POST: 2019-06-11T09:32:29+05:30

இன்னொரு ” புகழேந்தியை ” இழந்தோம்
********************************************

நண்பர் கிரேசி மோகன் வெற்றிலை மெல்லும் வாய் திறந்தால் வெண்பாப் பாடும் அறிவுக் கூர்மை உடையவர். படிக்கும்போதே மாணவர்கள் நடுவில் நகைச்சுவைத் திலகமாக விளங்கினார்.

அருமை நண்பர்கள் வழக்கறிஞர் இரவி, சொல்லின் செல்வன் சுகி.சிவம் இவர்களோடு படித்த மாணவர் தான் கிரேசி மோகன். எவர் மனமும் புண்படாத நிலையில் உள்ளம் கவரும் நகைச்சுவைத் தொடர்களை வழங்கி வந்தார். அவர் வளர்த்துக்கொண்ட இலக்கியவளம் நயம் வாய்ந்தது.

திருவல்லிக்கேணியில் நடந்த பாரதியார் விழாவில், அவர் புனைந்த வெண்பாக்களை ” என் குரலில் நீங்கள் படிக்க வேண்டும் ” என்று கேட்டபோது, நான் மகிழ்ச்சியோடு படித்தேன். தனிச்சொல்லும் ஈற்றடியும் தங்கு தடையில்லாமல் பொங்கிப் புரண்டன.

சுகி.சிவத்துக்கும், இரவிக்கும் நீங்கள் நெருங்கிய பழக்கம் உடையவர். நான் ஓர் ஏகலைவன். எட்டி இருந்தபடியே எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன் என்று அடக்கமாகச் சொன்னார்.

கலைஞானி கமலோடு அவர் நடித்த படங்கள் நம் மனத்தை விட்டு நீங்காத காவியங்கள். வசூல் இராஜா திரைப்படத்தில் அவர் நடிப்பினால் நம்மைக் குலுங்கக் குலுங்க நகைக்க வைத்தார்.

சீர்திருத்த மனம் கொண்ட அவர், கீதையைப் படித்துத் தெளிந்தவர். அவர் மனத்தில் கண்ணன் பற்று எப்போதும் குடிகொண்டிருந்தது. அண்மையில்கூட, கிரேசி எப்படி இருக்கிறார் என்று நெருங்கிக் கேட்க வேண்டும் என்று வழக்கறிஞர் இரவியிடம் போய் நின்றேன். பாழாய்ப் போன மறதி, அதைக் கேட்க மறந்துவிட்டேன்.

கிரேசிக்கு அமைந்திருந்த நடுத்தரத் தோற்றம், நேற்றுவரை அவரை முதுமையாக்கவில்லை.

அவர் பிரிவு எவரும் எதிர்பாராதது. பொறியியல் படித்த நல்லிளைஞர்களாக, கலைச்சுடர்களாக ஒளிர்ந்தவர்கள் மௌலி, எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன் , ” கிரேசி மோகன் “, ” மாது ” பாலாஜி போன்றோர் நாடக நன்மணிகளாக விளங்கியவர்கள்.

கிரேசியின் நினைவு, எப்போதும் மனத்தில் பதிந்திருக்கும்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரதியார் விழாவில் விருது பெற்றபோது அவர் விரைந்து சொன்ன வெண்பா என் மனத்தை நெகிழவைக்கிறது.

” இவ்வையகத்தில் இவன் பெற்ற பேறெல்லாம் –
அவ்வை நடராசர் அன்பளிப்பே -தவ்வும்
இளமையில் கேட்ட இவரது பேச்சின் -;
கிளரொளியால் ஆனேன் கவி ” …

-கிரேசி மோகன்

—– ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *