முனைவர் அவ்வை நடராசன் அவர்கள் ஆங்காங் வானொலியில் 25.07.2015 அன்று தொலைபேசி வாயிலாக “தமிழ் நாடு மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் வரலாறு” என்ற நிகழ்ச்சியில் பேசியது.(1-8)
1)நிருபர் : வணக்கம் அய்யா.
திரு.அவ்வை நடராசன்
வணக்கம்.
மகிழ்ச்சி.
தமிழகத்தில் இருந்து ஆங்காங் நேயர்களுடன் பேசுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
2)நிருபர் : உலக செம்மொழிகளில் ஒன்றாக தமிழ் பெருமை பெற்றிருக்கிறது. ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கும் மேல் வரலாறு கொண்டுள்ளது. தமிழ் வரலாறு பற்றி நேயர்களுக்கு கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா ?
திரு.அவ்வை நடராசன்
காலத்தினால் சாலப் பழமை உடைய மூத்த மொழிகள் என்று உலகத்தில் சில மொழிகளை எண்ணினால், அப்படி எண்ணுகிற மொழிகளில் தமிழ்மொழிக்கு ஒரு பெரும் சிறப்பு உண்டு. எனவேதான் தமிழை உயர் தனி செம்மொழி என்று சொல்கிறோம்.
காலப்பழமையை கணக்கிடுவது எப்படியென்றால், கல்வெட்டுக்களால், எழுத்து முறைகளால், அல்லது கிடைத்த காசுகளால் அல்லது அகழ்வாராய்ச்சிகள் கண்டெடுத்த பொருள்களால், அறிஞர்கள் எழுதி வைத்த இலக்கிய ஏடுகளால், காவியங்களால், கலைகளால் இவைகளைக் கொண்டுதான் காலத்தை காணலாம்.
அந்த வகையில் 5000 ஆண்டுகள் என்பது நமக்கு ஓரளவுக்கு குறைந்த ஆண்டுதான். ஏனென்றால், தொல்காப்பியத்தைப் பற்றி சொல்லுகிறபோதே, கி.மு.7 ஆம் நூற்றாண்டு என்றும் அல்லது கி.மு.10 ஆம் நூற்றாண்டு என்றும் 3 ஆம் நூற்றாண்டு என்றும் சொல்லி வருகிறார்கள். எப்படி எடுத்தாலும் ஒருஐயாயிரம் ஆண்டு பழைமை என்பதை நாம் நெடுங்காலமாக சொல்லிவருவதோடு, அசோகர் காலத்தில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துக்களும், கல்வெட்டு சுவடுகளும்,
சிலஆதிச்சநல்லூரில் கிடைத்த மட்பாண்டங்களையும் கணக்கில் வைத்துப் பார்த்தால், தமிழ் மக்கள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நல்ல நாகரீக வாழ்க்கையை நடத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.
நீங்கள்ஆங்காங்கில் இருக்கிறீர்கள். உங்களுக்கு நன்றாக வழங்குகிற மொழியிலே சீனமொழியும் காலத்தினால் ஐயாயிரம் ஆண்டுகள் பழமை உடையது என்று சொல்லுகிறார்கள். அந்தவகையிலேதான் கிரேக்கம், இலத்தீனம், சீனம், வடமொழி என்ற வகையில் தமிழ்மொழியையும் சேர்த்து உயர் தனிசெம்மொழிகள் என்று நாம் உலகில் சொல்லிவருகிறோம்.
காலத்தினால் மிகப் பெருமை உடைய தமிழ்மொழி என்று நாம் கருதுவதோடு, காலத்தின் பெருமையைகட்டிக் காப்பது மட்டுமல்லாமல், அப்படிதொடர்ந்து வருகின்ற தொன்மையான நாகரீக கூறுகளையெல்லாம், நாம் வளம்பட வைத்து வாழவேண்டும் என்பதற்கு புலம் பெயர்ந்து ஆங்காங்கில் வணிகத்திற்காகவோ, தொழிலுக்காகவோ, கல்வியுடைய மேம்பாட்டிற்காகவோ வந்திருக்கிற நீங்கள் ஒருசங்கம் நடத்தி தமிழின் பெருமையைப் பற்றி அறிவது, எனக்கு பெரிய மகிழ்ச்சி.
3)நிருபர் : இவ்வளவு பெருமையுடைய தமிழ் மொழியைப் பற்றி பேசும்போது, செம்மொழியாக அங்கீகரித்தது சமீபகாலத்தில்தான். இந்த அங்கீகரிப்பு காலதாமதமாக கிடைத்துள்ளதற்கு காரணம் என்ன என்று
சொல்லுகிறீர்கள் ?
திரு.அவ்வை நடராசன்
ஆமாம்.
அதில் ஒன்றும் வியப்பில்லை அம்மா. உயர் தனி செம்மொழி என்ற கருத்தும் சொல்லுகிற முறையும், எழுதுகின்ற எழுத்தும் நெடுங்காலமாக இருக்கிறது. சான்றாக, பரிதிமாற் கலைஞர் 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழையும் வடமொழிபோல் உயர்தனி செம்மொழி என்று நாம் பெருமிதமாக அழைக்கலாம் என்று எழுதினார்கள். ஆனால், எல்லாவற்றிற்கும் அரசினுடைய ஆணை இருந்தால் நன்றாக இருக்கும் என்பது போன்ற கிளர்ச்சிகளை பல்லாண்டுகளாக செய்துவந்தார்கள். அப்படிப்பட்ட கிளர்ச்சிகளை சொல்லுகிறபோது, நான் அரசு செயலாளராக இருந்தபோதே ஒருமுறை இப்படி நடந்தது. அப்போது தமிழை செம்மொழியாக அறிவிக்கலாம் மைய அரசு என்று கேட்டபோது, அப்படி அழைப்பதற்குரிய விதிகள் இல்லை, எந்த மொழிகளையும் நாம் அப்படி குறிப்பிடுவது இல்லை, நம்முடைய கணக்கில் ஆங்கிலேயர் எழுதி வைத்த மரபில் பெர்சிய மொழியும் பாலிமொழியும் இருப்பது போல தமிழ் மொழியைப் பற்றிய இடம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இதனை இன்னும் பெருமிதமாகச் சொல்லலாம். இந்த வகையிலேதான் அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் விடாப்பிடியாகச் சென்று தமிழை உயர்தனிச் செம்மொழி என்று நீங்கள் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதால் பிறகு செம்மொழி என்று அறிவித்தார்கள்.
ஒரு மொழியை செம்மொழி என்று மைய அரசு அறிவிப்பதன் மூலம் ஒரு செம்மொழி நிறுவனம் வரும், அந்த நிறுவனத்திற்கு பலகோடி ரூபாய்களை ஒதுக்குவார்கள். அவர்களை நூல்களை வெளியிடுவதோ, ஆய்வுகள் செய்வதோ அல்லது 60, 70 பேரை பணியில் அமர்த்துவதோ என்ற வகையில் ஓர் உயர்ந்த தமிழ் நிறுவனம் உருவாகும்.
செம்மொழி என்று அழைப்பதில் என்ன பெருமை என்று கேட்டால், மொழியைப் பற்றிய உணர்வும், மொழியைப் பற்றிய ஆர்வமும், மொழியைப் பற்றிய இலக்கியங்களை புதிதாகபடைக்க வேண்டும் என்றநினைப்பும் மக்களிடையே பெருகி வழியும் என்பதுதான் நம்முடைய வேட்கையாகும்.
4)நிருபர் : ரொம்ப விரிவான பதில் அய்யா. இப்போ சொல்லிட்டே இருக்கையில் சொன்னீங்க இந்த வருஷக் கணக்கு, அதாவது 1500, 1000, 2000, 5000.
இப்போ இந்த செம்மொழிஅங்கீகாரம் கிடைப்பதற்கு இந்த வருஷக் கணக்கு மாத்திரம்தான் ஒரு கட்டளவா? வேறு ஏதேனும் Parameters இருக்கா ?
திரு.அவ்வை நடராசன்
ரொம்ப அருமையான கேள்வி கேட்டீர்கள். வேறு எப்படி என்ன சொல்ல முடியும்? காலப் பழமை ஒன்றுதான் சொல்ல முடியுமே தவிர, காவியச் செல்வம் என்று சொன்னால், காசுமீரத்தில் இருந்து எங்கள் காவியம் செழுமை உடையது என்றுசொல்லலாம் அல்லவா?
அதனால்தான் காலத்தை கணக்கிடுவதற்கு ஒரு வழி வைத்திருக்கிறார்கள். வேறு அலகு ஒரு மொழியினுடைய பெருமையைச் சொல்வதற்கு இலக்கியச் செழுமை, கருத்துக்களின் வளமை என்று அதனாலேதான் கிளாசிக்கல் என்று சொன்னால், செம்மை என்று சொன்னால், பழமை, உண்மை, நன்மை, பெருமை, செறிவு, சிறப்பு, ஆழம், திட்பம் போன்றபதினோருவகை வகைப்பாடுகளையெல்லாம் கணக்கிட்டீருக்கிறார்கள்.
5)நிருபர் : அடுத்த கேள்வி என்னன்னா வெளிநாட்டில் வாழ்கிற எங்களைப் போன்ற புலம் பெயர்ந்த தமிழர்கள்இந்த தலைமுறையினரிடம் எப்படி இந்த செம்மொழியை கொண்டு சேர்க்கலாம். இப்ப ஆங்காங்கில் இப்போ எங்களால் முடிந்த லெவலுக்கு சில தமிழ் வகுப்புகளெல்லாம் நடத்தி தமிழை பரப்பிட்டிருக்கிறோம். பட் இதைத்தவிர உங்ககிட்ட வேற ஏதாவது சஜஷன் ஏதாவது இருக்கா? இதை எப்படி கொண்டுபோய் சேர்க்கலாம் என்று ?
திரு.அவ்வை நடராசன்
இது ரொம்பவும், மிகவும் இடர்பாடான ஒரு கேள்வி. ஏனென்று கேட்டால், என்னுடைய பிள்ளைகளே கூட வெளிநாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தலைமுறையில் தாய் மொழியில் தம் பண்பாடும், தம்முடைய பழக்க வழக்கமும் தம்முடைய எண்ணங்களும் பரவ வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
நான் படித்தவரையில் அண்மையில் ஒரு கருத்தைப் படித்தேன். எந்த மொழி ஒரு குழந்தையின் காதில் தொடர்ந்து 6 மணி நேரம் விழுகிறதோ, அவர்கள் பார்க்கும் தொலைக்காட்சியில் பழகுகிற நண்பர்களிடத்தில், சென்று வருகின்ற அங்காடிகளில் அவர்கள் கூடுகின்ற இடங்களில் எந்த மொழி பேசப்படுகிறதோ அந்த மொழி அந்தக் குழந்தைகளின் மனதில் ஊடுருவி விடும். அது ஊடுருவி விடும். அவர்கள் எவ்வளவுதான் உயர்ந்தாலும் கூட தாய் தந்தையர் காலத்து பழக்க வழக்கங்களை அவர்கள் வளர்ந்து வருகின்போது பயன்படுத்துவார்கள் என்பதுதான் இயல்பு. அவர்கள் இழக்கக்கூடாது என்பதால்தான் நாம் பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறோம், பரதநாட்டியம் கற்றுக்கொடுக்கிறோம். திருமுறைகளைப் பற்றிச் சொல்லிக் கொடுக்கிறோம். கோயில்களை கட்டி வைக்கிறோம். வழிபாடு செய்ய வாருங்கள் என்று அழைக்கிறோம். ஆனாலும் பாருங்கள் இந்தப் பிள்ளைகளுக்கு ஒரு 6 ஆண்டுகள் 7 ஆண்டுகள் கழித்த பிறகு இந்தப் பழக்க வழக்கங்கள் அப்படியே வற்றி விடும் என்பதுதான் என்னுடைய கருத்து.
நீங்கள் நினைக்கிறதுபோல கலை என்பதும் பண்பாடு என்பதும் தேக்கு மரத்து உறுதியோடு இவர்கள் உள்ளத்தில் போய் நிற்கும் என்று என்னால் நினைக்க முடியவில்லை.
6)நிருபர் : நீங்கள் சொல்வது உண்மைதான்
திரு.அவ்வை நடராசன்
ஆனாலும், இந்த முயற்சியை விடாதீர்கள்.
7)நிருபர் : எனவே, எங்கள் குழந்தைகளுக்கும் நாங்கள் பேசின அளவு எங்களுக்கு தெரிந்த அளவு அவர்களுக்கு நாங்கள் சொல்லிக்கொடுக்க முடிவது இல்லை. இப்ப அவங்க பாதி சீன மொழியும் சீன மொழியும் முழுசா தெரியல, தமிழ் மொழியும் முழுசா தெரியல. ஒருமாதிரி ரெண்டுங்கெட்டான் நிலையில் உள்ளார்கள்.
திரு.அவ்வை நடராசன்
அந்த அம்மா சொன்னதில் எனக்கு பெரிய ஒரு உணர்வைத் தருகிறது. ஆனால், பாருங்கள் காலப்போக்கில், எந்த மொழி பேசினால் அவர்களுக்கு அலுவல் கிடைக்கும், உயர்கல்வி கிடைக்கும், வாய்ப்புகள் வளரும் என்று நினைக்கிறார்களோ அந்த மொழிதான் அவர்கள் மனத்தில் போய் பதிந்துவிடும். இதைத்தவிர, அதைப்பற்றி நாம் ரொம்பவும் வருந்த வேண்டியதில்லை. அவர்கள் மனத்தில் அந்தப் பழக்கம் இருந்தால் போதும். எங்கே போனாலும் கூட எவ்வளவுதான் மாறினாலும்கூட சிலவற்றை நாம் மாற்றிக்கொள்ள முடியாது. நம்முடைய பிள்ளைகளுக்கு நீங்கள் இந்த உணவு கூட பாருங்கள் மாற்ற முடியாது என்று நான் நினைத்தேன். காலப்போக்கில் இப்போது பிள்ளைகள் மாறிவிட்டார்களே.
இட்லி சாப்பிடுவது இல்லை எனக்கு பீட்சாதான் வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆக உணவில்கூட குழந்தைகள் மாறி இருக்கிறார்கள் என்றால், பழக்க வழக்கங்கள் காலப்போக்கில் மாறும். புதிய உலகமும், புதிய மாற்றங்களும் ஏற்பட்டு வருகிறபோது, இப்படிப்பட்ட புதுமை உணர்வுகள் எந்த உலகத்தை உருவாக்கப்போகிறது என்பதை காலம் உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
8)நிருபர் : என் குழந்தைகளுக்கு தமிழ் தெரியாது என்பதையே பெற்றோர்கள் பெருமையா சொல்வது மாதிரி நான் நிறைய பார்த்திருக்கிறேன். So, அந்த மாதிரி பெற்றோர்களுக்கு உங்களுடைய செய்தி என்னவாக இருக்கும்?
திரு.அவ்வை நடராசன்
அது ரொம்ப தவறும்மா. ஆனால், ஊரோடு ஒத்துவாழ் என்று ஒரு பழக்கம் இருக்கிறது.
9)நிருபர் : இருந்தாலும் நம்முடைய தனித்தன்மையை விட்டுக்கொடுக்கக்கூடாது
திரு.அவ்வை நடராசன்
இவர்களுக்கு என்ன நினைப்பு என்றால், உடன் இருப்பவர்களைவிட்டு தனியாக பிரிந்து போய்விடக்கூடாது, தனியாக விலகிப்போய்விடக்கூடாது. என்னுடைய பணியாளர் இருந்தார். அவருடைய மகனைக் கொண்டுபோய் அவர் ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் சேர்த்திருக்கிறார். அவரை உடனே நான் கேட்டேன். “நீ ஏன் ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தாய் என்று”,
“இல்லை அய்யா, என் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளும், அடுத்த வீட்டுப் பிள்ளைகளும் அங்கே படிக்கும்போது நான் என் பிள்ளையையும் சேர்த்தால் என்ன குறை” என்று அவர் சொன்னார்.
உங்களுக்குச் சொல்லட்டுமா செய்தி. தமிழிலேயே அந்தக் குழந்தை படித்தால் புத்தகத்திற்கு விலையில்லை. உடைக்கு விலையில்லை. அவர்கள் அணிந்துக் கொள்ளுகிற பொருள்கள் எதற்கும் விலையில்லை. எல்லாமே விலையில்லாமல் கொடுத்தபோதுகூட அவர்கள் அந்தக் கல்வியை விரும்பாமல், ஆங்கிலக் கல்வியில் போய் இருபதாயிரம், முப்பதாயிரம் என்று கொடுத்து படிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு தமிழ் மீது வெறுப்பு வந்தது என்றல்ல பொருள். வீசுகிற காற்று அப்படி என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஊரோடு ஒத்துப்போவது, உலகோடு இணைந்து போவது என்று எண்ணிப் பார்க்கிறபோது, வாழ்கிற நாட்டின் சூழ்நிலைக்கு அவர்கள் எப்படியாவது வயப்பட்டு விடுகிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேனே தவிர, அவர்களையும் குறை சொல்ல முடியவில்லை.
10)நிருபர் : அய்யா நீங்கள் சொல்லும்போது எனக்கு ஒன்று தோன்றுகிறது. ஒரு காலத்தில் தமிழ் மொழிதான் வணிக மொழியாக இருந்தது இல்லையா? ஏனென்றால், நான் படித்தபோது, டெபிட், கிரிடிட் போன்றவற்றிற்கெல்லாம்கூட தனித்தனி குறியீடாக ரொம்ப ஒரு செழுமையான காலகட்டம் இருந்தது இல்லையா? அப்படியென்றால், வணிக மொழி தமிழ் மொழியாக இருந்தததற்கு ஏதாவது அறிகுறிகள் உள்ளதா ?
திரு.அவ்வை நடராசன்
யவனர்களும், மகத நாட்டு மக்களும், அவந்திக் கொல்லரும், மகதச் தச்சரும், யவனக் கொல்லரும் என்றெல்லாம் அயல்நாட்டுக் காரர்கள் புலம் பெயர் மாக்கள் காவிரிப்பூம்பட்டிணத்தின் கடற்கரை ஓரத்தில் வணிகம் நடத்தினார்கள் என்று நமக்கு இலக்கியம்தனில் குறிப்புகள் இருக்கின்றன. அப்போது அவர்கள் தமிழில் பேசி இருப்பார்கள். வந்த யவனர்கள் அதை எப்படி விளங்கிக் கொண்டார்கள் என்று சொல்ல முடியாது. நீங்கள் நினைப்பதுபோல காலம் பின்னாடி போகப் போக செழுமையாக இருந்தது என்பதைவிட காலம் இப்போது ஒவ்வொரு மணிநேரமும் புதியதாக பரவியிருக்கின்றன.
இதைக் கண்டு நாம் மகிழ்ச்சி அடைய வேண்டுமே தவிர பழமையினுடைய செழுமையினை நினைத்துப்பார்த்து ஒரு காலத்தில் வணிக மொழியாக தமிழ் மொழி இருந்தது என்றால், அப்போது வேறு மொழிகள் இல்லை என்று பொருள். இப்போது வேறு மொழிகள் இல்லை என்று சொல்ல முடியாது. ஆங்காங்கிலேயே எத்தனை மொழிகள் பேசுகிறவர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்துப் பாருங்கள். எனவே, பல்வேறு மொழிகளைத் தேடுகிற மக்கள் பரவலாக சூழ்ந்திருக்கிறபோது, ஒரு தனி மொழி சிறப்புடையதாக, வணிக மொழியாக, வாழ்க்கை மொழியாக இருந்த காலம் என்பது பழைய காலம். அப்போது மக்கள் குறைவாக இருந்த காலம். வேற்று மொழிகள் பரவாமல் இருந்த காலம்.
11)நிருபர் : எங்கள் வீட்டில், ரொம்ப பெருமையாக சொல்லிக் கொள்ளலாம். என் பசங்கங்களுக்கு இட்லி, தோசை இருந்தால் போதும் வேறு உணவே வேண்டாம். ரொம்ப பிடித்த சாப்பாடு அது மட்டும்தான்.
திரு.அவ்வை நடராசன்
உடை ?
12)நிருபர் : அது கொஞ்சம் கஷ்டம் அய்யா. அதாவது கோயிலுக்குப் போகனும் அப்படியென்றால் மட்டும் இந்திய உடை. அந்த இந்திய உடை, பொட்டு வைத்துக்கொள்வது, வளையல் போட்டுக்கொள்வது அந்த மாதிரியெல்லாம் இருப்பார்கள். ஆனால், பெரும்பாலும் இங்கே இங்குள்ள நாகரிக உடைகள்தான் போட்டுக்கொள்வார்கள்.
திரு.அவ்வை நடராசன்
பார்த்தீர்களா? உடை வந்து விட்டது பார்த்தீர்களா ? அதாவது, பெரும்பாலும் பள்ளிக்குப் போகிறபோது, பள்ளியியே கிடைக்கிற மதிய உணவு இருக்கிறது பாருங்கள் அது ஊர் உணவுதான் கிடைக்கும்.
13)நிருபர் : கண்டிப்பாக. அதற்காகவே, மதிய உணவு கொடுத்து அனுப்பிவிடுகிறோம் அய்யா.
திரு.அவ்வை நடராசன்
நீங்கள் சொல்வது ஒரு பெரிய சிறப்பான கருத்து, இந்த பிள்ளைகள் வளர வளர மெல்ல, மெல்ல உணவு, உடை, உணர்ச்சி, கருத்து, சிந்தனை இவைகளில் அந்த நாட்டுக்கு உரியவர்களாக மாறிவிடுவார்கள்.
14)நிருபர் : அது மாறுதல் நடக்கிறது. கண்டிப்பா.
திரு.அவ்வை நடராசன்
ஆனாலும் கூட அவர்கள் வளர்ப்பில் தாங்கள் தமிழர்கள்இந்த நாட்டுக்காரர்கள் இல்லை, இவர்கள் நம்மை ஏற்றுக்கொள்வார்களா? என்றகிற அச்சம் கொஞ்சம் என்பது இந்தக் குழந்தைகள் மனத்தில் இருக்கும். குருகுருப்பாக இருக்கிறதே தவிர அவர்கள் வளர, வளர அவர்கள் மறந்துவிடுகிறார்கள் என்பதை நான் பார்க்கிறேன். வளர வளர அவர்கள் மறந்துவிட்டு தானும் ஒரு பெருமைக்குரிய ஆங்காங் இளைஞன் என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறான்.
15)நிருபர் : அய்யா இன்று எங்கள் நேயர்கள் மூலமாக தொலைபேசி மூலமாக தமிழ் செம்மொழி என்பது பற்றி விரிவாக பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி.
அய்யா, உங்களை ரொம்ப விரைவாக ஆங்காங்கில் சந்திப்பதற்கு ஆங்காங் தமிழர்கள் சார்பாக நாங்களும் ரொம்ப ஆவலோடு இருக்கிறோம். நன்றி வணக்கம்.
திரு.அவ்வை நடராசன்
ரொம்ப மகிழ்ச்சி. ஆங்காங் வணிகத்திலும், கடைகளிலும், மகிழ்ச்சியிலும், இன்பத்திலும் துள்ளிக் கொண்டிக்கிற நாடு மிகக் குறைவான நாடு.
எனவே, ஆங்காங் என்ற சொல்கையிலே இன்ப தேன் வந்து பாய்கிறது காதினிலே என்று என் நண்பன் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
மகிழ்ச்சி.
ரொம்ப மகிழ்ச்சி,
மகிழ்ச்சி. நன்றி.
நிருபர் : நன்றி அய்யா.

Add a Comment