மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-231
—————-
அனைவரும் சரித்திரத்திற்குத் துணைநிற்கிறார்கள், பலர் சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கிறார்கள், சிலர் சரித்திரமாகவே இருக்கிறார்கள். அந்தச் சிலரில் ஒருவர், மாமனிதர், எட்டாவது வள்ளல், இதயக்கனி எம்.ஜி.ஆர். அவர்கள். 1947 முதல் 1987 வரை நாற்பது ஆண்டுகள் தமிழர்களின் வாழ்வியலைப் பெரிதும் பாதித்த ஒரு மாபெரும் சக்தியாகத் திகழ்ந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். அரசியல் உலகில் தலைவனாக, திரைப்படத் துறையில் கதாநாயகனாக, ஏழ்மை உலகில் கொடைவள்ளலாகப் பார்த்த பார்வைகளைவிட இறைவனைப் பார்க்கின்ற ஒரு பக்தனாகவே அவரை அன்பர்கள் அணுகினர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
“இருந்தாலும், இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும் – இவன் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” என்று வாழ்ந்து காட்டியவர் பொன்மனச் செம்மல். “உனக்கு என்ன வேண்டும், என்னால் உனக்கு என்ன ஆக வேண்டும்” என்பதே அவரை நாடிச் செல்வோரிடம் அவர் கேட்கும் முதல் கேள்வியாக இருக்கும். தண்டனையோ, மன்னிப்போ, அன்போ, அறிவுறுத்தலோ, பிரியமோ, வெறுப்போ, பாராட்டோ , எச்சரிக்கையோ, புரட்சித் தலைவருடைய கடைசிச் செயல் வள்ளல் தன்மையாகத்தான் முடிந்திருக்கிறது.
திரைப்பட நாயகர்களின் ஒருசில படங்கள் சமுதாயத்திற்கான படிப்பினையாகத் திகழும். எம்.ஜி.ஆர். அவர்களின் 136 படங்களுமே சமுதாயத்திற்கான பாடங்கள் எனலாம். அவரது திரைப்படங்களைக் கூட்டத்தில் காத்திருந்து பலமுறை பார்ப்போர்
சிலரென்றால், அவரது திரைப்படத்தைப் பார்ப்பதற்காகவே வாழ்நாள் முழுவதும் காத்திருப்போர் பலராவர். அறுபது வயதைத் தாண்டியும் ஆளுமைமிக்க தலைவனாகத் திரையுலகில் வலம்வந்து அனைத்துத் தரப்பு இரசிகர்கள் உள்ளத்தையும் கவர்ந்தவர் எம்.ஜி.ஆர்.
காலணா காசு புழக்கத்தில் இருந்த காலந்தொட்டே கால் தேய நடந்து கண் உறக்கமின்றிக் கடமையே கண்ணாகக் கொண்டு தன்னை உரமாக்கி, உரமாக்கி உயர்ந்தவர் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள். வள்ளலின் தோள்களில் விழுந்த மாலைகள்போல் வேறு எவர் தோளில் விழுந்திருந்தாலும் விலா எலும்பு முறிந்தன்றோ வீழ்ந்திருப்பார்கள்! அதே நேரத்தில் கோடி மலர்களைத் தன் தோள்கள் சுமக்கப் புரட்சித்தலைவர் பொற்பாதங்கள் எத்தனை முட்களில் புண்பட்டிருக்கும்.

Add a Comment