக்கம்..!’’

ஔவை நடராசன்,

மேனாள் துணைவேந்தர்

=============================================

புரட்சித் தலைவருக்கு பொது மேடைகளில் பேசுவதில் பேரார்வம் உண்டு. கலை பொங்கிய மனமாகவே அவர் மனம் உருவாகியிருந்தது. இசை, நாடகம், நடனம், நடிப்பு முதலியவற்றில் ஆர்வம் கொண்டது போலவே, இலக்கியத்திலும் திளைத்து மகிழ வேண்டும் என்பதற்கு வாய்ப்பில்லாமல் போனாலும் இலக்கிய வாணர்களோடு இருந்து பேசுவதில் பெரிய ஆர்வம் அவர்பால் வழிந்தது.

பேரரறிஞர் அண்ணாவின் இலக்கியத் திறன் அவரைப் பற்றி மலைக்க வைத்திருந்தது. அந்த வகையில், அவர் ஆற்றிய உரைகளில் பல துணுக்குகள் இடம்பெறும். இன்றுவரை மாமதுரையில் மாட மாளிகையாக அமைந்திருப்பது அரசர் முத்தையா வேளின் தமிழிசை சங்கமாகும். செட்டி நாட்டரசர் குடும்பத்தின் மீது புரட்சித்தலைவர் பெருமதிப்பு கொண்டிருந்தார். செட்டி நாட்டரசர் ஆற்றிய பணிகளையெல்லாம் எப்போதும் போற்றிப் புகழ்வார். புகழ்வாய்ந்த வித்வான் லட்சுமணன் அவர்களோடு அவர் உரையாடும்போது ஏதேனும் இலக்கியம் பற்றித்தான் கேட்பார். திருவிளையாடற் புராணம் பற்றி அவர் வினவியதை நானறிவேன்.

அந்த வகையில், 29/4/1979அன்று மதுரையில் நடைபெற்ற இராஜா முத்தையா மன்றம் ஐந்தாம் ஆண்டுத் தமிழிசை விழாவில் தமிழ் ஆர்வம் பொங்கித் ததும்ப அவர் ஆற்றிய நல்லுரை இங்கே நாம் படித்து மகிழலாம்…

“எனக்கு மனநிறைவு தரக்கூடிய மூன்று நிகழ்ச்சிகள் இணைக்கப் பெற்றிருக்கின்றன. முதலாவது தமிழ் இசை விழா. தமிழ் இசைச் சங்கத்திற்கு மதுரையில் ஒரு நல்ல கட்டடம் கட்டப் பெற்றுப் பல்லோர் பாராட்டுகின்ற வகையிலும், தமிழ் வளர்வதற்கும், காப்பதற்கும் உறுதுணையாக இருக்கின்ற இசையை இணைத்து அதன் மூலம் தமிழைக் காப்பாற்றுகின்ற கடமைக்கு ஒரு பாதுகாப்பு நல்குகின்ற வகையிலும் இந்தச் சிறந்த கட்டடத்தை உருவாக்கி அதனைச் செட்டிநாட்டு அரசர் பெயரால் இராஜா முத்தையா மன்றம் என இங்கு அமைத்திருப்பது என் மனத்திற்கு நிறைவை தரக் கூடிய நல்ல பணி என்று சொல்ல ஆசைப்படுகிறேன். எனவே, ஐந்தாம் ஆண்டு விழாவினைக் கொண்டாடுகின்ற மதுரைத் தமிழ் இசைச் சங்கத்தினைப் பாராட்டுகின்றேன். அதன்பணி வளர்க என வாழ்த்துகிறேன்.

முப்பெரும் விழாக்களில் ஒன்றாகச் செட்டிநாட்டு அரசர் முத்தையா அவர்களுக்கும் பாராட்டு விழா இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. செட்டிநாட்டு அரசர் அவர்களுக்குத் “தமிழிசைக் காவலர்” என்னும் சிறப்புப் பட்டத்தினை நான் வழங்குமாறு பெருமை தந்திருக்கிறீர்கள். செட்டிநாட்டு அரசர் அவர்களைப் போன்றவர்களுக்குப் பட்டம் அளிக்கின்ற தகுதியோ, அறிவோ, ஆற்றலோ, அனுபவமோ இல்லாத என்னைப் போன்ற ஓர் சாதாரண மனிதனை அழைத்து அந்தப் பெருமையைத் தந்ததற்கு நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன்.

முப்பெரும் விழாக்களில் மற்றொன்று பாவேந்தர் விழா. இங்கு மேலவைத் தலைவர் மாண்புமிகு ம.பொ.சி அவர்களும் என் தம்பி மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் அவர்களும் பாரதியாரைப் பற்றியும் பாரதிதாசனைப் பற்றியும் பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தார்கள். ஒரு மொழியினுடைய தோற்றம், வளர்ச்சி, வாழ்வு இவைகளை எண்ணிப்பார்த்து அந்த மொழிக்கு உரிய மரியாதையும் உயர்வும் எல்லோருடைய உள்ளத்திலும் ஆழமாகப் பதிகின்றன என்பதனை நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். தமிழைக் காப்பதற்காக யார் யார் பாடுபட்டிருக்கின்றார்கள்? தமிழை அழிப்பதற்காக யார் யார் முயன்றிருக்கின்றார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த மதுரையை நெருப்புக்கூட அழிக்க முயன்றது என்று மாண்புமிகு ம.பொ.சி அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அவ்வாறு அழிக்கத் தொடங்கிய நிலையையும் மீறி, மதுரை காப்பாற்றப்பட்டிருக்கின்றது. தமிழ் காப்பாற்றப்பட்டிருக்கின்றது. இந்தி என்று இப்போது பேசப்படுகின்ற மொழியும் வடமொழி என்று கூறப்படுகின்ற சம்ஸ்கிருதமும் அதனை ஒட்டியதாய் அதற்கு முன்பிருந்த பிராகிருதமும் அதற்கும் முன்னால் இருந்த பாலிமொழியும் தமிழை அழிப்பதற்காக இங்கே அடியெடுத்து வைத்தனவாகும்.

பாலிமொழிக்குச் சொந்தக்காரர்கள் மதுரை மீது படையெடுத்து வந்து தமிழை அழிக்க முயன்றார்ௐகள். அவர்கள் அரசோச்சும்போது தமிழுக்குச் சொந்தக்காரர்கள் ஒளிந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பாலிமொழிக்குச் சொந்தக்காரர்கள் முதலில் தமிழ் மொழியை அழித்துவிட்டால், தமிழர்களை அடிமைப்படுத்திவிடலாம் என்று எண்ணினார்கள். அப்போதெல்லாம் தமிழ் மக்கள் தமிழுக்கு மரியாதை தந்தார்கள். தமிழ் தங்களின் சொத்து, அதனை அழிக்கவிடமாட்டோம் என்று வீரமுழக்கம் செய்தார்கள்.

அயர்லாந்து விடுதலைக்காகப் பாடுபட்டவர்கள் எத்தனையோ முறைகளைக் கையாண்டும் மக்களை ஒருங்குகூட்டி விடுதலை பெற முடியாமல் போனபின் அயர்லாந்து மொழியை முன்நிறுத்தி அந்த மொழிக்கும் தனி உரிமை வேண்டும் என்று போராடிய பின்னரே அந்த நாடு இன்றைய தினம் விடுதலை பெற்ற நாடாக விளங்குகின்றது.

மதுரையை எத்தனையோ மொழிகள் முற்றுகையிட்டன. வேற்றரசர்கள் மதுரை மீது படையெடுத்தார்கள். அப்போதெல்லாம் மதுரை மாநகரம் தலைவணங்காமல் தலை நிமிர்ந்து நின்று தமிழால் நிலைப்பெற்றது. இவ்வகையில், அயர்லாந்து வரலாறும் மதுரை வரலாறும் ஒற்றுமையாக அமைந்திருப்பதனைக் காணலாம். இத்தகைய வரலாற்றுப் புகழ்பெற்ற மதுரையில் தமிழ் இசைச் சங்கத்திற்காகத் தனிச்சட்டம் உருவாகியுள்ளது.

தமிழில் பாடினால் அவர்களைச் சங்கீத வித்துவான்களாக ஏற்றுக் கொள்வதில்லை என்ற நிலைமை நம் தமிழ்நாட்டில் இருந்தது. திருவாசகத்தை மதித்தார்கள். திருக்குறளை மதித்தார்கள். திருப்பாவையை – திருவெம்பாவையை மதித்தார்கள். ஆனால், அவற்றை இசையோடு பாடும்போது அவ்வாறு பாடிய சங்கீத வித்துவான்கள் மதிக்காத காலம் ஒன்று இருந்தது என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது.

இசையரசு எம்.எம்.தண்டபாணி தேசிகர் அவர்கள் எங்கே இருந்தார்கள் என்பதும், தேவாரம் பாடும் ஓதுவராக வாழ்ந்தார்கள் என்பதும் நமக்குத் தெரியும். பின்னால் அவருக்கு எத்தனையோ சிறப்புப் பட்டங்கள் வழங்கப்பட்டன. அவையெல்லாம் செட்டிநாட்டு அரசர் அண்ணாமலையார் தமிழிசைச் சங்கம் தோற்றுவித்தபிறகு தேசிகர் அவர்களுக்குக் கிடைத்த பட்டங்கள் என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே, நாம் ஒவ்வொருவரும் செட்டிநாட்டு அரசர் அண்ணாமலையாருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

செட்டிநாட்டு அரசர் அண்ணாமலையார் தமிழிசைச் சங்கத்தைத் தோற்றுவிக்காமல் இருந்திருந்தால், ஒரு புலவர் குழு அம்முயற்சியில் ஈடுபட்டிருந்தால் அந்தத் தமிழிசை இயக்கம் பணம், பதவி, சாதி உயர்வு இவைகளால் உறுதியாக அழிக்கப்பெற்றிருக்கும். செட்டிநாட்டு அரசர் அண்ணாமலையார் இவ்வியக்கத்தில் ஈடுபட்டமையால், பணத்தைக்கொண்டு யாராலும் அவரை விரட்டமுடியவில்லை. அவர் நெஞ்சு உரத்தோடு இவ்வியக்கத்தில் ஈடுபட்டமையால் பதவியைக் கொண்டும் அதிகாரத்தைக் கொண்டும் விரட்ட முடியவில்லை. அச்சுறுத்தி அடிமைப்படுத்தவும் முடியவில்லை. அண்ணாமலையார் அவர்கள் தமிழன் என்ற எண்ணத்துடனும் துணிவுடனும் தமிழிசை இயக்கத்தில் ஈடுபட்ட காரணத்தால் அவரை எதிர்த்து நின்றவர்கள் தம் கருத்தை எதிர்த்து வெளியிட முடியாது தோல்வியடைந்து புறங்கண்டார்கள். கடைசியில் அண்ணாமலையாருடன் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டார்கள்.

பாராட்டப்படுகின்றவர்கள் பணத்திற்கு சொந்தக்காரர்களாக இருந்தாலும் புகழுக்கு சொந்தக்காரர்களாக இருந்தாலும், உழைக்கின்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்களில் கண்களுக்கு விரோதிகளாகத் தெரிகின்ற அளவிற்கு வசதி படைத்தவர்களாக இருந்தாலும் அவர்களை அவர்கள் செய்த தொண்டுக்காக நாங்கள் பாராட்டுகின்றோம். செட்டிநாட்டு அரசர் அண்ணாமலையார் அவர்கள், செட்டிநாட்டு அரசர் முத்தையா அவர்கள் போன்றவர்கள் தமிழிசை இயக்கம் என்ற தியாகத் திருப்பணியில் எதனைப் பற்றியும் கவலைப்படாமல் ஈடுபட்டார்கள்.

இவர்கள் செல்வமும் புகழும் பெருமையும் சுற்றமும் பெற்றவர்கள் எங்கு சென்றாலும் தனக்கென்று ஒரு தனி மரியாதை கொண்டவர்கள். இவ்வளவும் படைத்த இவர்கள் இவற்றை நாம் ஏன் இழக்க வேண்டும்? எதிரிகளை எதற்காக உருவாக்க வேண்டும்? என்று கருதியிருந்தால் இந்தத் தமிழிசை இயக்கம் வளர்ந்திருக்க முடியுமா? அவர்கள் வளர்க்காவிட்டால் வேறு யாராவது துணிந்து இந்த அளவிற்கு வளர்த்திருக்க முடியுமா?

ஒருவேளை அரசியல்வாதிகள் முயன்றிருக்கலாம். அவர்கள் அதனால் சிறைச்சாலைக்குச் சென்றிருக்க முடியும். தமிழைக் காப்பாற்ற முடிந்திருக்கும். ஆனால், இந்தத் தமிழிசையின் வளர்ச்சி இடையறாத தொடர்ச்சி எதிர்காலத்தை வெற்றிகொள்ளுமாறு நமக்குத் தந்திருக்கும் துணிவு, அத்தனையும் அரசியல்வாதிகளால் கிடைத்திருக்க முடியாது. இதனை நான் முதலமைச்சர் என்ற முறையிலும் சாதாரண குடிமகன் என்ற முறையிலும் துணிந்து மனநிறைவுடன் கூறிப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன். செட்டிநாட்டு அரசர் முத்தையா அவர்களைப் பாராட்டும்போது எனக்கு உள்ள மனநிறைவே இதுதான்.

பிறரால் ஓரளவு செய்ய முடிந்ததை முழுமையாகச் செய்து வெற்றி கிடைக்கச் செய்தவர் செட்டிநாட்டு அரசர் முத்தையா அவர்கள் என்று சொல்வதில் பெருமைப்படுகின்றேன். தமிழிசை விழாவில் கலந்து கொள்ளவேண்டும் என்று செட்டிநாட்டு அரசர் முத்தையா அவர்கள் பலமுறை என்னிடம் கேட்டார்கள். சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறுகிறது என்பதனை எடுத்துக்கூறி, அது முடிகின்ற நிலையில், நான் வந்து கலந்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டேன். அவ்வாறு குறிப்பிட்ட பின் நான் வரும்வரை இவ்விழாவினை நடத்தாமல் ஏன் காத்திருந்தார்கள் என்பது எனக்குத் தெரியாது.

நான் பாகவதர் அவர்களோடும் தண்டபாணி தேசிகர் அவர்களோடும் கலைவாணர்… அண்ணன் என்.எஸ்.கே அவர்களோடும் தொடர்பு கொண்டிருந்தது பற்றி இப்பணியை எனக்கு அளிக்க வேண்டும் என்று விரும்பியிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

முதலமைச்சர் என்பதற்காக என்னை அவர்கள் அழைக்கவில்லை. முதலமைச்சர் பதவி என்பது விரும்பினால் வரும்; விரும்பாவிட்டால் போய்விடும். ஆனால், அந்தப் பழைய காலத் தொடர்புகள் யாராலும் மாற்றவும் முடியாது. போக்கவும் முடியாது. ஆகவே, அந்த முறையில் என்னை இங்கே அழைத்திருக்கிறார்கள்.

ஒரு மொழிக்குச் சொந்தக்காரர்களாக யார் யார் இருக்க வேண்டும் என்பதனை முதலிலேயே நாம் புரிந்து கொள்வது சரியாக இருக்கும் என்று கருதுகின்றேன். வசதி படைத்தவர்கள், செட்டிநாட்டு அரசர் முத்தையா போன்றவர்கள் இதற்காக உழைத்தாலும்கூட உழைக்கும் வர்க்கம் தாய்மொழியைக் காக்கத் துணிந்து முன்வந்தாக வேண்டும். அந்த நினைப்பும் நம்பிக்கையும் அவர்களது உயிர்மூச்சாக இருக்க வேண்டும். இங்கே தமிழிசைச் சங்கத்திற்காக பெரிய கட்டடம் உருவாகியுள்ளது. இது பணக்காரர்களுக்காக மட்டும் கட்டப் பெறவில்லை எனும் உணர்வோடு அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பயன்பட வேண்டும். இவ்வகையில் சமுதாயத்தின் அடித்தளத்து மக்கள் கலந்துகொண்டு தமிழிசையைக் கேட்டு அனுபவிக்கும் நல்ல வாய்ப்பு ஏற்படுமாறு இத்தமிழிசைச் சங்கம் பாடுபட்டு வருகிறது. அதற்காகத் தமிழிசைச் சங்கத்தைப் பாராட்ட விரும்புகிறேன்.

செட்டிநாட்டு அரசர் முத்தையா அவர்களுக்குத் “தமிழிசைக் காவலர்” என்னும் சிறப்புப் பட்டம் பொறித்த பதக்கத்தை அவர் கழுத்திலே நான் அணிவிக்கும்பொழுது அப்பதக்கம் நன்றாகத் தெரியவேண்டும் என்று விரும்பினேன்.அதனால், அப்பதக்கத்தினை ஒழுங்காக அணிவித்து நன்றாகத் தெரியுமாறு செய்தேன். அப்பதக்கத்தின் விலை என்ன என்பது எனக்குத் தெரியாது. ஆனால், செட்டிநாட்டு அரசர் முத்தையா செய்திருக்கின்ற தொண்டு விலைமதிக்க முடியாதது.

அவர்களின் தொண்டிற்கு அடிப்படையாக அமைந்தவர்கள் உழைக்கின்ற வர்க்கத்தினர் என்பதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அவ்வர்க்கத்தினர் இன்னிசையைக் கேட்க வேண்டும். இன்னிசை என்பது காதுக்கு இனிமையான ஒலியாக இருந்துவிட்டால் மட்டும் போதாது. அதில் சொல்லப்படுகின்ற கருத்துகள் மக்களுக்குப் புரிந்தாக வேண்டும். இசையைவிட்டுவிட்டு இறைவனையே பார்க்க முடியாது என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். அத்தகைய நல்ல இசையைத் தாய்மொழியில் பாடும்போது ஒவ்வொருவனும் உள்ளம் உருகுகின்றான். அதன் விளைவாக உற்சாகம் பெறுகின்றான். அந்தக் கணத்திலிருந்து துணிவு பெறுகின்றான். ஆகவே, மொழிப்பற்று உயிர் மூச்சாக மாறுகின்றது. பின் தன்மானம் பிறக்கின்றது. இறுதியில் தன்மானத்திற்குச் சொந்தக்காரன் தமிழன் என்ற உணர்வு மேலோங்கி நிற்கின்றது.

தமிழ் வெறும் வழக்குமொழியாக, பேச்சு மொழியாக, மேடைப்பேச்சு மொழியாக, இருந்துவிடாமல் கருத்துக்கும், இந்த நாட்டின் வாழ்வுக்கும் இந்த நாட்டு மக்களின் மறுமலர்ச்சிக்கும் வழிதேடித்தருகின்ற ஒரு மொழியாக அமைந்தாக வேண்டும். அந்தத் திறமையும் தகுதியும் தமிழ் மொழிக்கு உண்டு என்பதனை நான் இங்கே பெருமையுடன் சொல்ல விரும்புகின்றேன்.

நான் பாரதிதாசன் அவர்களோடு பல காலம் தொடர்ந்து பழகுகின்ற வாய்ப்பைப் பெற்றவன். பாவேந்தர் அவர்கள் தமிழின் அருமை பெருமைகளை மிகத் தெளிவாக உலகுக்கு எடுத்து உணர்த்தியவர்கள். அவர்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களிடம் மிகவும் ஈடுபாடுகொண்டவர்கள். பாவேந்தர் அவர்களின் உயர்ந்த வாழ்க்கையை நாம் ஒவ்வொருவரும் பாராட்ட வேண்டும்.

தமிழைப் பற்றி பேசுவதால் மட்டும் தமிழ் பாதுகாக்கப்பட்டுவிடும் என்று யாரும் தயவுசெய்து எண்ணி ஏமாந்து விடாதீர்கள். நம்முடைய உயிர் மூச்சாகத் தமிழ் கலந்திருக்க வேண்டும். தமிழ் என்ற சிந்தனை நம் உள்ளத்தில் ஊற வேண்டும். இதுவே, என் வேண்டுகோள்.

எதையும் தாங்கும் இதயம் நமக்கு வேண்டும். இதனைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் நமக்கு தந்திருக்கின்றார்கள். ஆனால், தமிழ் மொழியைப் பொறுத்தவரையில் எதையும் தாங்கும் இதயம் நமக்கு வேண்டாம். தமிழைத் தாங்குவோம். தமிழ் மட்டும் தாங்குவோம். தமிழ் வாழ்வதற்காக இந்த உலகைத் தாங்குவோம்.

தமிழிசை சங்கத்தில் தமிழ் வளர. தமிழிசை வளர ஏற்பாடுகள் செய்யப் பெற்றுள்ளன என்பதறிந்து மகிழ்கின்றேன். இவ்வியக்கத்தைக் கட்டிக் காத்து வரும் செட்டிநாடு அரசர் முத்தையா அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து இந்தப் பாருக்கு நல்ல பணி செய்த தமிழுக்குத் தொண்டாற்றி தமிழ் உள்ளங்களுக்குச் சொந்தக்காரராக வேண்டும் என்று வாழ்த்துகின்றேன். அண்ணா நாமம் வாழ்க. தமிழ் வாழ்க.” என்று நிறைவு செய்தார்.

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…

– ஔவை நடராசன், தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *