திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
==================================
பாடல் – 26
‘உன்னை அருத்தித்து (ஆசைப்பட்டு- இரந்து கொண்டு) வந்தோம்’ என்று சொன்ன நீங்கள், பறையொன்றினை வேண்டி வந்ததாகவும் சொல்கிறீர்களே! உங்கள் பேச்சில் ஐயம் உண்டாகிறது. நீங்கள் சொல்வது என்ன? அப்பறைதான் யாது? அதை வேண்டுவதற்கு மூல காரணம் யாது? அதற்கு வேண்டுவனயாவை? சொல்லுங்கள்’ என்று கண்ணன் கேட்கவும் இப்பாசுரத்தால் அவற்றை விவரித்துச் சொல்லுகிறார்கள் கோபியர்கள்.
மழைபெய்கைக்காகச் செய்யும் பாவை நோன்பின் போது மார்கழி நீராட்டம் என்னும் கிரியையையும் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். நீராட்டமாகிற அச்செயலினைக் கடைபோகச் செய்து முடிப்பதற்காகச் சங்கங்கள், பறைகள், பல்லாண்டு பாடுவார், மங்களதீபங்கள், கொடிகள், பனிபெய்வதைத் தடுக்கும் மேற்கட்டி முதலியன தேவை. அவற்றை நீ தந்தருள வேண்டும் – என்கிறார்கள்.
அடியவர்களிடத்துக் காட்டும் அவனது அளவற்ற பேரன்பில் (ஆச்ரித வ்யாமோஹம்) ஈடுபட்டு, பிராட்டி, சக்கரவத்தித் திருமகனை, ‘சரணாகதவத்தசலன்’ என்று அழைத்தாற்போலே, இவர்களும் கண்ணனை ‘மாலே’ என்று அழைக்கிறார்கள். அடுத்து, ‘அவன் கடியன் கொடிய’னாயினும் விட வொண்ணாத அவனது வடிவழகை நினைந்து, ‘மணி வண்ணா’ என்று நீலவண்ணச் சேர்த்தியில் நெஞ்சழிந்து நிற்கிறார்கள்.
மார்கழி நீராட்டமென்பது பெரியோர்களால் வகுத்துரைக்கப்பட்ட நன்னெறிகளுள் (சிஷ்டாசாரம்) ஒன்றாகும். எனவே அதனைச் செய்து முடித்தற்கு உதவியானவற்றையே உன்னிடம் வேண்டி வந்தோம் நாங்கள். மார்கழி நீராட்டத்திற்கு விரோதிகளாயிருப்பார் நடுங்கும்படி முழங்கவல்ல – பாலைத் திரட்டினாற் போன்ற பாஞ்சசன்யம் ஒத்த சங்கமும், புறப்படும் போது கொட்டப் பேரோசை எழுப்பும் பெரும்பறையும், அப்போது எதிரே நின்று காப்பிடுவதற்காகப் பல்லாண்டு பாடுவார்களும், ஒருவர்க்கொருவர் முகம் தெரியும் படியான மங்கள தீபங்களும், தொலைவிலேயிருப்பார்க்குத் தெரியும்படி பிடிக்கும் கொடியும், தலையில் பனிவிழாமல் தடுக்கும் படியான மேற்கட்டியும் ஆகிய இவையே யாம் வேண்டுவன. இவை உனக்கு அரியனவாமோ? ஆதாரமற்ற ஆலந்தளிரில் பள்ளிகொண்டு உலகமனைத்தையும் உண்டவனல்லையோ நீ? கூடாதவற்றைக் கூட்டுவிக்கும் ஆற்றல் (அகடிதகடநாஸாமார்த்தியம்) உனக்கு உண்டே! ஆகவே யாம் வேண்டுமிவற்றை எமக்குக் கொடுத்தருள்வாயாக – என்கின்றனர்.
அதைக்கேட்ட கண்ணபிரான், பாஞ்சசன்யமே போல்வன சங்கங்கள் பல இல்லையாகையாலே அப்பாஞ்சசன்யமொன்றை மட்டும் கொடுத்தான். ‘பாரோர்களெல்லாம் மகிழப் பறைகறங்க’க் குடக்கூத்தாடின போது, திருவரையிலே கட்டின பறையைக் கொடுத்தான். திருப்பல்லாண்டு பாடுவதற்குப் பெரியாழ்வாரைக் கொடுத்தான். குலவிளக்கே என்று இவர்களால் கொண்டாடப்பட்ட நப்பின்னைப் பிராட்டியைக் கோல விளக்காகக் கொடுத்தான். ‘கருடக்கொடியொன்றுடையீர்’ என்று புகழ் பெற்றவனாகையாலே, கருடக் கொடியையே கொடியாகக் கொடுத்தான். விதானமாக எதைக் கொடுக்கலாம் என்று யோசித்தான். திருவவதரித்த அன்று படங்களாலே மழைத்துளி தன்மேல் படாமல் காத்து வந்த திருவனந்தாழ்வானைக் கொடுக்க மனமில்லை. அவனைப் பிரிந்து தரிக்க மாட்டாமையால் – அத்தாளவாளமென்று பெயர் பெற்றதான மேற்போர்வையையே அவர்களுக்கு மேற்கட்டியாகக் கொடுத்தான்.
மூலத்தில் இதற்கு இடமில்லாத போதிலும், அவர்களின் மேலுள்ள அன்பினால் மாலாய்ப் பிறந்து மாலே செய்யும் நம்பி அவர்களுக்கு என்னென்ன கொடுத்தான் என்பதை இப்படிச் சுவைபடப் பட்டியிலிடுகின்றன முன்னைய உரைகள். ஆழ்ந்திருக்கும் கவியுளம் கண்டு விரித்து விரித்துப் பொருள் காண்பதில் வைணவ உரையாசிரியர்களுக்கு நிகர் அவர்களே அல்லவா? மூவாயிரப்படி, நாலாயிரப்படி, ஆறாயிரப்படி எனப் படிமேல் படியாக உரைகள் விரிந்தது இவ்வாறே.
இனி இப்பாசுரத்தில் வரும் ‘மாலே’ மணிவண்ணா!’ முதலிய விளிகளுக்கும் சங்கின் ஒலி, பறை முழக்கம், பல்லாண்டிசை போன்றவற்றிற்கும் உள்ளுறையாகக் கூறப்படும் தத்துவப்பொருளை (சௌலப்யம் – எளிமை; சேஷத்வஞானம்; – இறைவனுக்குப் பணிசெய்யும் அறிவு; நம் சப்தார்த்தம் – நம என்பதன் பொருள்; பாரதந்தர்ய ஞானம் – எம்பெருமானுக்கு அடிமை என்னும் அறிவு போல்வன) எல்லாம் முந்தைய உரைகளிற் கற்றுத் தெளிக் அன்றேல் வல்லார்வாய்க் கேட்டறிக.

Add a Comment