சேக்ஸ்பியர் படைப்புகள்-நினைவலைகளில் நீச்சலடிப்பவை
தொகுப்பாசிரியர்
ஆங்கில மூலம்
பீட்டர் குயென்னெல்
அறிமுகம்-3
– பீட்டர் குயென்னெல்
ஸ்ட்ரேட்ஃபோர்டு தேவாலயத்தில் ஞான நீராட்டு நிகழ்த்தப் பெற்றதற்கான பதிவேட்டுக் குறிப்பின் அச்சு நகல்
சேக்ஸ்பியரைப் பற்றி இவ்வளவு குறைவான செய்திகளை மட்டிலுமே நம்மால் அறிந்து கொள்ள முடிந்தது எனும் நிலைமை ஏமாற்றமளிப்ப தென்னவோ உண்மை தான்.
அவருடைய சமகால நாடகாசிரியர்களைப் பற்றி இதைவிடக் குறைவாகவே அறிந்துள்ளோம். ஆனால், இது தொடர்பாக தற்காலத் திறனாய்வாளர்கள் பலர் குறிப்பிட்டுள்ளவற்றைக் காட்டிலும் மிகவும் விரிவாகவே அறிந்து கொண்டுள்ளோம்.
அவருடைய வாழ்க்கையைப் பற்றியும் பண்புநலன்களைப் பற்றியும் நாம் அறிந்துள்ளவை அனைத்தையும் ஓர் அஞ்சலட்டைக்குள் அடக்கிவிடலாம் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால், அவ்வாறு செய்வதற்கு அஞ்சலட்டையும் மிகப் பெரியதாக இருக்க வேண்டும், அதனை எழுதுவோர் நுண்ணேக்கியைக் கொண்டு படிக்கும் வகையில் ஆகச் சிறிய எழுத்து வடிவத்தைக் கையாள வேண்டும் என்று மட்டுமே நம்மால் பதிலிறுக்கக் கூடும்.
பொது வாழ்க்கையில் அவர் ஆற்றிய பணிகள் பற்றியும், அவருடைய தொழிலியல் வாழ்க்கை குறித்தும், நாடக ஆசிரியராகவும், நாடக நிறுவன உரிமையாளராகவும் வெற்றி பெற்ற அவர் தான் ஆட்டிய செல்வத்தை முதலீடு செய்த உடைமைகள் குறித்தும், தனது வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் அவர் வாழ்ந்த இடங்கள் குறித்தும் பெருமளவில் தெரிந்து கொள்கிறோம்.
அவருடைய தனிப்பட்ட பண்புநலன்கள் குறித்தும், பெருகிவந்த இலக்கியப் புகழ் குறித்தும் அறிந்திருந்த பலரும் அளித்துள்ள எண்ணற்ற குறிப்புகள் நமக்குக் கிடைத்துள்ளன.
அவருடைய வாழ்நாளில், இலண்டனிலும் ஸ்ட்ரேட்ஃபோர்டிலும் வாழ்ந்த வில்லியம் சேக்ஸ்பியர், இறுதியில் முதல் தொகுப்பு (First Folio) எனும் பெயரில் திரட்டப்பட்ட நாடகக் களஞ்சியத்தின் ஆசிரியர் அல்ல என்று ஐயுறும் விதத்திலோ, ஐயுறுவதற்கான அணுவளவு ஆதாரத்தை அளிக்கும் விதத்திலோ எவரொருவரும் குறிப்பிட்டதில்லை.
அவருடைய இளமைப் பருவம் அறியப் படாததாக உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அவர் கல்வி பயின்ற இடத்தைப் பற்றி உறுதிபடக் கூறுவதற்கில்லை. ஸ்ட்ரேட்ஃபோர்டு நகராண்மைக் கழகத்தின் தலைவருடைய அரும்பெறல் என்கிற முறையில் அவர் உள்ளூர் இலக்கணப் பள்ளியில் பயின்றிருக்கக் கூடும்; கட்டணமில்லாக் கல்வி பெற்றிருக்கக் கூடும்; ஸ்ட்ரேட்ஃபோர்டு இலக்கணப் பள்ளி, எலிசபத் பேரரசி காலத்திய அதே போன்ற ஏனைய நிறுவனங்களைப் போலவே கிரேக்க மொழி என்றில்லாவிட்டாலும் இலத்தீன் மொழியினையும், இலக்கண நுணுக்கங்களையும், தருக்கவியலையும், பேச்சாற்றல் போன்ற நுண்கலைகளையும், எண்ணியல், வடிவியல், வானியல், இசை நுட்பங்கள் போன்றவற்றையும் சமச்சீராக அமையும் விதத்தில் வளமான பயிற்சி அளித்திருக்கக் கூடும் என்று மட்டுமே நம்மால் கூற முடிகிறது.

Add a Comment