அறிவியலில் தமிழ்வழிக்கல்வி -4
குழந்தை நலத் துறை
டாக்டர் தாரா நடராசன் எம்.டி., டி.சி.எச்.,
முன்னாள் முதல்வர், மதுரை மருத்துவக் கல்லூரி,
மதுரை
இந்நிலையில்தான் பெண் கல்வியில்லாத நமது பழைய சமுதாயத்தைக் கண்டு நாண வேண்டியுள்ளது.
வைட்டமின் `ஏ` சத்துக் குறைவினால் குழந்தைகள் கண்பார்வை இழக்கநேரிடும். மருத்துவ மனைகளில் இலவசமாகக் கொடுக்கின்ற வைட்டமின் `ஏ` சத்து மருந்தை வாங்கி அளித்தாலேயே குழந்தைகளின் பார்வைக் குறைபாடுகளைத் தவிர்க்கலாம். நம் நாட்டில் வைட்டமின் சத்துக் குறைவினால் ஏற்படும் கண் பார்வை இழப்பு அதிகமாக இருப்பதும் பெரிய அவலமாகும்.
அயோடின் சத்து இல்லாத குழந்தைகள் மூளை வளர்ச்சி கெடும். அவர்களுக்கு இப்போது கடையில் விற்கின்ற அயோடின் கலந்த உப்பைக் கொடுத்தாலே மூளை வளர்ச்சியின்மையைத் தவிர்க்கலாம்.
அடுத்ததாக, குழந்தைகளுக்குக் குடிநீர் பாதுகாக்கப்பட்ட தூய நீராக இருக்கவேண்டும். நீரைக் கொதிக்கவைத்துக் கொடுக்கவேண்டும். உணவையும் குடிநீரையும் இந்தவகையில் உட்கொண்டோமானால், 50 சதவிகித நோய்களைக் கண்டிப்பாகக் குறைத்துவிடலாம். இந்த வகையில் நலக்கல்வி சுகாதார மையங்களில் வலியுறுத்தப்படுகிறது.
தடுப்பூசிகள்
`வரும் முன் காப்பது` என்பது குழந்தை நலப் பிரிவில் தலையாய மருத்துவமாகும்.
தடுக்கக்கூடிய தொற்று நோய்களிலிருந்து குழந்தைகள் இறப்பதைத் தடுப்பதற்காகப் பலவகைத் தடுப்பூசிகளும், சொட்டு மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு எல்லாக் குழந்தைகளும் அந்நலங்களைப் பெற நமது தமிழக அரசின் நலவாழ்வுத்துறைச் செவிலியர்கள் பேருதவி புரிகின்றனர்.
இப்போது காசநோய்த் தடுப்புக்கு BCG, இளம்பிள்ளை வாதத் தடுப்புக்கு Polio Vaccine, தொண்டை அடைப்பான், இரணஜன்னி, கக்குவான் இருமல் ஆகியவற்றுக்கு DPT , தட்டம்மை, தாளம்மை, ரூபல்லா என்ற மூன்றுக்கும் MMR முதலான தடுப்பூசிகளை குழந்தையின் ஒரு வயது முடிவதற்குள் போட்டுவிடவேண்டும். மகப்பேற்றுத் தாய்க்கு இரணஜன்னி தடுப்பூசி போடுவதனால் பிறக்கும் குழந்தையை இந்நோயிலிருந்து காக்கலாம்.
வயிற்றுப் போக்கு
வயிற்றுப் போக்கால் தான் மிக அதிக அளவில் குழந்தைகள் இறந்தனர். வயிற்றுப் போக்கினால் உப்புநீர் வெளியேற்றமே வற்றிவிடுவதால் இறப்பு நேர்கிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர்த் தொடங்கிய உப்பு சர்க்கரைக் கரைசல் நீரை உலக அளவில் இந்த நோய்க்கு அளித்த்தன் பயனாக 10,00,000 குழந்தைகளை இறப்பிலிருந்து மீட்க முடிந்தது. இந்தக் கண்டுபிடிப்பு குறுகிய காலத்திலேயே நெடுந்தூரம் சென்று ஒரு திருப்புமுனைக்கே வந்துள்ளது. இந்த உப்பு சர்க்கரைக் கரைசலை, இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மருத்துவ முன்னேற்றமாகக் கருதுவது சாலப் பொருத்தமாகும்
.
இந்தியா முழுவதிலும் எல்லா மாவட்டங்களிலும், பெரு நகரங்களிலும் வயிற்றுப்போக்கு மருத்துவமும் பயிற்சிக்கூடங்களும் அமைத்து மருத்துவர், மருத்துவச் சார்பாளர் அனைவருக்கும் வயிற்றுப் போக்குக்காக முறையான சரியான மருத்துவத்தைப் பயிற்றுவிக்கிறார்கள். இங்கு வயிற்றுப்போக்கைப் பற்றிப் புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்பெற்று, வயிற்றுப்போக்குக்குச் சிகிச்சை மையம் அமைத்துள்ளனர். இவ்வகையான மையங்கள் பம்பாய், தில்லி, சென்னை, பெங்களூர், கல்கத்தா போன்ற இடங்களில் செயற்படுகின்றன.

Add a Comment