POST: 2019-09-27T10:19:18+05:30

திருநாடு சென்ற திலகத்தைப் போற்றுவோம் !
==========================================

கடந்த பத்து நாள்களாக ஆற்ற முடியாத அவலத்தில் கிடந்து எங்கள் குடும்பம் தடுமாறுகிறது. திருமதி.விஜயலட்சுமி ஸ்ரீதரன் மறைவு, தாங்க முடியாத தனிப்பெரும் துன்பத்தைத் தருகிறது.
சென்னையில் சீர்பெறவே வளர்ந்தார், செல்வ மகளாய் நின்றார்.ஸ்ரீதரன் தோள் மணந்து பண்புற்றார்.

நாகையில் வாழ்ந்து, நல்லறத்தை வளர்த்த இல்லறத் திருவிளக்காய்த் திகழ்ந்தார் .அருமைத் திருமகள் திருமதி.சாந்தியையும் அன்புருவான திருமகன் விக்ரமனையும் மக்கட் செல்வங்களாகப் பெற்றதோடு, மாநிலம் புகழும் மக்களாக மாற்றினார்.

ஒப்பரிய அன்னை என்ற உயர் புகழால் சிறப்புற்றார். வன்புற்றால் அவர் வருந்தியதைக் கேட்டு அனைவரும் வருந்தாத நாளில்லை. எங்குற்றாய் எரியூற்றாயே என்று கேட்டு, மக்களும் உறவினரும் சுற்றத்தாரும் மாளாத துயரில் ஏங்குகின்றனர் .

அரங்கனையே நினைத்து வாழ்ந்த அன்னையைப் பிரிந்த பிள்ளைகட்கும், பெருந்தகை ஸ்ரீதர் அவர்களுக்கும் வயதால் மூத்த எங்கள் ஆறுதலை எப்படிச் சொல்வோம் ?

டாக்டர்.ஸ்ரீதரன் குடும்பத்துக்கு எங்கள் நெஞ்சத்தில் எப்போதும் நிலையான இடமுண்டு. விஜயலட்சுமி அம்மையாரின் புகழும் அன்பும் என்றும் எங்கும் நிலவட்டும். அருமைப் பிள்ளைகள், தந்தைக்கு உறுதுணையாய் இருந்து தங்கள் புகழை வளர்த்துக் கொள்வார்கள் என்பதே எங்கள் துணிபு.

எங்கள் நெருங்கிய நேசங்கனிந்த உறவோடு பத்தாம் நாளாகிய இன்று நினைவைத் துயரத்தோடு சொல்லி, ஆறுதல் கொள்ள முயல்கிறோம்.

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி, நிம்மதி நெஞ்சினில் சூழ்க

—– முனைவர் ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *